Monday, January 21, 2019

ரிங்கிட் - மலேசிய நாவல்


ஜெஃபரி ஆர்ச்சரின் ‘த சின்ஸ் ஆஃப் த ஃபாதர்’ எனும் நாவலை வாசிக்கத் தொடங்கும் முன் ஒரு வரைபடத்தைக் காண முடியும். அது ஒரு குடும்ப தலைமுறைகளின் விளக்கப்படம் ஆகும். வாசகனின் புரிதலுக்கு அதை முன் குறிப்பாக கொடுத்திருப்பார். மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் நாம் அப்படி எதிர்ப்பார்க்க முடியாது. நாமாகவே படம் வரைந்து பாகம் குறித்து புரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி புரிந்துக் கொள்ள முடியாமல் போகுமானால் பாவபட்ட மலேசியத் தமிழ் வாசகன் வெளி நாட்டில் இருந்து அழைத்து வரப்படும் இலக்கிய மேதாவிகளின் முன்னிலையில் ‘இவர்கள் அம்புலி மாமா கூட வாசிக்கத் தகுதியற்ற தற்குறிகள்' என வஞ்சிக்கப்படுவான்.

சரி, குடும்பத்தின் பரம்பரை வரைபடத்திற்கும் ரிங்கிட் குறுநாவலுக்கும் என்ன தொடர்பு. ரிங்கிட் குறுநாவல் 5 பகுதிகளைக் கொண்டுள்ளது. அது பகுதியா அல்லது பாகமா என்பது ஆசிரியருக்கே குழப்பம். ஏன் என்பதை வாசகர்களின் சுவாரசியத்திற்கு விட்டுவிடலாம். இதன் முதல் பகுதி மலாய் சமூகத்தின் வாழ்வியலை பற்றி பேசுகிறது. அப்படி பேசும் நாவலின் சாரம் நான்காம் தலைமுறையில் ஆரம்பித்து, இரண்டாம் தலைமுறைக்குச் சென்று, மூன்றாம் தலைமுறைக்கு தாவி மீண்டும் முதல் தலைமுறை (நாவலுக்கு) போய் மேலும் மேலும் முன்னும் பின்னும் பயணிக்கிறது.

இந்த வியாக்கியானங்களை வாசித்து விளங்கிக் கொள்ள பெயர் ஒரு தடையாக உள்ளது. இவருக்கு எத்தனை பிள்ளை, அவருக்கு பிறந்தது யார் என கண்ணில் விளக்கெண்ணை உற்றிக் கொண்டு பார்த்தால் ஒழிய பிடிபடாது. ஏகபட்ட கதை மாந்தர்கள். இரண்டாம் பகுதியில் ‘உ சிவமயம்’ போடும் இடத்தின் இடப்பக்கம் 1967 என போட்டு கதையை ஆரம்பிக்கும் போது தான் வாசகன் பண்டைய காலத்து சரித்திர நாவலை வாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொள்கிறான். முதல் பாகம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து சொல்லப்படாத நிகழ்கால ஆண்டு வரையிலும் ஒரு மிகப் பெரும் கால பெட்டகதை அடக்கிக் கொள்கிறது.

ஆசிரியர் மலாய் சமூகத்தின் வாழ்வியலை மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். தமிழ் வாசிப்பு சூழலுக்கு அது புதுமையான விசயம். இது போன்ற முயற்சிகள் இன, கலாச்சார புரிந்துணர்வுக்கு மேலும் பயனாதக அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.

நாவலின் ஆரம்பத்தில் எந்த வித சமரசமும் இல்லாமல் மலாய்கார்ர்களின் கலாச்சாரத்தை அதன் பேச்சு வழக்கில் பதிவு செய்யும் ஆசிரியர் நாவலின் பின் பகுதியில் அதை தவறவிடுகிறார். உதாரணத்திற்கு ‘சுச்சோர்’ ’கறிபாப்’ என எழுதுபவர் நாவலின் பின் பகுதியில் நமது பேச்சு மொழியான ‘பீசாங் கோரேங்’கை பஜ்ஜி என செல்லம் கொஞ்சுகிறார். 'பீசாங் கோரேங்' செய்முறை விளக்கம் கூட உள்ளது. பஜ்ஜிக்கும் 'பீசாங் கோரேங்கிற்கும்' உள்ள சரித்திர தொடர்பை பதிவு செய்ய அப்படி எழுதி இருப்பாரோ? அது அந்த இலச்சிமல ஆத்தாவுக்கு தான் வெளிச்சம். ’சிலூவார்’ எனும் வார்த்தையை யாரோ புரிந்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு காட்சி விளக்கம் கொடுக்கிறார். இது யாருக்கான சமரசம்? சில தமிழ்த் திரைப்படங்களை தெலுங்கு இரசிகர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக மேல்பூச்சு வேலைகளை செய்து இரு மொழிகளில் திரையிடுவார்கள். அதை போல் ரிங்கிட் மலேசிய சூழலை தாண்டி மற்றவர்களுக்கு விளங்காமல் போய்விடுமோ எனும் அச்சம் அதன் படிமங்களுக்கு கீழ் புதைந்துள்ளது.

மே 13 கலவரத்திற்கு முன் வேறு சில இன கலவரங்கள் மலாயாவில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மலாய்- சீன இனத்தைச் சார்ந்த கலவரங்கள். 1967 ஜூன் மாதத்தில் மத்திய வங்கி ரிங்கிட் நாணயத்தை வெளியிடுகிறது. அதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது Malaya and British Borneo Dollars. 1967- நவம்பரில் பிரிடீஷ் நாணயம் வீழ்ச்சி அடைகிறது. பரிவர்தனையில் அதன் தன்மை குறைவான மதிப்பில் ஏற்றுக் கொள்ளபடுகிறது. மலேசிய பொருளாதார நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீனரிடமே பிரிடீஷ் பண புழக்கம் அதிகம் இருந்தது. வியாபார ரீதியாக அது பாதிப்பை உண்டாக்கியது. சேமிப்பு இப்படி 15 விழுக்காடு வீழ்ச்சியடைவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காந்திய முறையில் அவர்கள் கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்கிறார்கள். அதில் ஈடுபட மறுக்கும் மலாய்கார வியாபாரிகளிடம் கேள்வி கேட்க போய் கருத்து வேறுபாடுகளால் அது இனக் கலவரமாக வெடிக்கிறது. அக்கலவரத்தில் 27 பேர் மரணம் அடைந்தனர், பலர் காயமடைந்தனர், பொது, தனியார் சொத்துகளும் நாசம் செய்யப்பட்டன.

மேற்காணும் இக்கலவரமே இந்நாவலின் மையம். இதன் பின்ணனியில் மூன்று இன மக்களின் வாழ்வியல் பேசப்படுகிறது. வெவ்வேறு பின்ணனிகளை கொண்ட இவர்கள் இனக் கலவரம் எனும் புள்ளியில் எப்படியாக இணைந்தார்கள் என்பதாக இந்நாவல் விளக்குகிறது.

இந்நாவல் நடைபெறும் கதைக் களம் பினாங்கு மாநிலத்தை அடிப்படையாக கொண்டது. ஆதலால் தமிழ் இனத்தின் வாழ்வியல் பின்னணியையும் கூறிவிட வேண்டும் எனும் தனது தார்மீக கடமையைச் செய்துள்ளார் ஆசிரியர். இதில் செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள், தமிழர்கள், மளையாளி, யாழ்பாண தமிழர்களையும் குறிப்பிட்டுள்ளார். பகுதி மூன்றில் வரும் இந்த அத்தியாயத்தை மொத்தமாக நீக்கிவிட்டு வாசித்தாலும் நாவல் புரிந்துவிடும். ஏன் என்றால் நாணய இனக் கலவரத்தில் இந்திய மக்களின் பங்கு என்பது ஒரு பார்வையாளனாக மட்டுமே உள்ளது.

காளிமுத்துவின் சிகை திருத்தும் கடைக்கு பல தரபட்ட மக்கள் வருகிறார்கள். அதன் வழியே பினாங்கில் அவர்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படுகிறது. தேவார துரைசிங்கம் எனும் யாழ்பாண தமிழரை கூறும் போது தமிழில் கரை கண்ட அவரை சமூகம் மதிப்போடு பார்ப்பதாக பதிவு செய்கிறார். அந்நிலையை இப்போது பார்ர்கின் தற்சமயம் அவர்கள் தமிழ் படிப்பதும் இல்லை. சக தமிழ் மக்களை வேற்றுக் கிரக வாசிகலென பார்க்கிறார்கள் என்பதும் புரியும்.

இரண்டாம் பகுதியில் விக்டர் எனும் ஒரு கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இரண்டாம் பகுதி சீனர்களின் வாழ்வியலை பேசுவதால் இவரை சீனார் என்றும் கொள்ளலாம். அல்லது பிரிடீஷ் விட்டுச் சென்ற தலைவலி எனவும் கருதலாம். கடைசி வரை விக்டர் சீனர் தான என்பதை உறுதி செய்யும் வேலையை பாவபட்ட வாசகனிடமே விட்டுவிடுகிறார் ஆசிரியர்.

அதே போல் ஒரு கொலை நிகழ்வை பார்க்கும் கதிரேசனால் அங்கு எந்த சலனமும் ஏற்படவில்லை. கிஞ்சித்தும் பயன்படாத மௌன சாட்சியாக இருக்கிறான் கதிரேசன். ஓடிப் போய் கதவை தாழிட்டு ஒழிந்துக் கொள்கிறான். ஒரு வேளை தமது வாயொதிக காலத்தில் ஹசான் வழுக்கி விழ கதிரேசன் தான் காரணம் என இந்த நாவலின் அடுத்த பாகத்தை எழுதும் முயற்சிக்காக அப்படி படைக்கப்பட்டிருக்கலாம்.

4-ஆம் பகுதி போரட்ட தினத்தை பேசுகிறது. அதில் சான் மற்றும் ஜமாலுடின் எனும் இரு காவல் அதிகாரிகள் தொழிலாளர் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார்கள். இவர்களுக்கு இஸ்பெக்டர் பதவி கொடுக்கலாமா அல்லது சார்ஜன் பதவி கொடுக்கலாமா என நீண்ட குழப்பத்திற்கு பின் இரண்டையுமே வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த பதவி மோகம் நாவலின் நகர்வுக்கு சிறு துளியேனும் பாதிப்பை கொடுக்கப் போவதில்லை என்பதால் பாவபட்ட வாசகன் கண்னை மூடிக் கொண்டு நகர்ந்துவிடலாம்.

85-வது பக்கத்தில் வரும் வசனத்தில் ‘நமது நோக்கத்தைச் சிதைக்க நம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். ஆகவே கட்சி உறுப்பினர்கள் மிக கவனமாக இருங்கள்…’ எனும் வசனம் மிக கவனமாக செர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தின் இன்னோரு பக்கம் உண்டு என்பதாகவும் அது நாவலில் சொல்லப்படாமல் உள்ளது என்பதாகவும் நாம் இங்கே காண முடிகிறது. கம்யூனிஸ்டுகள் மேல் பழியை போட்டு ஒரு வலுவான இன அரசியலை நிறுவும் முயற்சிக்கு அது வித்திட்டது.

இந்நாவலின் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிபடுகள் மிக ஆழமாக படைக்கப்பட்டுள்ளது. தமிழர் சமூகம், தோட்டபுர வாழ்வு என படைக்கப்பட்டு வந்த தமிழ் இலக்கிய வரிசையில் வேற்று சமூகத்தின் வாழ்வும் மிக நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது இதுவே முதல் முறையென அறிகிறேன். இது எதிர்கால படைப்புகளுக்கு ஒரு புதிய சிந்தனை முயற்சியை தூண்டும் விதமே அமைந்துள்ளது. இக்கலவர நிகழ்வு பொருபான்மையினர் அறியாத நிகழ்வே. மே-13 கலவரம் பேசப்பட்ட அளவுக்கு மற்றவை பேசப்படவில்லை. இதை வசிப்பு வெளிக்கு கொண்டு வந்தது பெரும் பாராட்டுக்குரியது. ஆசிரியரின் முதல் நாவல் முயற்சிக்கு வாழ்த்துகள்.

No comments: