Wednesday, September 10, 2008

நாசமா போச்சி...

வரலாற்றில் முதல் முறையாக வட துருவம் ஒரு தீவாக உருமாறி வருவதாக அண்மைய தகவல் கூறுகிறது.
சமீபத்தில் 'நாசா'வால் சில தொலை நோக்கு புகைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அப்புகைபடங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில தகவல்கள் திடுக்கிடும் வண்ணம் உள்ளன. வட துருவத்தில் உறைந்து இருக்கும் பணிக்கட்டிகள் பெரும்பான்மையாக உருகிவிட்டன.

மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த அதீத பாதிப்பு எப்படி பட்டது தெரியுமா? அதாவது ஆர்டிக் பணி படலத்தை ஒரு சுற்றில் வலம் வந்துவிடும் அளவில் உள்ளது.

கவலை தரும் இச்செய்தி சில பன்னாட்டு கப்பல் நிறுவனங்களின் காதில் தேன் வார்த்துள்ளது. இம்மாறுதலினால் நெடுந் தூர பயணங்களை சுருக்கிக் கொள்ள முடியும். இதனால் எரி பொருள் மற்றும் நேரமும் மிச்சப்படுமென மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

அறிவியல் வல்லுநர்கள் இது பூமிப் பந்தை நாசப்படுத்த ஏற்பட்டிருக்கும் ஒரு கண்டமெனவே கருதுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த பூமிக்கும் பாதிப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது என கருத்துரைக்கிறார்கள்.

புவி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுகள் நெடுங்காலமாக நடத்தியும் மனித குலத்தினரிடையே அது எடுபடாமல் போயிருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இனியும் நாம் செய்யப் போகும் தவறுகள், நமக்கே நாம் பறித்துக் கொள்ளும் சவக் குழி என்பதை அறிந்து செயல்பட்டால் நன்மை பயக்கும்.
பணிகட்டிகளின் ஆராய்ச்சி நிபுணரான மார்க் சீரீஸ் கூறுகையில், இப்போது எற்பட்டிருக்கும் மாற்றமானது சரித்திரத்தில் முக்கிய அங்கமெனவும், மனிதர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

125000 வருட பூவியியல் வரலாற்றில் முதன் முறையாக அட்லாந்திக் மற்றும் பசிஃப்பிக் கடல் பகுதிகள் ஒன்றென கலந்து சந்தித்துக் கொள்ளப் போகிறன. கரை பகுதிகள் மேலும் கரைந்து போக போகின்றன. இப்பாதிப்பு சூனாமியின் பாதிப்பை விட மோசமானதாக இருக்குமோ?

Saturday, August 30, 2008

தாம் தூம்- கிளுகிளுப்பும் விறுவிறுப்பும்


ஜீவாவின் படங்களில் காட்சி அமைப்புகளுக்கு குறை சொல்ல இயலாது. இரம்மியமான காட்சிகளின் வழி இரசிகர்களின் மனதை படத்தில் இட்டுச் செல்வதில் அவர் திறமை பாராட்டத்தக்கது.

ஜீவாவின், பசுமையும் இளமையும் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், மனதை கவரும் வகையில் இருந்த இசைக்காகவும் இத்திரையை காண எண்ணி இருந்தேன். குசேலன் மற்றும் சத்யம் திரைப்படங்களின் ஏமாற்றத்தை தாம் தூம் தீர்த்து வைக்கிறது எனச் சொன்னால் அது மிகை இல்லை என்றே நினைக்கிறேன்.

அதிகப்படியான காட்சியமைப்புகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஆய்வு மாநாட்டிற்காக ரஷ்யா செல்லும் ஜெயம் ரவி எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதையாக அமைகிறது.

உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் மென்மையான காதல் சித்திரத்தை உலாவவிட்ட ஜீவா, தாம் தூம் திரையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பது சிறப்பாகவே இருக்கிறது. கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவதையும், இளநீரை எட்டி உதைத்து கற்சுவரை உடைக்கும் வண்ணமும் இருக்கும் காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். இவற்றை செய்ய கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது ஜெயம் ரவி அந்த ஏரியாவில் கை வைப்பது தவறு என்பதை உணர்ந்தால் நன்று.

தெனாலி படத்திற்கு அடுத்தபடியாக ஜெயராமிற்கு இப்படம் ஒரு நல்ல மைல்கல்லாக அமையும் என தெரிகிறது. அவரது பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். எப்படிபட்ட முக பாவனையையும் தன்னால் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் கங்கனாவை விட லஷ்மி ராய் அழகாக இருக்கிறார். கிராமத்து காட்சி அமைப்புகள் காதலை மையமாகக் கொண்டிருக்கிறது. முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகள் அசத்தல். "உன் அப்பன் உன்ன பொண்ணு பார்க்க அனுப்பி வச்ச மாப்பிள்ளை இப்பதான் வந்து சேர்ந்திருக்கான்" என ஜெயம் ரவியை பார்த்து இரு கிழவிகள் அடிக்கும் லூட்டி இரசிக்கும்படி உள்ளது.

கங்கனாவின் நடிப்பு ஒவ்வாமலே இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி ஓடி ஆடி திரியும் பெண் மைதா மாவை போல் வெளிச்சமான கலரில் இருக்கிறார். கிராமத்து பெண்கள் இப்படி சுட்டித் தனம் செய்து திரிவார்களா எனச் சிந்திக்க வைக்கிறது.

தாம் தூம் திரை பாடல்கள் குசேலனை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல். இப்பாடல் இரட்சகன் திரையில் வரும் கனவா இல்லை காற்றா எனும் பாடலை நினைவு கூரும் வகையில் உள்ளது. 'உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி முந்தானை படியேறவா' எனும் வரி 'டச்'.


இப்படத்தில் எனக்குப் புரியாத சில விடயங்கள்:

1)
ஒரு மாடல் எதற்காக போதை பொருள் கடத்துகிறாள், அக்கும்பலோடு தொடர்பு வைத்திருக்கிறாள்?
2)
'சின்னது சின்னது' என கேலி செய்யப்படுவதற்கான காரணம் தெரியாமலேயே போவது எதனால்?
3)
சிறையில் அடைக்க கொண்டுச் செல்லப்படும் ஜெயம் ரவி இருவரால் தாக்கப்படுகிறாரே அவர்கள் யார்? பாதுகாப்பில்லாத சிறையா? போலிஸாரின் திட்டமா?
4)
ஒரு நாட்டின் தூதர் குண்டர் கும்பலோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் நிலை எதனால் வந்தது?
5)
ஒரு ஆபத்தில் இருந்து தப்பி வரும் போது காதலின் நினைவு வந்து கைகளை தூக்கி பறப்பார்களா? (என்ன கொடுமை இது)

பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஜெயம் ரவிக்கு முக்கியப் பிரச்சனையாய் அமைவது மொழி. ரஷ்யர்கள் மொழி பற்று மிக்கவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு தமிழ் எழுத்தாளர் கையெப்பமிடும் சமயம் ரஷ்யர் ஒருவர் கேட்டாராம். உங்களுக்கு எழுத்து கிடையாதா ஏன் ஆங்கிலத்தில் கையெப்பமிடுகிறீர்கள் என? அவர்களின் மொழி பற்று பாராட்டுதலுக்குரியது. நம்மில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறோம்?

ஜெயம் ரவியின் எம்.குமரனுக்கு பிறகு தாம் தூம் சிறப்பாகவே இருக்கிறது. தைரியமாக பார்க்கலாம்.

Friday, August 29, 2008

புதைந்த நினைவுகள் (2)

பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் அதிகமாகத் தமிழ் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்வி முறையின் மாற்றம் எனச் சொல்வதை விட நான் தான் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையென சொன்னால் மிகவும் தகும்.

ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் சமயம் என் சனி ஞாயிறுகளை அதிகமாக வாசிப்பிற்கே செலவழிப்பேன். அப்படி படித்த புத்தகங்களில் பல என்னுள் இன்னமும் நீங்காமல் இருக்கின்றன. ஆனால் இப்போது அப்புத்தகங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. விசாரித்துப் பார்த்ததில் பலருக்கும் அப்புத்தகங்களை பற்றிய தகவல்கள் தெரியாமலே இருக்கிறது.

இப்போதெல்லாம் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதை தவிர்க்கிறேன். முடிந்த மட்டும் அவை என் சேகரிப்பில் இருப்பதே நலம் என நினைக்கிறேன். புத்தகங்களை இரவல் கொடுப்பதையும் முடிந்த அளவு தவிர்க்கிறேன். போன புத்தகங்கள் பல திரும்பாமலே தங்கிவிடுவது தான் இதற்குக் காரணம். அதனால் தான் நல்ல சேகரிப்புகளை இரவல் கொடுக்கவே மனம் வரவில்லை. நன்கு அறிந்த நண்பர்கள் ஓரிரண்டு பேர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

மலரே குறிஞ்சி மலரே

இது புத்தகத்தின் தலைப்பு இல்லை. எனக்கு 11/12 வாயதாக இருந்த சமயம் நயனம் என்ற வார இதழில் வந்த தொடர்கதையின் தலைப்பு. பத்திரிக்கைகளில் வரும் தொடர்களை படிக்க அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இத்தொடரை முதல் முறை படித்த போதே அதன் தாக்கம் என்னுல் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தோட்டத்தில் பிறந்து நன்கு படித்து வாழ்வில் முன்னேறி வரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலிலும் அதன் பின்னணிகளிலும் கதை நகர்கிறது. அவன் காதலிப்பது இரப்பர் பால் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒரு சீன முதலாளியின் மகளை.

பல எதிர்ப்புகளுக்குப் பிறகு முடிவில் காத்திருப்பது என்னவோ பெரும் சோகமே. அவர்கள் ஓடிப்போக நினைக்கும் சமயம் மெய் லின் எனும் அவன் காதலியின் வீட்டில் தீ பிடித்து அவள் இறந்துப் போகிறாள். பல வருடங்கள் கழிந்து அத்தோட்டத்திற்கு வருகை தரும் அந்த இளைஞனின் (கிழவன்) மனத் திரையில் பழைய சோகங்கள் படர்வதாக கதை முடியும்.

இக்கதாசிரியரின் பெயர் தியாகராஜன் என நினைக்கிறேன். வெளி தோற்றத்தை வைத்து மனிதனை எடை போடாதிருத்தலை பற்றி பல இடங்களில் மிகவும் அழகாகச் சொல்லி இருப்பார். இக்கதை நாவலாக வந்ததா என தெரியவில்லை. அப்படி இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.

கண்ணீர் சொல்லும் கதை

சஞ்சிக் கூலிகளாக மலாயா வந்தவர்களில் ஒருவரின் சுயசரிதமாக இந்நாவல் அமைந்திருக்கும். தோட்ட மக்கள் பட்ட கஷ்டங்கள். அவர்களுக்குள் அமைதியாக உருவாகிய அமைப்புகள், போராட்டம் எனக் கதை நகரும். கதையின் நாயகன் தாய் தந்தையின்றி வாழும் இளைஞன். அவன் சாதாரண தோட்டத் தொழிலாளி.

கால மாற்றத்தில் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு எதிர்பாரா விதமாக விபத்திற்குள்ளாகிறான். இறுதியில் பிச்சை எடுக்கும் நிலையில் தெருவுக்கு வந்த தமிழனுக்கு நம் தமிழினம் என்ன செய்கிறது எனக் கதை முடியும். இந்நாவலை எழுதியவர் இரா.ராஜேந்திரன் என ஞாபகம். ஆனால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.

ஊனம் ஒரு தடையல்ல

விசக் காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவன் ஒருவன் கால்கள் ஊனமாகிறான். சிறு வயதில் தந்தையைப் பறி கொடுத்த அவனுக்குத் தாய் மட்டுமே துணை. ஊனமாக இருக்கும் அந்த ஏழை மாணவனை சில மாணவர்கள் வெறுக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அதை பொருட்டாக கொள்ளாமல் அவன் படித்து சாதனை புரிவது கதையின் சுருக்கம்.

கண்ணாடி மலை

பள்ளி விடுமுறையில் சுற்றுலா போகும் மணவர்களை சுற்றி கதை நடக்கும். இதை படித்த போது இம்மலை உண்மையாகவே பினாங்கில் இருக்கும் என நினைத்தேன். அப்பாவிடம் அழைத்துப் போகவும் சொல்லி இருக்கிறேன். பின்னாட்களில் தான் அது புனைவு என்பதை உணர்ந்தேன்.

மிஸ்திரி பெத்தா ராசிய (MISTERI PETA RAHSIA)

இது ஒரு மலாய் நாவல். அதன் அர்த்தம் ‘இரகசிய வரைபடத்தின் மர்மங்கள்' எனப் பொருள்படும். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம் குன்றாத மர்மக் கதை. நாயகனுக்கு ஒரு கெடுதலும் நடந்துவிடக் கூடாதே என நம் மனதுல் ஒரு உந்துதல் இருந்துக் கொண்டே இருக்கும். அதுவே கடைசி வரை கதையை நாம் கருத்தூன்றி படிக்கவும் துணை புரிகிறது.

இவற்றை தவிர்த்து மஞ்சள் வீடு, ஏணிப் படிகள் என இன்னும் பல பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றையும் பட்டியலிட இப்பதிவு போதாது. இங்கு சொல்லி இருப்பவை நான் மிக இரசித்தவை. இப்புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

Wednesday, August 27, 2008

காமத்தை வெல்வது எப்படி?


சமீபத்தில் படித்த வல்லினம் மாதிகையில் ஒரு துணுக்குத் தோரணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதை எழுதிய ம.நவினுக்கு வாழ்த்துக்கள்.


காமம் வெல்வது பற்றி

காதலி சொல்லிக் கொண்டிருந்தாள்


முதலில் தன் முகம் மறக்கச் சொன்னாள்

அதில் துளைக்கள் அதிகமிருப்பதாகவும்

அவற்றில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்


உதடு பற்றி கேட்டேன்

சுரக்கும் எச்சில் பற்றியும்

கிருமிகள் பற்றியும் நினைவுபடுத்தினாள்


என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக

மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்

அத்தனையும் ஊளை சதையென்றாள்


என்னைத் தொடரவிடாமல்

தனது மூத்திரம் பற்றியும்

அதன் துர்வாடை ஒரு பிணத்திற்குச் சமமானது என்றாள்


எனது பார்வையில் நம்பிக்கை இழந்தவள்

பிரத்தியோக திரவம் ஒன்று தடவி

தனது தோலை சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில் தன்னை எரித்து சாம்பலாக்கினாள்


நான் பத்திரமாக விழுந்து கிடந்த

அவள் காமத்தை கையில் ஏந்திச்சென்றேன்.

Friday, August 22, 2008

சோறு தின்னே சாவுங்கடா!

காலை வேளையில் பணக்காரனைப் போலவும், மதியம் ஏழையை போலவும், இரவு பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பார்கள். இன்றய அவசர உலகினில் நமது உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டன எனக் கூறினால் அது மிகை இல்லை.

காலையில் வேலைக்குத் தாமதமாக எழுபவன் காலைப் பசியாறலைத் தவறவிடுகிறான். மதியம் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறான். மதியம் தேனீரைப் பருகி இரண்டொரு பலகாரங்களைத் தினித்துக் கொள்கிறான். இரவில் மட்டுமே உணவை மனதார ருசி பார்க்கும் தருணம் கிடைக்கிறது. இதன் காரணமாக இரவு வேளைகளில் அளவிற்கு அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போகிறான்.

உணவு உட்கொண்டப் பிறகு உறக்கம் கொள்வது மிகவும் தகாத பழக்கம் என்பார்கள். உணவு செரிமானம் ஆகாது. வயிற்றில் இருந்தபடி பாழ்பட்டுப் போகும். சிலர் காலையில் எழுந்தவுடன் அவர்களின் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு இது தான் காரணம். செரிமானம் ஆகாத உணவினால் மலச்சிக்கலும் உண்டாகிறது.


சீனர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. மாலை ஆறு அல்லது ஆறரை மணி வாக்கில் உணவை உட்கொள்வார்கள். பிறகு பிள்ளைகளை விளையாட விடுவார்கள். பெரியவர்கள் நடை போடுவார்கள். இது உணவு செரிமானத்திற்குச் சிறந்த வழி. இரவு பசியெடுத்தால் கனமில்லா உணவு வகைகளை கொஞ்சமாய் சாப்பிடுவார்கள். இது அவர்களின் காலாச்சாரத்தில் உண்டு. இன்றைய நாட்களில் சீனர்களும் இவ்வுணவு முறையைப் பின்பற்றுகிறார்களா என்பதும் கேள்வியே.

மனித வாழ்க்கைக்குக் காலை உணவு அத்தியாவசிமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவை உட்கொண்ட பிறகே அன்றய நாட்களுக்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட வழி செய்கிறது. நேரம் தவறி எடுத்துக் கொள்ளப்படும் காலை உணவு உடற் சோர்வையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

குழந்தைகள் சரியான உணவு முறையை பேன சிறு வயது முதல் கற்பித்துக் கொடுத்தல் நலம். பெற்றோர்களும் முறையான உணவு வழக்கத்தை பின்பற்றுவாராயின், குழந்தைகளுக்கு அப்பழக்கம் இயல்பாக அமைந்துவிடும். நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அறிவாற்றலின் வளர்ச்சிக்கும் வித்தாக அமைய வேண்டியது அவசியம். வாயோடு மணக்க குடலோடு கடுக்கவும் இருப்பின் அது சரியான உணவாகாது.



காலம் தவறாமலும், நினைத்த நேரங்களில் கண்டதை சாப்பிடாமலும், செரிவான உணவு வழக்கைத்தை அமல்படுத்துவோர் மிகவும் சொற்பமே. இதற்கு பெருமளவில் நாம் சொல்லும் பதில் தான் என்ன? கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனித வாழ்க்கையே ஆகும்.

காலை உணவு மூளைக்கு சாப்பாடு என்பது அறிவியல் அறிஞர்கள் கூற்று. உதாரணமாக ரொட்டி வகைகளில் இருக்கும் ஊட்டச்சத்து மூலையில் துரித செயல்பாட்டுக்கும் உடல் உற்சாகத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

ஒரு ஆய்வின்படி காலை பாசியாறையை சாப்பிடமல் பள்ளி வரும் மாணவர்களை விட சாப்பிட்டு வரும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குவதாகக் குறிபிட்டுள்ளார்கள். இவ்வாய்வின் மற்றுமோர் தகவலின்படி காலை உணவு அத்தியாவசியம் இல்லாதது எனும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறதாம். இது மிக வேதனையளிக்கக் கூடிய விடயமாய் அமைகிறது. ஏன் இப்படி? காலையில் உட்கொள்வதைவிட ஒரே வேலையாக மதியம் சாப்பிட்டுவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்.

பள்ளிச் செல்லும் மாணவர்களில் பெருவாரியானவர்கள் காலை பசியாறுவது இல்லை. 10 மணி வாக்கில் பள்ளியில் கொடுக்கப்படும் ஓய்வு நேரத்தில் உணவு எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித் தேர்வு செய்யும் உணவு வகைகளில் ருசி மிகுந்தவற்றை தேர்வு செய்கிறார்களே தவிர அவை ஆரோக்கியமான உணவு வகைகள் தானா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் மாணவர்களின் அறிவாற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது. பால் மற்றும் பழச்சாறு வகைகளில் காலை உணவாக உட்கொள்ளுதல் நலம். ஆனால் சிலருக்கு பால் குடித்தால் வாந்தி வரும் என்பார்கள். காலை உணவு ஒவ்வாது எனவும் சொல்வார்கள். தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் என்பதை போல் கடைசி காலம் வரை இப்படிபட்ட பழக்கங்களோடு இருப்பவர்களும் உண்டு.

அதை விடக் கொடுமையாக எந்நேரமும் சோறு மட்டுமே உணவாக கொள்ளும் ஆட்களும் உண்டு. சோறு சாப்பிட்டால் மட்டுமே இவர்களுக்கு வயிறு நிறையும்.

Food Facts Asia நடத்திய ஆய்வின்படி, காலம் தவறி காலை உணவை எடுப்பவர்களின் உடல் எடை அதிகரிப்பதாகவும். நேரப்படிக் காலை உணவைக் கொள்பவர்களின் எடை சீரான முறையில் இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனையடுத்து காலை உணவை தவிர்த்து நேரடியாக மதிய உணவை உட்கொள்ளும் பிறிவினர் உடல் எடையால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். காலை உணவை தவிர்த்தவர்கள் மதிய உணவு வேலைக்குக் காத்திருப்பார்கள். பசியும் அதிகபடியாக இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் எழும். அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடையும் கண்மண் தெரியாமல் எகிறிவிடுகிறது. அதை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அவஸ்தைக்குள்ளாகிறது.

உணவு மனிதனின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று. மனித வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது. சரியான உணவு முறையைத் தேர்ந்தெடுத்து சிறப்பான முறையில் வாழ்வது நம் கையில்.

Monday, August 18, 2008

நெஞ்சோடு சில ராகங்கள்


அவளைச் சந்தித்த
மணித் துளிகளோடு நெஞ்சம்
வட்டம் போட்டுத் திரிகிறது.
அவளோடு இருந்திடவே எண்ணம்
திட்டம் போட்டுத் தவிக்கிறது.

கையோடு கை- சேர்த்து
விரலோடு விரல் கோர்த்து
புரியாத கோலம் பல பல
வரைந்த பொழுதுகள்.

கோலத்திலும் கவிதை
பிறக்கும் விந்தை கண்டேன்.
பார்வையிலும் தேன் துளி
சிந்த உன்னுள் விழுந்தேன்.

காதலெனும் மதத்தை
ஏற்ற பின்
இனமெனும் வேறுபாடுகள்
இல்லையடி பெண்ணே.

காந்த உதட்டில்
கபடி ஆடத் தடைகள் போடுகிறாய்.
காதல் கடிதம் போதவில்லை என்று
காதோடு முறையீடு செய்கிறாய்.

தள்ளி நிற்கும் என்னை
கிள்ளிச் சீண்டிப் பார்ப்பதேன்?
பக்கம் வந்த என்னை
தர்க்கம் செய்து தடுப்பதேன்?

உன் கரம் வருடி
உச்சி முகர்தலும் இன்பம்
உன் கோபம் கண்டு
உனைக் கொஞ்சுதலும் இன்பம்

காதலின் கொடுமையான இன்பம் நீ
காதலின் இன்பமான கொடுமையும் நீ!

Saturday, August 09, 2008

ஒரு கப்பலின் கதை- டாக்டர் ஜெயபாரதி


சமீபத்தில் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஐயாவால் எழுதப்பட்ட ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தகவல் நிறைந்த இக்கட்டுரையை மிக சுவாரசியமாக கொடுத்திருப்பது ஜெயபாரதி ஐயாவின் தனித் தன்மை.

நீங்கள் இங்கே படித்து முடிக்கும் ஒவ்வொரு சொற்களிலும் சரித்திரம் படிந்து வருவதை உங்களால் உணர முடிகிறதா? இறந்த காலம் முக்கிச் செய்தியை பரப்புமாயின் அது சரித்திரத்தைப் படைக்கிறது. நடந்து முடிந்த செய்தியை நன்முறையில் சமர்ப்பித்தலும் மிக முக்கியமல்லவா. இக்கட்டுரையின் வழி புதிய சந்த்தியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்தகவலை சிறப்பான முறையில் ஜெயபாரதி ஐயா சொல்லியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

பலதுறைகளில் வல்லுனராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஓர் ஓய்வு பெற்ற மருத்துவ இயக்குனர். தற்சமயம் சுங்கைபட்டாணியில் மனைவியுடன் வசித்து வருகிறார். பல பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதி புகழ்பெற்றவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். ஆறாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் இவர் வாசித்த குமரிக்கண்டம், சிரிப்பு ஆகிய கட்டுரைகள் இவருக்கு தமிழ்கத்தில் புகழ் வாங்கித் தந்தன.

தற்சமயம் இவரது இருபத்திரண்டு நூல்கள் தயாரிப்பில் உள்ளன. அவற்றில் ‘இராஜேந்திர சோழரின் கடார படையெடுப்பு’, ‘புராணங்களில் விண்வெளி நாகரிகங்கள்’ ‘சித்தர்கள் ஒரு பார்வை’ போன்றவை மிக முக்கியமானவய்.

அவரது ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையில் ஆரம்ப காலத்தில் மேடான் –பினாங்கு மற்றும் சென்னைக்கு பயண சேவையை வழங்கி வந்த எஸ்.எஸ்.ரஜூலா எனும் கப்பலின் கதையை ஆராய்ந்துக் கொடுத்திருக்கிறார்.

அக்காலத்தில் இரு கரைகளுக்கும் இடையே மக்களை சுமந்து சென்று வந்த ரஜூலா எனும் கப்பல் இறுதியாக உடைபட்டது எனும் வரியை படிக்கும் போது நாமக்கு அக்கப்பலை பார்க்கும் வாய்பில்லாமல் போனதை எண்ணி மனம் ஏங்குகிறது.

அக்காலகட்டத்தில் ரஜூலா மிகப் பெரிய கப்பலாக கருதப்பட்டது. அதன் வேகம், தன்மை, என அனைத்து சித்தரிப்புகளையும் ஜெயபாரதி ஐயா கொடுத்திருப்பது நாமும் கப்பலின் ஒரு பயணியெனவும், அக்கப்பலை பார்க்கும் மக்களில் ஒருவனாகவும் மாறிவிடுகிறோம்.

யார் கண்டார்கள், என் முன்னோர்கள் கூட அந்த ரஜூல கப்பலில் மலாயாவிற்கு வந்திருக்கலாம் இல்லையா? திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல் அக்கப்பலில் வந்தவர்கள் வசதிபட பொருள் தேடிக் கொண்டு திரும்பி இருக்கிறார்கள். தலையில் முக்காடோடு திரும்பியவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் உழைப்பு அல்லவா? ஏற்றி வந்த கப்பல் என்ன செய்யயும்.

ரஜூலாவை ‘ரிப்பேரே ஆகாத கப்பல்’ என குறிப்பிட்டிருக்கிறார். இது அக்காலத்தில் மக்கள் வேலை மீது காட்டும் அக்கரையை எடுத்துரைக்கிறது. அது மட்டுமன்றி கடல் போக்குவரத்துக்களில் ஏற்பட்ட முக்கிய விடயங்களையும் ஆசிரியர் விளங்கக் கூறி இருக்கிறார். அவர் வைத்திருக்கும் நினைவாற்றலுக்கும், சேகரித்து வைத்திருந்திருக்கும் தகவலுக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

51 ஆண்டுகள் பயண சேவையை வழங்கிய ரஜூலவை பாழைடைந்தவுடன் உடைத்துவிடுகிறார்கள். அதன் பின் எம்.வி.சிதம்பரம் மற்றும் பூங்காராயா என்னும் கப்பல்கள் சேவையை வழங்கி இருக்கின்றன. கால ஓட்டத்தில் உருவான விமான சேவையால் கடல் பயணம் வெகுவாக பாதிப்படைந்தது.
ரஜூலாவின் மகத்தான சகாப்தம் மறைந்துவிட்டது. எத்தனையோ பேர்களுடன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அவர்களின் வெற்றிகளையும் சுமந்து சென்ற கப்பலல்லவா என ஆசிரியர் முடித்திருப்பது நெஞ்சை வருடும் வரியாக இருக்கிறது.

ஜெயபாரதி ஐயாவுடன் அதன் பின் வந்த பூங்கா ராஜா கப்பலின் தகவல்களை கொஞ்சம் விசாரித்துப் பார்த்தேன். அக்கப்பலை பற்றிய சில காது வழி தகவல்கள் மட்டுமே சிக்கியுள்ளன. மேலும் தகவல் கிடைக்குமாயிம் பதிவிடுகிறேன்.

கப்பலின் கதையை இணையத்திலும் படித்து மகிழலாம்.

ஒரு கப்பலின் கதை நான்கு பாகங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சன்னலின் வலது பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் NEXT சுட்டியை அழுத்தி அடுத்த பகுதியை படிக்க முடியும்.

நன்றி: டாக்டர் எஸ்.ஜெயபாரதி