Monday, June 16, 2008

சாலையோர சித்தன்

வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. எதிர்பார்ப்புகளும் அதனால் எற்படும் ஏற்றமும் ஏமாற்றமும் வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோ பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் எப்பொழுதும் இருக்கும். இதற்கு காரணம் நாம் அவரை சந்திக்கும் சூழலாக கூட இருக்கலாம்.

நான் ரவிகுமார். இப்பொழுது பினாங்கில் இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஈப்போவிற்கு பயணம் செய்யப் போகிறேன். வியாபார நிமித்தமாக இங்கு வந்துள்ளேன். வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாகிவிட்டது. கண்டிப்பாக வெளி மாநிலத்தில் வேலை செய்பவர்கள் பலரும் வீடு திரும்பி இருப்பார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. நாளை திங்கள். வேலை நாள். விடுமுறையை கழித்து பலரும் புறப்பட ஆயுத்தமாயிருப்பார்கள்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கான வாகனங்கள் இஸ்திரி செய்துக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலை நுழைவாயிலும், வெளியேரும் இடத்திலும் நெரிசல் நிச்சயம். சுங்கச் சாவடியில் அதிக நேரம் நிற்க வேண்டிவரலாம். வாகனத்தை நத்தையைப் போல் நகர்த்திக் கொண்டு போவது எரிச்சலான ஒன்று. இப்படிபட்ட சூழ்நிலைகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவிடலாமா என்று கூட நான் நினைத்தது உண்டு.

சுருங்கச் சொன்னால் விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. பழைய சாலையில் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு தோதாக வாகனமும் அதிகம் இல்லை.

மதியம் மூன்று மணி இருக்கும். சூரியன் தகித்துக் கொண்டிருந்தான். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது. எனது காரை ஒரு மரத்தடியில் சற்று நிறுத்தினேன். அரை மணி நேரம் காரினுள் உறங்கிப் போனேன்.

லேசான பசி வயிற்றை கிள்ளியது. பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா, சரி ஒரு கை பார்த்துவிடலாமென ஒரு கடையினுள் நுழைந்தேன். சாப்பாடு சொல்லிவிட்டு ஒரு இடமாய் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.

“அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான்.

அவன் கையில் இருந்த பிலாஸ்டிக் கூடையை என் முன் காட்டினான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

“வேண்டாமப்பா” இது எனது பதில்.

அவன் இடத்தைவிட்டு நகர்ந்தான். எனது சாப்பாடு வந்ததும் அதை ருசிக்கத் தொடங்கினேன். கை கழுவி விட்டு வந்த பொழுது மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்பட்டான். ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருந்தார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடம் நீட்டினான். வேண்டாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு சென்றான்.

சாப்பாட்டிற்கு பணத்தை செலுத்திவிட்டு திரும்பினேன். மீண்டும் என் கண்ணெதிரில் அவன்.

“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்டான்.

“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு எனது காரை நோக்கி நடந்தேன்.

அவன் அக்கடை ஐந்தடியின் ஓரத்திற்கு சென்றான். கையிலிருந்த பலகார கூடையை கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா என அதே பல்லவியை படித்துக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.

நான் காரில் அமர்ந்து பயணத்திற்கு தயாரனேன். இப்பொழுது அவன் என் கார் கதவருகே நிற்கிறான். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு. ஜன்னலை கீழிறக்கினேன்.

“வீட்டில இருகறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டு போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்கு கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டினான்.

அவன் முகத்தை பார்த்தேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று சிகப்பு நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகினேன். நன்றி கூறி நான் கொடுத்த பத்து ரிங்கிட்டோடு மீண்டும் ஐந்தடிக்கு ஓடினான்.

எனது காரை செலுத்தத் தயாரானேன். அச்சிறுவனை கண்டேன். அவனது செயலை கண்டு அதிர்ந்து போனேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, இங்க வா”, என அவனை அழைத்தேன்.

“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வந்தான்.

“நான் கொடுத்த காச எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூட தெரியல”,

நான் பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்று போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டு போனாரு. வீட்டுக்கு கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.

அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போனேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைத்தேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டான்.

“நுப்பத்தி அஞ்சி வெள்ளிதான்னே”,

பலகாரம் நிறப்பப்பட்ட பையை என் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு பணத்தை கொடுத்தேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்பினான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருந்தேன்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை இச்சிறு நிகழ்வு எனக்கு உணர்த்தியது. அச்சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்கு தெரியாது. இந்த நிகழ்வும் என்னிலிருந்து மறையாது. அவன் என்றென்றும் எனக்கு போதனை செய்த சாலையோர சித்தன் தான்.

