சமீபத்தில் பசங்க திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் ஒரு பாடலின் வரி ரசனை நயத்துடன் அமைந்திருந்தது. இவ்வுலகமே உமக்காக விரிந்துக் கிடக்கிறது, வாடகை வீட்டில் இருப்பதனால் ஏன் வருத்தம் கொள்கிறாய்... என்பது தான் அப்பாடலின் சாரமாகும். இச்சிறு விடயத்தை பூதக் கண்ணாடி வைத்துக் காண்கையில் இன்றைய இனவாத போர்களும், ஆயுத போராட்டங்களும் எதற்காக எனும் கேள்வி எழுகிறது. தமது ஆயுத வியாபாரம் சீர் கொள்ள யுத்தங்களை தூண்டிவிட்டு "புலவர்களே உங்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது" என வீர வசனங்கள் பேசுபவரைக் கண்டு இப்போதெல்லாம் சிரிக்க மட்டும் தான் முடிகிறது.இப்படியாக அடித்துக் கொண்டும் வியாக்கியானங்கள் பேசிக் கொண்டும் இருப்பதனால் என்ன பயன். உலக வளர்ச்சியில் நாம் சந்திக்க வேண்டிய விடயங்கள் பல பல. மூன்றாம் உலகப் போர் நீரின் காரணமாக ஏற்படக் கூடியதென நாஸ்ட்ராடமசின் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லிக் கொள்கிறார்கள். அதை நம்புவதும் நம்பாததும் நமது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. இது ஏற்படாது என்பது எந்த அளவுக்கு சாத்தியமான ஒன்று.
இந்த நீர், நிலம் எனும் இயற்கை வளங்கள் அனைத்தும் தன் பாட்டுக்கு இருந்தவையே. வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை மீது மனித இனம் மேற்கொண்ட வன்முறைகள் அளவிடமுடியாதவையே. துர்நாற்றம் கொண்ட ஆற்றைக் கடக்கும் சமயங்களில் மூக்கை மூடிக் கொள்ளும் நாம் தான் அதன் பாழடைவிற்கும் காரணமாகி இருக்கிறோம் என்பதினை உணர மறுக்கிறோம்.
தன்னிடம் இல்லாத ஒன்றிற்காக உரிமை கோரும் போது அது போராட்டமாகவும், போராகவும் வெடித்தெழச் செய்கிறது. என்றோ ஒரு நாள் உணவுக்காகவும், நீருக்காகவும் போராட்டங்கள் நடக்கக் கூடும். இதில் எந்த வகையிலான போராட்டம் முன்னதாக அமையும் என்பது சற்றே சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
நீரின்றி அமையாது உலகு எனும் சொல் வழக்கு தமிழில் உண்டு. சிலேடையான சொல் வழக்காக அதைக் கூறலாம். ஒரு காதலன் தன் காதலியிடம் நீ இல்லாமல் எனக்கு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது எனச் செல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடும். அதே போல் நீர் இல்லாமல் உலக உயிர்கள் வாழாது என்றும் சொல்ல முடியும். ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் கரைகிறோம் எனும் வரிகள் தமிழர் மரபினை அழகாக விவரிக்கிறது. அந்த நீரின் தேடலுக்காக உலக நாடுகள் போர்ரிட்டு அழிந்து போகக்கூடுமா? இருக்கலாம்.கடந்த ஆண்டு முதல் கிடுகிடுவென எகிரிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு நாம் அறிந்ததே. இன்றளவிலும் உணவு பொருட்களின் விலை கேட்பாறற்று தான் கிடக்கிறது. உற்பத்திக் குறைவினால் தான் விலை அதிகர்க்கச் செய்கிறதா? முன் சமயம் ஆண்டிற்கு இரு முறையென இருந்த பயிர் செய்யும் முறையானது இப்பொதெல்லாம் மூன்று அல்லது நான்கு முறை என்றாகிவிட்டது. எல்லாம் இரசாயனத்தில் மகிமை. உணவின் தரத்தை விடவும் அதன் அளவின் அதிகரிப்பே நமக்கு தற்காலத்தில் அத்யாவசியமாகப்படுகிறது. உணவுகளின் தேவை இப்படி இருக்க சில விவசாயிகள் ஏழ்மையின் காரணமாக உயிரை விடுவதும் விந்தையாகத் தான் இருக்கிறது.
சாப்பிட்டாக வேண்டும் எனும் கடமைக்காக மட்டுமே இன்றைய நிலையில் பலரும் உணவருந்துகிறார்கள். ஏழைகள் முதற்கொண்டு மத்திய வர்க்கத்தினர் வரையினும் சாப்பாடு என்பதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இயந்திர தனமான வாழ்க்கையில் உணவு என்பது உடலை வளர்க்கும் ஒரு வஸ்துவாக மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். புனைக் கதைகளிலும், அறிவியர் சார்ந்த திரைப்படங்களிலும் வருவது போல் எதிர்கால சந்ததியினர் பசி மறக்க மாத்திரைகளை மட்டும் உண்டு வாழும் காலம் அமையலாம்.
மனிதனின் ஆயுள் காலம் 120 வருடங்களென கணக்கிடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் இதில் பாதியை கடப்பதற்குள் உறுப்புகள் அடங்கி, உடல் சுருங்கி, மண்டை மளுங்கி, மதி கலங்கிவிடுகிறது. இதற்குக் காரணம் வாழ்க்கை முறை எனும் ரெட்டை வார்த்தைக்குள் நாம் தூக்கி எரிந்துவிடக் கூடும். அந்த வாழ்வியல் முறையில் உடல் கேடுக்கு உணவு கேடும் வித்திடுகிறது.
நமக்கு நினைவிருக்கலாம், உணவு தட்டுபாட்டு இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக சாப்பிடுவதால் தான் ஏற்படுகிறதென முன்னால் அமெரிக்க அதிபர் சொல்லி வைத்தார். மக்கள் தொகை அதிகமாகவும் பொருளாதார வளர்ச்சி பெருக்கமும் அதிகமிருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் இவ்விரு நாடுகள் மட்டும் தான் எனச் சொல்வது மிக அபத்தம்.மலேசியாவின் இயற்கை வளங்கள் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. முறையான பயன்பாடு என்பது இங்கு கேள்விக் குறியாகிறது. உணவு இறக்குமதி இக்காலத்திலும் சிறந்த ஒன்றென அமைந்துவிடாது. ஆசிய நாடுகளில் மலேசியா நீர் வளம் அதிகம் கொண்டிருக்கிறது. அதே சமயம் சகட்டு மேனிகு அதன் நாசமும் அதிகரித்து வருகிறது.