Showing posts with label Manasarovar Lake. Show all posts
Showing posts with label Manasarovar Lake. Show all posts

Thursday, October 22, 2026

திபெத் - நினைவிலும் வாசிப்பிலும் தொடரும் ஒரு பயணம்


சில இடங்களுக்கு நாம் பயணம் செய்கிறோம். சில இடங்களோ, நாம் சென்றடையாமலேயே நம்முள் நீண்ட காலம் பயணம் செய்து கொண்டிருக்கும். எனக்கு அப்படிப்பட்ட ஓர் இடம் திபெத்.

“உலகின் கூரை” என்று அழைக்கப்படும் திபெத்தியப் பீடபூமியை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பனிமலைகள், முடிவில்லாமல் விரியும் பீடபூமிகள், நீலநிற ஏரிகள், புத்த மடங்கள், தனித்துவமான திபெத்திய வாழ்க்கைமுறை, இவை அனைத்தும் சேர்ந்தே திபெத்தை ஒரு சாதாரண சுற்றுலா இடமாக அல்லாமல், வேறு ஒரு உலகமாக எனக்கு அறிமுகப்படுத்தின.

ஆனால் திபெத்திற்குச் செல்வது சீனாவின் மற்ற நகரங்களுக்குச் செல்வது போல எளிதல்ல.

வெளிநாட்டவர் ஒருவர் சீனாவுக்கான விசாவுடன் அந்நாட்டுக்குள் நுழைந்துவிட்டார் என்பதாலேயே திபெத்திற்குச் சென்றுவிட முடியாது. அதற்கென தனியான Entry Permit தேவை. அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பயணத் திட்டம், அனுமதிக்கப்பட்ட வழித்தடம், வழிகாட்டி என பல நடைமுறைகள் உள்ளன. தனியாக ஒரு பையை எடுத்துக்கொண்டு, மனம் போனபடி ஊர் ஊராகச் சுற்றும் வகையான பயணம் திபெத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாத்தியமான ஒன்றல்ல.

2017ஆம் ஆண்டு நான் திபெத்திற்கான இரண்டு வார பயணத் திட்டத்தை மிகவும் விரிவாகத் தயாரித்திருந்தேன். லாசாவில் தொடங்கி திபெத்தின் பல பகுதிகளைச் சுற்றி, நீண்ட காலமாக நான் பார்க்க விரும்பிய Manasarovar ஏரியை காண வேண்டும் என்பது என் எண்ணம்.

ஆனால் அந்தப் பயணம் திட்டத்திலேயே முடிந்துவிட்டது.

அப்போது நான் வைத்திருந்த Diplomatic Passport காரணமாக எனது விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. திபெத் என்பது சுற்றுலாவுக்கான ஒரு அழகிய நிலப்பரப்பு மட்டுமல்ல, வரலாறு, அரசியல், எல்லைப் பாதுகாப்பு, இன அடையாளம் என பல நுணுக்கமான அடுக்குகளைக் கொண்ட ஒரு பிரதேசம். எனவே அங்கு செல்லும் அனுமதிகளும் இயல்பாகவே கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் இருக்கின்றன.

அந்தச் சமயத்தில் எனது திபெத் பயணம் நின்றுபோனாலும், திபெத்தைப் பற்றிய எனது வாசிப்பும் ஆர்வமும் நின்றுவிடவில்லை.

உண்மையில், ஒரு இடத்திற்குச் செல்லும் முன்பே நாம் அந்த இடத்தை பலமுறை மனதில் சுற்றிவந்துவிடுகிறோம். வரைபடங்களில், கட்டுரைகளில், நூல்களில், பயணக் குறிப்புகளில், ஆவணப்படங்களில் அந்த நிலப்பரப்பு முதலில் நமக்குள் உருவாகிவிடுகிறது. திபெத்தும் எனக்கு அப்படித்தான்.

திபெத்துக்குச் செல்வதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, லாசாவை நோக்கிய அந்த நீண்ட ரயில் பயணம்.

Chengdu-வில் இருந்து மெல்ல உயரத்தை ஏறிக்கொண்டே திபெத்தியப் பீடபூமிக்குள் நுழையும் ரயில் பயணம், வெறும் ஓர் இடமாற்றம் அல்ல. ஜன்னலுக்கு வெளியே மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பு, பனிமலைகள், பரந்த புல்வெளிகள், நீல ஏரிகள், வெறுமையான உயர்நிலங்கள், வானத்தைத் தொடும் பீடபூமிகள் என நம் மனதை கட்டிப்போடும்.

நான் அப்போது பயணத் திட்டத்தை அமைத்தபோது, அந்த ரயில் பயணத்திற்கே கணிசமான நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. திபெத் மிகவும் பெரிய நிலப்பரப்பைக் கொண்டது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கே பல மணி நேரங்கள், சில சமயம் ஒரு முழு நாளே தேவைப்படும்.

அதனால்தான் திபெத்துக்கான ஏழு நாள் பயணங்கள் எனக்கு எப்போதுமே மிகவும் சுருக்கமானதாகத் தோன்றின.

பயண நாட்கள், உயரத்துக்கு உடலைப் பழக்கிக்கொள்ள வேண்டிய காலம், இடையே தேவைப்படும் ஓய்வு இவையனைத்தையும் கணக்கில் எடுத்தால், திபெத்தை அவசரமாகச் சென்று பார்த்துவிட்டு திரும்பும் இடமாக நான் நினைக்கவில்லை. இரண்டு வாரம் எனது ஆரம்பத் திட்டமாக இருந்ததற்கும் அதுவே காரணம்.

திபெத்திற்குச் சென்றவுடன் நமது உடலும் அங்குள்ள நிலத்துடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்.

லாசா கடல்மட்டத்திலிருந்து சுமார் 3,600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருக்கிறது. அந்த உயரத்தில் காற்று நமக்குப் பழக்கமான சமவெளிக் காற்றல்ல. உடலுக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் குறையும். அதனால் முதல் சில நாட்களில் இயல்பாக நடப்பதும், பேசுவதும், உடலை அதிகமாகச் சோர்வடையச் செய்து சிரமத்தை ஏற்படுத்தலாம்.

தலைவலி, மூச்சுத்திணறல், மயக்கம், உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற உயர்நிலப் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால்தான் திபெத்துக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் “மெதுவாக நட, மெதுவாக பேசு, உடலுக்கு நேரம் கொடு” என்ற ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்.

அங்கே சென்றவுடன், நமது அன்றாட வேகத்தையே கொஞ்சம் மறந்துவிட வேண்டியிருக்கும்.

ஒருவகையில் பார்த்தால் திபெத்தின் நிலம் நம்மிடம் சொல்லும் முதல் பாடமே அவசரப்படாதே என்பதுதான்.

திபெத்திய புத்தமதமும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நமக்குப் பரிச்சயமான தேரவாத புத்தமதத்திலிருந்து திபெத்திய புத்தம் பல வகைகளில் மாறுபட்டது. மஹாயானத்தின் அடித்தளத்தில் வளர்ந்த வஜ்ரயான மரபைச் சேர்ந்த திபெத்திய புத்தமதத்தில், வழிபாட்டு முறைகள் முதல் துறவற மரபுகள் வரை பல தனித்துவமான கூறுகளைக் காணலாம்.

அவர்களின் வழிபாட்டில் காணப்படும் சில நடைமுறைகள் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தக்கூடியவை. சில பக்தர்கள் கைகளிலும் முழங்கால்களிலும் பாதுகாப்புக் கட்டுகளை அணிந்துகொண்டு, முழு உடலையும் தரையில் நீட்டி வணங்குவார்கள். பின்னர் எழுந்து சில அடிகள் நடந்து மீண்டும் அதேபோல் வணங்குவார்கள். இதை prostration pilgrimage என்பார்கள்.இவ்வாறு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கடந்து புனிதத் தலங்களை நோக்கிச் செல்லும் யாத்திரைகளும் உண்டு.

திபெத்திய சமூக வாழ்க்கையில் என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் Fraternal Polyandry எனப்படும் பழமையான குடும்ப அமைப்பு.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து, ஒரே குடும்பமாக வாழும் முறை திபெத்தில் உள்ளது. உதரணமாக ஒரே வீட்டில் ஐந்து ஆண், ஒரு பெண் எனும் விகிதத்தில் வசிப்பார்கள். இதற்குப் பின்னால் வெறும் திருமண மரபு மட்டும் இல்லை. குடும்பத்தின் நிலமும் கால்நடைகளும் சொத்துகளும் தலைமுறைதோறும் சகோதரர்களுக்குள் பிரிந்து சிறு சிறு பகுதிகளாகச் சிதறிவிடாமல் பாதுகாப்பதும் இந்த முறைக்குப் பின்னால் இருந்த முக்கியமான சமூக, பொருளாதார காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.


கம்யூனிஸ்ட் சீனாவில் இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பொதுவான திருமண முறை அல்ல. நவீன வாழ்க்கை, கல்வி, நகர்ப்புற இடமாற்றம், சட்ட அமைப்புகள் போன்றவற்றால் இந்த மரபு பெருமளவில் குறைந்துவிட்டது. இருப்பினும், சில திபெத்திய கிராமப்புற சமூகங்களில் அதன் சுவடுகள் முற்றிலும் மறைந்துவிடவில்லை.


இதுபோன்ற வாழ்க்கை முறைகளை நமது சமூக அளவுகோலில் வைத்து உடனடியாகத் தீர்ப்பளிப்பதைவிட, அந்த நிலத்தின் புவியியல், பொருளாதாரம், வாழ்வாதாரம், குடும்ப அமைப்பு ஆகியவற்றோடு இணைத்துப் புரிந்துகொள்ளும்போதுதான் அதன் பின்னணியை உணர முடிகிறது.

திபெத்தை நினைத்தவுடன் எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு உயிரினம் Tibetan Mastiff.

அந்த நாய்கள் திபெத் நிலத்தை சார்ந்தவை. அவற்றை சீனாவின் மற்ற குளிர் பகுதிகளில் நேரில் பார்த்திருக்கிறேன்.

முதல் பார்வையிலேயே அது ஒரு சாதாரண நாய் என்ற உணர்வு வராது. மிகப்பெரிய உடல், சிங்கம் போல் கழுத்தைச் சுற்றிய அடர்ந்த ரோமம், கடும் குளிரைத் தாங்குவதற்கே உருவானது போலத் தோன்றும் தோற்றம், மிகவும் விழிப்பான பார்வை, அருகில் சென்று பழக வேண்டும் என்ற எண்ணத்தைவிட, கொஞ்சம் தொலைவில் நின்று ரசித்தால் போதும் என்ற அறிவையே முதலில் தரும்!

திபெத் எனக்கு இன்னும் சென்றடையாத இடம்தான்.

ஆனால் சில பயணங்கள் அப்படித்தான்.

நாம் சென்ற இடங்கள் எல்லாம் நம்முள் நீண்ட காலம் தங்குவதில்லை. ஆனால் செல்ல முடியாமல் போன சில இடங்கள், நம்முள் இன்னும் ஆழமாக வேரூன்றி விடுகின்றன. 2017ல் தயாரித்த அந்த இரண்டு வார பயணத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இருந்தாலும், திபெத்தைப் பற்றிய வாசிப்புகளும் கனவுகளும் அவ்வப்போது மீண்டும் அந்தத் திட்டத்தை என் நினைவில் திறந்து வைக்கின்றன.

ஒருநாள் லாசாவில் இறங்கி, அவசரமில்லாமல் அந்த உயர்நிலத்தில் மெதுவாக நடக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கிறது.

திபெத் போன்ற சில இடங்களைப் பார்க்க மட்டும் சென்றால் போதாது. அதன் உயரத்துக்கும், அமைதிக்கும், வரலாற்றுக்கும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும் நம்மை முதலில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

திபெத்தைப் பற்றி நான் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்த சில நூல்களையும், அந்த நூல்கள் திபெத்தைப் பற்றிய எனது பார்வையை எவ்வாறு விரிவுபடுத்தின என்பதையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தொடர்வோம்.