ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியின் போதும் தமிழ் பள்ளி பிரச்சனைகளை முதன்மையாக கொண்டு, 'நான் அதை செய்தேன்', 'நான் இதை செய்தேன்' என பேசியே தீர்த்துவிடுகிறார்கள் சிலர். தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் திறமைசாலிகள் என சும்மாவா சொன்னார்கள். அது அரசியல் அப்படி தான் இருக்கும் என சிலர் சுலபத்தில் சொல்லிவிடலாம்.
எதையுமே அடிப்படையில் சிந்தித்து செயல்படாத இனம் தமிழரினம் என்பது இந்தத் தமிழ் பள்ளி பிரச்சனைகளில் கண்கூடு. வருமுன்னர் காவாதார் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக் கெடும் என்பது வள்ளுவர் வாக்கு. 50 வருடங்களுக்கு முன்பிருந்த 1000 தமிழ்பள்ளிகள் இன்றய நிலையில் 500-ஆக இருப்பதற்கு காரணம் என்ன? அதற்கு முன் சில ஐயப்பாடுகளை காண்போமாக.
தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு இனமான பற்று எவ்வகையில் உள்ளது? போதுமான வருமானம், நிரந்தர வேலை எனும் நோக்கோடு சிலர் ஆசிரியர் தொழிலை தேர்வு செய்யலாம். இப்படியானவர்களுக்கு 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போ. எனக்கென்ன கவலை' எனும் எண்ணம் இருக்கலாம்.
எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடும் சிந்தனை இல்லாமல். பிரச்சனைகள் எழும்பும் போது மட்டும் வாய்கிழிய பேசி நாயகனாக மாறும் அரசியல் தலைவர்களின் போக்கு எப்படிபட்டது? தமக்கு புகழ் கிடத்தால் போதும் பிரச்சனை வரும் வரை காத்திருக்கலாம் என்பதை போன்றதல்லவா?
தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முழு உதவியும் கிடைப்பதில்லை. ஆசிரியர்களின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழி இவ்விடயங்கள் எந்த அளவுக்கு தீர்வு காண முடிகிறது? முக்கிய தரப்பினரின் பார்வைக்கு இதை கொண்டு செல்ல முடியாவிடில் அச்சங்கத்தின் அவசியம் என்ன?
அரசாங்கம் ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது என்றால் சீன சமூகத்தினர் அதை பலமான முறையில் சீர்தூக்கிச் செயல்படுகிறார்கள். 90% சீன பிள்ளைகள் சீன பள்ளிகளில் தான் பயில்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் நிலை என்ன? தமிழ்ப் பள்ளி என்றவுடன் சிலரது முதல் கேள்வி 'தமிழ் சோறு போடுமா' என்பது தான்.
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை மலாய்/ ஆங்கில கல்வி முறைக்கு அனுப்புவதில் ஆர்வம் கொள்வது அடுத்தவருக்கு கோணலான தூண்டுதல் இல்லையா? இச்செயல், ஒர் உணவகத்தின் சமையல்காரன் அடுத்த உணவகத்திற்கு சென்று சாப்பிடுவதை போன்ற செயல் இல்லையா?
ஐயய்யோ தமிழ்ப் பள்ளிக்கூடமா? அங்கே படித்தால் பிள்ளை உருப்பட்டதை போல் தான் என்பது சில பெற்றோர்களின் எண்ணம். இப்படிபட்ட எண்ணங்கள் இருக்கும்பட்சத்தில் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் தான் போகும். ஒருமைபாடு கொண்ட சிந்தனை இல்லாமல் ஆளாளுக்கு திட்டுதிட்டாகச் சிந்திப்பது நமது குறையே.
தற்காலத்தில் பச்சைத் தமிழர்கள் கொச்சைத் தமிழில் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போலவும், எறுமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக எதையும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் சில தமிழ் ஊடகங்களின் செயலை தடுக்க முடியாமல் இருப்பது வேதனைக்குறியது. அதற்கு சரியான முறையில் தீர்வு காணாமல் இருப்பதும், இன்னமும் அவற்றுக்கு ஆதரவு கொடுத்து வருவது மக்களாகிய நமது தவறே.
இப்படி பல பிரச்சனைகள் நம்மில் தீர்வு காணாமல் இருக்கும் போது அரசாங்கத்தைக் குறை கூறி என்ன இருக்கிறது? 50 வருடங்களில் 1000 தமிழ்ப் பள்ளிகள் 500-ஆக மாறியுள்ளது எனின் இன்னும் 50 வருடத்தில் அதன் நிலை எப்படி இருக்கும்?
ஆரம்பக் கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சனைகளை மட்டும் சிந்திக்கும் மக்கள், உயர்நிலைக் கல்விமுறையைப் பற்றி சிந்திப்பதுண்டா? இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஒரு தனி பாடமாக மட்டுமே போதிக்கப்படுகிறது. மாணவர் பற்றாகுறை எனின் அதுவும் இல்லாமல் போகும் நிலை உள்ளது.
உயர்நிலைக் கல்வியெனின் மலாயா பல்கலைகழகத்தில் மட்டும் தான் தமிழ் போதிக்கப்படுகிறது. அதுவும் இளங்கலை பட்டத்திற்கு மேல் தொடர வாய்ப்பில்லை.மலாயப் பல்கலைகழகத்தில், தமிழ் மொழி கல்வி திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு இத்தனை வருடங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பினை கொண்டு வர முடியாமல் போகுமானால் அது யார் தவறு?
தேசிய மொழி காப்பகமாக 'டேவான் பகாசா டான் புஸ்தாகா' இருப்பது போல் சீன மொழி காப்பகமாக 'டொங்ஜோங்' கல்வி கட்டுப்பாட்டு குழு உள்ளது. கல்வியமைச்சின் முடிவுகள் இப்படிபட்ட மொழி காப்பகங்களில் சீர் தூக்கிப் பார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுச் செல்லப்படும். மலேசிய தமிழ் கல்விக்கு அப்படி ஏதும் காப்பகம் உள்ளதா? உண்டு எனின் இன்றய நிலைக்கு இவர்களின் பங்கு என்ன?
ஆண்டுதோறும் மலேசியாவில் இருந்து நான்கு சீன விரிவுரையாளர்கள் பெய்ஜிங் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முனைவர் பட்டம் வாங்கி வரச் செய்கிறார்கள். அவர்களுக்கு மலேசிய அரசு உபகார நிதி ஒதுக்குகிறது. இதற்கு உறுதுணையாக மலேசிய சீன சங்கம் (ம.சி.சா) உதவி புரிகிறது. அது போல ஒரு தமிழராவது தமிழகம் சென்று முனைவர் பட்டம் பெற --- உதவியுள்ளதா? அப்படி இல்லை என்றால் அவர்கள் என்ன **** (வேண்டாம் விடுங்கள்).
கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போகும் கதையாக UPSR தேர்வின் போது இத்தனை தமிழ்ப் பள்ளி பிள்ளைகள் இத்தனை 'எ' என மார்தட்டி கொள்பவர்கள்
SPM தேர்வில் தமிழ் பாடம் எடுப்போரின் விழுக்காடு குறைந்து போவதை கவலைக் கொள்வதில்லை. ஏன் இந்த நிலை?
தமிழ்க் கல்வி எனும் ஒரு நிலையிலேயெ இவ்வளவு விடயங்கள் அடங்கி கிடக்கும் போது, எதையும் சிந்திக்காமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் சதா
'லபோ திபோ' என கத்திக் கொண்டு தமிழர்கள் பிரதிநிதி எனக் கூறும் அரசியல் கட்சிகள் நமக்கு அவசியம் தானா?
தமிழ்க் கல்வியை சுயநலத்திற்கு அரசிலாயாக்குவதை தவிர்த்து, முறையான தமிழ்க் கல்விக் குழு அமைத்து பிரச்சனைகளை சீர் தூக்கி செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்நிலை மாறாது.
தனியாக தமிழ்ப் பள்ளிகள் அவசியமில்லை, சிங்கப்பூரைப் போல தேசியப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக மட்டும் இருந்தால் போதும் எனக் கூரும் சில இனத் துரோகிகளின் கை ஓங்குமானால் அடுத்த நூற்றாண்டில் இங்கே தமிழ்ப் பள்ளிகள் இல்லாமல் தான் போகும்.
எந்தப் பிரச்சனை வந்தாலும் துளி அளவும் முயற்சி இல்லாமல் 'எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்' என மேலே கையை உயர்த்துவது தமிழர்களின் மகா மடத்தனமான செயலாகிப் போய்விட்டது. அதைப் போலவே சமுதாய பிரச்சனையை அரசியல் கட்சி பார்த்துக் கொள்ளும் எனும் எண்ணம் பலரில் உண்டு. இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்பதை உணர்வார்களா?