Thursday, December 12, 2013

அங்கோர் வாட் 3- பேசும் கற்கள்

கெமர் கல்வெட்டு
கல் சொல்லும் கதை:

அரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர். 

Source : Inscription, the basis of our knowledge of history. - George Coedes

உப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.

கல்லின் கதை: 

தென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.

********

பாற்கடலை கடையும் காட்சி
பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை. 

தூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம். 

வாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இரண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.

அங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன். 
முகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.

அங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம். 

அங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது. 
பாழ்பட்ட பாம்பின் உடல்
கெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன. 

அங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் முழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம். 
பெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.

சிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை. 

அங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம். 
எண்னற்ற முகக் கோபுரங்கள்
அங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு. 

உள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார். 

அங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

இன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

8 comments:

துளசி கோபால் said...

வாவ்!! அருமை!

Anonymous said...

இந்த கட்டுரையை எழுத சில் துணை நூல்களையும் வாசிக்கிறீர்கள்.ஆழம் தெரிகிறது. 4 வாசல்கள் கொண்ட கோயில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.

ஸ்வாமி ஓம்கார் said...

//பயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது.//

அதே உணர்வு :) நல்ல தொகுப்பு உங்களுடையது

VIKNESHWARAN ADAKKALAM said...

@ துளசி கோபால்

நன்றி

@ அனானிமஸ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பேயோன் ஐந்து வாசல்களை கொண்டது. எல்லா வாசல்களும் ஒன்று போலவே இருக்கும்.

@ ஸ்வாமி ஓம்கார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Tamilvanan said...

salt- salary நல்ல குறிப்பு
கோவிலுக்கு எதற்கு அகழிகள்?
ஒருவேளை இவையெல்லாம் கோவில் என்ற பெயரில் கோட்டையாக இருந்தனவோ

Maran said...

கிரெமியரின் நம்பிக்கை படி, இந்த அகழிகள், மண்ணூலகத்தையும் (மனிதர்கள் வழும் இடத்தையும்) சொர்கத்தையும் (இறைவன் வாழும் இடத்தையும்) பிறிகின்றன.

மாதேவி said...

கண்டு மகிழ்ந்தோம். மிக்கநன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மாறனின் பதிலை கவனியுங்கள். கோவிலும் கோட்டைகளும் சேந்தே இருந்துள்ளன.

@ மார்தாண்டன்

மாறன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த தகவலை பதிவில் தவறவிட்டேன். பிறகு சேர்த்துவிடுகிறேன்.

@ மாதேவி

நீங்கள் கம்போடியா சென்றுள்ளீர்களா?