Wednesday, January 30, 2019

மகாத்மா காந்தி கொலை வழக்கு

வாசகர்கள் தவறவிடக் கூடாத நூல் இது. காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதைகளையும், செய்திகளையும், ஆவணப் படங்களையும் பல விதங்களில் திரையில் கண்டும் வாசித்தும் இருப்போம். உலகச் சரித்திரத்தில் மாற்றம் ஏற்படுத்திய 100 பிரபலங்கள் எனும் நூல் உண்டு. அதில் காந்தியின் பெயர் இருக்காது. அதற்கான காரணத்தை முன் வைக்கும் அந்நூல் ஆசிரியர் காந்தியின் அரசியல் கொள்கைகள் அவரின் இறப்பிற்குப் பின் யாராலும் முன் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் காந்தியின் கொலைக்கு முக்கியக் காரணம் அவரது கொள்கைகள் தான்.

நாம் இதுவரை பார்த்த, வாசித்தக் கதைகள் யாவும் காந்தியைச் சார்ந்தவகைகளாக இருந்திருக்கும். இந்நூல் முழுக்க காந்தியைக் கொல்ல வேண்டும் எனும் தீவிரக் கொள்கை கொண்ட தீவிரவாத கும்பலைச் சுற்றிய செய்திகளை நமக்கு அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் தலையெடுக்கக் காரணம் என்ன? கோட்ஸ்சே கூலிக்கு கொலை செய்தவராயின் தனது அடையாளத்தை மறைத்து கொலை செய்திருக்கலாம்! ஆனால் கோட்ஸ்சே எந்த வித அடையாள மறைப்பும் இன்றி காந்தியைக் கொலைச் செய்கிறார். காந்தியக் கொன்றப் பின் தான் பிறவிப் பயனடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கொண்டு தண்டனைக்குத் தயாராகிவிடுகிறார்.

தான் காந்தியைக் கொன்றது அரசியல் காரணங்களுக்கே எனக் கூறும் கோட்ஸ்சே தனது செயல்களில் தெளிவாகவே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்திருக்கிறார். எந்தக் கோனத்திலும் சிந்தனை பிசிகியவராக அவரை அனுகிவிட முடியாது. எந்த அளவிற்கு ஹிந்து மதப் பற்று இருந்ததோ அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பும் அவரிடம் இருந்திருக்கிறது. காந்தி கண்டெடுத்த இந்திய சுதந்திரத்தால் பாக்கிஸ்தான் எனும் ஓர் இஸ்லாமிய நாடு உறுவானது. ஆனால் இந்தியா ஓர் இந்து தேசமல்ல. மதசார்பற்ற நாடாக இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனும் காந்தியின் கொள்கைகள் கொட்ஸ்சேவை மிகையாகவே கொதிப்படையச் செய்தன. காந்தியின் கொள்கைகளுக்கு எதிரான இந்து மகாசபையினரின் எதிர்ப்புகளும் வாதங்களும் தேசிய நிலையில் கவனம் பெறாமல் போனது மேலும் அவர்களின் கோபத் தீயில் நெய் வார்த்தது.

காந்தியின் கொலை வழக்கில் தூக்கிலடப்பட்ட நபர்கள் இருவர். ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேலும் சிலர். காரணம் அது திட்டமிடப்பட்டக் கூட்டுச் சதி படு கொலையாகும். இந்தக் கொலைக்கு முழுமையாக தானே பெறுப்பேற்பதாக கோட்ஸ்சே வாதிட்டிருக்கிறார். காவல் துறையின் விசாரணை இக்கொலையின் வேர் இந்து மகாசாபா அமைப்பில் இருந்து உறுவானதை கண்டறிகிறார்கள். கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். குற்றம் சாற்றப்பட்ட ஒவ்வொருவரின் பின்னனியும் அவர்களின் ஆரம்பக் காலம் முதல் அலசி ஆரயப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

காந்தியைச் சுடப் பயன்படுத்தப்பட்டது ஓர் இத்தாலிய நாட்டுத் துப்பாக்கி. அது செய்யப்பட்ட ஆண்டு முதல் இந்தியா வந்து செர்ந்தது வரை என ஒவ்வோரு வரியும் சுவாரசியமான விளக்கங்களோடு விரிகிறது இந்நூல். இந்நூல் உறுவாக நிறையவே வாசித்து மேற்கோள் காட்டி இருக்கும் ஆசிரியர், வசகன் மேலும் தேடி பிடித்து வாசித்து அறிந்து கொள்ள தூண்டுதல்களையும் வழிவகுத்திருக்கிறார். நான் அவ்வாறே நூலின் வாசிப்பை நிறுத்தி இணையத்தில் சில தகவல்களை தேடி பிடித்து வாசித்து மீண்டும் நூலினைத் தொடர்ந்தேன். உலகில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நான்காவது நாடு பாக்கிஸ்தான். சிந்துவெளி நாகரீகம் தோன்றிய சிந்து நதி தற்போது இருக்கும் இடமும் பாக்கிஸ்தான் தான்.

கோட்ஸ்சே தனது தரப்பு வாதத்தை எழுதி வைத்து சில மணி நேரங்கள் நீதிமன்றத்தில் வாசித்திருக்கிறார். வழக்கின் மேல் முறையீட்டின் சமயத்திலும் அதே போல் சில மணி நேரங்கள் தன் தரப்பு வாதத்தை வாசித்திருக்கிறார். வழக்கைப் பார்த்த பலரும் அவரின் பேச்சாற்றலில் உணர்ச்சிவயப்பட்டதாகவும், அந்த பார்வையாளர்களின் கைகளில் பேனா கொடுத்திருந்தால் கோட்ஸ்சே கோஸ்டியினர் நிரபராதிகள் என தீர்ப்பெழுதி இருப்பார்கள் என பின்னாட்களில் அவ்வழக்கின் நீதிபதி தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கோட்ஸ்சேவின் defense வாதம் பின்னாட்களில் அவரின் தம்பி கோப்பால் கோட்ஸ்சோவால் May It Please Your Honor எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாதுராம் கோட்ஸ்சேவின் சாம்பல் இரகசியமாக கரைக்கப்படது என ஆசிரியர் எழுதியுள்ளார். கோட்ஸேவின் கடைசி ஆசை தனது சாம்பல் பாக்கிஸ்தானில் இருக்கும் சிந்துநதியில் கரைக்கப்பட வேண்டும் என்பதே. காந்தியின் சாம்பல் தூவப்பட்ட இந்திய தேசத்தில் தமது சாம்பல் கரைக்கப்படுவதை கோட்ஸ்சே விரும்பவில்லை. அது நடந்தேறியதா என்பது நமது தேடலுக்குறியது. காந்தியின் கொலை வழக்கு ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்து வந்த பின்பும் சிறப்புக் கமிஷனால் மறு விசாரணை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னை வெகுவாக கவர்த நூல் இது.

No comments: