Thursday, January 24, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (1-10)

நூல்கள் தொடர்பாக பேசும் களம் நமக்கு மிகக் குறைவாகவே உள்ளது. வாசித்த நூல்களை அறிமுகம் அல்லது விமர்சித்துப் பகிரும் போது ஒரு சில தனிபட்டக் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. ”உனக்கு எப்படி வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்குது” என்பது அதில் ஒன்று. இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை தான். சில வேளைகளில் அவை எரிச்சலையும் எழுதாமல் விடுவதற்கான சோம்பலையும் கொடுக்கின்றன என்பது தான் உண்மை.

யூ டியுபில் இலக்கியப் பெட்டி எனும் ஒரு தளம் உள்ளது. புத்தகம் பேசுவோம் எனும் தலைப்பில் அருமையான நூல்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். அவர்கள் படைக்கும் விதம் பார்பவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அதன் காணொளிகளின் மறுமொழி ஒன்றை வாசித்தேன். நாம் ஏன் நூல்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்பதாக ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

நேற்றய இரவு எஸ்.இராமகிருஸ்ணனின் சிறிது வெளிச்சம் எனும் கட்டுரைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மூன்று கரையுள்ள ஆறு எனும் தலைப்பில் ஒரு கட்டுரை, பல வரிகள் அடிகோடிட்டு மனப்பாடம் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. நூல் வாசிப்பு தொடர்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் யூ டியுபில் பார்தக் கோள்விக்கு பின் வருமாறு பதில் கிடத்தது:

“புத்தகம் என்ன செய்யும்? ஏன் புத்தகம் படிக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல ஃபிரெஞ்சு இயக்குநர் த்ரூபா இயக்கிய 'Fahrenheit 451' என்ற படம். அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைக்கதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூபா இயக்கிய ஒரே ஆங்கிலப்படம் அது. Fahrenheit 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.”

“புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்தப் பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ் நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வாழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.”

”உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்” - சிறிது வெளிச்சம் நூலில் எஸ்.ராமகிருஸ்ணன்.

............................................

வாசித்த நூல்களைப் பற்றி பேசாமல் விடுவதால் அவை நம் மனதில் தங்காமலே போய்விடுகின்றன. அவற்றை அறிமுகப்படுத்தும் போது யாரோ ஒரு சிலர் உந்துதல் ஏற்பட்டு வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கிண்டிலில் தமிழ் நூல்களை வாங்கி வாசிக்கும் முறைகளையும் சில நண்பர்கள் கேட்டு அறிந்துக் கொண்டார்கள். ஆண்டு தொடக்கம் முதல் இது வரை வாசித்த நூல்கள் தொடர்பான சிறு குறிப்புகள்:

1. FBI - அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

அமெரிக்காவின் துப்பரிதல் வேலைகளை இரு வேறு துறைகள் செய்துவருகின்றன. ஒன்று சி.ஐ.ஏ மற்றொன்று எஃப்.பி.ஐ. இந்த இரண்டு துறைகளும் முற்றிலும் மாறுபட்ட பங்காற்றுகின்றன. எஃப்.பி.ஜ உள்நாட்டு துப்பரிதல்களையும் புலன் விசரனையையும் செய்கின்றது. சி.ஐ.ஏ வெளிநாட்டு விவகாரங்களுக்கானது. மிகவும் இலகுவாக வாசித்துவிடக் கூடிய நூல் இது. எஃப்.பி.ஐயின் பிறப்பு முதல் தற்கால நிகழ்வு வரை அவர்கள் செய்த சாதனைகளையும் கோட்டைவிட்ட சம்பவங்களையும் வாசித்து அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது.

2. பிரிடிஷ் ஏஜெண்ட்

பேயோன் எழுதிய கதைகள் கட்டுரைகள் என இத்தொகுப்பு நூல் அமைகிறது. பிரிடிஷ் ஏஜெண்ட் என்பது இந்நூலின் முதல் சிறுகதை. இதில் வரும் சில கதைகள் வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவையோடு படைக்கப்பட்டுள்ளன. யார் இந்த பேயோன் என்பது இன்று வரை கேள்வி குறியான விசயம் தான். பிரிடிஷ் ஏஜெண்ட் கதையில் பாரதியார் வருகிறார். இந்த பேயோன் பாரதியாரை உளவறி வந்த பிரிடிஷ் ஏஜெண்டாக இருக்குமோ என கதை போகிறது. துப்பறியும் கதைகளில் குமார் எனும் மதிநுட்ப கதாபாத்திரம் கவர்கிறது. குமார் துப்பறிகிறார் எனும் பேயோனின் மற்றுமொரு நூலும் உண்டு. பிரிடிஸ் ஏஜெண்ட் நூலில் சில ஆழமான கட்டுரைகள் உண்டு. அவை சீரியசான நகைச்சுவையா அல்லது ஆய்வு கட்டுரையா என்பதை மேலும் தேடி அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றது.

3. துப்பறியளாம் வாங்க

இணையத்தில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல் என்றே அறிகிறேன். வெளிநாடுகளில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் மெடிக்கல் டிடெக்டிவ்ஸ் எனும் ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் விசாரனை செய்யப்பட்ட மிக சிக்கலான சம்பவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பூர்வமாக தடயங்களை திரட்டி நீதி மன்றத்தில் குற்றத்தை நிருபனம் செய்தது வரை இந்நூலில் படங்களோடு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல கொலை சம்பவங்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணர முடிகிறது. இந்த நூல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

4. ஷெர்லாக் ஹோம்ஸ் - ஒரு மோதிரம் இரு கொலைகள்
(Sherlock Holmes) A Study in Scarlet 1887

இந்தக் கதையை சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில பதிப்பில் வாசித்தேன். ஆர்த்தர் கோனன் டாயில் எனும் எழுத்தாளர் என்னை அதிகமாகவே வசிகரித்தார். டாயிலின் ஒரு சில நூல்களின் வாசிப்பிற்குப் பின் இணையத்தில் ஒரு கட்டுரையை எழுதினேன். ஒரு மோதிரம் இரு கொலைகள் என தமிழ்ப் பதிப்பில் இந்நூலைக் கண்டவுடன் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதிதாக வாசிக்கும் அதே அனுபத்தை தமிழில் உணர முடிந்தது. கொஞ்சமும் குறைவற்ற சுவாரசியம். ஷெர்லாக் ஹொம்ஸ் தொடர்பாக திரைப்படங்கள் உள்ளன. வசிப்பில் கிடைக்கும் உணர்வு அந்தத் திரப்படங்களில் இல்லை.

5. மாவோ - என் பின்னால் வா

எழுத்தாளர் மருதனின் மற்றுமொரு அற்புதமான படைப்பு. பெய்ஜிங் தியான் ஆன் மென் சதுக்கத்திற்கு முன் தான் மாவோவின் நினைவாலயம் உள்ளது. செவ்வாய் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் பதன் செய்யப்பட்ட அவரின் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சீனாவில் கம்யூனிச சித்தாந்தம் அறிமுகம் முதல் விவசாய புரட்சியின் வழி சுதந்திரம் பெற்றுவது வரையினும். கடைசியாக அவரின் இறப்பு வரையும் இந்நூல் பேசுகிறது. சீனாவில் இன்றளவிலும் ஒரே கட்சி ஆட்சி முறை தான். மாவோ காலத்தில் நடந்த தி கிரேட் லீப் மற்றும் நில உடமை புரட்சியால் கட்சிக்குள் எழுந்த பிரச்சனைகள். இதனால் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சம் மக்கள் இறந்ததால் மாவோவின் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மாவோவை அதிகமாக நேசிப்பதைப் போலவே வெறுப்பவர்களும் உண்டு. சீனாவின் கம்யூனிச அரசியலின் அடிப்படை புரிதலுக்கு இந்த நூல் மிக உதவியாக இருக்கும். இரசியாவில் நடந்த தொழில் புரட்சிக்கும் சீனாவில் நிகழ்ந்த விவசாய புரட்சிக்குமான மாறுபாடுகளை ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

6. நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது கடவுள் மறுப்புத் தொடர்பாக அவர் எழுதிய குறிப்புகள் தான் இந்த நூல். பகத்சிங் ஒரு தூக்கு தண்டனைக் கைதி. அவரிடம் சிறை நண்பரொருவர் கூறுகிறார் ‘உனது கடைசி காலத்தில் நீ கடவுளை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவாய் பகத்சிங்”. “அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது என்னை நானே அவமானப்படுத்துவதற்கு சமம். பலவீனத்தால், சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப் போவதில்லை, அதை எனது அகங்காரமாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போ” என்கிறார் பகத்சிங். வாசிக்க வேண்டிய நூல். இருந்தும் மொழி பெயர்ப்பும் எழுத்துருக்களின் அச்சு வடிவமும் அதன் வசீகரத்தைக் குன்றச் செய்துள்ளன.

7. மகாத்மா காந்தி கொலை வழக்கு

காந்தியின் மீதான தீரா வன்மத்தோடு திரியும் நாதுராம் கோட்சேவை பின் தொடரும் நூல். ஒரே மூச்சில் படித்து உள்வாங்கிக் கொள்ளக் கூடிய நூல். இந்நூல் தொடர்பான விரிவான பார்வையை முந்தய பதிவுகளில் கொடுத்திருக்கிறேன்.

8. 6174

சுதாகர் கஸ்தூரி எனும் எழுத்தாளரின் எழுத்து இதற்கு முன் எனக்கு பரிட்சயமற்றது. 6174 என்பது அவரின் முதல் நாவலும் கூட. இந்நாவலின் விமர்சனங்களை வாசித்த பிறகே இந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன். லெமூரியா கண்ட அழிவின் போது இந்த நாவல் தொடங்குகிறது. அதன் பின் நாவலின் ஓட்டம் ’காலை ஜப்பானில் காபி, மாலை நியுயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்பதைப் போல் ஓரிடம் நிற்காமல் பறக்கிறது. 6174 எனும் கணிதவியலின் கருஞ்சுழி சூத்திரத்தை இந்த நாவல் மையமாக பேசினாலும் அதைத் தாண்டிய பல அறிவியல் தகவல்களையும், தொல்பொருள் ஆய்வியல் களங்களையும், வெண்பா விளக்கங்களையும் வாசகனுக்கு கடத்தித் தருகிறது. இன்னொரு வெண்பா புதிரா என வாசகன் யோசிக்கும் தருணத்தில் நாவலின் கதாபாத்திரமும் அதே வசனத்தைப் பேசி சமாளிக்கிறது. இக்கதையின் முடிவில் எனக்கு விமர்சனம் உண்டு. அதை பேசினால் வாசிப்போரின் சுவாரசியம் குறைந்து போகும். இந்நாவலை வாசித்த பலரும் சுதாகர் கஸ்தூரி தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த டான் பிராவுன் எனக் கூறுகிறார்கள்.

9. வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

சமிபத்தில் வெளியீடு கண்ட வேங்கை நங்கூறத்தின் ஜீன் குறிப்புகள் நூல் தொடர்பாக நண்பர் அதிஷா பேசிய காணொளியை பார்த்த பிறகே தமிழ்மகனின் படைப்புகளை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். முன்பு இவரது ஆண்பால் பெண்பால் மற்றும் வெட்டுப் புலி நாவல்கள் தொடர்பான விமர்சனங்களை வாசித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிண்டிலில் இவரின் ஒரு சில நூல்கள் கிடைக்கின்றன. வெள்ளை நிறத்தில் ஒரு காதல் தமிழ்மகன் 1984-ல் ஒரு போட்டிக்காக எழுதி முதல் பரிசை வென்ற நாவல் என அறிய முடிகிறது. கன்னிமாரா எனும் நூலகத்தின் பல நூல்களின் இலக்கியத்தை இந்த நூல் நம்மோடு உரையாடுகிறது. இந்த நாவலின் வலு அதன் கதாபாத்திர வடிவமைப்புகள். வலக்கறிஞர் அலுவலகத்தில் ஒருக்கும் ஒரு வயதான வக்கிலின் மொழியாடலைக் கூட மிக நுட்பமாக கையாண்டு எழுதி இருப்பார்.

10. எட்டாயிரம் தலைமுறை

தமிழ்மகனின் சிறுகதை தொகுப்பு நூல். 2008-ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதை பரிசை வென்ற நூல் இது. இந்த நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எழுத்து விற்பனர்களை பற்றிய ஒரு சிறுகதை இதில் குறிப்பிட தக்கது. 2007-ஆம் ஆண்டில் முனைவர் கலியபெருமாளிடம் யாப்பிலக்கண வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். அவரது வீடு ஈப்போவில் இருந்தது. சில பெட்டிகளில் கட்டுக் கட்டாக நூல்களை கட்டி வைத்திருப்பார். அவை யாவும் அச்சிடப்பட்டு விலை போகாத நூல்கள். அதுவே நம் மக்களிடம் நூல் வாசிப்பிற்கான விழிப்புணர்பு எந்த வகையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னொருப் பக்கம் தன்முனைப்பு எனு பெயரில் திருவள்ளுவரும், ஔவையும் புத்தரும் கூறிய கருத்துகளை மீள் அச்சிட்டு விளம்பரம் செய்து மக்களை வாங்க வைக்கும் யுத்தியும் இங்கே நடக்கிறது. இப்படியான ஒரு சம்பவத்தை சவீதா முத்துக்கிருஷ்ணன் சிந்தனைகள் எனும் கதையின் வழி சமர்ப்பிக்கிறார் தமிழ்மகன். இரண்டு கடிதங்கள் எனும் கதையும் மக்களிடம் இருக்கும் இலக்கிய வாசிப்பு தொடர்பான செய்தியையே பேசுகிறது.

தொடரும்...

Wednesday, January 23, 2019

Amazon Kindle E-Book Reader- 15 குறிப்புகள்


1.Amazon Kindle Oasis மின் நூல் வாசிக்கும் கருவியை வாங்கினேன். கிண்டில் வரிசையில் மேலும் Kindle, Kindle Paperwhite, Kindle Voyage என மேலும் சில பிரத்தியோக வாசிக்கும் கருவிகள் உள்ளன. புத்தக விரும்பிகள் நிச்சயம் இதை வாங்கி உபயோகப் படுத்தலாம்.

2.அச்சு புத்தகங்களை வாங்குவதைக் காட்டினும் கிண்டில் மின் நூல்கள் விலை மிக மலிவாகக் கிடைக்கின்றன.

3.அமெசோன் கிண்டில் செயலியைப் பயன்படுத்த ஆரம்பித்து சில காலமே ஆகிறது. சீனாவில் ஆங்கில/ தமிழ் புத்தகங்களை வாங்குவது சுலபம் இல்லை. தகவல் பரப்பும் கருவியானது பேருந்து பயணச் சீட்டாக இருந்தாலும்  தடைப் போட்டுவிடுகிறார்கள். இக்காரணங்களே என்னைக் கிண்டில் பக்கம் திருப்பி விட்டது.

4.கடந்த ஆண்டு அமெசோன் கிண்டில் செயலியை கைப்பேசியில் தறவிறக்கம் செய்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். தினசரி வாழ்க்கையில் அதிகமாகவே ஸ்க்கிரினைப் பார்த்து பழவிட்டதால் அதிவேகமாகவே நூல்களை வாசிக்க முடிகிறது.

5.கிண்டில் செயலியை கைப்பேசியில் பொறுத்திப் படிப்பதற்கும் கிண்டில் பிரத்தியோக வாசிப்பு கருவியில் நூல்களை வாசிப்பதற்கும் ஏகப்பட்ட சாதக பாதகங்கள் உள்ளன. அச்சு ஏட்டில் வாசிப்பதைவிட மேலான அனுபவத்தை இக்கருவிகள் நமக்கு அளிக்கின்றன.

6.கைப்பேசியில் மின் நூல்களை வாசிக்கும் போது முகநூல் மற்றும் வாட்சாப் போன்ற செயலிகளின் மேற்த்திரை தகவல்கள் நூல் வாசிப்பில் கவனச் சிதறல் ஏற்படுத்தும் வாய்புகள் அதிகம். கிண்டில் கருவிகளில் அந்தத் தொல்லைகள் இல்லாமல் நமது வாசிப்பில் ஆழ்ந்துப் போகலாம்.

7.சமீப காலத்தில் கிண்டிலில் தமிழ் அகராதியை இணைத்து இருக்கிறார்கள். ஐயம் கொடுக்கும் வார்த்தைகளின் மீது அழுத்தினால் தமிழ் அகராதியில் அர்த்தம், விக்கிபிடியாவில் அவ்வார்த்தகளின் பயன்பாடு மற்றும் மற்ற மொழிகளுக்கான மொழி பெயர்ப்பும் கொடுக்கப்படுகிறது. 

8.பலரும் ஐ-பேட் மற்றும் அண்ட்ராய்ட் டேப்லட் போலவே கிண்டில் நூல் வாசிக்கும் கருவி செயல்படுவதாக கருதுகிறார்கள். உண்மையில் கிண்டில் கருவி நூல் வாசிப்பிற்கான தனி அறை. நீக்கமற நூல்களே இங்கே நிறைந்துள்ளன. அதிக நேரம் ஸ்க்கிரினை பார்ப்பவர்களுக்கு இந்தக் கிண்டில் டிவைஸ்கள் கண் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக இணைய தகவல்கள் தெரிவிற்கின்றன.

9.கிண்டில் கருவிகளின் எடை 200 கிராமிற்கும் குறைவாகவே உள்ளன. பல ஆயிரம் நூல்களை ஒரு கருவியில் வைத்துக் கொண்டு திரிவதில் சிரமம் ஏற்படுவதில்லை. எழுத்துருக்களின் அளவுகளை நமது வசதிக்கு ஏற்ப பெரிதாகவும் சிரிதாகவும் மாற்றிக் கொள்ள முடிகிறது. அச்சு நூல்களின் பூச்சியடிக்கும் சிறு எழுத்துக்களின் கண் உறுத்தல் இதில் ஏற்படுவது இல்லை.

10. ஒலி வடிவ புத்தகங்களையும் கிண்டில் கருவிகளில் வாங்கி பயன்படுத்த முடியும்.

11. இங்கே நூல்களை வாங்கவும் வாசிக்கவும் ஓரே தளம் தான். ஆசைக்கு ஆயிரம் நூல்களை வாங்கி வாசிக்காமல் கிடப்பில் போடும் சாத்தியமும் உண்டு. ஆதலால் வாங்கிய நூலை முழுதாக வாசித்து முடித்த பின்பே அடுத்த நூலூக்கு தாவவும்.

12. கிண்டில் கருவிகளின் பேட்டரி அதிக நாட்களுக்கு தாங்குகின்றன. கிண்டில் ஓசிசின் அட்டையிலும் பேட்டரி சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது.

13. நூல்களை வாசிக்கும் போது வேண்டிய வரிகளை அடிக்கோடிட்டு சேமித்துக் கொள்ளா முடிகிறது. அது தொடர்பாக நமது குறிப்புகளையும் எழுதி வைத்துக் கொள்ள முடியும். மற்ற வாசகர்களின் அடிக்கோலையும் குறிப்புகளையும் வாசிக்கவும் முடியும்.

14. நாம் வாசிக்கும் பத்திகளில் இருக்கும் பிழைகளை உடனுக்குடன் கிண்டில் செயலகத்திற்கு தெரிவிக்க முடிகிறது. அது பதிப்பகம்/ ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என நம்பலாம்.

15. இது வரை Tamil எனும் வார்த்தையைத் தட்டச்சு செய்து தேடினால் சுமார் 4000த்திற்கும் அதிகமான நூல்கள் கிடைக்கின்றன. திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. பல நூல்கள் முதல் அத்தியாயம் வரையிலும் நூல் ரொடர்பான அறிமுக வாசிப்பிற்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

Tuesday, January 22, 2019

பெண் பிறவி எடுத்த புத்தர்


சீன மொழியை Hanyu என்றும் குறிப்பிடுவார்கள். ஹன் மக்களால் பேசப்படும் மொழி என்பது அதன் பொருள். சீனாவில் சுமார் 53 இன மக்கள் வசிக்கிறார்கள். அதில் 90% அதிகமானோர் ஹன் இன மக்கள். சீன சரித்திரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பெண் ஹன் இனக் குழுவைச் சேர்ந்த Wu Zetian எனும் அரசி.

Wu Zetian தனது 13-வது வயதில் Li Shimin எனும் அரசனின் கடைசி நிலைக் காமக்கிழத்தியாக்கப்பட்டார். அரசருக்கு Wu Zetian மீது ஏகப்பட்ட பிரியம். அரசனின் மகனுக்கும் Wu Zetian-னைப் பிடித்திருந்தது. அரசன் இறந்தப் பின் வருந்ததக்க வாழ்க்கையை Wu Zetian வாழ விரும்பவில்லை. பொதுவாக அரசனின் கல்லறையில் புதைத்துவிடுவார்கள் அல்லது மொட்டையடித்து துறவு வாழ்க்கைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் Wu Zetian தனது மதி திறமையில் அரசனின் மகனுக்கும் கிழத்தியானார்.


Li Shimin இறந்தப் பின் பட்டத்து இளவரசனாக இருந்த Li Zhi அரியனைக்கு வந்தார். கடை நிலைக் காமக்கிழத்தியாக இருந்த Wu Zetian இப்போது அரசனின் இரண்டாம் துணைவி போன்ற நிலைக்கு வந்தார். இருவரும் சந்ததிகளைப் பெருக்கினர். இருந்தும் அவருக்கு போட்டியாக மேலும் இரு பெண்கள் இருந்தார்கள். அவர்களை தீர்த்துக்கட்டினால் அரசி எனும் பதவிக்கு வந்துவிடலாம். அதையும் செய்தார். அரசனின் செல்ல மனைவியாக ராஜியத்தில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார். Li Zhi நோய்வாய்ப்பட்டு இறந்த போது இளவரசனுக்கு இளம் வயது.

கன்பூசியஸ் பெண் நாடாலுவதைத் தடுத்தது. Wu புத்த மதத்தைத் தழுவி தன்னை ’அரனாக்கிக்’ கொண்டார். அவரை புத்தரின் மறு அவதாரமாக பிரகடனபடுத்திக் கொண்டார். சீனாவின் லூஓயாங் (Luoyang) எனும் இடத்தில் அமைந்துள்ளது லூங்மன் கற்குகைகள் (Longmen Grottoes) . சரித்திர புகழ் கொண்ட இந்த இடம் தொடர்பாக வேறொரு கட்டுரையில் காணலாம். இங்கே மலைக் குகைகளை குடைந்து இலட்ச கணக்கான புத்த சிலைகளை வடித்துள்ளார்கள். சீனாவில் புத்தம் பரவிய ஆரம்ப பகுதிகள் ஒன்று இக்கற்குகை. இங்கே தனக்காக மாபெரும் சிலை ஒன்றை வடித்துக் கொண்டார். 

Zhou பேரரசை நிறுவினார். Zhou பேரரசின் மன்னராகத் தன்னை முடிசூட்டிக் கொண்ட போது வூவின் வயது 66, இச்சம்பவம் நடந்த ஆண்டு 690. அரசனில்லாமல் சீன தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்தார். அக்காலகட்டத்தில் பெண் நாடாலுவது சுலபமல்ல. தனக்கென பலமான ஒற்றர் படையை வைத்துக் கொண்டார். தனக்கெதிராக கிஞ்சித்தும் சதி நடக்காமலும், எதிரிகளையும் ஒழித்துக் கட்டினார். விவசாயத்தில் பல மேம்பாடுகள் செய்து மக்களால் போற்றப்பட்டார்.

Wu Zetian செய்த இரு அரசியல் கொலைகள் தன் பிள்ளைகள் தொடர்பானது. அரசனின் இளம் மனைவியாக இருந்த போது பட்டத்து அரசியை ஒழிக்கத் திட்டமிட்ட Wu தனக்குப் பிறந்த பச்சிலம் பெண் குழந்தையை அரசி கொன்றதாகக் குற்றம் சாட்டினார். கொலைக் குற்றத்திற்காக அரசி சிறையில் அடைக்கப்பட்டார். அரசியை சிக்க வைக்கத் தருணம் பார்த்து Wu அக்குழந்தையைக் கொன்றதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

இரண்டாம் கொலை Wu-வின் மகன் தொடர்பானது. முன்னால் அரசிகளின் மகள்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பரிவு மனம் கொண்ட இளவரசர் Wu Zetian-யை அவர்களை விடுவிக்கக் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசி தன் மகன் அரசனாக தகுதியற்றவனெனக் கருதினார். சில காலத்தில் இளவரசர் இறந்துப் போனார். சாப்பாட்டில் விஷம். இரண்டாம் மகனின் ஆட்சி சரி இல்லையென அவரையும் பதவி விலகச் செய்தார். இது போக அரசியல் இலாபத்திற்காக்த் தனது இரு பேரப் பிள்ளைகளையும் கொன்றுள்ளார்.

அதன் பின் Zhou பேரரசைப் பெண் மன்னராக 16 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். Wu Zetian தனது 82வது வயதில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார். இவருக்குப் பிறந்த மூன்று மகன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் சீனப் பேரரசை ஆட்சி செய்துள்ளனர். Wu Zetian கேட்டுக் கொண்ட படி அவர் கணவர் Li Shi-வின் கல்லறையில் புதைத்தார்கள். தன்னை மன்னர் என குறிபிட வேண்டாம் என்றும் மரணப் படுக்கையில் அவர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடுகின்றனர். அது அரசியல் காரணமாகவும் கூட இருக்கலாம். சுவர்கத்தின் பிள்ளைகளான ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் எனும் அசைக்க முடியா நம்பிக்கையை கொண்டிருந்தனர் சீனர்கள்.

Monday, January 21, 2019

THE LAST EMPEROR- சீனாவின் கடைசி ராஜா

Forbidden Cityயைக் காணச் செல்லும் முன் அந்த அரண்மனைத் தொடர்பான விவரிப்புகளையே அதிகமாக வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு இடத்தின் பயன்பாடும், கட்டிட அமைப்புகளையும் மட்டுமே திகட்ட கொடுத்திருந்தார்கள். ஒரே நாளில் நடந்து கடக்க முடியாத தொலைவு. அதன் ஈர்ப்பு குறைவாகவே இருந்தது. அந்தக் கோட்டையில் இருந்த சமயம் இதன் கடைசி ராஜா யாரக இருந்திருக்க கூடும் எனும் யோசனை எழுந்தது. அங்கு விற்பனையில் இருந்த நூல் ஒன்றை வாங்கினேன். ஃப்போர்பிடன் சிட்டி நூலில் கடைசி ராஜாவாக பூ யீ யின் பெயரை வாசிக்க நேர்ந்தது. 24 ராஜாக்களின் வரிசையில் பூ யீயின் படம் மட்டுமே கருப்பு வெள்ளையில் இருந்தது. மற்றவை சுவர் சித்திரங்கள்.


கம்யூனிஸ்ட் நாடக மாறிய சீனாவில் கடைசி ராஜ வாரிசின் நிலை என்னவாகி இருக்கும் எனும் ஆவள் மேலிட பூயீ தொடர்பான செய்திகளைத் தேடி பிடித்து வாசித்தேன். The Last Emperor பூயீ தொடர்பாக எடுக்கப்பட்ட படமாகும். வரலாற்றுப் பிரியர்களை இந்தப் படம் நிச்சயமாக கட்டிப் போடும். இந்தப் படம் ஃப்போர்பிடன் சிட்டிக்குள் காட்சியமைக்க அனுமதிக்கப்பட்டதால் அதன் வாழ்வியல் நம் கண் முன் நிற்கிறது. பூ யீ பேரரசனின் வாழ்க்கை சிறை வாசம் நிறைந்ததாகவே தோன்றுகிறது. பூ யீ மீதான பரிதாபமே மிஞ்சுகிறது.

தனது மூன்றாவது வயதில் முடிசூட்டப்பட்டார் பூ யீ. ஏதும் அறியாத பூயீயை செர்கத்தின் வாரிசாக அறிவிக்கிறார் மரணப் படுக்கையில் இருக்கும் அரசி. ஒவ்வொரு கணமும் பூயீ பேரரசர் என்பதை அவரைச் சுற்றி இருக்கும் அடிமைகள் நிரூபிக்கிறார்கள். பேரரசனாக இருப்பினும் கோட்டையை தாண்டி வெளியே செல்ல முடியாத நிலை. பாலகன் பூ யீ விளையாட்டுப் பிள்ளையாக வளர்கிறார். உலகின் அரசியல் சூழல் தமக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருப்பதை பூ யீ கொஞ்சமும் உணரவில்லை.

அரண்மனைச் சடங்குகளில் மூழ்கிவிட்ட ராஜா பூ யீ யிடம் நவீன மாற்றங்கள் ஏற்பட காரணம் அவரின் ஆங்கிள ஆசிரியர் Reginald Johnston. ஜோன்ஸ்டன் Twilight in the Forbidden City எனும் புத்தகத்தை எழுதி உள்ளார். பூ யீ தொடர்பாக பல செய்திகளை அதில் விளக்குகிறார். பின்நாட்களில் பூ யீ போர் குற்றவாளியாக காவலில் இருக்கும் சமயம் இந்த புத்தகத்தின் தகவல்களும் அவருக்கு எதிரானதாக திரும்புகிறது.

பூ யீ ஒரு நாள் கெடுவில் ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையை விட்டு வெளியேறச் சொல்லப்படுகிறார். தன் மனைவிகளோடு பெக்கிங்கில் இருந்து தியான் ஜின் (Tianjin) செல்கிறார். ராஜாவக வாழ்த்துவிட்ட பூ யீக்கு தன் அரியனையை விட்டுக் கொடுக்க மனமில்லை. தியான் ஜினில் பூ யீ தனது பெயரை ஹென்ரி பூ யீ என்றும் மற்றிக் கொள்கிறார். பூ யீக்கு ஜப்பானியர்களின் ஆதரவு கிடைக்கிறது. மன்ஞ்சு பரம்பரையில் வந்த பூ யீயை ஜப்பானியர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். மஞ்ச்சூரியாவின் ராஜாவாக பூ யீ தன்னை முடி சூட்டிக் கொள்கிரார். ஜப்பானியரின் கை பொம்மையாக பூ யீ. அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை. ஜப்பானியரின் கட்டுப்பாட்டில் ஆட்சி நடக்கிறது. மீண்டும் அரண்மனை கைதியாக வாழ்கிறார் பூ யீ.

ஹீரோசிமா & நாகாசாக்கி குண்டு வீச்சிக்கு பிறகு ஜப்பான் சரணடைகிறது. பூ யீ சோவியத் யூனியன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறார். சீனாவில் போர் குற்றவாளியாக பூ யீ சிறை வைக்கப்படுகிறார். சிறையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து காப்பாற்றப்படுகிறார். சீன தேசத்துக்கு எதிராக ஜப்பானியர்களோடு செயல்பட்டதால் அவர்களின் சதிதிட்டங்களை ஒப்புதல் வாக்கு மூலம் கேட்கிறார்கள் சிறை அதிகாரிகள். பூ யீ தான் ஜப்பானியர்களால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டதாக கூறுகிறார். அந்த ஒப்புதல் வாக்குமூலம் பொய் என்பதை பின்நாட்களில் தான் எழுதிய From Emperor to Citizen எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார் பூ யீ. தான் தண்டிக்கப்படுவடை தவிர்க்க அப்படிச் செய்ததாக சொல்கிறார்.

சிறையில் கம்யூனீச சித்தாந்த போதனைகளுக்கு பின் பூ. யீ விடுதலை செய்யப்படுகிறார். முதுமையில் தோட்டக்காரனாக பணி புரிகிறார். இறப்பிற்கு முன் பூ யீ Chinese People's Political Consultative Conferenc-இல் எடிட்டராக பணி புரிந்தார். அவரின் கடைசி வருமானம் 100 யூவானுக்கும் குறைவாகும். The Last Emperor கதையில் பூ யீ ஒரு சுற்றுப்பயனியாக ஃப்போர்பிடன் சிட்டிக்குள் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு செல்கிறார். யாரும் பார்க்காத சமயம் அரியனையில் அமர்ந்து பார்க்கிறார். அங்கு வரும் இளம் கம்யூனீஸ்ட் தோழர் பூ யீ அப்படி செய்யக்கூடாது என்றும் பூ யீ யார் என்றும் கேட்கிறார். பூ யீ தான் பேரரசர் என்றும் செர்க்கத்தின் பிள்ளையென்றும் கூறுகிறார். அதற்கு சான்றாக தன் முடி சூட்டு விழாவில் கிடைத்த பரிசினை அரியனைக்குள் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். பூ யீ தனது 61-அவது வயதில் மரணம் அடைந்தார். பூ யீக்கு வாரிசுகள் இல்லை.

பூ யீ தொடர்பாக வாசித்த பின் மீண்டும் ஃபோர்பிடன் சிட்டியை பார்வையிட தோன்றுகிறது. அந்த பெரும் கோட்டை மேலும் சில புரிதல்களை எனக்கு கொடுக்க கூடும்.

ரிங்கிட் - மலேசிய நாவல்


ஜெஃபரி ஆர்ச்சரின் ‘த சின்ஸ் ஆஃப் த ஃபாதர்’ எனும் நாவலை வாசிக்கத் தொடங்கும் முன் ஒரு வரைபடத்தைக் காண முடியும். அது ஒரு குடும்ப தலைமுறைகளின் விளக்கப்படம் ஆகும். வாசகனின் புரிதலுக்கு அதை முன் குறிப்பாக கொடுத்திருப்பார். மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் நாம் அப்படி எதிர்ப்பார்க்க முடியாது. நாமாகவே படம் வரைந்து பாகம் குறித்து புரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி புரிந்துக் கொள்ள முடியாமல் போகுமானால் பாவபட்ட மலேசியத் தமிழ் வாசகன் வெளி நாட்டில் இருந்து அழைத்து வரப்படும் இலக்கிய மேதாவிகளின் முன்னிலையில் ‘இவர்கள் அம்புலி மாமா கூட வாசிக்கத் தகுதியற்ற தற்குறிகள்' என வஞ்சிக்கப்படுவான்.

சரி, குடும்பத்தின் பரம்பரை வரைபடத்திற்கும் ரிங்கிட் குறுநாவலுக்கும் என்ன தொடர்பு. ரிங்கிட் குறுநாவல் 5 பகுதிகளைக் கொண்டுள்ளது. அது பகுதியா அல்லது பாகமா என்பது ஆசிரியருக்கே குழப்பம். ஏன் என்பதை வாசகர்களின் சுவாரசியத்திற்கு விட்டுவிடலாம். இதன் முதல் பகுதி மலாய் சமூகத்தின் வாழ்வியலை பற்றி பேசுகிறது. அப்படி பேசும் நாவலின் சாரம் நான்காம் தலைமுறையில் ஆரம்பித்து, இரண்டாம் தலைமுறைக்குச் சென்று, மூன்றாம் தலைமுறைக்கு தாவி மீண்டும் முதல் தலைமுறை (நாவலுக்கு) போய் மேலும் மேலும் முன்னும் பின்னும் பயணிக்கிறது.

இந்த வியாக்கியானங்களை வாசித்து விளங்கிக் கொள்ள பெயர் ஒரு தடையாக உள்ளது. இவருக்கு எத்தனை பிள்ளை, அவருக்கு பிறந்தது யார் என கண்ணில் விளக்கெண்ணை உற்றிக் கொண்டு பார்த்தால் ஒழிய பிடிபடாது. ஏகபட்ட கதை மாந்தர்கள். இரண்டாம் பகுதியில் ‘உ சிவமயம்’ போடும் இடத்தின் இடப்பக்கம் 1967 என போட்டு கதையை ஆரம்பிக்கும் போது தான் வாசகன் பண்டைய காலத்து சரித்திர நாவலை வாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொள்கிறான். முதல் பாகம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து சொல்லப்படாத நிகழ்கால ஆண்டு வரையிலும் ஒரு மிகப் பெரும் கால பெட்டகதை அடக்கிக் கொள்கிறது.

ஆசிரியர் மலாய் சமூகத்தின் வாழ்வியலை மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். தமிழ் வாசிப்பு சூழலுக்கு அது புதுமையான விசயம். இது போன்ற முயற்சிகள் இன, கலாச்சார புரிந்துணர்வுக்கு மேலும் பயனாதக அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.

நாவலின் ஆரம்பத்தில் எந்த வித சமரசமும் இல்லாமல் மலாய்கார்ர்களின் கலாச்சாரத்தை அதன் பேச்சு வழக்கில் பதிவு செய்யும் ஆசிரியர் நாவலின் பின் பகுதியில் அதை தவறவிடுகிறார். உதாரணத்திற்கு ‘சுச்சோர்’ ’கறிபாப்’ என எழுதுபவர் நாவலின் பின் பகுதியில் நமது பேச்சு மொழியான ‘பீசாங் கோரேங்’கை பஜ்ஜி என செல்லம் கொஞ்சுகிறார். 'பீசாங் கோரேங்' செய்முறை விளக்கம் கூட உள்ளது. பஜ்ஜிக்கும் 'பீசாங் கோரேங்கிற்கும்' உள்ள சரித்திர தொடர்பை பதிவு செய்ய அப்படி எழுதி இருப்பாரோ? அது அந்த இலச்சிமல ஆத்தாவுக்கு தான் வெளிச்சம். ’சிலூவார்’ எனும் வார்த்தையை யாரோ புரிந்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு காட்சி விளக்கம் கொடுக்கிறார். இது யாருக்கான சமரசம்? சில தமிழ்த் திரைப்படங்களை தெலுங்கு இரசிகர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக மேல்பூச்சு வேலைகளை செய்து இரு மொழிகளில் திரையிடுவார்கள். அதை போல் ரிங்கிட் மலேசிய சூழலை தாண்டி மற்றவர்களுக்கு விளங்காமல் போய்விடுமோ எனும் அச்சம் அதன் படிமங்களுக்கு கீழ் புதைந்துள்ளது.

மே 13 கலவரத்திற்கு முன் வேறு சில இன கலவரங்கள் மலாயாவில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மலாய்- சீன இனத்தைச் சார்ந்த கலவரங்கள். 1967 ஜூன் மாதத்தில் மத்திய வங்கி ரிங்கிட் நாணயத்தை வெளியிடுகிறது. அதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது Malaya and British Borneo Dollars. 1967- நவம்பரில் பிரிடீஷ் நாணயம் வீழ்ச்சி அடைகிறது. பரிவர்தனையில் அதன் தன்மை குறைவான மதிப்பில் ஏற்றுக் கொள்ளபடுகிறது. மலேசிய பொருளாதார நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீனரிடமே பிரிடீஷ் பண புழக்கம் அதிகம் இருந்தது. வியாபார ரீதியாக அது பாதிப்பை உண்டாக்கியது. சேமிப்பு இப்படி 15 விழுக்காடு வீழ்ச்சியடைவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காந்திய முறையில் அவர்கள் கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்கிறார்கள். அதில் ஈடுபட மறுக்கும் மலாய்கார வியாபாரிகளிடம் கேள்வி கேட்க போய் கருத்து வேறுபாடுகளால் அது இனக் கலவரமாக வெடிக்கிறது. அக்கலவரத்தில் 27 பேர் மரணம் அடைந்தனர், பலர் காயமடைந்தனர், பொது, தனியார் சொத்துகளும் நாசம் செய்யப்பட்டன.

மேற்காணும் இக்கலவரமே இந்நாவலின் மையம். இதன் பின்ணனியில் மூன்று இன மக்களின் வாழ்வியல் பேசப்படுகிறது. வெவ்வேறு பின்ணனிகளை கொண்ட இவர்கள் இனக் கலவரம் எனும் புள்ளியில் எப்படியாக இணைந்தார்கள் என்பதாக இந்நாவல் விளக்குகிறது.

இந்நாவல் நடைபெறும் கதைக் களம் பினாங்கு மாநிலத்தை அடிப்படையாக கொண்டது. ஆதலால் தமிழ் இனத்தின் வாழ்வியல் பின்னணியையும் கூறிவிட வேண்டும் எனும் தனது தார்மீக கடமையைச் செய்துள்ளார் ஆசிரியர். இதில் செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள், தமிழர்கள், மளையாளி, யாழ்பாண தமிழர்களையும் குறிப்பிட்டுள்ளார். பகுதி மூன்றில் வரும் இந்த அத்தியாயத்தை மொத்தமாக நீக்கிவிட்டு வாசித்தாலும் நாவல் புரிந்துவிடும். ஏன் என்றால் நாணய இனக் கலவரத்தில் இந்திய மக்களின் பங்கு என்பது ஒரு பார்வையாளனாக மட்டுமே உள்ளது.

காளிமுத்துவின் சிகை திருத்தும் கடைக்கு பல தரபட்ட மக்கள் வருகிறார்கள். அதன் வழியே பினாங்கில் அவர்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படுகிறது. தேவார துரைசிங்கம் எனும் யாழ்பாண தமிழரை கூறும் போது தமிழில் கரை கண்ட அவரை சமூகம் மதிப்போடு பார்ப்பதாக பதிவு செய்கிறார். அந்நிலையை இப்போது பார்ர்கின் தற்சமயம் அவர்கள் தமிழ் படிப்பதும் இல்லை. சக தமிழ் மக்களை வேற்றுக் கிரக வாசிகலென பார்க்கிறார்கள் என்பதும் புரியும்.

இரண்டாம் பகுதியில் விக்டர் எனும் ஒரு கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இரண்டாம் பகுதி சீனர்களின் வாழ்வியலை பேசுவதால் இவரை சீனார் என்றும் கொள்ளலாம். அல்லது பிரிடீஷ் விட்டுச் சென்ற தலைவலி எனவும் கருதலாம். கடைசி வரை விக்டர் சீனர் தான என்பதை உறுதி செய்யும் வேலையை பாவபட்ட வாசகனிடமே விட்டுவிடுகிறார் ஆசிரியர்.

அதே போல் ஒரு கொலை நிகழ்வை பார்க்கும் கதிரேசனால் அங்கு எந்த சலனமும் ஏற்படவில்லை. கிஞ்சித்தும் பயன்படாத மௌன சாட்சியாக இருக்கிறான் கதிரேசன். ஓடிப் போய் கதவை தாழிட்டு ஒழிந்துக் கொள்கிறான். ஒரு வேளை தமது வாயொதிக காலத்தில் ஹசான் வழுக்கி விழ கதிரேசன் தான் காரணம் என இந்த நாவலின் அடுத்த பாகத்தை எழுதும் முயற்சிக்காக அப்படி படைக்கப்பட்டிருக்கலாம்.

4-ஆம் பகுதி போரட்ட தினத்தை பேசுகிறது. அதில் சான் மற்றும் ஜமாலுடின் எனும் இரு காவல் அதிகாரிகள் தொழிலாளர் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார்கள். இவர்களுக்கு இஸ்பெக்டர் பதவி கொடுக்கலாமா அல்லது சார்ஜன் பதவி கொடுக்கலாமா என நீண்ட குழப்பத்திற்கு பின் இரண்டையுமே வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த பதவி மோகம் நாவலின் நகர்வுக்கு சிறு துளியேனும் பாதிப்பை கொடுக்கப் போவதில்லை என்பதால் பாவபட்ட வாசகன் கண்னை மூடிக் கொண்டு நகர்ந்துவிடலாம்.

85-வது பக்கத்தில் வரும் வசனத்தில் ‘நமது நோக்கத்தைச் சிதைக்க நம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். ஆகவே கட்சி உறுப்பினர்கள் மிக கவனமாக இருங்கள்…’ எனும் வசனம் மிக கவனமாக செர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தின் இன்னோரு பக்கம் உண்டு என்பதாகவும் அது நாவலில் சொல்லப்படாமல் உள்ளது என்பதாகவும் நாம் இங்கே காண முடிகிறது. கம்யூனிஸ்டுகள் மேல் பழியை போட்டு ஒரு வலுவான இன அரசியலை நிறுவும் முயற்சிக்கு அது வித்திட்டது.

இந்நாவலின் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிபடுகள் மிக ஆழமாக படைக்கப்பட்டுள்ளது. தமிழர் சமூகம், தோட்டபுர வாழ்வு என படைக்கப்பட்டு வந்த தமிழ் இலக்கிய வரிசையில் வேற்று சமூகத்தின் வாழ்வும் மிக நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது இதுவே முதல் முறையென அறிகிறேன். இது எதிர்கால படைப்புகளுக்கு ஒரு புதிய சிந்தனை முயற்சியை தூண்டும் விதமே அமைந்துள்ளது. இக்கலவர நிகழ்வு பொருபான்மையினர் அறியாத நிகழ்வே. மே-13 கலவரம் பேசப்பட்ட அளவுக்கு மற்றவை பேசப்படவில்லை. இதை வசிப்பு வெளிக்கு கொண்டு வந்தது பெரும் பாராட்டுக்குரியது. ஆசிரியரின் முதல் நாவல் முயற்சிக்கு வாழ்த்துகள்.

Friday, January 18, 2019

ஏ.கே. செட்டியார் படைப்புகள் – தொகுதி 1


இந்த நூலை வாசித்தது 1938 ஆண்டின் முதல் சென்று வரலாற்றைத் திரும்பி பார்த்து வந்தது போல் இருந்தது. எவ்வளவு பயண அனுபவங்கள். இந்த அனுபவம் மொத்தமும் ஒரு மனிதனை எப்படி எல்லாம் பக்குவ படுத்தியுள்ளது. ஏ.கே. செட்டியார் நமக்காக பதிவு செய்து வைத்திருப்பது ஏராளம். தாமக்குத் தெரிதவற்றை தமிழ் மக்களுக்காக எடுத்துச் சொல்லி இருக்கிறார். 80-களில் இவர் மறைவிற்குப் பின் இவரின் படைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுள்ளது. ஒரு சில படைப்புகள் அச்சில் வரமலேயே போய்விட்டன. செட்டியாரின் படைப்புகளை இரண்டு தொகுதிகளாக தொகுத்து மீண்டும் நம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

முதல் தொகுதி சுமார் 1000 பக்கங்களை கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இதன் முன்னுரை 42 பக்கங்களுக்கு உள்ளது. இந்த நூலை வாசிப்போர் முன்னுரையை தவற விட வேண்டாம். அது மிகைக்காக எழுதப்பட்டதல்ல. இந்த நூலை கூர்ந்து உணர்ந்து கொள்ள வழி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

ஏ.கே.செட்டியாரின் இயற் பெயர் அ.கருப்பஞ் செட்டியார். வணிக நுணுக்கங்களிலும், செல்வங்கள் குவிப்பதிலும் முனைப்புக் காட்டும் தனவணிக சமூகத்தில் பிறந்த ஏ.கே. செட்டியார் விதிவிலக்காக வாழ்ந்துள்ளார். இவரின் முதல் படைப்பு 1928-ஆம் ஆண்டு வெளிவந்த சாரதாம்பாள் – ஒரு சிறு தமாஷ் எனும் சிறுகதை. இந்த சிறுகதையும் முதல் தொகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மொழி நடையே நமக்கு மிக வித்தியாசமாகவும் தமாஷாகவும் உள்ளது. ஏனெனில் அப்போதைய மொழி நடையை இந்நாளில் யாரும் பயன்படுத்துவதில்லை. புனைவை விட பயணக் கட்டுரைகளையும், துறை சார்ந்த கட்டுரைகளையுமே நிறைய எழுதி இருக்கிறார்.

பர்மாவில் தமிழர்கள் அதிகமாக வசித்த கால கட்டத்தில் தனவணிகன் எனும் வார/மாத இதழ் அங்கே வெளிவந்துள்ளது. ஏ.கே.செட்டியார் ரங்கூனில் சில காலம் தங்கி அதன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இது நடந்த கால கட்டம் 1930-களில். ரங்கூனில் இருந்து ஜப்பானுக்கு சொன்று புகைப்பட கலையை கற்றறிகிறார். ஜப்பான் பயணாம் அவருக்கு பயணத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

ஏ.கே.செட்டியார் அதிக அளவில் கடல் வழியே தூர தேசங்களுக்கு பயணம் செய்துள்ளார். இவர் பயணம் செய்த காலகட்டத்தில் பல ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் அடிமைகளாக இருந்தன. இன துவேசத்திற்கு பஞ்சமில்லாத கால கட்டம். செட்டியார் நிறத்தால் கருப்பு. செல்லும் இடங்களில் அவரை கருப்பின அடிமை என கருதி மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். கப்பலிலோ அல்லது விமானத்திலோ முதல் வகுப்பில் பயணம் செய்ய முடியாது. நட்சத்திர விடுதிகளில் தங்க முடியாது என படுத்தி எடுத்துள்ளனர் வெள்ளையர்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டு கடந்து வந்திருக்கிறார்.

 தென் ஆப்பிரிக்காவை இன வெறியின் புகழிடம் எனக் குறிப்பிடுகிறார் செட்டியார். பேருந்தில் பயணம் செய்த கருப்பினத்தவரை ஒரு வெள்ளையர் எட்டி உதைத்து விரட்டிய கட்சி இவரை பயப்பட செய்துள்ளது. அதை படிக்கும் நமக்கும் திக் என்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இன வெறி மட்டுமின்றி செழிப்பான பழ வகைகளுக்கும் புகழ் பெற்ற இடமென குறிப்பிடுகிறார். தென் ஆப்பிரிக்கவில் வசிக்கும் தமிழர்கள் இன்னமும் 1860-ஆம் ஆண்டின் தமிழை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேட்க நகைச்சுவையாக உள்ளது என எழுதியுள்ளார். போர்த்துகீசியர்கள் ஜாவா இன அடிமைகளை தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சேர்த்த குறிப்புகளையும் கொடுத்துள்ளார்.

இரங்கூனில் இருந்த சமயம் இவர் ஜப்பான் எனும் நூலை எழுதி இருக்கிறார். அக்காலகட்டத்தில் ஜப்பான் நூல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் புகைப்பட கலையை படித்தது போல், நியூ யார்க்கில் புகைப்படம், நிலற்படம் எடுக்கும் கலைகளையும் கற்றுக் கொள்கிறார். அந்நாட்களில் கேமராவை இயக்கவும் படங்களை உருதுளக்கவும் தொழில் நுட்பம் தெரிய வேண்டும். கற்ற கலையை சரிவர பயன்படுத்த காந்தி தொடர்பான ஆவணப் படத்தை எடுக்கிறார். இந்திய தேசம் முழுக்க பயணம் மேற்கொண்டு செய்திகளை சேமிக்கிறார். காந்தி போகும் இடங்கள் சென்று காணொளி பதிவு செய்கிறார். காந்தியின் வெளிநாட்டு பயண காணொளிகளையும் புகைப்படங்களையும் அமேரிக்கா, ஐரோப்பா வரை பயணம் செய்து சேமித்து அந்த படத்தை எடுத்து முடிக்கிறார்.

செட்டியார் எடுத்த காந்தி ஆவணப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. அந்நாளில் ஆந்திர பிரதேசம் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் வசித்ததால் இருமொழியில் இப்படம் வெளியீடு கண்டது. லாகூர் போன்ற பாக்கிஸ்தான் மாநிலங்களும் பிரிடீஸ் இந்தியாவின் கீழ் ஒரு குடையில் இருந்துள்ளது.

செட்டியாரின் சில கட்டுரைகள் அபரிமிதமாக உள்ளன. விளம்பரம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 1940-களில் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் கொடுத்திருக்கும் தரவுகள் வியப்பளிக்கின்றன. விளம்பர உலகின் பரிமாணத்தை ஆரம்பம் முதல் மிக நேர்த்தியாக எழுதி இருக்கிறார். அக்கட்டுரை நிச்சயமாக ஏகபட்ட நூல்களை மேற்கோள் காண கோரியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

பஸ் பிரயாணம் எனும் நூலுக்காக அவர் தரவுகளை தேடிய விதத்தை குறிப்பிட்டுள்ளார். செட்டியார் அவர் பயணம் செய்த நாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கும், தூதரகங்களுக்கும் கடிதம் எழுதி நூல்களையும் தகவல்களையும் திரட்டி பஸ் பிரயாணம் கட்டுரைகளை எழுதி முடித்திருக்கிறார்.

திருசிராப்பள்ளி தொடர்பான பழைய கட்டுரைகளை தேடி பதிப்பித்துள்ளார். அது 1873, 1898, 1901 மற்றும் 1919 ஆண்டுகளில் தமிழ் முன்னோடிகளால் எழுதப்பட்டவை. அவற்றை வாசித்து உணர்ந்துக் கொள்ள அகராதி தேவைப்படுகிறது. தடிமனான சமஸ்கிருதம் கலந்த தமிழில் அவை எழுதப்பட்டுள்ளன. செட்டியார் தமது கட்டுரையில் பயண குறிப்புகளை வாசிக்க இலக்குவாகவே எழுதியுள்ளார். இருந்தும் சில சொல் வழக்குகள் இன்று நம்மிடம் புழக்கத்தில் இல்லை.

ஏ.கே.செட்டியார் 1983-ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவர் திருமணம், பிரிவு தொடர்பான தகவல்களை பதிப்பாசிரியரால் கண்டறிய முடியவில்லை . இறுதிகாலத்தில் அவருடைய சேமிப்பு நூல்களை நூலகத்திற்கும், பள்ளிகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். ஏ.கே.செட்டியார் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஆளுமை. இந்த முதல் பாகத்தின் ஏகபட்ட கட்டுரைகளை நாம் வாசித்து உவகை அடைய முடியும். நாம் பிறந்திராத காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவங்கள் அறிவிற்கு புதிய தகவல்கள். சிறிது இடைவெளிக்கு பின் இரண்டாம் பாகத்தை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

Forgotten 2017 (Korean) - மறதியின் மர்மங்கள்


மனிதன் தன்னை நேர்த்தி செய்துகொள்ள மறதி ஓர் அருமருந்தாகிறது. நடந்து முடிந்த சில சம்பவங்களை தவிர்த்திருக்க நினைக்கிறோம். மூளையின் நினைவு படிமத்தில் சிலவற்றை ஒழித்தும் மறைத்தும் கலமெனும் பெருவெள்ளத்தில் கரைந்து போகின்றோம்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு இத்திரைக் கதையின் நகர்வை கொஞ்சமும் அனுமானிக்க முடியவில்லை. அதுவே இத்திரைப்படத்தைப் பார்க்க என்னை அமர்ந்த இடத்தில் கட்டிப் போட்டது. மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது என ஐயமின்றி கூறலாம். சியோலில் இருந்து பெய்ஜிங் திரும்பிக் கொண்டிருந்த போது பாதி படமே பார்த்திருந்தேன். மீதத்தை பார்க்காத தவிப்பு அழைக்கழித்தது. நெட்பிலிக்‌ஷில் ஆங்கில் வசன வரிகளோடு தேடிப் பிடித்து பார்த்து முடித்தேன்.

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நால்வர் கொண்ட ஒரு குடும்பம். புதிய வாடகை வீட்டில் குடியேருகிறார்கள். வீட்டில் ஓர் அறையை மட்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது, திறக்கவும் கூடாது என்பது வீட்டுக்காரரின் நிபந்தனை. அந்த அறையில் இருந்து அடிக்கடி சத்தம் கேட்கிறது. அந்த சத்தம் தம்பிக்கு மட்டும் கேட்கிறது. மற்ற குடும்ப உறவுகள் அதனை உணரவில்லை. யாரும் போகக் கூடாத அந்த அறை அண்ணன் தம்பி தங்கி இருக்கும் அறைக்கு நேர் எதிராக உள்ளது. அந்த மர்ம சூழல் பயமும், பதட்டமும் நிறைந்ததாக நம்மை பீடிக்கிறது.

இத்திரைப்படத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை. இதில் நான் இரசித்த மதி நுட்பமான காட்சி அமைப்புகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

முதலாவதாக இருட்டுச் சூழல் படம் நெடுக தொடர்கிறது. அது அழுத்தம் மிகுந்த காட்சியமைப்புகளுக்கு வழி செய்துள்ளது. சில காட்சிகளில் மட்டுமே பகல் வெளிச்சத்தை நாம் காண முடிகிறது. படம் நெடுக இருக்கும் இருள் மற்றும் மஞ்சள் விளக்கொளி நம்மை காட்சிகளுக்குள் உள் வாங்கிக் கொள்கின்றன.

1997-ல் கிழக்காசிய நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. அதில் தென் கொரியாவும் அடங்கும். இத்திரைக்கதைக்கும் இந்த பொருளாதார நிகழ்விற்கும் முக்கிய சம்பந்தம் உண்டு. எனினும் அந்நிலையை தொலைக்காட்சி செய்தியாக ஒற்றை வரியில் கடந்து விடுகிறார்கள்.

இதில் தம்பி கதாபாத்திரத்திற்கு அவன் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் முரணாகக் கூறப்படுகிறது. அவன் காணும் காட்சிகள் அனைத்தும் பொய்யென கூறப்படுகிறது. தான் ஏதோ ஒரு மாயவலையில் பின்னி இருப்பதாக கருதும் தம்பி வீட்டைவிட்டு தப்பி ஓடுகிறான். கடுமையான போராட்டங்களின் பின் போலிஸ் வாகனத்தில் மோதி தப்பித்து காவல் நிலையம் போகிறான். காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அபாரம்.

நிஜம் எது கற்பனை எது என்பதனை உணர்வதற்குள் 'நீ மருந்து சாப்பிட மறந்துவிட்டாய். அதனால் தான் இந்நிலை' என நாமும் பல காட்சிகளில் சமாதானம் செய்யப்படுகிறோம்.

சூழ்நிலை குற்றவாளிகளை உருவாக்குவதில் இச்சமூகத்திற்கும், அரசியல், பொருளாதார நிலைபாடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. மேலும் சம்பவங்களை விவரித்து இக்கதையின் சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை. மர்மம் மற்றும் த்ரில்லர் வகை கதைகளை விரும்புவோருக்கு இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.