Showing posts with label Asian Literature. Show all posts
Showing posts with label Asian Literature. Show all posts

Thursday, October 22, 2026

இரண்டு நகரங்கள் & இரண்டு Bookworm-கள்



வியட்நாமில் இருந்த நாட்களில் புத்தகக் கடைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, Bookworm என்ற பெயர் சட்டென்று என் கவனத்தை ஈர்த்தது.

அந்தப் பெயர் என்னை வியட்நாமிலிருந்து பல ஆண்டுகள் பின்னோக்கி, பெய்ஜிங்கிற்கு அழைத்துச் சென்றது.


பெய்ஜிங்கில் வசித்த காலத்தில் அங்கிருந்த Bookworm எனக்கு வெறும் புத்தகக் கடையாக இருந்ததில்லை. பரபரப்பான அந்தப் பெருநகருக்குள் எனக்கான ஒரு சிறிய சரணாலயம் அது. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி அங்கு செல்வேன். புத்தகம் வாங்குவது மட்டுமல்ல, புத்தக அறிமுகங்கள், வாசிப்பு நிகழ்வுகள், எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்கள் என்று ஏதாவது ஒன்று அங்கு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.


அந்த இடத்திற்குள் நுழைந்துவிட்டால் பெய்ஜிங்கின் வேகம் கொஞ்சம் வெளியிலேயே நின்றுவிடுவது போன்ற ஓர் உணர்வு எனக்கு இருந்தது.


அங்கேதான் என் வாசிப்பின் உலகமும் கொஞ்சம் விரிந்தது. பல்வேறு நாடுகளின் எழுத்தாளர்களையும் இலக்கியங்களையும் தேடிப் படிக்கத் தொடங்கினேன். ரஷ்யா, கொரியா, மங்கோலியா, ஜப்பான் இலக்கியத்தின் சில கதவுகளும் அங்குதான் எனக்குத் திறந்தன. குறிப்பாக இந்தோனேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை அறிந்துகொண்டதும் அந்தக் காலத்தில்தான்.



சில நேரங்களில் அதை நினைத்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது.


சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் ஒரு மலேசியனான நான், அங்குள்ள ஒரு புத்தகக் கடையின் வழியாக ஓர் இந்தோனேசிய எழுத்தாளரை அறிந்துகொள்கிறேன்.

இலக்கியத்திற்கு எல்லைகள் உண்டா என்ன?

ஆனால் நான் பெய்ஜிங்கில் இருந்த காலத்திலேயே அந்த Bookworm மூடப்பட்டது. அதற்குப் பின்னால் அரசாங்கக் கொள்கைகள் உள்ளிட்ட சில காரணங்கள் பேசப்பட்டன. எனக்கு மிகவும் பிடித்திருந்த ஓர் இடம் திடீரென்று இல்லாமல் போனது போன்ற உணர்வு அது.

பல ஆண்டுகள் கழித்து வியட்நாமில் மீண்டும் Bookworm என்ற பெயரைப் பார்த்தபோது, அதனால்தான் ஒரு பழைய நண்பனின் பெயரை எதிர்பாராத இடத்தில் பார்த்ததுபோல் இருந்தது.

வியட்நாமின் Bookworm-க்குள் நுழைந்தபோது, பெய்ஜிங் நினைவு இன்னும் அதிகமாக வந்தது. இடத்தின் அமைப்பு, புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த விதம், வாசிப்பைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த அந்த அமைதியான சூழல் — ஏதோ ஒரு வகையில் இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது.

அன்று கடையின் உரிமையாளரும் அங்கிருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது,

“பெய்ஜிங்கில் இருந்த Bookworm-க்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, “உங்களுக்கு அந்த Bookworm தெரியுமா? எனக்கும் தெரியும். ஆனால் அது மூடப்பட்டுவிட்டதே!” என்றார்.

அந்த ஒரு கேள்விக்குப் பிறகு எங்களுக்குள் பேசுவதற்கு இன்னும் நிறைய இருந்தது.

பெய்ஜிங் Bookworm-ல் நான் வாங்கியிருந்த ஒரு coffee mug பற்றியும் அவரிடம் சொன்னேன். அதேபோல வியட்நாம் Bookworm நினைவாகவும் ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். இல்லை.

என்னிடம் இருந்த அந்தப் பழைய mug-இன் புகைப்படத்தை அவருக்குக் காட்டினேன்.

அதை ஆர்வமாகப் பார்த்தவர்,


“அடுத்த முறை நீங்கள் வரும்போது இப்படியொரு mug செய்து வைக்கிறேன். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கக்கூடிய நல்ல நினைவுப் பொருளாக இது இருக்கும்,” என்றார்.

ஒரு சிறிய coffee mug. ஆனால் அது பெய்ஜிங்கையும் வியட்நாமையும், இரண்டு Bookworm-களையும், என் வாழ்க்கையின் இரண்டு வெவ்வேறு காலங்களையும் ஒரே புள்ளியில் இணைத்துவிட்டது.

அங்கு இருந்தபோது நான் முக்கியமாகத் தேடியது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வியட்நாமிய இலக்கியங்கள்.

தேடத் தொடங்கியபோது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. நான் பார்த்த பல படைப்புகளின் பின்னணியிலும் போர் ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தது.

அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

வியட்நாமின் வரலாறு போர்களாலும் காலனித்துவ எதிர்ப்புகளாலும் பிரிவுகளாலும் நிரம்பியது. சீனாவுடனான நீண்ட வரலாற்று மோதல்கள், பிரெஞ்சுக் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டம், பின்னர் அமெரிக்கத் தலையீட்டுடன் நடந்த வியட்நாம் போர் எனப் போர் அந்த நாட்டின் கூட்டு நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
ஒரு தேசத்தின் வரலாற்றிலிருந்து அதன் இலக்கியம் மட்டும் எப்படி தப்பித்துவிட முடியும்?

அதனால்தான் நான் பார்த்த வியட்நாமிய மொழிபெயர்ப்புகளில் போர் என்பது வெறும் துப்பாக்கி, குண்டு, போர்க்களம் என்பதாக மட்டும் இருக்கவில்லை. போருக்குள் வாழ்ந்த சாதாரண மனிதர்கள், பிரிவுகள், இழப்புகள், குடும்பங்கள், நினைவுகள், உயிர் தப்பியவர்களின் மனநிலை, ஒரு தேசத்தின் காயங்கள் கதைகளாக மாறியிருப்பதைப் போலத் தோன்றியது.

அன்று ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு நாவலையும் வாங்கிக்கொண்டேன்.

அவற்றை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.

என் வாசிப்புப் பட்டியலில் அவை இன்னும் காத்திருக்கின்றன.

ஒருநாள் அவற்றை எடுத்துப் படிக்கும்போது நான் வாசிக்கப்போவது இரண்டு புத்தகங்களை மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். அந்தப் பக்கங்களோடு பெய்ஜிங்கின் Bookworm-மும் திரும்பி வரலாம். வியட்நாமின் அந்தச் சிறிய புத்தகக் கடையும் வரலாம். அதன் உரிமையாளருடனான உரையாடலும், நான் காட்டிய பழைய coffee mug-இன் புகைப்படமும் நினைவுக்கு வரலாம்.

புத்தகங்களின் விசித்திரம் அதுதான்.

நாம் ஒரு புத்தகத்தை வாங்கும்போது சில நேரங்களில் ஒரு கதையை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. ஒரு நகரத்தையும், ஒரு காலத்தையும், சில மனிதர்களையும், நம்முடைய பழைய வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியையும் சேர்த்தே எடுத்துச் செல்கிறோம்.

அந்த இரண்டு வியட்நாமியப் புத்தகங்களையும் விரைவில் வாசிக்க வேண்டும்.

வாசித்துவிட்டு உங்களோடு பேசுகிறேன்.