Showing posts with label இனப் பாகுபாடு. Show all posts
Showing posts with label இனப் பாகுபாடு. Show all posts

Thursday, October 22, 2026

‘Strictly No Indians’ முதல் ‘I Paid You’ வரை


மலேசியாவில் இந்தியராக இருந்து வீடு வாடகைக்குத் தேடியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கியம் புதிதாக இருக்காது.

“Owner prefers Chinese / Muslims Only.”

அல்லது இன்னும் நேரடியாக,

“No Indian.”

இந்த வார்த்தைகள் சிலருக்கு ஒரு property advertisement-ல் இருக்கும் சாதாரண நிபந்தனையாகத் தோன்றலாம். ஆனால் பல இந்தியர்களுக்கு அது ஒரு வீட்டின் கதவு திறக்கப்படுவதற்கு முன்பே முகத்தில் மூடப்பட்ட அனுபவம்.

2026-ல் Klang Valley-யில் 35,000-க்கும் அதிகமான room rental listings-ஐ ஆய்வு செய்த Architects of Diversity, இந்தியர்களை வெளிப்படையாகத் தவிர்த்த listings சுமார் 31.7% எனக் கண்டறிந்தது. குறைந்த வாடகை வீடுகளில் இந்த விலக்கல் இன்னும் அதிகமாக இருந்தது.

இந்தியர்களை “சுத்தமாக இருக்கமாட்டார்கள்”, “பிரச்சினை செய்வார்கள்”, “வீட்டை சேதப்படுத்துவார்கள்” போன்ற முன்முடிவுகளோடு சில உரிமையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதையும் Klang Valley குறித்த கல்வியியல் ஆய்வுகள் பதிவு செய்துள்ளன.

ஒருவரின் பெயர் , தோல் நிறம், இனத்தைப் பார்த்து அவர் நல்ல tenant-ஆ கெட்ட tenant-ஆ என்று தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.

ஆனால் இந்தக் கதையை அங்கேயே நிறுத்திவிட்டால், நான் என்னிடம் நேர்மையாக இல்லை.

ஏனெனில் நான் இன்னொரு பக்கத்திலும் நிற்கிறேன்.

என்னிடம் இருக்கும் வீடுகளை guest house/ homestay ஆக நடத்தத் தொடங்கிய பிறகு, வீடு தேடிக்கொண்டிருப்பவரின் மனநிலையை மட்டும் அல்ல, வீட்டின் சாவியை முன்பின் தெரியாத ஒருவரிடம் கொடுத்துவிட்டு காத்திருக்கும் உரிமையாளரின் மனநிலையையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

அதிலும் ஒரு தமிழனாக சொல்வதில் எனக்கே சங்கடமாக இருக்கும் சில அனுபவங்கள் இருக்கின்றன.

இதை எழுதுவதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். என் அனுபவம் முழு இந்தியச் சமூகத்தையும் அளவிடும் தரவு அல்ல. நல்ல இந்திய விருந்தினர்களும் எனக்கு இருந்திருக்கிறார்கள். மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.

எனவே “இந்தியர்கள் இப்படித்தான்” என்று முடிவெடுப்பது தவறு.

ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்தால், அது உரிமையாளரின் மனதிலும் ஒரு பாதுகாப்பு உளவியலை உருவாக்கத் தொடங்குகிறது.

ஒரு கட்டத்தில் இந்திய ஆண்களின் பெயர்களில் வரும் சில bookings-ஐ பார்த்தவுடனேயே நான் கூடுதல் எச்சரிக்கையுடன் அணுக ஆரம்பித்தேன். காரணம், முன்னதாக ஏற்பட்ட சில மோசமான அனுபவங்கள்.

நண்பர்கள் குழுவாக வந்து அதிகமாக மது அருந்துவது, house rules-ஐ பொருட்படுத்தாமல் இரவு நேரம் வரை சத்தம் செய்வது, வீட்டை மிகவும் மோசமான நிலையில் விட்டுச் செல்வது போன்ற அனுபவங்கள் அந்த மனநிலையை உருவாக்கின.

இங்கேயே எனக்கும் ஒரு சுயவிமர்சனம் தேவைப்படுகிறது.

சில மனிதர்களின் நடத்தையைப் பார்த்து, அடுத்த மனிதரின் பெயரையே ஒரு risk indicator-ஆகப் பார்க்கத் தொடங்கினால், நான் ஆரம்பத்தில் விமர்சித்த அதே “No Indian” மனநிலையின் இன்னொரு வடிவத்திற்குள் நானும் மெதுவாகச் சென்று விடுகிறேனா என்ற கேள்வி எழுகிறது.

அதனால்தான் இது எளிய பிரச்சினை அல்ல.

இதற்கிடையில் இன்னொரு விசித்திரமான நடைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆண்களின் பெயரில் booking செய்தால் கேள்விகள் அதிகமாக வரும் என்பதைப் புரிந்துகொண்ட சிலர், பெண்களின் பெயரில் booking செய்வார்கள். தொடர்பு கொள்ளும் நபரும் பெண்ணாக இருப்பார். எல்லாம் ஒரு குடும்ப booking போலத் தோன்றும்.
ஆனால் check-in நேரத்தில் வந்து இறங்குவது முற்றிலும் தடி மாடுகளாக இருக்கும்.

அங்கேதான் booking செய்யப்பட்ட தகவலும் உண்மையில் பயன்படுத்த வருபவர்களும் வேறாகிவிடுகிறார்கள்.

அப்போது பிரச்சினை இனமல்ல.

நேர்மை.

யார் தங்கப் போகிறார்கள் என்பதைத் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்றால், எந்த உரிமையாளருக்கும் சந்தேகம் வருவது இயல்புதான்.

அதேபோல் சில bookings-ஐ ஏற்றுக்கொள்ளாதபோது இன்னொரு வகையான அழுத்தமும் வரும்.

“என்னை ஏன் reject செய்தீர்கள்?”

“என் பெயரைப் பார்த்ததாலா?”

“நான் Indian என்பதால்தானே?” என்று கேள்விகள் தொடரும்.

சில நேரங்களில் உரையாடலை எப்படியாவது இனப் பிரச்சினையாக மாற்றி, உரிமையாளரிடமிருந்து “ஆம், உங்கள் இனத்தினால்தான்” என்ற ஒரு வாக்கியத்தைப் பெற்றுவிட முடியுமா என்ற அளவிற்கு வாதம் நீளும்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது.

இரண்டு நாட்களுக்கு ஒரு விருந்தினர் வீட்டை முன்பதிவு செய்திருந்தார். Homestay விதிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

செல்லப்பிராணிகளுக்கும் அனுமதி இல்லை. வீட்டின் கொள்ளளவு, parking வசதி, விருந்தினர்கள் எண்ணிக்கை என எல்லாவற்றுக்கும் வரம்புகள் இருந்தன.
ஆனால் அவர்கள் வந்தபோது நிலை வேறாக இருந்தது.

வீட்டின் முன் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் வந்து நின்றன. ஆறு காடிகள். முன்பே தெரிவிக்கப்படாத கூடுதல் நபர்கள். அதோடு ஒரு நாயும் வந்திருந்தது.

இதை external CCTVயில் கண்காணித்த நான், வீட்டின் உரிமையாளராக கேள்வி கேட்டேன்.

அந்தக் கேள்வியே அவர்களுக்கு ஒரு குற்றமாகத் தோன்றியது.

“நாங்கள் பணம் கட்டிவிட்டோம்” என்ற எண்ணம் சில நேரங்களில் விசித்திரமான entitlement-ஆக மாறிவிடுகிறது.

I paid, therefore I can do whatever I want.

Homestay-யில் இந்த மனநிலையை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

ஆனால் வாடகை செலுத்துவது வீட்டின் உரிமையை வாங்குவது அல்ல. இரண்டு இரவுகளுக்கான பயன்பாட்டு உரிமையைத்தான் வாங்குகிறோம். அதற்குள் வீட்டின் விதிகளும் இருக்கின்றன, அண்டை வீட்டாரின் அமைதியும் இருக்கிறது, அடுத்த நாள் அங்கே தங்கப்போகும் விருந்தினரின் உரிமையும் இருக்கிறது.

அந்தச் சம்பவத்தில் நாய் வீட்டிற்குள் இருந்த சில பொருட்களையும் சேதப்படுத்தியது. Curtain கடித்து இழுக்கப்பட்டிருந்தது. சில சேதங்களின் உண்மையான செலவு security deposit-ஐவிட அதிகமாகிவிடும்.

ஆனால் இதைப் பற்றி கேட்டபோது விவாதம் வேறொரு திசைக்குச் சென்றது.

பிறகு review வந்தது.

தாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும், அதனால் uncomfortable-ஆக இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. மதிப்பெண்ணும் மிகவும் குறைவாக வழங்கப்பட்டது.

அதை வாசித்தபோது கோபத்தைவிட வருத்தம்தான் அதிகமாக இருந்தது.

விதிமுறையை மீறியதைப் பற்றி உரிமையாளர் கேட்பது “கண்காணித்தல்” ஆகிவிடுகிறது; ஆனால் விதிமுறையை மீறியது அந்தக் கதையில் மறைந்துவிடுகிறது.

இதுபோன்ற இன்னொரு மனநிலையையும் நான் சந்தித்திருக்கிறேன்.

வீட்டில் snacks அல்லது canned drinks வைத்திருந்தால்,

“இதெல்லாம் free-ஆ கொடுக்கலாமே?” என்று கேட்பார்கள்.

ஒரு ringgit, இரண்டு ringgit என்று விலை வைத்திருப்பதற்கே review-ல் குறை கூறப்பட்ட அனுபவமும் இருக்கிறது.

ஒரு சேவைக்குப் பணம் செலுத்தும்போது அந்தப் பணம் எதை வாங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Hotel room கட்டணம் செலுத்தினோம் என்பதற்காக minibar முழுவதும் இலவசம் ஆகிவிடுவதில்லை. Flight ticket வாங்கினோம் என்பதற்காக விமானத்தில் நமக்குப் பிடித்ததைச் செய்ய முடியாது. Homestay-க்கும் அதே அடிப்படை நாகரிகம் இருக்கிறது.

ஆனால் இதை மீண்டும் இனத்தின் மீது ஒட்டிவிட்டால் நம்முடைய சிந்தனை தவறான வழிக்குச் சென்று விடும்.

என் அனுபவத்தில் நான் பார்க்கும் பிரச்சினையின் ஒரு பகுதி entitlement. பணம் கொடுத்துவிட்டதால் விதி தனக்குப் பொருந்தாது என்ற மனநிலை. இன்னொரு பகுதி homestay-ஐ ஒரு தனியார் வீட்டாகப் பார்க்காமல், “இரண்டு நாட்களுக்கு நமக்குச் சொந்தமான இடம்” என்று நினைத்துக்கொள்வது. பெரிய குடும்பக் கூடுகைகள், வருகையாளர்கள், கூடுதல் வாகனங்கள் போன்றவை நமக்கு சமூக ரீதியாக சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் residential neighbourhood-ல் இயங்கும் short-term accommodation-க்கு அவை வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவை இனத்துடன் பிறக்கும் குணங்கள் அல்ல.

வளர்ப்பு, consumer behaviour, social habits, விதிகளை நாம் எவ்வளவு மதிக்கிறோம் என்பதோடு சம்பந்தப்பட்டவை.

அதனால்தான் “அவர்கள் நமக்கு வீடு தரவில்லை” என்று மட்டும் கோபப்படுவதற்கு முன்பு, “நம்மில் சிலருடைய நடத்தை மற்றவர்களுக்கான கதவை மூடுகிறதா?” என்ற சுயவிமர்சனத்தையும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இந்தியனாக, “No Indian” என்ற வாசகம் அவமானமாகத் தெரிகிறது.

வீட்டு உரிமையாளராக, சில விருந்தினர்களின் நடத்தையால் இன்னொரு உரிமையாளர் ஏன் எச்சரிக்கையாக மாறுகிறார் என்பதும் புரிகிறது.

இந்த இரண்டு உண்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றொன்றை மறைக்க நான் விரும்பவில்லை.

நம்மீது இருக்கும் பாகுபாட்டை எதிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்தப் பாகுபாட்டுக்கு எரிபொருளாக மாறக்கூடிய நம்முடைய தவறுகளையும் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு சமூகத்தின் மரியாதையை சட்டம் மட்டும் உருவாக்குவதில்லை. அன்றாட வாழ்வில் நாம் மற்றவர்களின் வீட்டை எப்படி பயன்படுத்துகிறோம், அண்டை வீட்டாரை எப்படி மதிக்கிறோம், ஒப்புக்கொண்ட விதிகளை எவ்வளவு நேர்மையாகப் பின்பற்றுகிறோம் என்பதும் அதை உருவாக்குகிறது.

அதேபோல் சிலரின் தவறுகளுக்காக முழுச் சமூகத்தின் முகத்திலும் கதவை மூடுவது தீர்வு அல்ல.

எனக்கு வேண்டியது பெரிய மாற்றம் ஒன்றுமில்லை.

ஒரு வீட்டின் கதவுக்கு வெளியே நிற்கும் மனிதனை அவன் இனத்தை வைத்து தீர்மானிக்காத உரிமையாளர்.

அந்தக் கதவுக்குள் நுழைந்த பிறகு, அது தனக்குச் சொந்தமான வீடு அல்ல என்பதை மறக்காத விருந்தினர்.

இந்த இரண்டும் நடந்தாலே, இன்று நம்முன் மூடப்பட்டிருக்கும் பல கதவுகள் கொஞ்சம் எளிதாகத் திறக்கலாம்.