Friday, January 25, 2019

Kra Isthmus Canal (க்ரா கால்வாய்) - தீவாகும் தீபகற்பம்இந்தியப் பெருங்கடலில் இருந்து தென் சீனக் கடலுக்கானப் பயணத்தை இணைக்கும் மிகக் குறுகிய கடல் வழி பாதை மலாக்கா நீரிணை தான். ஆண்டுக்கு 2 இலட்சம் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே பயணம் செய்ய முடியும். இன்றைய நிலையில் 120000 வர்த்தக கப்பல்கள் இந்த நீரிணையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியைச் சுமந்துச் சென்றுக் கொண்டுள்ளன. அந்தி வேளைகளில் தெலோக் கெமாங் (Teluk Kemang) கடற்கரையில் நின்று காண்கையில் கடலின் முதுகில் தொடர் வண்டிகளைப் போல் கப்பல்கள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உலகளாவிய நிலையில் அதிகமான கப்பல் போக்குவரத்துக் கொண்ட கடல் பகுதிகளில் ஒன்று மலாக்கா நீரணை.

1677-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம். தாய்லாந்து என அறியப்படும் தேசம் அன்று அயோத்தியப் பேரரசு (Ayutthaya Kingdome) எனப் பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய தாய்லாந்து பூலோக வரைப் படம் போல இல்லாமல் அதன் இராஜாங்கம் மியன்மார், லாவோஸ், மலாயா என பரந்துபட்டிருந்தது. ஆசிய கண்டத்தையும் மேற்குலக தேசங்களையும் இணைக்கும் வர்த்தக மையமாக ஆயோத்திய தேசம் அமைந்ததால் சொல்வ செழிப்போடு விளங்கியது.

அதை ஆட்சி செய்த ராமபோதி அரசருக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தனது அரசவையில் கலந்தாலோசித்தார். தென் தாய்லாந்தின் வளைகுடாவை ஒட்டி இருக்கும் சொங்கலா (Shongkhla) எனும் நகரில் இருந்து அந்தமான் கடல் பகுதியில் இருக்கும் மரிட் எனும் கடற்கரை நகருக்கு நீர் வழிப் பாதை ஏற்படுத்த முடியுமா என்பது தான் அரசரின் சிந்தனை. அப்போதைய தொழில்நுட்பத்தால் அது சாத்தியப்படவில்லை.

அதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளின் கால இடைவெளியில் அந்த நீர் வழிப் பாதைக்கான முயற்சிகள் சாத்தியப்படுமா என பலரும் முயன்றுள்ளார்கள். அன்றய தாய்லாந்து மன்னர்கள் இராணுவத்தை வழுபடுத்துவதற்காகவே க்ரா கால்வாயை உருவாக்க நினைத்தார்கள். மேற்கு உலக காலணியாதிக்கம் ஆசிய நாடுகளெங்கும் கை ஓங்கி இருந்த சமயம் க்ரா கால்வாய் அமையாமல் இருப்பதே தன் நாடுக்குப் பாதுகாப்பு எனக் கருதியது தாய்லாந்து.

சூவேஸ் கால்வாயை வெற்றிகரமாக அமைத்துக் கொடுத்த Ferdinand de Lesseps, 1882-ஆம் ஆண்டு தாய்லாந்து வந்தார். க்ரா கால்வாயை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதே அவரின் நோக்கம். நாட்டின் பாதுகாப்பு பொருட்டு தாய்லாந்து மன்னர் அந்த ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை. பிரிடிஸ் காலணியாதிக்கத்தில் சிங்கபூர் உலகப் பிரசித்தி வாய்ந்த துறைமுக நகரமாக இருந்தது. அதன் பின் உண்டான பிரிடிஸ் தாய்லாந்து ஒப்பதந்தபடி க்ரா கால்வாயை அமைக்க மாட்டேன் என சூடம் அடித்து சத்தியம் செய்துக் கொடுத்தது தாய்லாந்து.

சீனாவின் தற்போதைய மாபெரும் திட்டங்களில் ஒன்று One Belt One Road (OBOR) திட்டமாகும். கடந்த ஆண்டில் இதன் ஆதிகாரபூர்வ மாநாட்டுக்குச் சுமார் 43 நாட்டுத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு ஒட்டு மொத்த பெய்ஜிங்கும் சாலை அடைப்பால் ஸ்தம்பித்து போனது. இந்த ஓபோர் திட்டத்தில் ஓர் அம்சம் கடல் வழி பட்டுப் பாதை (Maritim Silk Road). இதை சாத்தியப் படுத்த தாய்லாந்தின் வாலைத் துண்டிக்க வேண்டும். அதாவது மலேசியாவின் தலைக்கு மேலே ஒரு சிறுக் கோடு போட்டுவிட்டால் இரு மாபெரும் கடல் பகுதிகளை இணைத்துவிடலாம்.

இப்படி ஒரு கால்வாய் அமைக்கப்படுமானால் அது க்ரா கால்வாய் என அழைக்கப்படும். வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரணை வழியே சிங்கப்பூரைக் கடந்து தென் சீனக் கடலில் நுழையும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை இருக்காது. அந்தமான் கடலில் இருந்து நேராகத் தாய்லாந்து வளைகுடா வழி தென் சீனக் கடலுக்கு போய்விடலாம். இதனால் சுமார் 1000கிலோ மீட்டர் பயணத் தூரத்தை மிச்சம் பிடிக்க முடியும். மொத்தப் பயண நாட்களில் 2 அல்லது 3 நாட்கள் குறைந்துவிடும்.

தாய்லாந்து இந்தத் திட்டத்தின் வழி பொருளாதார வளர்ச்சியும் இலாபமும் பார்க்க முடியும். இந்தக் கால்வாயை உருவாக்க நான்கு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படலாம். வேண்டிய அளவிலான கால்வாய் அகலத்துக்கு ஹைட்ரஜன் வெடி மருந்துகளை வைத்துக் கொண்டு வந்தால் இருபக்கக் கடல்களையும் இணைத்துவிடலாம்.

2005-ஆம் ஆண்டுக் கசிந்தத் தகவலின் அடிப்படையில் சீனா இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகளில் செய்து முடித்துவிடலாம் என்கிறது. 30 ஆயிரம் ஆள் பலமும் 25 பில்லியன் டாலர் பணமும் இந்தக் கால்வாய் திட்டத்தைச் சாத்தியப்படுத்த போதுமானதாகக் கூறப்படுகிறது. க்ரா கால்வாயை அமைப்பதின் மூலம் ஆசிய கண்டத்தின் பல நாடுகள் உலக நாடுகளுடனானக் கடல் வர்த்தகத்தைக் குறைந்த செலவில் ஈடுகட்ட முடியும்.

ஆனால் தாய்லாந்திடம் ஏதோ ஒரு தயக்கம் தொடர்ந்து இருந்துக் கொண்டே உள்ளது. க்ரா கால்வாய் திட்டம் சாத்தியப்படும் என்றால் தாய்லாந்தின் தென் கோடியில் இருக்கும் நான்கு மாநிலங்கள் அதன் பெருநிலப் பகுதியில் இருந்துத் துண்டித்துப் போகும். இயற்கைப் பேரிடர்கள் கூட நிகழலாம். சீனா தன் பங்குக்கு உறுவாக்கிய மாபெரும் அணையும் (The Three Gorges Dam) அதனால் உண்டாகும் தொடர் இயற்கைப் பேரிடரையும் நாம் நினைவு கூற வேண்டும். ஒரு பெரும் நிலத்தையும் மலைகளையும் குடையும் போதுக் கிடைக்கும் மண் மணல் போன்றவற்றைக் குவிப்பதற்கான இடம் கண்டறியப்படவில்லை.

மலேசியாவைப் பொறுத்த வரை மலாக்கா நீரிணையை ஒட்டியத் துறைமுகங்களான பினாங்கு (Penang Port), கிள்ளான் (Port Klang), மலாக்கா (Melaka Port), ஜொகூர் (Tanjung Pelepas) போன்ற இடங்களைச் சார்ந்தத் துறைமுகங்கள் பாதிப்பைச் சந்திகக் கூடும். சிங்கப்பூர் தனதுக் கடல் வணிகத்தின் 30 விழுக்காடு இழக்குமெனத் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பேங்காக்கில் நடைபெற்றக் கூட்டத்தின் பின்பும் தாய்லாந்து க்ரா கால்வாய் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தத் திட்டமாக இன்னும் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றேக் கூறுகிறது. பின்னணி தீர்வுகள் நமக்கு தெரிவதற்கான சாத்தியங்கள் குறைவு தான்.

மனிதர்களின் அத்து மீறல்களைத் தாங்கிக் கொள்ளும் இயற்கை தனது சீற்றத்தை வெளிபடுத்தும் போது மனிதனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

-முற்றும்-

Reference:

No comments: