சீனாவின் ஹெய்லோங்ஜியாங் எனும் மாநிலம் ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ளது. கடுமையான குளிர் நிலவும் மாநிலங்களில் ஒன்று. ஆண்டு தோறும் வெண்பனி மற்றும் ஐஸ்கட்டி விளக்குகளின் கண்காட்சிகள் இங்கு நடைபெறுகின்றன. யூத தேவாலயங்களையும் கத்தோலிக்க தேவாலயங்களையும் ஆங்காங்கு காண முடிகிறது.
இரஷ்ய குடியிருப்புகள் இங்கு இருந்துள்ளன. சில குடியிருப்புகள் சுற்றுப் பயணிகளின் பார்வைக்குத் திறந்துவிடப்ப்பட்டுள்ளன. இரஷ்ய வணிக தளங்கள் இன்றும் பிரபலமாக இயங்கி வருகின்றன. இரஷ்யன் சாலை அருகே கணிசமான இரஷ்ய மக்களை காண முடிகிறது. வணிகத்தின் பொருட்டு அடிக்கடி அம்மாநிலத்தின் தலைநகரான ஹார்பினுக்கு வந்து போவதாக கூறுகிறார்கள்.
வணிக நலன் பொருட்டு இங்குள்ள சீனர்களும் இரஷ்ய மொழியை கற்று வைத்திருக்கிறார்கள். டிரான்ஸ் சைபீரியன் தொடர்வண்டி (Trans Siberian Train) பயணங்களின் வழி இங்கு வணிகம் உயிர்த்துள்ளது. ஆறு மாதங்களுக்கு குளிர் நீடிப்பதால் இங்குள்ள ஆறுகளும் குளங்களும் பல அடிகளுக்கு இறுகி விடுகின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் கனரக வாகனங்கள் மிக இலகுவாக ஆறு, குளம், ஏறி என அனைத்தின் மீதும் ஓடுகின்றன.
மண் அல்லும் கனரக இயந்திரத்தைக் கொண்டு சொங்ஹூவா (Songhua) ஆற்றின் நெடுகிலும் படிந்திருக்கும் வெண்பணிகளை சேகரிக்கிறார்கள். அதனைக் கொண்டு வெண்பனி சிற்பங்களை செதுக்குகிறார்கள். அதன் அடியின் இருக்கும் ஆற்று நீர் பனி கட்டியாக உறைந்திருக்கும். இயந்திரத்தைக் கொண்டு வடிவாக வெட்டி எடுத்து மற்றொரு பக்கம் கொண்டுச் சென்று பனிக்கட்டி விளக்கு விழாவிற்கு அலங்காரம் செய்கிறார்கள்.
வெண்பனி சிற்பங்கள் பகலில் காண வேண்டியவை. அவை விளக்கொளியில் பிரதிபலிப்பதில்லை. பனிகட்டிகள் நேர்மாறானவை. அந்தியில் பனிக்கட்டிகளுக்குள் இருக்கும் வண்ண விளக்குகள் மாயா ஜால உலகமாக தோற்றமளிக்கிறது. இக்கண்காட்சிகள் உறைந்திருக்கும் குளங்களின் மீது நடத்தப்படுகின்றன. நாம் குளங்களின் மீது லஹிமா சக்தியைப் பிரயோகித்து நடக்கின்றோம் எனும் பிரக்ஞை இல்லாமல் இக்கண்காட்சிகளை குளிரில் நடுங்கி இரசித்து மகிழலாம்.
ஹேஷென் (Hezhen) எனப்படும் சீனாவின் அறுதி சிறுபான்மை இனத்தவர்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். இவர்கள் பழங்குடி மக்களும் கூட. இம்மக்கள் ஹேலோங்ஜியாங்கில் சுமார் 4500 பேரும் இரஷ்யாவில் 10 ஆயிரம் சோச்சம் எண்ணிக்கைகளில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஹேஷென் மக்கள் ஆற்றின் கரையோரங்களில் தமது குடில்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். நீரும் மீனும் இவர்களின் வாழ்வின் அங்கங்கள். இந்த நீர்நிலைகளை விட்டு அவர்கள் வெகு தூரம் பயணிப்பதில்லை.
மீன் பிடிப்பது இவர்களின் பிரதான தொழில். வலை, தூண்டில் மற்றும் திரிசூலம் போன்ற ஈட்டிகளை வைத்து மீன் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். ஆண் பெண் என அனைவரும் மீன் வேட்டை நடத்துகிறார்கள். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கலை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
இப்பிரதேசங்களில் மிகக் குறுகிய கோடை காலமே ஏற்படுகிறது. அவ்வேளைகளில் மீன்களையும், மீன் தோல்களையும் நன்றாக உலர விடுகிறார்கள். மீன் பிடி கருவிகளையும், படகுகளையும் பழுதுபார்த்துக் கொள்கிறார்கள். இளையுதிர் காலத்தில் டாமாஹாயூ (Damahayu) எனும் ஒரு வகை சல்மன் மீன்களை பிடிக்கும் சடங்கு நடைபெறுகின்றது. அது போக ஒரு வகையான கோழி மீன்களையும் (Sturgeon) இலையுதிர் காலத்தில் பிடிக்கிறார்கள். டாமாஹாயூ மீன்களை சமைக்காமல் உண்பது அவர்களின் ஆயுளை நீடிப்பதாக நம்புகிறார்கள்.
ஹேஷென் மக்கள் அவர்களின் வீட்டிற்கு விருந்தினரகா வருபவர்களுக்கு சமைக்காத மீன் இறைச்சியை கொடுப்பார்கள். வாசலில் பச்சை இறைச்சியை வாயருக்கே நீட்டுவார்கள். அதை உண்பவரே ஹேஷென் வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். புதிதாக பச்சை மீன்களை சாப்பிடுவர்கள் வினிகரை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அது மீன் சதையை கொஞ்சம் வெந்த பதத்தில் உண்டு செய்யும். வெள்ளை மற்றும் மால்ட் சேர்க்கப்பட்ட கருப்பு வினிகர் வகைகளையும், உப்பு, பூண்டு, உருலைக் கிழங்குகளோடும் சேர்த்து சாப்பிடுவார்கள். சமைத்த மீன் வகைகள் படகுகளுக்கு ஒப்பானதாக கருதுகிறார்கள். ஆகவே அவற்றை திருப்பிப் போட்டு அடி சதையை பியித்து சாப்பிடுவதில்லை. மீனின் மேல் பக்க சதையை சாப்பிட்டு முடிந்ததும் அடி சதையை குச்சிகளை வைத்து நோண்டி சாப்பிடுவார்கள்.
ஹேஷென் மக்கள் சைபீரியன் ஹஸ்க்கி (Siberian Husky) நாய்களை அதிகம் வளர்க்கிறார்கள். குளிர்காலத்தில் நீர்நிலைகள் உறைந்ததும் இந்த நாய்களே வாகனங்களாக பயன்படுகின்றன. சறுக்கும் படகுகளை இழுக்க இவ்வகை நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஹஸ்க்கி சராசரியாக 40 கிழோ வரையிலான பலுவை இழுத்துச் செல்லும் பலம் கொண்டது. இவ்வகையான சறுக்கும் படகுகளில் சுமார் 12 நாய்கள் வரையினும் கட்டி இழுக்க வைக்கிறார்கள். அது போக, வெள்ளை நிற ஓநாய்களையும் வளர்க்கிறார்கள். இவ்வகை ஓநாய் குட்டிகள் பஞ்சு போன்ற தோலைக் கொண்டுள்ளன. சுற்றுப் பயணிகள் இந்த வெள்ளை ஓநாய் குட்டிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள பணம் வசூலிக்கிறார்கள்.
இவர்கள் மீன் தோலில் ஆன உடைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு பெரிய வகை மீன்களை தேர்வு செய்து அதன் தோல் பகுதியை செதுக்கி எடுத்து உலர்த்துகிறார்கள். நன்றாக காய்ந்த தோல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடித்து லேசான பெரிய துணி போல் உருவாக்குகிறார்கள். அதில் வண்ணப் பூக்களின் கலவையைக் கொண்டு பல வகை நிறத்தை தீட்டுகிறார்கள். மீன் தோலில் காலணியையும் உற்பத்தி செய்கிறார்கள். அவை நீடித்த கதகதப்பையும், நீர் புக தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. மீனின் எலும்புகளில் இருந்து பித்தான்களை உற்பத்தி செய்துக்கொள்கிறார்கள்.
மீன் பிடித்தல் போக சில வேலைகளில் அருகே இருக்கும் மலைகளில் வேட்டைக்குச் செல்கிறார்கள். அதற்கும் சைபீரியன் ஹஸ்க்கி நாய்களை பயன்படுத்துகிறார்கள். காடுகளில் அவை சுமை வண்டிகளை இழுக்கவும் ஓடவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. சில மான்களையும் இந்த வண்டிகளை இழுக்க பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுப்பயணிகளின் சுமை வண்டிகளுக்கு மான்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். காட்டில் வேட்டைக்கு கொண்டு செல்லப்படும் ஹஸ்க்கிகளுக்கு காயம் படாமல் இருக்க கால் கவசங்களை அணிவிக்கிறார்கள்.
ஹேஷென் மக்கள் இசை நாட்டம் கொண்டவர்கள் அவர்களின் மொழியில் பாட்டிசைக்கிறார்கள். கொங்காங்ஜி (kong kang ji) எனப்படும் ஒரு வகை வாயிசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். சீனா, இரஷ்யா, ஜப்பான் என மூன்று நாடுகளும் மஞ்சூரியாவில் கோர தாண்டவ போர் நடத்திய போது இம்மக்கள் இங்கும் அங்கும் என பல திசைகளில் சிதறிப் போனார்கள். இவர்கள் பேசும் மொழியும் தேசியமயத்தில் கரைந்துக் கொண்டுள்ளது.
9 comments:
வணக்கம் விக்கி, நல்ல அருமையான தகவலும் பதிவும், வாழ்த்துக்கள்
அருமையான பதிவு செல்ல முடியாத நமக்கு இந்த தகவல் உபயோகமானதாக இருக்கும் நன்றி
@ ஜவஹர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்...
இந்த கட்டுரை நம்மை அந்த ஊருக்கே அழைத்து செல்கிறது
@ தமிழ்வாணன்
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே...
������ sirappu. Onai kooda edutha photo ������������
@ அனந்தன்
நான்றி நண்பரே...
மீன் ஆடையென்பது அபூர்வமான உடைதான்.வேறெங்கும் உடுத்துகின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் சீனாவில் இவ்வினம் சீனரோடு கலந்து கரைந்து போவது வேதனைக்குறியது.
@ அனானிமஸ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment