Tuesday, February 12, 2019

Kingdom (2019) Korean - கிங்டோம்

நெட்பிலிக்ஸில் கிங்டோம் தொடரை கண்டு இரசித்தேன். காண்போரின் இதயத்தை பதற வைத்திருக்கிறார்கள். முதல் சீசனில் 6 அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Train to Busan-னில் கிடைத்த அதே பதைபதைப்பை இதில் உணர்வீர்கள். 

கிங்டோம்- அரசியல் என்பது என்ன. அரசியலில் நிகழும் குழப்பம் இராஜியத்தில் இருக்கும் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதாக அமைந்துள்ளது. இராஜியத்தில் இருக்கும் எதிர் துருவங்களான இரு பலம் பொருந்த்திய நபர்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தை இக்கதை விளக்குகிறது.

ஹன்யாங்கில் (இன்றய சியோல்) இருக்கும் அரண்மனைக்கு நாட்டின் பிரபல வைத்தியர் வருகிறார். அரசருக்கு சின்ன அம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கான மூலிகையைக் கொடுக்கும் போது வைத்தியரின் உதவியாளர் அரச சோம்பியால் தாக்கப்படுகிறார். காயம்பட்ட உதவியாளரோடு வைத்திய சாலை திரும்புகிறார். உதவியாளரை புதைக்க உத்தரவிடுகிறார். நாட்டில் பசியும் பட்டினியும் வாட்டுவதால் அந்த உதவியாளரை புதைக்காமல் சமையல் செய்து நோயாளிகளுக்கு உணவளித்துவிடுகிறார் மற்றுமொரு உதவியாளர். சோம்பிக்களின் அசூரத் தாக்குதல் நாடு முழுக்க வேகமாக பரவ ஆரம்பிக்கிறது. 

இப்படி இருக்க மறுபக்கம், அரசர் இறந்துவிட்டதாக நாடு முழுவதும் சுவரொட்டிகளை விநியோகித்து விடுகிறார்கள். அக்காரியத்தை செய்தது யார் என தெரியவில்லை. தனது தந்தையை நலம் விசாரிக்க வரும் பட்டத்து இளவரசர் தடுத்து நிறுத்தப்படுகிறார். அதனால் இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து வந்து பார்க்கிறார். அரசர் படுக்கை அறையில் ஒரு சோம்பி உருவத்தைக் காண்டு திடுக்கிடுகிறார். இருந்தும் அனைத்து இரகசியங்களும் மறைக்கப்படுகின்றன. இளவரசர் அரச துரோகத்திற்காக குற்றம் சாட்டப்படுகிறார். 

உண்மையை கண்டு பிடிக்கும் பொருட்டு அரண்மனையில் இருந்து வெளியாகிறார் இளவரசர். அரசு தரப்பும், சோம்பிக்களும் அவரை துரத்துகின்றன. இளவரசர் யாவரின் பழியாவர், நாட்டின் நிலையை எப்படி சீர் செய்யப் போகிறார் என்பதுமாக கதை நகர்கிறது. 

இந்த முதல் சீசன் பல கேள்விகளுக்கு விடையளிக்காமலேயே முடிந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல புதிய முடிச்சுகளை போட்டுக் கொண்டே சென்றுள்ளனர். முடித்திருக்கும் விதமும் அபாரமான திருப்பம்.

சியோலுக்கு பயணம் செய்தால் அதன் அரண்மனைக்கு முன் இன்றும் அணிவகுப்பை நடத்தும் இராணுவ வீரர்களை காணலாம். அவர்களின் உடை, இசை, அணிவகுப்பு என அனைத்தும் பண்டைய குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை. கிங்டோம் சீரிஸில் காட்சி அமைப்புகளுக்குள் நாம் நடந்து சொன்று அருகிள் இருந்து காண்பதைப் போல் உள்ளது. அவ்வளவு நேர்த்தியான காட்சிகள்.

கொரிய மக்கள் இன்று ’அங்குல்’ எனும் எழுத்து முறையை பின்பற்றுகிறார்கள். முன் காலத்தில் சீன எழுத்து வடிவமே எங்கும் வியாப்பித்து இருந்தன. புரதான சின்னங்களில் சீன எழுத்துகளையே காண முடியும். அதே போல் டிரேகன் அரச சின்னமாகவும் இருந்தது. கிங்டோமில் காட்டப்படும் கொரிய நாட்டின் புராதன பெயர் ஜோசியோன் ஆகும். 

இதன் இரண்டாம் சீரிஸை தயாரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். படபிடிப்புகள் முடிந்து வெளியீடு காண எப்படியும் ஓர் ஆண்டு காலம் ஆகக் கூடும். நாகரீக உலகின் சோம்பிகளை விட பண்டை காலத்து சோம்பிகள் காண்போரை அலரவிடுகின்றன. 

-முற்றும்-

No comments: