Showing posts with label பெர்லிஸ் மாநிலம். Show all posts
Showing posts with label பெர்லிஸ் மாநிலம். Show all posts

Monday, April 20, 2009

ஒரு பயணமும் சில குறிப்புகளும்...

மலேசியாவில் மிகச் சிறிய மாநிலம் பெர்லிஸ் ஆகும். சுமார் 810 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஏனைய மாநிலங்களைக் காட்டினும் வளர்ச்சிகள் சற்றே குறைந்து காணப்படும் மாநிலம் இது.

மலேசியாவின் முதல் நிலை பணக்காரார் திரு.ரோபட் கோக். அவர் ஒரு சீனி வியாபாரி. அவருடைய கரும்புத் தோட்டங்கள் பெர்லிஸ் மாநிலத்தில் நிறைந்து காணப்படும். ரோபட் மலேசியாவில் மட்டுமன்றி தென் கிழக்காசியாவிலேயே முதல் நிலை பணக்கார பட்டியலில் இருக்கிறார்.பெர்லிஸில் முக்கிய பட்டணங்களாக காணப்படுவது சிம்பாங் அம்பாட்(simpang empat), அராவ்(Arau), ஜெஜாவி(Jejawi), சூப்பிங்(Chuping) போன்ற இடங்களாகும். கரும்புத் தோட்டங்கள் நிறைந்துக் காணப்படுவதால் கரும்பு விளைந்து செழிப்பாக இருக்கும் காலங்களில் வனப்பு மிகுந்து காணப்பகும். சிறிய அளவிளான சாலைகளே இங்கு அதிகம். பயணிக்கும் சமயம் சாலையோரத்தில் இருக்கும் கரும்பு விளைச்சல்கள் பசுமையாகவும் கண்களுக்கு இதமாகவும் இருக்கும்.

கெடா மாநிலத்தின் புகிட் காயு ஹிதாம்(Bukit Kayu Hitam) எனும் பகுதியில் இருந்து சுமார் 30 நிமிட பயணத்தில் குவாலா பெர்லிஸ் (Kuala Perlis) எனும் இடத்தை அடைந்து விடலாம். குவாலா பெர்லிஸ் ஒரு துறைமுகம் ஆகும். இங்கிருந்து விசைபடகின் வழி பயணித்தால் 40-45 நிமிடங்களில் லங்காவி தீவை அடைந்துவிடலாம்.லங்காவி ஜாலியாக பொழுதைக் கழிக்கக் கூடிய இடம். பொது விடுமுறை நாட்களில் இங்கு செல்வது சொந்த செலவில் சூன்யம் வைத்தக் கதையாகிவிடக் கூடும். பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே சொல்வார்கள். ஏனைய ஓய்வு நாட்களில் சென்றால் மனம் விரும்பும் அமைதியை பெருவது தின்னம்.

லங்காவி தீவில் சுங்க வரி விலக்கு கிடைக்கும். அதனால் விஸ்கி, பிராண்டி, பியர், சிகரட், சாக்லெட் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். ஒரு பாட்டில் விஸ்கியை நீங்கள் தீவை விட்டு வெளிவரும் போது கொண்டு வர அனுமதிப்பார்கள். அதிகபட்டவைக்கு வரி விதிக்கப்படும். லங்காவி பற்றிய மேலாதிக்க தகவலுக்கு மை பிரண்ட் எழுதிய இப்பதிவை காண்க.
சரி மீண்டும் பெர்லிஸ் மாநிலத்தை பற்றிய பார்வைக்கு வருவோம். பெர்லிஸில் சில உணவு வகைகளும், துணி மற்றும் பொம்மைகளும் மலிவான விலையில் கிடைக்கும். எல்லை மாநிலம் என்பதால் காவல் கெடுபிடிகள் அதிகம். ஆண்கள் மட்டும் பயணித்தார்கள் என்றால் ’சில தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு’ காவலாலிகளிடம் பதில் சொல்லி தான் வர வேண்டி இருக்கும்.

தாய்லாந்து எல்லை பகுதிகளில் பாலியல் தொழில் அதிகம் இருப்பதுவே இதற்கு காரணம். அது போக சில வேளைகளில் போதை மருந்து உட்கொண்டோமா என்பதற்காக சிறுநீர் சோதனைகளையும் மேற்கொள்வார்கள். குடும்ப சகிதம் விசிட் அடித்து செல்வோருக்கு இப்படிபட்ட இக்கட்டான நிலை விதிவிலக்காக அமையும்.

ஆரம்பத்தில் சொன்ன குவாலா பெர்லிஸ்/ விசைபடகு ஏறும் இடத்தில் இடத்தில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் பெர்லிஸ் கைவினை பொருட்கள் மற்றும் கலாச்சார மைய கட்டிடத்தை அடையலாம். கைவினை பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆள் பார்த்து விலை சொல்கிறார்கள் என்பதை உணர முடியும். பேரம் பேசி வாங்க முடிகிறது.அடுத்தபடியாக இருப்பது பாம்பு தோட்டம். கங்கார் எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வடக்கே போனால் இதைக் காண முடியும். பாம்பு, முதலை, உடும்பு, பெரிய பல்லிகள் எனக் காண முடியும்.கோத்தா டாயாங் தொல்பொருட்காட்சி சாலை இங்கிருக்கிறது. 2500 முதல் 2600 ஆண்டுகளுக்கு முந்தய பொருட்கள் இவை என சில தகவல்களை எழுதி வைத்திருப்பார்கள். சோழர்களின் கடார ஆட்சியின் சமயம் பெர்லிஸ் போன்ற பகுதிகள் கடாரம் என்றே அறியப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக்கும் முந்திய இந்திய ஆட்சியில் இருந்த பொருட்கள் என சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விவரித்தால் பெரும்பதிவாகிவிடும்.

மேலும் இருப்பது மெலாவாத்தி நீர் நிலை பகுதி. மிக ரம்யமான இடமாகும். இங்கு படகு சவாரி போக முடியும. நெடு தூர நடை பயணம் செய்யவும் வசதி படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அராவ், கங்கார் போன்ற இடங்களிலும் சற்றே சுற்றிவிட்டு வர முடியும். அராவ் நகரில் அரச மாளிகையும், பிரதான மசூதியும் அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் மன்னர்கள் ’சுல்தான்’ என அறியப்படுகிறார்கள். பெர்லிஸ் மன்னர் ’ராஜா’ என அழைக்கப்படுகிறார்.சின்ன மாநிலம் என்பதால் ஒவ்வொரு இடத்திற்கும் தூரங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் சிறிய அளவிலான சாலை அமைப்புகள் சில இடங்களில் படுத்தி எடுக்கிறது. தலைகவசம் அணியாத கணவான்கள் அங்கிட்டும் இங்கிட்டும் விருட்டென புகுந்துச் செல்கிறார்கள். நிதானித்தே வகனத்தைச் செலுத்த வேண்டும்.

நவ நாகாரிக வளர்ச்சிகள் அதிகம் புகுத்தப்படாததால் பெர்லிஸ் பசுமை பொலிவுடன் இருக்கிறது. சாலையில் அதிகமான வாகனங்கள் இருக்காது. அமைதியான பயணத்தை திருப்தியாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும்.
(பி.கு: நண்பர்களோடு இரு நாள் பயணம் மேற்கொண்டதால் இரவு வேளையில் கோழி வாட்டல் அதாங்க B.B.Q பார்ட்டி எல்லாம் லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடியலுடன் மங்களகரமாக நடந்தேறியது.)