Along The River During Pure Brightness Day என்பது சீனாவின் மோனாலிசா ஓவியம் என்றும் அழைக்கப்படுகிறது. Pure Brightness Day என்பதை கல்லறைத் திருநாளாகவும் குறிப்பிடுவார்கள். சீனர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று. இந்த ஓவியத்தின் வயது சுமார் 930 ஆண்டுகள். பெய்ஜிங் வருவோர் காண விரும்பும் இடங்களில் Forbidden City எனப்படும் அரண்மனையும் அடங்கும். ஒரு நாளில் சுற்றி முடிக்க முடியாத பெரும் கோட்டையான ஃபோர்பிடன் சிட்டியில் இருந்த முக்கிய அம்சங்களில் ஒன்று இந்த 5 மீட்டர் ஓவியம். ஓவியத்தின் உயரம் 25 செண்டிமீட்டர். அந்த அரண்மனையில் வசித்த கடைசி ராஜாவன பூயிக்கு இந்த ஓவியம் மிக பிடித்திருக்க வேண்டும். கூட்டணி நாடுகளின் படையெடுப்பின் சமயம் அரண்மனையை விட்டு போகும் போது இவ்வோவியத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். 1945-ஆம் ஆண்டு இவ்வோவியம் மீண்டும் சீன அரசாங்கத்தால் மீட்கப்பட்டது.
இந்த ஓவியத்தில் மிக சொற்பமான சேதமே ஏற்பட்டுள்ளது. (Northern Song Dynasty) வடக்கு சோங் பேரரசின் (960-1127) Zhang Zeduan எனும் ஓவியரால் மிக நேர்த்தியாக வரையப்பட்ட இந்த ஓவியம் காலம் கடந்த புதையல். இதன் வழி பண்டைய சீன நகரத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் இக்கலைஞர். இந்த நெடும் ஓவியம் மூன்று பாகங்களை கொண்ட சுருள்களாக இருந்துள்ளது. பியன்ஜிங்கில் (Bianjing) ஒரு பொழுதில் நடக்கும் காட்சிகள் ஓவியமாகப்பட்டுள்ளன. பியன் என்பது நதியின் பெயர், ஜிங் என்பது தலைநகரை குறிக்கும் சொல். இந்த இடம் தற்சமயம் கைஃபெங் என பெயரிடப்பட்டுள்ளது.
நெழிந்து ஓடும் ஆற்றுப் படுகை, அதைக் கடக்க பாலம், படகுகள், புரப்பட தயாராகும் மனிதர்கள், வணிகர்கள், சாமானியர்கள், கல்லறையை சுத்தம் செய்துவிட்டு வரும் மனிதர்கள், விலங்குகள், மத போதகர்கள், யாசகம் கேட்போர், கதை கேட்கும் சிறுவர்கள், குடி போதையில் இருக்கும் இளைஞர்கள், தேநீர் கடையில் அரட்டையடிக்கும் ஆண்கள், குடில்கள் என எக்கச் செக்கமான தகவல்களை எழுதலாம். பிரமிக்க வைக்கும் உயிர் ஓவியம் இது. இதில் மொத்தமாகவே 20 சொச்சம் பெண்கள் வரையப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆண் துணையோடு இருக்கிறார்கள். உடை அம்சத்தை கொண்டு அவர்கள் மேட்டுக் குடி பெண்கள் அல்ல என்பதாக குறிப்பிடப்படுகிறது. கொண்டாட்ட நாட்களில் கூட பெண்கள் சுதந்திரமாக வெளியே உலாவ முடியாததை இது மறைமுகமாக காட்டுக்கிறது.
சுமார் 550 மனிதர்களும் 60 விலங்குகளும் பல பாவனைகளில் காட்டப்பட்டுள்ளது. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. அந்த Bian நதி அடித்துச் செல்வதைப் போலவே மனித வாழ்க்கையை காலம் கொண்டு செல்வதாக அந்த ஓவியம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனாவின் கட்டிட கலைகள் சற்று மாறுபட்டது. இதில் சோங் பேரரசின் வளர்ச்சியையும் கலையம்சங்களையும் காண முடிகிறது.
இதே போன்ற ஓவியத்தை பல்வேறு காலகட்டங்களில் வரைந்துள்ளார்கள். அவை அளவிலும், மக்கள் தொகை, கட்டிட கலை என அந்தந்த கால பேரரசுகளின் அம்சத்தோடு தீட்டப்பட்டுள்ளன. கல்லறை திருநாள் ஓவியம் பல நாடுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியம் கலை பொக்கீஷமாக பார்க்கப்படுவதால் அதை மிக பதுகாப்பாக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் செல்கிறார்கள். அதற்கான செலவு சில மில்லியன் டாலர்களை விழுங்குகிறது. சமீபத்தில் இதன் வடிவமைப்பை 3D/4D வடிவமைப்புகளில் அசையும் சித்திரமாக திரையிடுகிறார்கள். சீனாவின் பல மாநிலங்களிலும் கல்லறைத் திருநாள் ஓவியம் நீண்ட சுவர் பகுதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சீனர்கள் இந்த ஓவியத்தைக் கொண்டாடும் மன நிலையை அது காட்டுகிறது.
சோங் பேராட்சி சுமார் 160 ஆண்டுகள் நீடித்துள்ளது. அது ஆட்சியை கையில் எடுத்த போது சோழ நாட்டில் ஆதித்த கரிகாலனின் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் இராஜேந்திர சோழனின் கடார படையெடுப்பின் போதும் சீனாவில் சோங் பேரரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோழர்களோடு இவர்களுக்கு வணிக தொடர்பு இருந்துள்ளது. இராஜேந்திரன் ஆட்சியின் 58-ஆண்டுகளுக்கு பின் அரியணை வந்தவர் முதலாம் குலோதுங்க சோழன். இளவரசராக இருந்த சமயம் குலோந்துங்கன் சுமார் மூன்று ஆண்டு காலம் சோங் தேசத்தில் வசித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்த பின் சுங்கம் தவிர்த சோழனாக வணிகத்தை பாலி, பர்மா, கம்போடியா (முன்காலத்தில் வேறு பெயர்) என பல நாடுகளுக்கு விரிவு செய்திருக்கிறார். சோங் தேசத்தின் வணிக செழிப்பை இவ்வோவியத்தில் இருக்கும் வணிக படகுகளின் வழியும், வரி வசூழ் செய்யும் சுங்க சாவடியின் வழியும் அறிய முடிகிறது.
கலை கலாச்சாரத்தில் வலுத்திருந்தாலும் சோங் பேரரசின் இராணுவம் செழித்த நிலையில் இல்லை. இராணுவத்தை விரிவாக்கும் முயற்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வீரர்கள் அதிகம் போராடமல் சரணடைந்தார்கள். Huizong அரசரும் Qinzong இளவரசனும் Jin இராணுவத்தால் சிறையெடுக்கப்பட்டனர். மஞ்சள் நதி பகுதி எதிரிகளால் அபகரிகப்பட்டு சோங் சாம்ராஜியம் முடிவுக்கு வந்தது.
மாற்று அரசியல் கருத்து கொண்டவர்களை மரண தண்டனைக்கு உற்படுத்துவதையும் சோங் பேரரசு தவிர்தது. சீன வரலாற்றில் அரசியல் மரண தண்டனை விதிக்காத ஒரே பேரரசும் இதுவே ஆகும்.
இந்த ஓவியத்தில் உள்ள இடங்களை இன்றும் காணலாம். மேம்பாடு கண்டிருப்பினும் சில புராதன இடங்கள் காலத்தை கடந்து நிற்கின்றன.
No comments:
Post a Comment