Thursday, January 24, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (1-10)

நூல்கள் தொடர்பாக பேசும் களம் நமக்கு மிகக் குறைவாகவே உள்ளது. வாசித்த நூல்களை அறிமுகம் அல்லது விமர்சித்துப் பகிரும் போது ஒரு சில தனிபட்டக் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. ”உனக்கு எப்படி வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்குது” என்பது அதில் ஒன்று. இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை தான். சில வேளைகளில் அவை எரிச்சலையும் எழுதாமல் விடுவதற்கான சோம்பலையும் கொடுக்கின்றன என்பது தான் உண்மை.

யூ டியுபில் இலக்கியப் பெட்டி எனும் ஒரு தளம் உள்ளது. புத்தகம் பேசுவோம் எனும் தலைப்பில் அருமையான நூல்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். அவர்கள் படைக்கும் விதம் பார்பவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அதன் காணொளிகளின் மறுமொழி ஒன்றை வாசித்தேன். நாம் ஏன் நூல்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்பதாக ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

நேற்றய இரவு எஸ்.இராமகிருஸ்ணனின் சிறிது வெளிச்சம் எனும் கட்டுரைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மூன்று கரையுள்ள ஆறு எனும் தலைப்பில் ஒரு கட்டுரை, பல வரிகள் அடிகோடிட்டு மனப்பாடம் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. நூல் வாசிப்பு தொடர்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் யூ டியுபில் பார்தக் கோள்விக்கு பின் வருமாறு பதில் கிடத்தது:

“புத்தகம் என்ன செய்யும்? ஏன் புத்தகம் படிக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல ஃபிரெஞ்சு இயக்குநர் த்ரூபா இயக்கிய 'Fahrenheit 451' என்ற படம். அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைக்கதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூபா இயக்கிய ஒரே ஆங்கிலப்படம் அது. Fahrenheit 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.”

“புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்தப் பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ் நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வாழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.”

”உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்” - சிறிது வெளிச்சம் நூலில் எஸ்.ராமகிருஸ்ணன்.

............................................

வாசித்த நூல்களைப் பற்றி பேசாமல் விடுவதால் அவை நம் மனதில் தங்காமலே போய்விடுகின்றன. அவற்றை அறிமுகப்படுத்தும் போது யாரோ ஒரு சிலர் உந்துதல் ஏற்பட்டு வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கிண்டிலில் தமிழ் நூல்களை வாங்கி வாசிக்கும் முறைகளையும் சில நண்பர்கள் கேட்டு அறிந்துக் கொண்டார்கள். ஆண்டு தொடக்கம் முதல் இது வரை வாசித்த நூல்கள் தொடர்பான சிறு குறிப்புகள்:

1. FBI - அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

அமெரிக்காவின் துப்பரிதல் வேலைகளை இரு வேறு துறைகள் செய்துவருகின்றன. ஒன்று சி.ஐ.ஏ மற்றொன்று எஃப்.பி.ஐ. இந்த இரண்டு துறைகளும் முற்றிலும் மாறுபட்ட பங்காற்றுகின்றன. எஃப்.பி.ஜ உள்நாட்டு துப்பரிதல்களையும் புலன் விசரனையையும் செய்கின்றது. சி.ஐ.ஏ வெளிநாட்டு விவகாரங்களுக்கானது. மிகவும் இலகுவாக வாசித்துவிடக் கூடிய நூல் இது. எஃப்.பி.ஐயின் பிறப்பு முதல் தற்கால நிகழ்வு வரை அவர்கள் செய்த சாதனைகளையும் கோட்டைவிட்ட சம்பவங்களையும் வாசித்து அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது.

2. பிரிடிஷ் ஏஜெண்ட்

பேயோன் எழுதிய கதைகள் கட்டுரைகள் என இத்தொகுப்பு நூல் அமைகிறது. பிரிடிஷ் ஏஜெண்ட் என்பது இந்நூலின் முதல் சிறுகதை. இதில் வரும் சில கதைகள் வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவையோடு படைக்கப்பட்டுள்ளன. யார் இந்த பேயோன் என்பது இன்று வரை கேள்வி குறியான விசயம் தான். பிரிடிஷ் ஏஜெண்ட் கதையில் பாரதியார் வருகிறார். இந்த பேயோன் பாரதியாரை உளவறி வந்த பிரிடிஷ் ஏஜெண்டாக இருக்குமோ என கதை போகிறது. துப்பறியும் கதைகளில் குமார் எனும் மதிநுட்ப கதாபாத்திரம் கவர்கிறது. குமார் துப்பறிகிறார் எனும் பேயோனின் மற்றுமொரு நூலும் உண்டு. பிரிடிஸ் ஏஜெண்ட் நூலில் சில ஆழமான கட்டுரைகள் உண்டு. அவை சீரியசான நகைச்சுவையா அல்லது ஆய்வு கட்டுரையா என்பதை மேலும் தேடி அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றது.

3. துப்பறியளாம் வாங்க

இணையத்தில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல் என்றே அறிகிறேன். வெளிநாடுகளில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் மெடிக்கல் டிடெக்டிவ்ஸ் எனும் ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் விசாரனை செய்யப்பட்ட மிக சிக்கலான சம்பவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பூர்வமாக தடயங்களை திரட்டி நீதி மன்றத்தில் குற்றத்தை நிருபனம் செய்தது வரை இந்நூலில் படங்களோடு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல கொலை சம்பவங்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணர முடிகிறது. இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

4. ஷெர்லாக் ஹோம்ஸ் - ஒரு மோதிரம் இரு கொலைகள்
(Sherlock Holmes) A Study in Scarlet 1887

இந்தக் கதையை சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில பதிப்பில் வாசித்தேன். ஆர்த்தர் கோனன் டாயில் எனும் எழுத்தாளர் என்னை அதிகமாகவே வசிகரித்தார். டாயிலின் ஒரு சில நூல்களின் வாசிப்பிற்குப் பின் இணையத்தில் ஒரு கட்டுரையை எழுதினேன். ஒரு மோதிரம் இரு கொலைகள் என தமிழ்ப் பதிப்பில் இந்நூலைக் கண்டவுடன் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதிதாக வாசிக்கும் அதே அனுபத்தை தமிழில் உணர முடிந்தது. கொஞ்சமும் குறைவற்ற சுவாரசியம். ஷெர்லாக் ஹொம்ஸ் தொடர்பாக திரைப்படங்கள் உள்ளன. வசிப்பில் கிடைக்கும் உணர்வு அந்தத் திரப்படங்களில் இல்லை.

5. மாவோ - என் பின்னால் வா

எழுத்தாளர் மருதனின் மற்றுமொரு அற்புதமான படைப்பு. பெய்ஜிங் தியான் ஆன் மென் சதுக்கத்திற்கு முன் தான் மாவோவின் நினைவாலயம் உள்ளது. செவ்வாய் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் பதன் செய்யப்பட்ட அவரின் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சீனாவில் கம்யூனிச சித்தாந்தம் அறிமுகம் முதல் விவசாய புரட்சியின் வழி சுதந்திரம் பெற்றுவது வரையினும். கடைசியாக அவரின் இறப்பு வரையும் இந்நூல் பேசுகிறது. சீனாவில் இன்றளவிலும் ஒரே கட்சி ஆட்சி முறை தான். மாவோ காலத்தில் நடந்த தி கிரேட் லீப் மற்றும் நில உடமை புரட்சியால் கட்சிக்குள் எழுந்த பிரச்சனைகள். இதனால் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சம் மக்கள் இறந்ததால் மாவோவின் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மாவோவை அதிகமாக நேசிப்பதைப் போலவே வெறுப்பவர்களும் உண்டு. சீனாவின் கம்யூனிச அரசியலின் அடிப்படை புரிதலுக்கு இந்த நூல் மிக உதவியாக இருக்கும். இரசியாவில் நடந்த தொழில் புரட்சிக்கும் சீனாவில் நிகழ்ந்த விவசாய புரட்சிக்குமான மாறுபாடுகளை ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

6. நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது கடவுள் மறுப்புத் தொடர்பாக அவர் எழுதிய குறிப்புகள் தான் இந்த நூல். பகத்சிங் ஒரு தூக்கு தண்டனைக் கைதி. அவரிடம் சிறை நண்பரொருவர் கூறுகிறார் ‘உனது கடைசி காலத்தில் நீ கடவுளை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவாய் பகத்சிங்”. “அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது என்னை நானே அவமானப்படுத்துவதற்கு சமம். பலவீனத்தால், சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப் போவதில்லை, அதை எனது அகங்காரமாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போ” என்கிறார் பகத்சிங். வாசிக்க வேண்டிய நூல். இருந்தும் மொழி பெயர்ப்பும் எழுத்துருக்களின் அச்சு வடிவமும் அதன் வசீகரத்தைக் குன்றச் செய்துள்ளன.

7. மகாத்மா காந்தி கொலை வழக்கு

காந்தியின் மீதான தீரா வன்மத்தோடு திரியும் நாதுராம் கோட்சேவை பின் தொடரும் நூல். ஒரே மூச்சில் படித்து உள்வாங்கிக் கொள்ளக் கூடிய நூல். இந்நூல் தொடர்பான விரிவான பார்வையை முந்தய பதிவுகளில் கொடுத்திருக்கிறேன்.

8. 6174

சுதாகர் கஸ்தூரி எனும் எழுத்தாளரின் எழுத்து இதற்கு முன் எனக்கு பரிட்சயமற்றது. 6174 என்பது அவரின் முதல் நாவலும் கூட. இந்நாவலின் விமர்சனங்களை வாசித்த பிறகே இந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன். லெமூரியா கண்ட அழிவின் போது இந்த நாவல் தொடங்குகிறது. அதன் பின் நாவலின் ஓட்டம் ’காலை ஜப்பானில் காபி, மாலை நியுயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்பதைப் போல் ஓரிடம் நிற்காமல் பறக்கிறது. 6174 எனும் கணிதவியலின் கருஞ்சுழி சூத்திரத்தை இந்த நாவல் மையமாக பேசினாலும் அதைத் தாண்டிய பல அறிவியல் தகவல்களையும், தொல்பொருள் ஆய்வியல் களங்களையும், வெண்பா விளக்கங்களையும் வாசகனுக்கு கடத்தித் தருகிறது. இன்னொரு வெண்பா புதிரா என வாசகன் யோசிக்கும் தருணத்தில் நாவலின் கதாபாத்திரமும் அதே வசனத்தைப் பேசி சமாளிக்கிறது. இக்கதையின் முடிவில் எனக்கு விமர்சனம் உண்டு. அதை பேசினால் வாசிப்போரின் சுவாரசியம் குறைந்து போகும். இந்நாவலை வாசித்த பலரும் சுதாகர் கஸ்தூரி தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த டான் பிராவுன் எனக் கூறுகிறார்கள்.

9. வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

சமிபத்தில் வெளியீடு கண்ட வேங்கை நங்கூறத்தின் ஜீன் குறிப்புகள் நூல் தொடர்பாக நண்பர் அதிஷா பேசிய காணொளியை பார்த்த பிறகே தமிழ்மகனின் படைப்புகளை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். முன்பு இவரது ஆண்பால் பெண்பால் மற்றும் வெட்டுப் புலி நாவல்கள் தொடர்பான விமர்சனங்களை வாசித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிண்டிலில் இவரின் ஒரு சில நூல்கள் கிடைக்கின்றன. வெள்ளை நிறத்தில் ஒரு காதல் தமிழ்மகன் 1984-ல் ஒரு போட்டிக்காக எழுதி முதல் பரிசை வென்ற நாவல் என அறிய முடிகிறது. கன்னிமாரா எனும் நூலகத்தின் பல நூல்களின் இலக்கியத்தை இந்த நூல் நம்மோடு உரையாடுகிறது. இந்த நாவலின் வலு அதன் கதாபாத்திர வடிவமைப்புகள். வலக்கறிஞர் அலுவலகத்தில் ஒருக்கும் ஒரு வயதான வக்கிலின் மொழியாடலைக் கூட மிக நுட்பமாக கையாண்டு எழுதி இருப்பார்.

10. எட்டாயிரம் தலைமுறை

தமிழ்மகனின் சிறுகதை தொகுப்பு நூல். 2008-ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதை பரிசை வென்ற நூல் இது. இந்த நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எழுத்து விற்பனர்களை பற்றிய ஒரு சிறுகதை இதில் குறிப்பிட தக்கது. 2007-ஆம் ஆண்டில் முனைவர் கலியபெருமாளிடம் யாப்பிலக்கண வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். அவரது வீடு ஈப்போவில் இருந்தது. சில பெட்டிகளில் கட்டுக் கட்டாக நூல்களை கட்டி வைத்திருப்பார். அவை யாவும் அச்சிடப்பட்டு விலை போகாத நூல்கள். அதுவே நம் மக்களிடம் நூல் வாசிப்பிற்கான விழிப்புணர்பு எந்த வகையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னொருப் பக்கம் தன்முனைப்பு எனு பெயரில் திருவள்ளுவரும், ஔவையும் புத்தரும் கூறிய கருத்துகளை மீள் அச்சிட்டு விளம்பரம் செய்து மக்களை வாங்க வைக்கும் யுத்தியும் இங்கே நடக்கிறது. இப்படியான ஒரு சம்பவத்தை சவீதா முத்துக்கிருஷ்ணன் சிந்தனைகள் எனும் கதையின் வழி சமர்ப்பிக்கிறார் தமிழ்மகன். இரண்டு கடிதங்கள் எனும் கதையும் மக்களிடம் இருக்கும் இலக்கிய வாசிப்பு தொடர்பான செய்தியையே பேசுகிறது.

தொடரும்...

No comments: