நேற்றைய பதிவில் திபெத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது, இறுதியில் ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தேன்.
திபெத்தைப் பற்றிய எனது வாசிப்புகளில் என்னைக் கவர்ந்த சில நூல்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று.
அந்தப் பட்டியலில் முதலில் வருவது மருதன் எழுதிய ‘திபெத்: அசுரப் பிடியில் அழகுக் கொடி’.
தமிழில் திபெத்தை முதன்முதலில் அறிந்துகொள்ள விரும்புகிற ஒருவருக்கு நல்ல தொடக்க நூல்களில் இதுவும் ஒன்று என்று சொல்வேன். திபெத்தின் அரசியல் வரலாறு, சீனாவுடனான அதன் சிக்கலான உறவு, தலாய் லாமாவின் வெளியேற்றம், இந்தியாவில் அவர் அடைக்கலம் பெற்றது எனத் திபெத் பிரச்சினையின் முக்கியமான பகுதிகளை எளிமையான மொழியில் அறிமுகப்படுத்துகிறது.
ஆனால் திபெத்தைப் பற்றிய நூல்களில் என்னை முற்றிலும் வேறொரு காலத்திற்குள் இழுத்துச் சென்றது எகாய் கவாகுச்சியின் Three Years in Tibet.
இது வெறும் திபெத் குறித்த நூல் அல்ல.
ஒரு மனிதன் ஒரு புத்தகத்திற்காக, ஒரு மொழிக்காக, ஒரு மதத்தின் மூலங்களைத் தேடி எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கான சாட்சியம்.
கவாகுச்சி ஒரு ஜப்பானிய பௌத்த பிக்கு.
1897-ல் ஜப்பானிலிருந்து புறப்பட்டபோது அவருடைய நோக்கம் சாதாரணப் பயணம் அல்ல. திபெத்திய மொழியையும் திபெத்திய பௌத்தத்தையும் ஆழமாகக் கற்க வேண்டும், அங்கே கிடைக்கக்கூடிய சமஸ்கிருத பௌத்த மூலநூல்களையும் தேட வேண்டும் என்பதே அவருடைய பெரும் விருப்பமாக இருந்தது. அக்காலகட்டத்தில் ஜப்பானிய புத்த சூத்திரங்கள் சீன மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யபட்டவை. அவற்றை நேரடியாக ஜப்பானிய மொழியில் கொண்டு வருதற்கான முயற்சியை காவாகுச்சி மேற்கொண்டார்.
இன்றைய விமானப் பயணங்களை மனதில் வைத்துக்கொண்டு அந்தப் பயணத்தை நினைத்துப் பார்க்கவே கூடாது.
ஜப்பானிலிருந்து நேராக லாசாவுக்குச் செல்ல ஒரு விமானச்சீட்டை வாங்கிவிட முடியாத காலம். ஒரு ஜப்பானியர் சீனாவிற்குள் நுழைந்து திபெத் செல்ல முடியாத காலமும் கூட.
அவர் ஒசாகாவிலிருந்து கோபே சென்று அங்கிருந்து கப்பலில் புறப்படுகிறார். ஹாங்காங் வழியாகப் பயணித்து, 12 ஜூலை 1897 அன்று சிங்கப்பூரை அடைகிறார்.
இந்தப் பகுதியில் எனக்கு இன்னொரு தனிப்பட்ட சுவாரஸ்யம் இருந்தது.
நாம் இன்று காணும் சிங்கப்பூரை அல்ல, நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்கு முந்தைய சிங்கப்பூரை ஒரு ஜப்பானிய பிக்கு தனது கண்களால் பார்த்து எழுதியிருக்கிறார்.
அவர் தங்கியிருந்த விடுதி, அங்கிருந்த ஜப்பானியர்கள், ஜப்பானியத் தூதரக அதிகாரியுடன் நடந்த உரையாடல் என்று அந்தக் காலத்தின் சிங்கப்பூர் ஒரு சில பக்கங்களில் உயிரோடு வருகிறது.
அங்கே நடந்த ஒரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது.
அவர் தங்கியிருந்த விடுதியில் குளிக்க அழைக்கப்பட்டபோது, நூல் வாசிப்பில் மூழ்கியிருந்ததால் உடனே செல்லவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் குளியலறையே இடிந்து விழுகிறது. அவர் செல்லாததால் மற்றொருவர் அங்கு சென்றிருந்தார்; அந்த நபர் கடுமையாகக் காயமடைந்தார்.
தனது திபெத் பயணம் தொடங்குவதற்கு முன்பே உயிர் தப்பிய அனுபவம் அது.
சிங்கப்பூரிலிருந்து கல்கத்தா.
கல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்.
அங்கு திபெத்திய மொழியைக் கற்கிறார்.
அதன்பிறகு நேபாளம்.
அங்கேயிருந்து பனிமலைகள்.
மலைப்பாதைகள்.
பசி.
குளிர்.
தனிமை.
சந்தேகம்.
எல்லாவற்றையும் கடந்து இறுதியாக 4 ஜூலை 1900 அன்று திபெத் மண்ணில் கால்வைக்கிறார்.
அந்த ஒரு தேதியை வாசிக்கும்போது புத்தகத்தை மூடிவிட்டு சிறிது நேரம் யோசித்திருக்கிறேன்.
ஒரு மனிதன் 1897-ல் வீட்டை விட்டு புறப்படுகிறான்.
தான் செல்ல நினைத்த நிலத்தில் கால்வைக்கவே மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
இன்று Google Maps நமக்கு “இன்னும் 17 நிமிடங்களில் சென்றடைவீர்கள்” என்று சொல்லும் உலகத்தில் வாழும் நமக்கு, அந்தக் காலத்தின் ‘பயணம்’ என்ற சொல்லின் அர்த்தமே வேறு.
அதிலும் கவாகுச்சி திபெத்தை அடைந்தது பிரிட்டிஷ் Younghusband படையெடுப்பு லாசாவை அடைவதற்கு முன்பே.
அதனால்தான் Three Years in Tibet எனக்கு ஒரு பயண நூலாக மட்டும் தெரியவில்லை.
அது ஒரு காலப்பெட்டி.
அதைத் திறந்தால் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆசியா தெரிகிறது.
இறுதியில், அன்றைய உலகிற்கு இன்னும் பெரும்பாலும் மூடியிருந்த திபெத்தின் கதவுகளும் மெதுவாகத் திறக்கின்றன.
அதனால்தான் திபெத்தைப் பற்றிப் படிக்க நினைக்கும் ஒருவரிடம் நான் இந்த நூலைத் தயக்கமின்றி பரிந்துரைப்பேன்.
இந்த வரிசையில் தவிர்க்கவே முடியாத இன்னொரு நூல் ஜெயமோகனின் தங்கப்புத்தகம்.
சில புனைவுகள் தகவல் நூல்களை விட ஒரு நிலத்தை நமக்கு நெருக்கமாக்கிவிடுகின்றன. அந்த வகையில் தங்கப்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.
பிக்குகள், யோகிகள், தாந்திரீக மரபுகள், மடாலயங்கள், பனி, மரணம், ஞானம், மெய்த்தேடல் என்று அந்தக் கதைகளுக்குள் திபெத் ஒரு நிலப்பரப்பாக மட்டும் அல்லாமல் ஒரு மனநிலையாகவும் விரிகிறது.
திபெத்தை அவர் சுற்றுலா அட்டைப்படமாகப் பயன்படுத்தவில்லை. அதை ஒரு கனவுநிலமாக மாற்றுகிறார். ஒரு தேடலின் பின்புலமாக மாற்றுகிறார்.
அதனால்தான் தங்கப்புத்தகம் என்ற தலைப்பே எனக்கு மிகவும் பிடிக்கும். திபெத்தையே ஒரு புத்தகமாக நினைத்துப் பாருங்கள். எவ்வளவு வாசித்தாலும் முழுமையாக வாசித்து முடிக்க முடியாத புத்தகம்.
ஒவ்வொரு வாசகருக்கும் வேறொரு அர்த்தம் தரும் புத்தகம்.
இதில்தான் ஒரு சுவாரஸ்யமான முரணும் இருக்கிறது.
ஜெயமோகன் திபெத்திற்குச் சென்று அங்கே வாழ்ந்து இந்தக் கதைகளை எழுதியவர் அல்ல.
என் வாசிப்பில், இமயப்பகுதிகளிலும் நேபாளம் வரை சென்ற அவரது பயண அனுபவங்களின் நிழல்கள் கதைகளில் இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் அவர் உருவாக்கும் திபெத் பெரும்பாலும் வாசிப்புகள், பௌத்த மரபுகள், வரலாறு, ஓவியங்கள் மற்றும் கற்பனை ஆகியவற்றால் உருவான ஒன்று.
அதையும் அவர் மறைக்கவில்லை.
இந்தத் தொகுப்பின் திபெத் ‘மெய்யான திபெத்’ அல்ல, ஒரு குறியீட்டு, கனவுநிலத் திபெத் என்ற உணர்வு முழுக்கவே இருக்கிறது.
ஆனால் அதே தொகுப்பில் ஒரு இடத்தில் திபெத்தைப் பற்றிய புனைவுப் படிமங்களை உருவாக்கிய மேற்கத்திய எழுத்தாளரை ஜெயமோகன் சற்றே நையாண்டியுடன் அணுகுவது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றியது.
அதை வாசிக்கும்போது எனக்குள் ஒரு குறும்பான எண்ணம் வந்தது.
திபெத்திற்குச் செல்லாத ஒரு ஐரோப்பியர் உருவாக்கிய திபெத்தை, திபெத்திற்குச் செல்லாத ஒரு இந்திய எழுத்தாளர் தனது கதைக்குள் வைத்து விமர்சிக்கிறார்!
இலக்கியத்தின் முரண்கள் இப்படித்தான் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஒருவர் கற்பனையை அனுபவச் சாட்சியமாக முன்வைக்கிறார். மற்றொருவர் கற்பனையை புனைவாகவே முன்வைக்கிறார். அங்கேதான் இலக்கியத்தின் நேர்மை இருக்கிறது.
Heinrich Harrer-ன் Seven Years in Tibet.
1940களின் திபெத்தை நேரில் பார்த்த ஒருவரின் பதிவு. இளம் தலாய் லாமாவுடன் Harrer உருவாக்கிய நட்பின் வழியே, சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக நுழைவதற்கு முன்பிருந்த ஒரு உலகத்தை இந்த நூல் காட்டுகிறது.
அடுத்து 14வது தலாய் லாமாவின் My Land and My People.
ஒரு மதத் தலைவரின் சுயசரிதை என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. தனது நாட்டை இழந்து அகதியாக மாறிய ஒருவரின் நினைவாகவும் திபெத்தின் அரசியல் மாற்றங்களின் தனிப்பட்ட சாட்சியமாகவும் இதைப் படிக்கலாம்.
இவை நான் பரிந்துரைக்கும் நூல்கள். மற்றவருக்கு மாறுபடல்லம். ஒரே புத்தகம் முழு உண்மையையும் சொல்லிவிடுவதில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒரு சிறிய காலடித்தடத்தை மட்டும் விட்டுச் செல்கிறது. அந்தத் தடங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பின்தொடரும்போதுதான், தொலைவில் எங்கோ, இமயத்தின் மறுபுறம் இருக்கும் திபெத் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பிக்கிறது.
