Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 30, 2009

கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு

கலையகம் ஆசிரியர் கலையரசனுடனான கேள்வி பதில் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரி
ணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலா
ம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

Thursday, July 23, 2009

ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை

மலேசிய பிரதமரின் பதவியேற்புக்குப் பின் முக்கியமாக வழியுறுத்தப்பட்ட ஒரு விடயம் 1 மலேசிய திட்டம்.

ஒரு மலேசிய திட்டம்:

இனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.

இதைப் பற்றிய மேலாதிக்க தகவலுக்கு கீழ்காணும் வலைத்தளங்களைக் காணவும்:

http://www.1malaysia.com.my/index.php?lang=en

http://www.themalaysianinsider.com/index.php/malaysia/32325-najib-denies-1-malaysia-concept-is-alien-to-muslims-

http://thestar.com.my/news/story.asp?file=/2009/4/15/nation/3697685&sec=nation
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

நன்றி: http://www.1malaysia.com.my/

அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?

மொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்டத்தின் நோக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்!

Friday, November 21, 2008

என்னைச் செருப்பால் அடியுங்கள்!

இதனை எண்ணும் போதெல்லாம் கொச்சை வார்த்தைகள் கொந்தளிக்கின்றன. வேதாளத்திற்கு வாக்கப்பட்டால் முருங்கை மரத்தில் ஏற வேண்டுமாம். அதனால் பொத்த வேண்டியதை பொத்திக் கொண்டு மூட வேண்டியதை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிர்பந்தம் தான் போல.

‘ஷாருக்கானுக்கு டத்தோ விருது’ இதனைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பச்சை வார்த்தைகள் பாய்ந்து வருகின்றன. அப்படி என்றால் நான் நாட்டின் துரோகியாக இருப்பேனோ என்ற எண்ணமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது.

ஒருவருக்கு வாழ்த்தும் விருதும் கொடுத்து சிறப்பிப்பது சிறந்த செயல் என்றாலும் கூட எதற்கும் ஒரு வரையறை வேண்டாமா? முதல் வகுப்பு தேறிய மாணவனுக்கு(!?) இளங்கலை பட்டம் கொடுத்தீர்கள் என்றால் அம்மாணவனின் மனநிலை எப்படி இருக்கும்? அதன் பெருமை அவனறிவானா? அதனால் அவனுக்கு என்ன பயனுண்டு?

மலேசியாவில் மலாக்கா மாநில ஆளுநரின் 70-ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி ஷாருக்கானுக்கு டத்தோ விருது வழங்கப்பட இருக்கிறது. எதனால் விருது? மலாக்காவில் திரைப்படம் தயாரித்து மலாக்கா மாநிலத்தை வெளிநாட்டினரிடையே பிரபலப்படுத்தியதற்காக இவ்விருது கொடுக்கப்பட இருக்கிறது. அதை பெற்றுகொள்ள நேரமில்லையென அந்த பிரபல நடிகர் கூறி இருப்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்ல வேண்டும்.

சரி, ஒரு நடிகர் என்ற முறையில் ஷாருக்கான் செய்தது மகத்தான செயலாகவே இருக்கட்டும். அதற்காக கொடுக்கப்பட இருக்கும் விருதும் போற்ற தக்கதாகவே இருக்கட்டும். ஏனைய அரசு தரப்பினரும், அரசு சார்பற்ற தரப்பினரும் எடுத்துரைக்கும் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது முறையான ஒன்றா? என்ன சொல்ல கோமளித் தனமாக தான் இருக்கிறது சில வேளைகளில் சிலரது செயல்கள்.

பூப்பந்தாட்டத்தில் தமது பிள்ளைகளை சிறப்புர பயிற்சியளித்து உலகளவில் பெறுமை பெற செய்த சீடேக் சகோதரர்களின் தந்தைக்கு டத்தோ விருது கொடுக்கப்பட்டது. நாட்டுக்கு புகழ் சேர்த்த பிள்ளைகளின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட விருது மெத்த மகிழ்ச்சியான விடயமே. மறுப்பார் இல்லை.

அதே போல, கராத்தே தற்காப்புக் கலை பயிற்றுணர் திரு.பொன்னையா தமது பிள்ளைகளை தற்காப்பு கலையில் வலுமையாக பயிற்சி கொடுத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்க்க செய்தார். அவரை டத்தோ பொன்னையாவாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான்.

சில வருடங்களுக்கு முன் கப்பல் கொண்டு உலகை வலம் வந்தவருக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்ட்து. 1996-ஆம் ஆண்டு இமயத்தில் மலேசிய கொடியை நாட்டிய நமது சகோதரர்கள் மகேந்திரனும் மோகன தாஸூம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இவருக்கு விருது கொடுங்கள் இவருக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்ல எனக்கு ஏற்ற பட்டறிவு இல்லை. இது எனது பொறாமை பார்வையும் இல்லை. எதையும் நடு நிலை நோக்கோடுதான் கொஞ்சம் பாருங்களேன் என அன்பு வேண்டுகோள் வைக்கிறேன். இது 'தவறான கருத்து' என நினைத்தால் என்னைச் செருப்பால் அடியுங்கள்.

இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.