18 comments:

பரிசல்காரன் said...

//எனக்கு போதனை செய்த சாலையோர சித்தன் தான்//

நல்ல தலைப்பு.. நல்ல அனுபவம்..!(அனுபவம்தானே? வெறும் கதையல்லவே?)

வாழ்த்துக்கள்!!!

நம்ம வூட்டுக்கு தினமும் வர்றதுக்கு நன்றிகள்! தொடர்ந்து பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் முதல் மூன்று இடம் வருபவர்களுக்கு எனது நூறாவது பதிவின்போது ஏதாவது மொக்கைப் பதிவை சமர்ப்பிக்கும் ஐடியா உள்ளது. தொடர்ந்து படியுங்கள்.. எழுதுங்கள்! (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியதாயிருக்கு!)

Anonymous said...

//உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க.//

உண்மை.

சின்னப் பையன் said...

சூப்பர் தத்துவம்... நன்றாக இருந்தது....

சின்னப் பையன் said...

//பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா,//

இது என்ன?

Anonymous said...

:)

Dr.Sintok

Anonymous said...

//வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கான வாகனங்கள் இஸ்திரி செய்துக் கொண்டிருக்கும்//

:))

Dr.Sintok

Anonymous said...

nalla kathai..siruvanaage irunthalum paiyanuku nallamanasu n tannambikai atigam...
manitan ipadi taan irunum enbathuku saalaiyoresittan oru utaaranam...

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்றிங்க பரிசல்காரன்... மீண்டும் வருக...

//நல்ல தலைப்பு.. நல்ல அனுபவம்..!(அனுபவம்தானே? வெறும் கதையல்லவே?)//

ஏக்சுவழி... இது கதை மட்டும் தான். அனுபவம் கிடையாது... கதைனு போட்டா படிக்க மாட்டாங்களாமே.. அதான் அனுபவம்கிற லேபிலயும் சேர்த்துக்கிட்டேன்... :-)))

VIKNESHWARAN ADAKKALAM said...

//உண்மை.//

வாங்க வேலன் சார்... முதல் முறையாக வந்து இருக்கிங்க... மீண்டும் வருகையை எதிர்பார்க்கிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//சூப்பர் தத்துவம்... நன்றாக இருந்தது....//

தத்துவமா??? எதுங்க???

////பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா,//

இது என்ன?//

இது சேற்று பிரிவை சேர்ந்த உணவு வகை.. பின்னொரு பதிவில் விளக்கம் கொடுக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//:))

Dr.Sintok//வாங்க... இப்படி ஸ்மைலி போட்டே பின்னூட்டத்தை முடிச்சிட்டா... என்னனு புரிஞ்சிகறது... போட்டது போட்டுட்டிங்க... ஒரு ஸ்மைலிக்கு தண்டனையா பத்து பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//nalla kathai..siruvanaage irunthalum paiyanuku nallamanasu n tannambikai atigam...
manitan ipadi taan irunum enbathuku saalaiyoresittan oru utaaranam...//

வாங்க... பின்னூட்டத்திற்கு நன்றி.. மீண்டும் வருகையை எதிர்பார்க்கிறேன்..

ஆ.கோகுலன் said...

நெகிழ்ச்சியான பதிவு.. நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

//நெகிழ்ச்சியான பதிவு.. நன்றி//

மீண்டும் வருகை புரிந்ததற்கு நன்றி..

துளசி கோபால் said...

அருமையான அனுபவம். நடையும் அழகா இயல்பா வந்துருக்கு.

பாராட்டுகள்..

பி.கு: உங்களுக்கு என் மகள் வயசு.

VIKNESHWARAN ADAKKALAM said...

//அருமையான அனுபவம். நடையும் அழகா இயல்பா வந்துருக்கு.
பாராட்டுகள்..//

டீச்சர்... ஒரு வரி நண்பர் பரிசல்காரனுக்கு எனது பதில் பின்னூட்டத்தை படித்து இருக்ககூடாதா... இது அனுபவம் இல்லை... இல்லை... இல்லை...

//பி.கு: உங்களுக்கு என் மகள் வயசு.//

நானும் உங்க மகன் மாறிதான்...

Kavinaya said...

இயல்பான நடையில் நல்லா எழுதியிருக்கீங்க. கதை தலைப்பும் நல்லாருக்கு. வாழ்த்துக்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

//கவிநயா said...
இயல்பான நடையில் நல்லா எழுதியிருக்கீங்க. கதை தலைப்பும் நல்லாருக்கு. வாழ்த்துக்கள்!//

ரொம்ப தெங்ஸ்... மீண்டும் வருக...