தம்பட் திரைப்படம் பார்த்தேன். ஒரு தாமத பார்வையாகவே இங்கு எழுதுகிறேன். நேர்த்தியான காட்சி அமைப்புகளால் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மூன்று அத்தியாயங்களாக இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் இரு அத்தியாயங்கள் பிரிட்டிஷ் இந்தியா காலத்திலும் மூன்றாம் அத்தியாயம் சுதந்திர இந்தியா காலத்திலும் நடைபெறுகிறது. மிக எளிமையான கதை களம் என்றாலும் ஆழமாகவும் மிரட்டியும் சொல்லி இருக்கிறார்கள்.
தம்பட் என்பது ஒரு கிராமத்தின் பெயர். இங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழையின் காரணம் ஒரு சாபம். சாபத்திற்கு பின்னணியில் உள்ளது ஹஸ்தர் எனும் ஒரு கடவுளின் குழந்தை. இந்த ஹஸ்தரின் கதையை படத்தின் ஆரம்பத்தில் சில வரிகளில் சொல்லிவிடுகிறார்கள் என்பதால் நான் இங்கு குறிபிடுவது பாதகமில்லை. இந்த ஹஸ்தர் தான் நமக்குள் ஒழிந்து இருக்கும் பேராசை. அது நம்மை விழுங்கக் காத்திருக்கும் பெரும் பசி கொண்ட மிருகமாகும்.
பூர்த்தி தேவி பல கோடி கடவுள் பிள்ளைகளை பெற்று எடுக்கிறாள். அதில் ஹஸ்தர் மூத்த பிள்ளை. ஹஸ்தர் தருதலை பிள்ளை மட்டும் அல்ல அனைத்து செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ள விளையும் பேராசைகாரனும் கூட. அதில் தானிய செல்வத்தில் கை வைக்கும் போது பொரும் சகோதர போர் ஏற்பட்டு ஹஸ்தரை துவம்சம் செய்கிறார்கள் மற்ற கடவுள்கள். ஹஸ்தரை பூர்த்தி தேவி காப்பாற்றி வயிற்றில் வைத்துக் கொள்கிறாள். இருந்தும் ஹஸ்தரை யாரும் வழிபடாமலும், கேவில் இல்லாமல், அறியபடாத கடவுளாக இருக்க சாபம் அடைகிறான். ஹஸ்தரை யாரும் கேள்விபட்டதில்லை. உலக கடவுளர்கள் வரிசையில் ஹஸ்தரின் பெயர் விடுபடுகிறது.
ஹஸ்தரின் சாபம் பிறரின் இலாபம் என்பதாக தம்பட் வாழ் குடும்பம் நம்புகிறது. ஹஸ்தருக்கு கோவில் கட்டி வழிபட ஆரம்பித்ததால் மற்ற கடவுள்களால் சபிக்கப்பட்டு தம்பட் எங்கும் அடைமழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்த விளக்கங்களுக்குப் பின் காட்சிகள் விரிகின்றன.
தம்பட் மாயாஜால வகையைச் சேர்ந்த கதையாக இருந்தாலும் மூட நம்பிக்கைகளை விதைக்காமல் சிறுவர்கள் கதை போல் அமைந்துள்ளது. இது சிறுவர்கள் காண வேண்டிய படமா என்றாலும் மிக சொற்பமான சில காட்சிகள் முகம் சுளிக்கச் செய்யகூடும். இதில் நடித்திருக்கும் சிறுவர் கதாபாத்திரங்கள் மிக சிறப்பாக நடிந்திருக்கிறார்கள்.
இந்தக் கதை களம் பிராமண குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் பிராமணர்கள் நல்ல சலுகைகளோடு இருந்த போதிலும் இந்து மத விவகாரங்களில் வெள்ளையர்கள் கை வைத்தது அவர்களிடையே சிறு கசப்பை ஏற்படுத்தியது. அது போன்ற கலாச்சார மாறுதல்களை மிக வழிந்து திணிக்காமல் கதை போக்கில் காட்சிபடுத்தி இருக்கிறார்கள். முக்கியமாக 'சாத்தி' எனும் உடன்கட்டை ஏறும் வழக்கமும். விதவைகளை மொட்டையட்டிக்கும் வழக்கமும் பிரிட்டிஷ் ஆட்சியின் பின் தளர்ந்து போனதை காட்சி படுத்தி இருப்பது அருமை.
அது போக அந்நாளைய கட்டிடங்கள், வாழ்விடங்கள், வாகனங்கள், உடை என கொஞ்சமும் குறை சொல்ல முடியாத வடிவமைப்புகள் நம் கண்களை மிரண்டு போகச் செய்கின்றன. கதையின் நாயகன் விநாயக். விநாயக்கின் அம்மா ஒரு விதவை. அவள் ஒரு கிழவனுக்கு பணிவிடை செய்து வருகிறாள். இந்த கிழவன் யார் என்றாள் விநாயக்கின் அப்பா. இதே நிலை விநாயக்கின் காலகட்டத்திலும் ஏற்படுகிறது. இது போன்ற அந்நாளய சமூக அமைப்புகளையும் உறவுகளையும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இத்திரைக் கதைக்கான உழப்பையும் நாம் உணர முடிகிறது. அக்காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும், பெண் அடிமைத் தனங்களையும் சில வசன வரிகளில் உணர்த்துகிறார்கள்.
தேவை உள்ளவர்களுக்கு இந்த உலகம் போதுமானதாக அமைகிறது. பேராசைகாரர்களுக்கு அல்ல எனும் காந்தியின் பொன்மொழி இந்தப் படத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ளது. விநாயக் தன் தேவைகளுக்காக ஹஸ்தரிடம் இருந்து தங்க காசுகளை எடுக்கும் போது அவன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். பேராசை என்பது ஒற்றைத் தீனியால் தீர்ந்து போவதல்ல. விருட்சத்தின் கிளைகளென அது படர்ந்துக் கொண்டே உள்ளது. அதற்கான தீனியை மனிதனால் உணவளித்து மாள முடியாது. பேராசை எனும் ஹஸ்தர் பல்கி பெருகும் போது அது இன்னலை கொடுக்கிறது.
மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் இருந்த ஆணாதிக்க ஹிட்லர் அப்பாகள் நடந்து கொள்ளும் விதம். குடும்ப சூழலில் அவர்கள் எப்படி அதிகாரம் செலுத்துகிறார். அதற்கு அடுத்த தலைமுறையில் இருக்கும் ஆண் வாரிசு அதை எப்படியாக பின்பற்றி தொடர்கிறான் என இன்னும் நிறைய விசயங்கள் செல்லமாக வளர்க்கப்பட்ட இந்த 90ஸ் கிட்சுகளுக்கும் 2கே கிட்சுகளுக்கும் புரியாமல் போகும் சாத்தியம் அதிகம்.
இந்த படம் பார்த்து முடித்து தேடிய தகவலின் படி இக்கதையின் சாரம் ஒரு மாராத்திய கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 1993-ல் கேட்ட இக்கதையை 1997-ல் திரைக்கதையாக அமைத்து தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். 2012-ல் படப்பிடிப்பை தொடங்கி சிறுகச் சிறுகச் செதுக்கி இருக்கிறார்கள். 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 13 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. நிச்சயமாக இத்திரைப்படம் முடியும் வரை உங்களை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு நகரவிடாது.
முற்றும்.
2 comments:
ஐந்து வருடங்கள் படப்பிடிப்புற்கு எடுத்துக்கொண்ட காரணம்.மழைக்காக கதைப்படி கிராமத்தில் மழை பெய்து கொண்டே இருப்பதால் வருடத்தின் மூன்றுமாதங்கள் மழைக்காலத்தில் மட்டும் சூட்டிங் செய்த்தாக இயக்குனர் கூறுகிறார்.
@ thanjai Gemini
தகவலுக்கு நன்றி... கடும் உழைப்பு... இதன் இரண்டாம் பாகம் வேறு கதை களத்தில் எடுக்க போவதாக வாசித்தேன்...
Post a Comment