Showing posts with label Terengganu. Show all posts
Showing posts with label Terengganu. Show all posts

Monday, June 17, 2013

'பிக்கினி' அழகிகளின் சூரிய குளியல்

விரைவு படகில் இருந்து எடுக்கப்பட்ட படம்
சொகுசு கப்பல்களில் பயணம் செய்வதை நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை. அதில் பயணம் செய்ய சில ஆயிரம் ரிங்கிட்டுகளையாவது செலவு செய்ய வேண்டும். அது போக அப்படியான சொகுசு பயணங்களில் நாட்டமும் குறைவாகவே இருந்தது. கப்பலில் ஏறி சுற்றி முற்றி கடலை தானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 5/6 நாட்கள் செலவளித்து கடலை பார்த்து மறை கழண்டு போக வேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.
 
இப்படியாக இருந்த எண்ணத்தில் எனது பணியானது பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பணி புரிந்த கிழக்கு கரை மாநிலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையினும் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக சுற்றுலா துறைக்கு விடுப்பு கொடுத்துவிடுவார்கள். இம்மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் . மேலும் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.


நீச்சல் குளத்தை ஒட்டிய ‘பார்’ வசதி
கற்றின் அழுத்தம் கூடுவதால் கடல் அலைகள் உயர்ந்து இருக்கும். அக்டோபரின் இறுதிகளில் இதன் தாக்கத்தை காண முடியும். அப்படி ஒரு முறை பயணம் செய்து கடல் மயக்கத்திற்குட்பட்டேன். 'புவி ஈர்ப்பின்’ நிலையின்மையால் இப்படி ஏற்படுவதாக அறிகிறேன். அதிகமான அலைகளின் தாக்குதலுகுற்படும் படகில் இருப்பவர்களுக்கு இப்படி ஏற்படும். மிக மோசமாக கடல் மயக்கத்திற்குட்படுவோர் வாந்தி, பேதிக்கு ஆளாகலாம். அடிக்கடி பயணம் செய்வோர் கடல் மயக்கத்தில் இருந்து தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியும். ‘NOVOMIN' எனும் மாத்திரை இப்படியான பயண மயக்கங்களை தடுக்க உதவும்.

நீச்சல் குளத்தின் ஒரு பகுதி
மார்ச் முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவார்கள். திரங்கானுவில் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இரு முக்கியமன தீவுகள் ‘ரெடாங்’ மற்றும் ‘ஹெந்தியான்’ ஆகும். மலேசியாவில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இரு தீவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

‘ரெடாங்’ தீவினில் விடுமுறையை கழிக்க செலவு சற்று அதிகமாகும். ‘ஹெந்தியன்’ தீவில் இதை காட்டினும் குறைந்த விலையில் விடுமுறையை கழிக்கலாம். இங்கு வருகை புரியும் பயணிகளில் அதிகமானோர் வெளிநாட்டினர். பள்ளி விடுமுறையற்ற காலங்களில் உள்நாட்டு பயணிகளை காட்டினும் வெளிநாட்டு பயணிகளே அதிகம் இருப்பார்கள்.

ரெமி மார்ட்டின்
‘ரெடாங்’ தீவுக்கு சிங்கபூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தரை வழி பயணம் மேற்கொள்வோர் ’குவாலா திரங்கனு’ அல்லது ‘மாராங்’ போன்ற படகு துரைமுகத்தை அடைந்து விரைவு படகு ஏறி இந்த தீவுகளுக்குச் செல்ல முடியும். அப்படி பயணிப்பது நிச்சயமாக அதிகமான நேரத்தை எடுக்கும். கரையிலிருந்து இத்தீவை அடைய 2 மணி நேரங்கள் ஆகும். பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து தரை வழி பயணம் செய்து வருவோர் தனது அரை நாள் அல்லது ஒரு நாளை அத்தீவை சென்றடைய பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சுழழுந்து இறங்குமிடம்
STAR CRUISE சொகுசு கப்பல் வாரத்திற்கு இரு முறை தென் சீன கடல் வழி பாதையை பயன்படுத்தும். சிங்கப்பூரில் இருந்து புரப்படும் இக்கப்பல் ‘ரெடாங்’ தீவில் ஒரு நாள் சுற்றுப் பயணிகளுக்காக நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து வியட்நாமுக்கு பயணித்துவிடும். ரெடாங் தீவினில் நிறுத்தப்படும் சமயம் அக்கப்பலை பரிசோதனை செய்ய சில அதிகாரிகளுடன் செல்வேன்.


13 மாடிகள் கொண்ட இக்கப்பலில் கிடைக்காதது எதுவும் இல்லை என்ற இரகத்தில் தான் அமைத்திருக்கிறார்கள். மலேசிய கடல் எல்லையில் இமிகிரேஷன் சோதனைகள் முடிந்தவுடன் அதன் பயணிகள் ரெடாங் தீவின் கடற்கரைகளுக்கு விரைவு படகேறி செல்வார்கள். இக்கப்பலில் இருக்கும் போது ஒரு 5 நட்சத்திர விடுதியில் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள். அதன் சன்னலின் வழி எட்டி பார்த்தால் மட்டுமே நீங்கள் கடலில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதன் 13-வது மாடியில் ஒரு நீச்சல் குளமும் அதனை ஒட்டிய ‘பார்’ வசதியும் இருக்கும். அதே போல் அதன் இடது பக்கம் கூடை பந்து மைதானமும், சுழழுந்து இறங்கும் இடமும், சிறிய ’கோல்ப்’ மைதானமும் இருக்கும்.


மீன்களுக்கு தீனியிடும் சிறுவன்
இந்த கப்பலின் முக்கிய அம்சமாக சூதாட்டமும் உள்ளது. அது போக அரை நிர்வான நடனங்களும், கேலிக்கை விளையாட்டுகளும் இன்னும் பிற மேட்டுக்குடி வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. பணி நிமித்தம் வரும் அதிகாரிகளுக்கு இலவச தங்கும் அறையும், உணவும் கொடுக்கப்படும். கப்பலில் இருக்கும் வணிக பொருட்களை வாங்கினால் சிறப்பு கழிவும் உண்டு. இதில் என்னை கவர்ந்தது வாசனை திரவியங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய வாசனை திரவியங்கள் மிகையாகவே சேர்ந்துவிட்டது.


விமான பயணம் செய்து இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் முதலிடம் வகிப்பது இந்தாலி மற்றும் இங்கிலாந்துகாரர்கள். வெகுவான எண்ணிக்கையில் ஜப்பானியர்களும் வருகை புரிகின்றனர். பெர்ஜாயா விடுதி வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய புகழிடமாக உள்ளது. இதன் கடற்கரையும் விடுதியினால் நிர்வகிக்கப்படுகிறது. தனியாரினால் நிர்வகிக்கப்படும் கடற்கரை நெடுகினும் வெளிநாட்டு பயணிகள் குப்புர படுத்து சூரிய குளியல் எடுக்கிறார்கள்.


எழில் மிகு கடற்கரை
ரெடாங் தீவின் கடற்கரை மிக மிக எழிலாக அமைந்துள்ளது. மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்திருக்க கடல் நீர் கிரிஸ்டல் கற்களை போல் மின்னுகிறது. உலர்ந்த வெள்ளை மணல் இள நீல வண்ண கடல் நீருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கடல் குளியலை தவிர்த்து, ஸ்னுர்கலிங், டைவிங் நடவடிக்கைகள் இங்கு பிரபலம். நீச்சல் தெரிந்தவர்கள் மீன்களுக்கு தீனி போட்டு அவற்றோடு நீந்தி இரசிக்கலாம். டைவிங் தெரிந்தவர்களுக்கு பல வண்ண கோரல்களை ஆழ்கடலில் மூழ்கி இரசிக்க வாய்ப்பு கிட்டும்.
படகு துரை

கப்பலின் மேல் மாடி நீச்சல் குளம்












இரவு வேளைகளில் ‘லாங் பீச்’ எனும் பகுதி குதுகல மனிதர்களின் கூச்சலில் கலைகட்டும். ஆடல் பாடல் என கடற்கரையோர மதுபான கடைகளில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். இந்த மாதிரியான கடல் நடவடிக்கைகள் 8 மாதங்கள் மட்டுமே ரெடாங் தீவினில் நடைபெறுகிறது. எதிர் வரும் நான்கு மாதங்கள் காற்றும் மழையுமாக இத்தீவு தன்னை தானே சுத்தம் செய்துகொள்கிறது. 

பயணங்கள் தொடரும்... 

Monday, June 03, 2013

கடலின் மொழி - மரணம், கடத்தல், கொலைகள்

சோலை மலரொளியோ உனது
சுந்தர புன்னகைதான்
நீலக் கடல் அலையோ
உந்தன் நெஞ்சின் அலைகளடி - பாரதி

புன்னகை மனிதர்களிடம் இருக்கும் ஓர் அழகிய அம்சம். அது அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு வருகிறது.  

இந்த பகுதியில் நான் எழுத நினைப்பது திரங்கானுவின் (Terengganu) கடல் மற்றும் தீவுகள் சார்ந்த செய்திகள்.  இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாக படிக்கலாம். அதை தவிர்த்து படிப்பவர்களுக்கும் சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். 

திரங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிப்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காரணம் இதன் கரையோர பகுதிகள் மிக ஆழமானவை. அதை மீறி சில விபத்துகள் நடந்து பார்த்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் பெரும்பாலானோர் மலாய்காரர்கள். கொஞ்சம் சீனர்கள். மிகக் கொஞ்சமான இந்தியர்கள். அவர்களில் 95% வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தம் அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள். இதை தவிர்த்து மாணவர்கள், நல்லொழுக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவாலிகள், தனியார் நிறுவன ஊழியர்களையும் காண முடிகிறது. 

குடியுரிமை இலாக்காவின் குவார்டர்ஸ் எனது வசிப்பிடமாக இருந்தது. கடற்கரைக்கு பக்கத்தில் அமைந்த அரசு குடியிப்பு அது. நான் பணி புரிந்த அலுவலகம் குடியிருப்பிலிருந்து 5 நிமிட தூரத்தில் இருந்தது. 

நான் அங்கு தங்கிய காலகட்டத்தில் உணவு பிரச்சனைகள் இருந்ததில்லை. அங்கிருந்த உணவு வழக்கத்திற்கு என்னை பழக்கிக் கொண்டேன் என்றே கருதுகிறேன். இங்கு வசிக்கும் பெரும்பான்மையினர் முடிந்த அளவிற்கு எல்லா வேளைகளிலும் சோறு சாப்பிடுகிறார்கள். அதாவது காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை சோறு மட்டுமே. விதவிதமான டிசைன்களில் அரிசி சார்ந்த சமையல்கள் இங்கு கிடைக்கின்றன. உணவு சார்ந்த செய்திகளை வேறொரு தனிப் பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

’லோக்கல் பூட்’ சலித்துப் போன நன்நாள் ஒன்றில் இந்திய உணவுக்கு நாக்கு ஏங்கியது. எனது தேடுதல் வேட்டையில் அங்கிருந்த இந்திய மற்றும் மாமாக் (இந்து முஸ்லிம்) உணவகங்களை அறிந்துக் கொண்டேன். Tanjung KTT எனும் உணவகத்தை சிலாங்கூர் (Selangor) மாநிலத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் வழிநடத்தி வந்தனர். திரங்கானுவில் நான் கண்ட முதல் தமிழ்ப் பெயர் பலகை இந்த கடையில் மட்டுமே. சில நாட்களில் நான் அங்கு ரெகுலர் கஸ்டமராகிவிட்டேன். பல நண்பர்கள் அங்கு நட்பு வட்டத்தில் பெருகினர்.   

நன்நடத்தை கண்காணிப்பில் வந்திருந்த இளைஞன் ஒருவனை இந்த கடையில் சந்தித்தேன். இந்த சம்பவம் நடந்தது 2010-ஆம் ஆண்டு. ஒரு தமிழ் குடும்பம் மூட்டை முடுச்சுகளோடு வந்திருந்தார்கள். அவர்களுக்கு திரங்கானுவில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. தேடி பிடித்து KTT உணவகத்திற்கு வந்திருந்தனர். 

அப்போது நானும் என் நண்பரும் உணவருந்திக் கொண்டிருந்தோம். பொதுவாக இப்படி மூட்டை முடிச்சுடன் வருகிறவர்கள் பிள்ளைகளை ’யூனிவர்சிட்டியில்’ அல்லது ’போலிடெக்னிக்கில்’ சேர்க்க வந்தவர்களாக இருப்பது வழக்கம். வந்திருந்தவர்கள் தன் பையன் நன்நடத்தை காரணமாக இங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் திரங்கானுவில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளதாக சொன்னார்கள். அந்த பையன் குடும்பத்தில் கடைசி மகன். எல்லோரும் அவன் மீது மிகுந்த பாசத்தோடு இருந்ததையும் காண முடிந்தது. 

அவன் இருபது வயது இளைஞன். அவனது ஊர் கோவில் திருவிழாவில் சண்டை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு நன்நடத்தை கண்காணிப்பிற்கு திரங்கானு அனுப்பட்டிருக்கிறான். அவனுக்கு தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக உணவகம் வைத்திருந்த அந்த சகோதரர் ஏற்பாடு செய்து கொடுத்தார். “ஐயா புள்ளைய உங்களை நம்பி விட்டுட்டு போறோம். பார்த்துக்குங்க” என்றார் அவன் அம்மா. “உங்க புள்ள கையையும், நாக்கும் சும்மா இருந்தா இங்க எந்த பிரச்சனையும் வராது”, என்றார் என் நண்பர்.

நன்நடத்தையில் இருப்பவர் குறிப்பிட்ட ஊரை தாண்டி செல்ல கூடாது. இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடது. குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்தில் தன் இருப்பை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அந்த இளைஞன் ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டு அங்கு தங்கி வந்தான். பார்க்கும் சமயங்களில் மிக மரியாதையோடு பேசுவான். நன்நடத்தை கண்காணிப்பில் இருக்கும் வேறு சில ஆட்களோடு சில முறை அவனை வெளியில் கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் திடீரென அவனது மரண செய்தி கிட்டியது. சம்பவ இடத்திற்கு வேறு சில நண்பர்களோடு சென்றிருந்தேன். மொத்தம் 5 பேர் கடலில் மூழ்கி இறந்திருந்தார்கள். அந்த கடல் பகுதி அவனக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஒவ்வொரு பிணமான தேடி எடுக்கப்பட்டது. அந்த இளைஞனின் பிணம் மறு நாள் தான் கிடைத்தது. பாறைகள் நிறைந்த அக்கடல் பகுதியில் அவன் உடல் முட்டி மோதி மோசமாக சதை கிழிந்து இரத்தக் கசிவுடன் காணப்பட்டது.


அங்கிருந்த மலாய்க்கார குடியானவர் ஒருவர் மரணச் சம்பவங்கள் அங்கு வருடாவருடம் நிகழும் ஒன்றென கூறினார். இப்படி ஏற்படும் மரணங்கள் அமானுஷ்ய சங்கதிகளோடு சேர்த்து பேசப்படுகிறது. கடலில் இருந்து ஏதோ ஒரு இசை கருவி மீட்டும் சத்தம் கேட்ட ஓரிரு நாட்களில் இப்படி துர்மரணங்கள் நடப்பதாக அவர் சொன்னார். அந்த இளைஞனின் மரணத்திற்கு இரண்டு வாரத்தில் அந்த இடத்தில் மீண்டும் மூன்று சுற்று பயணிகள் மரணித்திருந்ததை பத்திரிக்கையில் படித்தேன். குளிக்க தடை செய்த இடத்தில் குளிப்பதே இந்த மரணங்களுக்கு காரணம். பயணிகள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். பேய் பிசாசுகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

முன் சொன்னது போல் இந்த மாநிலத்தின் பிரதான சாலைக்கும் கடல் பரப்புக்குமான தூரம் மிக குறைவு. மழைக் காலங்களில் கடல் வெள்ளம் சாலை வரை முட்டிச் செல்லும். காற்றழுத்தம் மிகுந்த மழை நாட்களில் இப்படி நடப்பதாக கேள்விபட்டேன். பொதுவாக திரங்கானுவின் சாலைகள் துடைத்து வைத்ததை போல் சுத்தமாக இருக்கும். வெள்ளம் ஏற்பட்ட பின் சாலைகள் தன் தலையில் குப்பையை கொட்டிக் கொண்டதை போல் காட்சியளிக்கும். கிழக்குகரை நெடுஞ்சாலை வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. அனேகமாக 2013 இறுதிக்குள் அந்தச் சாலைகள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என நம்பப்படுகிறது.  

ஒரு சமயம் ஏராலமான இரப்பர் கட்டிகள் ஆலைகளால் கரைக்கு ஒதுக்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் அவற்றை சேகரித்து விற்பனைக்கு எடுத்துச் சென்றனர். எப்படி இரப்பர் கட்டிகள் அங்கு வந்ததென அறிவார் இல்லை. தென் சீன கடல்பகுதியில் சென்ற கப்பலில் இருந்து விழுந்திருக்கலாம் அல்லது யாராவது கொட்டிவிட்டிருக்கலாம். இரப்பர் கட்டிகளில் ரிஷி மூலம் யாருக்கும் தெரியாமலே போனது.

தென் சீன கடல் பகுதிகளில் மீன் பிடி தொழில் பிரசித்தி பெற்றது. மலேசியர்களை தவிர்த்து, தாய்லாந்து, பிலிப்பின், கம்போடியா மற்றும் வியட்நாம் நாட்டுக்காரர்களும் இக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடல் எல்லைகளுக்குட்பட்டே அந்தந்த நாட்டவர்கள் மீன் பிடிக்க முடியும். இருப்பினும் எல்லை மீறல்கள் நடக்கவே செய்கிறது.


முகவரி இல்லாத பிணங்களும் இங்கு கரை ஒதுங்குவது உண்டு. கடளுக்குள் நடக்கும் கைகலப்பில் சில கொலைகளும் நேர்கின்றன. கொலை செய்தவனும் கொலை செய்யப்பட்டவனும் யார் என்றே தெரியாமலே போவதும் உண்டு. வெளிநாட்டவர் மரணித்திருப்பார் எனில் கண்டு பிடிப்பதில் பல சிக்கல்கள் உண்டு. எந்த நாட்டவர் என அடையாளத்தை தேடுவதற்கே நெடு நாட்களாகும்.

வழமை போல் அலுவலக வேலையில் இருந்த ஒரு நாள் இரு இந்தோசீன இளைஞர்கள் குடியுரிமை இலாக்காவின் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இரண்டு நாட்களாக போகும் இடம்  தெரியாமல் கடற்கரை ஓரம் படுத்து உரங்கி இருக்கிறார்கள் அவர்கள். விசாரனையின் போது இருவரும் வியட்நாமியர்கள் என தெரிய வந்தது. அந்த பகுதியில் வசித்த மக்கள் புகார் கொடுத்து அவர்கள் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஒருவனுக்கு 15 வயது மற்றொருவனுக்கு 19 வயது. பல ஆண்டுகளாக கரையை பார்க்காமல் கப்பலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்திருக்கின்றார்கள். அவர்களது முதலாளி ஒரு தாய்லாந்துகாரன். (பொரும்பாலன தாய்லாந்து மீனவர்கள் வியட்நாமியர்களை வேலைக்கு அமர்த்தில் கொள்வதை பின்நாட்களில் அறிந்தேன்). வருமானம் ஏதும் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள். கரை தெரிந்த ஒரு நாள் இருவரும் கடலில் குதித்து கரைக்கு தப்பி இருக்கிறார்கள்.

கடல் சார்ந்த வணிகத்தில் நிகழும் மேலும் ஒரு குற்றச் செயல் டீசல் திருட்டு. அரசாங்கத்தினால் மலேசிய மீனவர்களுக்கு கொடுக்கப்படும் டீசல் விலை 1.20 ரிங்கிட். மலேசிய சந்தையின் உண்மையான விலை 1.80 ரிங்கிட். தாய்லாந்தில் 3.00 ரிங்கிட், பிலிப்பின் 2.70 ரிங்கிட் என ஏனைய நாடுகளில் டீசல் எண்ணையின் விலை மிக அதிகம். இப்படி கொடுக்கப்படும் மலிவான டீசல் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. பலமான முயற்சிகள் பல எடுக்கப்பட்டும் இந்த கடத்தல் சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளது வருத்தத்துக்குறியது. மேலும் போதை பொருள் கடத்தல்களும் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன. 

அலைகள் ஒவ்வொரு முறையும் கடலை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் எழிலை இரசிக்கும் மனிதர்களிடம் தனது துயர சம்பவங்களையும் சொல்ல முயற்சித்துக் கொண்டுள்ளது.

பயணங்கள் தொடரும்...

Thursday, May 30, 2013

ஆமை முட்டைகளும் அடையாளமற்ற திருடர்களும்

ஒரு மனிதன் அதிகமாக விரும்பும் ஒன்றே அவனது பலவீனமாக அமையும் எனும் சொல் உண்டு. விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதே.  

இந்த வலைப்பூ எனும் இணைய கிடங்கில் நாள் ஒன்றுக்கு இரு பதிவுகள் என எழுதிய காலத்தை நினைவு கூற முடிகிறது. வலைப்பதிவுகளின் போதை எதையாவது தேடி படித்து எழுதி கொண்டிருக்க வைத்தது. எனது ஆரம்ப கால பதிவுகளின் எண்ணிக்கையில் இதை நீங்கள் காணலாம். இந்த போதையே என்னை அதிகம் வாசிக்க செய்த ஒன்றாகும். விரும்பி செய்த செயல் என்றாலும் அதில் பல பொன்னான நேரத்தை இழந்தேன் பல நல்ல நண்பர்களையும் அறிந்து கொண்டேன்.

கால ஓட்டத்தில் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் வாசிப்பை கைவிடாமல் தொடந்து கொண்டிருந்தேன். இணைய அறிமுக வழியும் சுய தேடல்களிலும் பல நல்ல புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன். புத்தக சேமிப்பு இன்னும் அமலில் உள்ளது. இன்றளவும் மனநிறைவளிக்கும் செயல் என இதை கருதுகிறேன்.
அரசு அதிகாரியாக பணி நியமனம் பெற்ற பின் எனது எழுத்து வேலைகள் படு மோசமாக சரிந்து போனது. அதற்காக பதிவுலகம் கண்ணீர் வடித்ததாக சமீபத்திய சரித்திரத்தில் எழுதாமல் போனது சோக செய்தி.
அரசு பணி நான் விரும்பி ஏற்றது. பயிற்சியில் இருக்கும் போது யாருக்கு எந்த மாநிலத்தில் வேலை அமையும் என்பது கிஞ்சித்தும் தெரியாது. என்னோடு பயிற்சியில் இருந்தவர்கள் மொத்தம் 98 பேர். அதில் 93 பேர் பதவி உயர்வு பெற்று பயிற்சியில் இருப்பவர்கள். பணி அனுபவம் மட்டுமின்றி அவர்களுடனான எனது வயது வரம்பும் அதிகமாகவே இருந்தது. 

பயிற்சி முடிந்து பணி நியமன இடங்களை வாசிக்கும் நாள் வந்தது. எனக்கு இந்த மாநிலத்தை தவிர வேறு எங்கு கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நினைத்தது நடக்கவில்லை. நான் விருப்பம் கொள்ளாத அந்த மாநிலத்திலேயே எனக்கு பணி நியமிக்கப்பட்டது. அரசு சேவகனாக நான் பணி புரிந்த திரெங்கானு (Terengganu) எனும் அந்த வடகிழக்கு மாநிலம் சில காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு விருப்பம் கொண்டு மகிழ்ச்சியோடு பணி புரிந்தேன்.
நான் அங்கு வேலை செய்த காலத்தை இது வரையில் பதிவு செய்தது கிடையாது. சிலபல அறுசுவை அனுபவங்களையும் எனக்கு பயிற்றுவித்த மாநிலம் அது.
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எனக்கு மிக விருப்பமான விசயம் பயணங்கள். திரெங்கானுவில் வேலை செய்த சமயம் அதிகமான பயணங்களை மேற் கொண்டேன். குறிப்பாக ஒருசில உட்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள். இதில் அதிகமானவை வேலை நிமித்த பயணங்களே. பயணங்கள் மிகவும் ருசிகரமானவை. அவற்றின் இன்பம் அளாதியானவை. பயணங்கள் வெற்றியடையவும் வாசிப்பு அவசியமாகிறது. 

எனது பணியும் அதிக பயணங்கள் கொண்ட பணியாகவே அமைந்தது. திரெங்கானு எனும் கிழக்கு கரை மாநிலத்தில் மொத்தம் எட்டு மாவட்டங்கள் உள்ளன. இதில் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லையை கடக்க 5 மணி நேரங்கள் எடுக்கும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குடிநுழைவு குற்றச் செயல்களை கண்டறிந்து சேதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எனது முக்கிய பணிகளுல் ஒன்று. சில சமயங்களில் ஓரிரு நாட்கள் வீடு திரும்பாமலும் இருக்க நேரிட்டதுண்டு. இதன் விரிவான செய்தியை வேறொரு சமயம் சொல்கிறேன்.
திரங்கானு மிக இரம்யமான மாநிலம். தீபகற்ப மலேசியாவின் ’பெட்ரோலியம்’ உற்பத்தி இங்கு முதலிடம் வகிக்கிறது. இதன் பிரதான சாலை தென் சீன கடலை ஒட்டியபடி இருக்கும். பயண நெடுகினும் கடல் காற்றை சுவாசித்து பயணம் செய்வீர்கள். அதிகமான மேம்பாட்டு திட்டங்கள் இல்லாத இடம் என்றாலும் இங்கு விலைவாசி அதிகம். கோலாலம்பூர் (Kuala Lumpur), ஜெகூர் பாரு(Johor Bahru) போன்ற அதிவேக மேம்பாடு அடைந்துவரும் நகரங்களை காட்டினும் இங்கு விலை அதிகமாக இருக்க காரணம் பெட்ரோலியம். பெட்ரோலிய உற்பத்தி பகுதியில் பணி புரிவோரின் வருமானம் கணிசமான தொகையென அறிந்தேன். இதுவே விலை நிர்ணயத்துக்கும் அளவுகோளாகிறது. விலைவாசியின் தாக்கம் டூங்குன், கெமாமான் போன்ற பெட்ரோலிய பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் மிகுந்து காணப்படுகிறது.
திரெங்கானு கடல் ஆமைகளுக்கும் புகழ் பெற்ற இடம். இதில் முக்கியமானது ரந்தாவ் அபாங் (Rantau Abang) எனும் கடலோர பகுதிகள். மே முதல் ஆகஸ்ட்டு மாதங்களில் கடல் ஆமைகள் கரை ஏறி முட்டைகளை இடும்.
 
இவ்வகை கடல் ஆமைகள் மிக பெரிதாக இருக்கும். 2 மீட்டருக்கும் நீளமாக வளரும் இவ்வாமைகள் ஏறக்குறைய 300 கிலோ எடை கொண்டவை. இந்த ஆமைகளிடம் ஒரு அழகு தன்மை காணப்படுகிறது. பெரும்பாலும் அதிகாலை பொழுதுகளில் இவை முட்டையிட கரை ஒதுங்குகின்றன. முட்டையிட்டு மணலால் மூடிவிட்டு அவை கடலுக்குள் மறைந்துவிடுகின்றன. இவற்றை காண பயணிகள் இரவு முதல் காத்திருக்கிறார்கள். 

கடல் அமைப்பும் மணல் தன்மையும் ஆமைகள் இங்கு முட்டையிட காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி முட்டையிட ஒதுங்கும் ஆமைகள் உடலில் ஒரு பட்டையை ஒட்டிவிடுகிறார்கள். அது ஆமை கரையொதுங்கி முட்டையிட்டதற்கான அடையாலம். வெவ்வேறு பட்டைகள் சில ஆமைகளில் இருக்கும். அவை ஆமைகள் வேற்றிடங்களில் அடையாளபடுத்தப்பட்டதன் அர்த்தமாகும்.

ஆமை முட்டைகள் பாதுகாப்புகுறியவை. அவற்றை விற்பனை செய்யவோ, சமைத்து சாப்பிடவோ அனுமதி கிடையாது. இவற்றிக்கான சட்டமும் தண்டனையும் பலமானவை. சட்ட மீறல்கள் இங்கு இயல்பாகவே நடக்கின்றன. பயணிகள் மிகுந்து வரும் சந்தை பகுதியில் ஆமை முட்டைகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபார சந்தையில் இதற்கான தேடல் அதிகம் உள்ளது.

 ஆமை முட்டைகள் ‘கெலெஸ்ட்ரால்’ அதிகம் கொண்டவை. அதன் ஓடு மிக மெல்லியதாக இருக்கும். கோழி முட்டையை போல் உடைக்கும் தன்மை இதற்கு கிடையாது. தவிர ஆமை இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகள் விரைவாக அழிந்து வருகின்றன. இது வேதனையான விசயம். அதன் பாதுகாப்பு இன்னும் பலபடுத்தப்பட வேண்டும்.

திரெங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிக்க முடியாது. அதன் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திற்கு செல்லும் அமைப்பில் இல்லை. சில தப்படிகளில் மிகுந்த ஆழமாக அமைந்த கடல் இந்த கிழக்குகரை மாநிலங்களில் அமைந்துள்ளது. இதன் நெடுகினும் குளிக்க அனுமதி இல்லை என்ற பெயர்பலகைகளை காணலாம். இருந்தும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் குளித்து மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
நினைவுகள் தொடரும்...