Friday, January 25, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (21-30)



21. உளவு-ஊழல்-அரசியல்

அரசு செயல்பட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு சாமானியன் எப்படி எல்லாம் அடித்து துவைத்து துவம்சம் செய்யப்படுகிறான் என்பதை ஒரு கிரைம் சாகச நூலை போல் எழுதி இருக்கிறார் சவுக்கு சங்கர். ஊழல் மிகுந்த அரசு இயந்திரத்தில் அனைத்து துரைகளும் சமூக நியதிக்கு நேர்மாறாக நடந்துக் கொள்கின்றன. சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் தனது 16-வது வயதில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவர் காணும் அரசியால் ஊழல் சம்பவங்கள், எப்படியாக அதில் அவர் சிக்கி தப்புகிறார் என்பதாக மிக சுவாரசசியமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

22. ஓநாய் குலசின்னம்

1970-களில் கலாச்சார புரட்சியின் போது சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை இந்த நூல் பேசுகிறது. இது மிக மிக சுவாரசியமான மறுபட்ட வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் புத்தகம். இதை வாசிக்கும் போது ஓநாய்களை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதனை ஒரு வெற்றியின் குறியீடாகவே காண்பீர்கள். இந்நூல் தொடர்பான விளக்க பதிவை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

23. குமார் துப்பறிகிறார்

இன்ஸ்பெக்டர் குமார் செர்லாக் ஹாம்ஸை போல நூதன துண்ணறிவைக் கொண்டவர். மிகவும் ஜாலியாக வாசிப்பவரை சிரிக்க வைத்துக் கொண்டே துப்பறிகிறார். பேயோனின் நகைச்சுவை மிகுந்த எழுத்து எனக்கு பிடித்தமான ஒன்று. அதில் அழகியலும் மொழி லாவகமும் உண்டு.

24. என்னை நான் சந்தித்தேன்

எழுத்தாளர் இராஜேஸ்குமாரின் எழுத்துலக சுயசரிதமாக இந்த நூல் அமைந்துள்ளது. மிக விறுவிறுப்பான எழுத்து நடை. எழுத்துலகில் 1000க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். எழுத்துலகில் கொண்டாடப்பட்ட அளவு இவர் சினிமா துறையில் பார்க்கப்படவில்லை. சினிமாவில் இவரின் படைபுகள் திருடப்பட்டன. உழைப்புக்கு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டார். சினிமாவின் மோசடிகளை நூல் நெடுக பதிவு செய்கிறார்.

25. துப்பாக்கி மொழி

இந்த நூலில் இந்தியாவில் செயல்படும் சுமார் 63 தீவிரவாத இயக்கங்களை பதிவு செய்துள்ளார்கள். அது அதிர்ச்சிகரமானதாகவும் உள்ளது. ஒரு மண் சார்ந்த மக்களின் நியாயங்களும், கோரிக்கைகளும், கொள்கைகளும் மறுக்கப்படும் போது அங்கே ஓர் எழுச்சியும் போராட்டமும் உருவாகிறது. ஆயுதம் ஏந்தும் போராட்டம் என்பது தீவிரவாதமாக ஆகிறது. நாம் அறிந்திராத ஏகபட்ட புதிய இயக்கங்களை பற்றி இந்த நூல் பேசுகிறது.

26. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

The confession of an economic hitman எனும் ஆங்கில பதிப்பின் மொழியாக்கம் இந்த நூல். வாசிப்பு வெளியில் அதிகமாக விவாதிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களை தோல் உரித்து காட்டுகிறது. இந்தோனேசிய, பனமா, சவுதி அரேபியா, ஈரான், ஈக்வெடார், குவாத்தமாலா என ஏகபட்ட நாடுகளில் பொருளாதார நிபுணராக பணியாற்றுகிறார் ஜான் பெர்கின்ஸ். வளர்ச்சி திட்டங்களுக்கென அந்த நாடுகள் அதிகமான கடனை வாங்கி கட்ட முடியாத நினைக்கு தள்ளப்படுகின்றன. கடனுக்கு பதிலாக அந்நாடுகளின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. சமீப அரசியல் நிலையில் செங்கொடி ஏந்திய கம்பூனிச முதலாளியும் இந்த வழிமுறையை தான் பல நாடுகளின் செயல்படுத்தியுள்ளார். எரியும் பனிக்காடு (Red Tea) நூலில் இரா.முருகவேலின் மொழியாக்கம் மிக இலகுவான நடையில் இருந்தது. இந்த நூலில் அது மிஸ்ஸிங். சில வாக்கியங்களை வாசித்து முடிப்பதற்குள் நுரை தள்ளிவிடுகிறது.

27. மிச்சமிருப்பவர்கள்

ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் என்பதே கேலிக்கு உட்படும் போது அந்த சமூக நிலை எப்படி இருக்கும். வழிகாட்டல் குறைவான சமூகத்தில் நிகழும் அவலங்களை இந்த குறுநாவல் பேசுகிறது. 2007 எழுச்சி பேரணிக்கு முந்தய காலகட்டதில் மலேசிய இந்திய சமூகத்தில் நிகழ்ந்த பல ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூல் இது. இக்குறுநாவல் தொடர்பாக முந்தய பதிவில் எழுதியுள்ளேன்.

28. தப்பு தப்பாய் ஒரு கொலை

இராஜேஸ்குமார் தமது சுயசரிதத்தில் சிலாகித்து குறிப்பிட்டிருந்ததால் இந்த நாவலை வாசித்தேன். விறுவிறுப்பான நடை என்பதை தவிர இதில் வேறு விசயங்கள் இல்லை.

29. Brief answers to the big question.

ஸ்டிபன் ஹாக்கின்ஸ் எழுதிய கடைசி நூல் இது. பெரிய கேள்விகளுக்கான குறுகிய விடை எனினும் ஒவ்வொரு விடையும் சுமார் 20 பக்கங்களுக்கு உள்ளன. இலகுவான ஆங்கில நடையில் எழுதபட்டிருப்பினும் அறிவியல் புரிந்துணர்வின் பொருட்டு சிற்சில இடங்களில் இந்நூல் மீள் வாசிப்பை கோருகிறது. கடவுள் உண்டா எனும் முதல் கேள்வியில் அது இல்லையெனவும் தேவை அற்றது எனவும் விளக்கமளிக்கிறார் ஸ்டீபன். பத்திமான்களின் உணர்சியை சீண்டி பார்க்கும் பதில் எனினும் அதுவே உண்மையும் கூட. கலத்தை கடக்கும் பயணம் சாத்தியமா? கருந்துளையில் இருப்பது என்ன என மிக எளிய மொழியில் பேசும் நூல். ஸ்டீபனின் எழுத்தில் அவர் நகைச்சுவை உணர்வும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர் என காண முடிகிறது.

30. Imperial Women

சீன சமூகத்தில் பெயரிடும் முறையை வைத்தே அச்சமூகத்தில் ஆணின் ஆதிக்கத்திற்கு கொடுக்கப்படும் முக்கியதுவத்தை உணர முடியும். அப்படி இருக்க சில பெண்களே சீன சரித்திரத்தில் தமது பெயரை நிலை நாட்டி உள்ளனர். 5000-ஆம் ஆண்டு பாரம்பரியத்தில் Wu Zetian எனும் ஒரே ஒரு பெண் மட்டுமே அரசர் ஆகி இருக்கிறார். அடுத்தபடியாக அந்த இடத்தை நெறுங்கும் நபர் Dowager Cixi எனும் இராஜமாதா. அரசரின் கடைசி நிலை காமக்கிழத்தியாக இருந்த இவர் இராஜமாதாவாக தன்னை உயர்திக் கொண்டு திரைமறைவில் சீன நாட்டை ஆட்சி செய்துள்ளார். மஞ்சூரியாவின் யாஹூனாலா குழுமத்தைச் சேர்ந்த இவரின் பேரன் தான் சீனாவின் கடைசி அரசர் ஆவார். 1800-களில் கிழக்கு நாடுகள் ஆசியாவின் மீது மேற்கொண்ட ஆக்கிறப்பின் போது சீனாவும் தப்பவில்லை. இவரின் தனித்த ஆளுமையே 1911 வரை சீனாவில் அரச ஆட்சியை நீட்டிக்க செய்தது. இந்நாவல் ச்சீசி ஃபோர்பிடன் சிட்டியில் காமக்கிழத்தியாக அழத்து வந்தது முதல் அவரின் காலத்தை பதிவு செய்கிறது.

முற்றும்.

No comments: