Saturday, February 02, 2019

இளமை நினைவுகள் SJKT SUNGKAI


சுமார் 28-30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இதை எழுதுகிறேன். எனது பள்ளி படிப்பை முடிக்க மட்டுமே ஏழு பள்ளிக்கூடங்கள் மாறி இருந்தேன். இதனாலேயே என்னவோ பெரிதாக நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளவில்லை. நாடோடி தனமான வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டிருப்பதனாலும் தொடரும் என்பதாலும் இன்றும் இதுவே நிலை. 

வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நினைவில் ஆழமாக படிந்திருக்கும் என்பதில் மாற்றில்லை. சத்தியாவோடு (மணிமாறன்) குறைந்தபட்சம் 4 வயதிலிருந்தாவது நான் பழகி இருக்க வேண்டும். அப்போது கேமரன்மலையில் வசித்திருந்தோம். 'Chekco' எனும் அந்தத் தோட்டம் இப்போது புதர்கள் விழுங்கிய காடாகிவிட்டது. சத்தியாவின் தாய் தந்தையரை அத்தை மாமா என்றே அழைத்திருக்கிறேன். கிருஷ்ணன் மாமா ஒரு முறை என்னைக் காப்பாற்றியதாக கூட நினைத்திருக்கிறேன். அது வேறு கதை. 

சத்தியா கடந்த மாதம் நண்பா நம் ஆரம்பப்பள்ளியின் மாணவர் சந்திப்பு ஏற்பாடகி உள்ளது என கூறினார். அப்போது தான் சத்தியாவோடு நெடுநாட்களாக பேசவில்லையே என தோன்றியது. காலம் வாழ்வை புரட்டி போட்டிருந்தது. புலன குழுமத்தில் இணைந்த போது 7/8 வயதில் பார்தவர்களை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயமாக பலரும் என்னை மறந்திருக்க கூடும். நானும் பலரை நினைவில் தப்பவிட்டிருந்தேன். கேமரன்மலையில் வளர்ந்த நானும் சத்தியாவும் பேராவின் சுங்கை தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்தோம். இருவரும் அவரவர் தாத்தா வீட்டில் தங்கி படித்தோம். 

சுங்கை தமிழ்ப்பள்ளி:

1. அதிகாலையில் குளித்து தலையை வழித்து சீவி பிரதான சாலையின் முன் காத்திருந்தால் முனியாண்டி கோவில் வாசல் பலகையில் பழய 'றா'வில் கரியால் எழுதப்பட்ட கம்போங் என்றா எனும் ஊர் பெயர் தெரியும். அங்கிருந்து சில கி.மியில் பள்ளிக்கூடம். பள்ளியின் முதல் நாள் சத்தியா அழுதான். நான் இல்லை. பள்ளிக்கூடத்தில் நான் சந்தித்த முதல் நபர் பழனி. என்னை விட 3 வயது அதிகம். பழனி ஏன் அன்று மட்டும் என் வகுப்பில் அமர்ந்திருந்தார் என தெரியாது. டீச்சர் பழனியை அண்ணன் என அழைக்கச் சொன்னது ஞாபகம் உள்ளது. பாழனியை 2004-ல் மீண்டும் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். இளங்கலை பயிலும் போது ஒரே ஆண்டின் மாணவர்களாக இருந்தோம். பழனிக்கு என்னை ஞாபகம் இல்லை. என்னால் அவரை அடையாளம் காண முடிந்தது. 1991/1992 ஆண்டுகளில் எனது வகுப்பின் பெயர் 1 சிவப்பு & 2 சிவப்பு. 

2. பள்ளியின் பழய சிற்றுண்டி சாலையின் அருகாமையில் ஒரு கிணறு இருந்தது. தமிழ்ப் படங்களில் பார்ப்பதைப் போல் அடித்து x2 நீர் எடுக்க வேண்டும். பின்னாட்களில் அதில் கை மட்டும் கழுவினேனா இல்லை அள்ளி பருகினேனா என பலமாக யோசித்திருக்கிறேன். அதன் சுகாதார தன்மை என்னை அழைக்கழித்தது. அந்தச் சிற்றுண்டி சாலையில் நாசி லெமாக் மற்றும் சம்பால் போட்ட குண்டு பலகாரம் தவிர்த்து வேறு ஏதும் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை. 

3. வகுப்பு தலைவியின் பெயர் சண்முகவள்ளி. இவரை யாரோ சண்முகவெள்ளி என கேலி செய்து கூப்பிட அவர் அழுதுகொண்டே அந்த சிற்றுண்டி கடைகாரரிடம் என்னை நோக்கி விரல் காட்டினார். அந்த கடைகாரர் 'இரு பெல்ட்ட எடுத்துட்டு வரேன்' என சொன்னது அடிவயிற்றை கலக்கியது. அன்று முதல் பயந்துக் கொண்டு சாப்பாடு வாங்கும் ஒரு ஃபோபியா ஒட்டிக் கொண்டது.

4. பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்கு திடல் வழியே நடந்து போக வேண்டும். அகால மரணமடைந்தை எலி ஒன்று நீர்த்தார் சடங்கு செய்யப்படாமல் சில நாட்களில் கொஞ்சம் வாடையெடுத்து அத்திடலில் கிடந்தது. சீனியர் ஒருவர் அதன் வாலை பிடித்து சுழற்றி வீச எனது வெள்ளை சீருடையில் அதன் பூத உடலின் எச்சம் ஒட்டியது. கடும் துர்நாற்றம். அழுது கொண்டே விடு திரும்பினேன். அந்த சீனியர் சத்தியாவின் உறவினர். விபத்தின் காரணமாக அவர் இப்போது இல்லை என்பதை அறிகிறேன். 

5. பேருந்து நிலையம் அருகே 20 காசு கொடுத்து ஆரஞ்சு பழச் சாரு என கூறப்பட்ட ஒன்றை வாங்கிக் குடிப்பது வழக்கம். அக்கடையின் புதிய விற்பனரிடம் சத்தியா 1 வெள்ளி கொடுக்க ஒரு பெரிய பை நிறை ஜூஸ் கட்டிக் கொடுத்தார் அவர். 1 வெள்ளி என்பது சில நாட்களுக்கான பாக்கெட் மணி. மறுநாள் சத்தியாவின் முகத்தில் கடுமையான சோகம் தெரிந்தது. வீட்டில் பிரச்சனையாகி இருக்கக்கூடும். நானும் கேட்டுக்கொள்ளவில்லை.

6. வகுப்புக்கு வந்ததும் பஸ் பாஸை புத்தகப்பையில் வைத்துவிட்டு வளாகத்தில் சுற்றித் திறிவோம். கோபியும் உடன் வருவார். சுற்றுவார். கோபிக்கு இரண்டு வயது அதிகம். ஒரு முறை கழிவறை சென்று திரும்பியதும் உனது பஸ் பாஸ் எங்கே என கோபி கேட்டார். புத்தகப் பையில் தேடினேன் இல்லை. பதற்றமாகி போனது. வழி நெடுக தேடி அழைந்தேன் கிடைக்கவில்லை. வகுப்பறையின் பின் பக்க அஞ்சடியில் பஸ் பாஸ் போல காதிதம் கிடப்பதை கோபி பார்த்ததாக கூறினார். சென்று பார்த்த போது எனது பஸ் பாஸ் சில்லு சில்லாக கிழித்துப் போடபட்டிருந்தது. வேறு என்ன, அழுது கொண்டே அதை காகித்தில் சேகரித்து வீட்டுக்கு வந்து திட்டு வாங்கி 'ஃபஸல்' விளையாட்டு போல் காகிதத்தில் ஒட்டி பஸ் பாஸுக்கு உயிர் கொடுத்து பயன்படுத்தினேன். அந்த மாதம் முழுக்க அவமானமும் ஏளனச் சிரிப்புகளும் நீடித்தன. இதன் சந்தேகம் கோபியின் மீது இருந்தாலும் போதிய சாட்சியங்கள் ஏதும் இல்லை. 

7. மேற்காணும் நபரின் தந்தையார் இந்திய பிரதிநிதி கட்சியின் தலைவராக இருந்தார். தார் ரோடுகள் போடுவதற்கு முன்பான சாலை கூழாங்கற்களால் கொட்டி அமைக்கப்படிருந்தது. மேற்காணும் நபரின் தங்கைக்கும் நமக்கும் ஒரே வயது. வெவ்வேறு பள்ளிகளில் படித்தோம். பள்ளிமுடிந்து வீட்டுக்குச் சொன்று கொண்டிருந்த போது ஏதேற்சையாக அவரை எதிர்கொள்ள நேர்ந்தது. 'இது எங்க அப்பா போட்ட ரோடு. இதுல நீ நடந்து வராத' என சொல்லி கல்லை எடுத்து வீச விரல்களில் காயமானது. ஒரு சாமானியன் மீதான அதிகார பாய்ச்சல் அது. 

8. 1992-ன் ஆரம்பத்தில் சுங்கை தமிழினம் தளபதி போதையில் மூழ்கி இருந்தது. ஒரு நாள் கடைசி பாடம் முடிய போகும் மகிழ்ச்சியில் சுகேன் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். திடீரென 'டீச்சர் விக்னேஸ்சு ராக்கம்மா கைய தட்டு பாட்டு பாடுறான்' என சொன்னார். வகுப்பாசிரியர் பாடம் அப்போது. அவர் பெயர் விக்னேஸ்வரி என ஞாபகம். அவரும் விசாரனை இன்றி பிரம்படி கொடுத்தார். குற்றவியல் அமலாக்க சட்ட பிரிவில் மேற்கல்வியை தொடரும் போது 'hearsay evidence' எனும் சாட்சியை எந்தக் காரணம் கொண்டும் விசாரணைக்கோ அல்லது நீதிமன்ற சாட்சியமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை போதித்தனர். இந்தச் செவி வழி குற்றச்சாட்டுக்கு விசாரணையின்றி தண்டனை பெற்றதால் சுகேனையும், டீச்சரையும் அப்போதும், ராக்கம்மா கையை தட்டும் சமயங்களிலும் நினைவு கூர்ந்து இருக்கிறேன்.

9. சுரேந்திரன் வீடு சுங்கையில் இருந்து தாப்பா போகும் வழியில் சாலையோரம் இருந்தது. கடை வீடு அமைப்பிலான அந்த இடம் பேருந்தில் போகும் சமயங்களில் பார்க்கும் விதத்தில் இருந்தது. 1992க்கு பின் நான் மாற்றலாகி சென்றுவிட்டாலும் விடுமுறை சமயங்களில் சில ஆண்டுகள் சுங்கை வந்து போய் கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து சுரேந்திரன் வீட்டை மட்டும் பார்த்திருக்கிறேன். சுரேந்திரன் ஒரு போதும் எதிர்பட்டதில்லை. 91/92 சமயங்களில் மழை காலத்தில் அதிகமாக வெள்ளம் ஏற்படும். பேருந்து பள்ளியை அடைய கால தாமதம் ஆகும். ஒரு முறை 'டீச்சர் ரொம்ப அடிக்கிறாங்க அதனால் தான் ஸ்கூல் வரலனு' சுரேந்திரன் சொன்னதாக வெள்ளத்தில் சிக்கி வந்த மாணவர் ஒருவர் சொல்ல. வெள்ளம் வடிந்த மறுநாள் சுரேந்திரன் வகுப்புக்கு வந்தார். வேறு என்ன நடந்திருக்கும்? 'அதே தான்'. 

10. சுரேந்திரன் வீட்டு அருகாமையில் குழந்தையம்மாள் ஆசிரியை வீடு இருந்தது. என் வகுப்புக்கு நன்னெறி கல்வி போதித்தார். தேங்காய் எண்ணெய் அப்பி அலுத்த வாரிய தலையையும், குண்டு குண்டாக இருக்கும் என் கையெழுத்தும் நல்ல உதாரணம் என வகுப்புக்கு காட்டி இருக்கிறார். சித்திரம் வரையும் போட்டியில் மோசமான வரையும் திறன் கொண்ட எனது சேவல் ஓவியத்தை தேர்வு செய்தார். அதற்காக துரைசிங்கம் எனும் அரசியல் பிரமுகரிடம் 'லூனா கலர்' பென்சில்களை பரிசில் பெற்றேன். குழந்தையம்மாள் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தீபாவளி அட்டை ஒன்றை எழுதி அவருக்கு கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அடுத்த முறை கொடுக்க வேண்டம் என்பது போல் ஏதொ ஒரு செய்தியை விளக்கி சொன்னது அப்பொழுது சரியாக புரிந்திருக்கவில்லை. 

11. படங்களை கத்தரித்து புத்தகத்தில் ஒட்டி வண்ணம் தீட்டுவதில் ஒரு அளாதி வெறி இருந்தது. ஒரு முறை அப்படி அதி தீவிரமாக படங்களை கத்தரித்து பேக்கில் இருந்து பசை எடுத்து திரும்பும் போது படங்கள் அனைத்தும் தவறி போய்விட்டன. கடுமையான தேடலிலும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருந்த சாந்தி அதை எடுத்ததாக கூறி அவரிடம் இருந்த படங்களை அபகரிக்க முயற்சித்தேன். பஞ்சாயித்து தீர்க்க வந்த டீச்சர் முந்தய பட கத்தரிப்புகளை காட்டி சாந்தி மிக நேர்த்தியாக படங்களை கத்தரித்து இருப்பதாகவும், எனது கத்தரி போடும் திறன் மிக மோசமாக இருப்பதாகவும் பகுத்தாய்ந்து தீர்ப்பை சாந்திக்கு சாதகமாக அளித்தார். அந்த படங்கள் எனது நோட்டு புத்தகத்தின் பயன்படுத்தப்படாத ஏடுகளின் இடுக்கில் சிக்கி இருந்ததை நான் கவனிக்கவில்லை. தவறு என் பக்கம். அந்த ஆசிரியரின் அசாத்திய தீர்ப்பை நினைத்து வியக்கிறேன்.

12. தோழர் வனிதா அதீத மதி கூர்மை கொண்டவர் என்பதாலும் சிட்டி ரோபோவை போல் எல்லா பாடங்களையும் சட்டென கரைத்துக் குடித்து சிறப்பு தேர்ச்சி பெற்றவராக நினைவில் நிற்கிறார்.

13. ஜோன்சன் வகுப்பு தலைவர் என்பதால் நினைவில் உள்ளார். ஜெகதீசன்/ ஜெகதீஸ்வரன் இந்த பெயர் கொண்டவரை புகைப்படத்தில் அடையாளம் காட்ட முடியும். நலினியின் பெயரை மறந்திருந்தேன் இருந்தும் அவர் புன்னகை ஞாபகத்தில் உள்ளது. சண்முகவள்ளி பக்கத்தில் நிற்கும் மாணவிக்கு (பெயர் தெரியவில்லை) ஏனோ என்னை பிடிக்கவில்லை. அவர் கொண்டு வந்த 'picking stick' விளையாட்டுப் பொருளை என்னோடு மட்டும் பகிர மறுத்துவிட்டார். தினேஸை ஒரு முறை தானா ராத்தாவில் சந்தித்தேன். அவருக்கு என்னை ஞாபகம் இல்லை. 

14. தலைமையாசிரியர் பெயர் திரு கிருஷ்ணன் என்பதாக ஞாபகம். அவருக்கு ஒரு தங்கப் பல் இருந்தது. மாணவர்கள் வெந்நீரில் குளித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நான் படித்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சபை கூடத்தில் உரையாற்றி இருக்கிறார். இந்த சபைக் கூடத்தில் 'தூப்பாக்கி துப்பாக்கி' என மேல் வகுப்பு மாணவர்கள் அடிக்கடி ஒப்புவித்தது திருக்குறள் என்பது அச்சமயம் எனக்கு புலப்படாமல் இருந்தது.  எங்களோடு பேருந்தில் வரும் ஆசிரியர் ஒருவர் என்னை 'சோத்து பானை' எனக் கூறி திட்டினார். சேத்து பானை எனும் வார்த்தையை திட்ட பயன்படுத்த முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவரை ஈப்போவில் சந்தித்த போது  பணி ஓய்வு பெற்றிருந்தார்.

15. ஒரு முறை தாத்தாவுக்கு உடல் நலம் கடுமையாக பாதிப்பு அடைந்திருந்தது. மறுதினம் தேர்வு நாள். தாத்தாவை தாப்பா மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அன்றய தினம் வீடு திரும்ப நள்ளிரவு ஆகி இருந்தது. உறக்கம் பிடிக்கமால் காய்ச்சல் ஏற்பட்டது. மறுதினம் பள்ளி நோக்கி நடந்துக் கொண்டிருந்த போது திடீரென வாந்தி வந்தது. பின்னால் இருந்து வேகமாக வந்த பெண் மாணவி என்னை பெயர் சொல்லி அழைத்தார் 'காய்ச்சலா?, இன்னும் வாந்தி வர மாதிரி இருக்கா, டீச்சர் கிட்ட கூட்டிட்டு போகவா' என கேட்டார். நான் தலையசைத்து விட்டு வகுப்புக்கு வந்துவிட்டேன். அந்த சீனியர் மாணவி மிகவும் அழகாக இருந்தார்.

முற்றும்.

பி/கு: நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள். 

No comments: