Tuesday, November 10, 2009

இரும்புக் கலை


கதை 1:

மலாக்கா பேரரசின் பொற்காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஹங்
துவா, ஹங் ஜபாட், ஹங் லெக்யூ, ஹங் கஸ்தூரி, எனும் நண்பர்களின் தேச பக்தியால் நாடு சுபிட்ச ஆட்சியில் செழிப்புடன் இருந்தது. ஹங் நண்பர்கள் என இவர்கள் அறியப்பட்டார்கள். எதிர்பாராதவிதமாக ஹங் துவா அரசினால் குற்றம்சாட்டப்படுகிறார். அரசரால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும்பட்சத்தில் அமைச்சர்கள் அவரை காட்டிற்கு இட்டுச் செல்கிறார்கள்.

ஹங் துவாவின் பதவி ஹங் ஜபாட்டிற்கு வழங்கப்படுகிறது. நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் ஜபாட் அரசரை பழி வாங்க முற்படுகிறார். ஆஹா ஹங் துவா இப்படி இல்லையே. நல்ல படை தளபதி ஒருவனை நாம் இழந்தோமே என அரசர் கவலையில் இருக்கிறார்.

சமயோசிதமாக ஹங் துவாவை கொல்லாமல் விட்டுவைத்திருப்பதை அமைச்சர் சொல்கிறார். ஜபாட்டினால் நாட்டில் ஏற்பட்டிருக்கு
ம் குழப்பத்தை சீர்படுத்த ஹங் துவா மீண்டும் அழைத்து வரப்படுகிறார். நிஜத்தில் வந்திருப்பது ஹங் துவா தான் என்பதை ஜபாட்டினால் ஏற்றுக் கொள்ள முடியாதபட்சத்தில் இருவருக்கும் பலமான மோதல் நடக்கிறது. ஜபாட் தாமேங் சாரி எனும் கிரிஸ் கத்தியினால் குத்திக் கொல்லப்படுகிறார். அச்சம்பவத்தின் பின் துவா மாயமாக மறைந்து போய்விடுவது வேறு கதை.

கதை 2:

மலேசியாவின் லங்காவி தீவு மிக பிரசித்திப் பெ
ற்ற சுற்றுலா தளமாகும். இத்தீவிற்கு சென்று வந்தவர்களுக்கு மசூரியின் கதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளை பேறு இல்லாத தம்பதியினருக்கு நெற் கிடங்கில் ஒரு குழந்தை கிடைக்கிறது. அப்பெண் குழந்தைக்கு மசூரி என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

பருவம் எய்திய மசூரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவளது கணவன் வணிகனாக பணி புரிகிறான். இதனால் வெளி இடங்களுக்கு
அதிகமாக செல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையில் கணவன் இல்லா சமயம் மசூதி வேறு ஆடவனோடு இருந்தாள் என குற்றம் சுமத்தப்படுகிறாள். பிரத்தியோகமான கிரிஸ் கத்தியால் அவள் குத்திக் கொள்ளப்படுகிறாள்.

தமது நடத்தையில் தவறில்லை என்பதை நி
ருபிக்கும் பொருட்டு 7 தலைமுறைகள் லங்காவி தீவு செழிப்பிழந்து போகுமென சாபமிட்டு வெள்ளை இரத்தம் சிந்தி இறக்கிறாள். பிற்காலத்து ஆய்வுகளில் மசூரி பரம்பரையில் வந்த வாரிசுகள் இந்தோனேசிய நாட்டினில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டது வேறு கதை.

மலாய் மக்களின் பாதுகாப்பு கலைகளுள் ஒன்று கிரிஸ் கத்தி. ஆரம்பக் காலங்களில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் கிரிஸ் கத்தி நாளடைவில் மலாய் மக்களின் பாரம்பரியங்களுள் ஒன்றென ஆனது.

கிரிஸ் கத்தி இரும்பினால் செய்யப்படுவது. இவற்றை பல பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். சற்றே பாரம் மிகுந்த ஆயுதமான கிரிஸ் கத்தி நெளிவு நெளிவாக முருக்கியபடி அதன் நுனி பாகம் கூர்மை மிகுந்து காணப்படும். கிரிஸ் காத்தியால் செய்யப்படும் தாக்குதல் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. கத்தியின் நெளிவுகள் தாக்கப்பட்ட சதையின் பிளவுகளை பெரிதாக்கிவிடும்.

மேற் சொன்ன கதைகளில் இருப்பதைப் போல் கிரிஸ் கத்தியின் சரித்திர சம்பவங்கள் அதிகபடியாகவே இருக்கின்றன. எத்தனை நெளிவுகள், எவ்வளவு பாரம் எனும் விடய்ங்களைக் காட்டினும் கிரிஸ் கத்தியின் வேலைபாடுகளும் மக்களால் சிலாகித்துப் பேசப்படும் ஒன்றாகும்.
கத்தியின் கலை நுட்பம் அதைச் செய்வோரின் சிந்தனை சார்ந்து அமைகிறது. ஆரம்பக் கால மலாயா நிலப்பகுதி எனப்படுவது தற்போதய தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிபைன்ஸ் நாடுகளோடு அடங்கியதாகும். சிரிவிஜயா, லங்காசுக்கா மற்றும் மாஜாபகிட் பேரரசுகளின் ஹிந்து புத்த ஆட்சியின் போதும் கிரிஸ் கத்திகள் பயன்பாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது. அச்சமயம் இக்கத்தியின் வேலைபாடுகளில் ஹிந்து மத தெய்வங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்களின் அடையாளங்களுக்கு ஏற்பவும் கத்திகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. கிரிஸ் கத்தியை பயன்படுத்துவோர் தமது இடுப்பின் ஓரமாக அதை சொருகி வைத்திருப்பார்கள். அரசரை நேருக்கெதிர் சந்திக்கும் தருணங்களில் கத்தியை பின்புரமாக எடுத்து வைத்துக் கொள்வது மலாய் கலாச்சாரங்களின் ஒன்றென கருதப்படுகிறது. இது அரசருக்கான மரியாதை மட்டுமின்றி பாதுகாப்பு விடயத்திற்காகவும் இருக்கலாம்.
இஸ்லாமிய மத ஏற்பிற்கு பிறகு ஏற்பட்ட மாறுதல்கள் கிரிஸ் கத்தியின் வடிவமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. உறை மற்றும் கத்தியின் கலை வேளைபாடுகள் கலைநயமான செதுக்கல் வேலைபாடுகளோடும், இஸ்லாமிய வாசகங்களின் வடிவமைப்போடும் உருவாக்கப்பட்டன.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட தாமெங் சாரி எனப்படும் கிரிஸ் கத்தி தற்சயம் பேரா மாநில அரசரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இக்கத்தி இருக்குமிடத்தில் வெற்றி குவியும் எனும் நம்பிக்கை மலாய் மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

ஆரம்பக் காலத்தில் சீனர்கள் பேரா மாநிலத்தில் ஈய ஆளைக்கு வேலை செய்ய வந்தார்கள் அச்சமயம் சீனர்களால் அதிக அளவிலான குண்டர் கும்பல்களின் ஆதிக்கம் பேராவில் இருந்தது. அடுத்தபடியாக பங்கோர் ஒப்பந்தத்தின் படி பேரா மாநிலத்தின் நல்லாட்சிக்கு ஒரு பிரிடீஸ் கவர்னர் தேர்வு செய்யப்பட்டார். தாமேங் சாரியால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் போனது கேள்வி குறியான விடயம். தற்சமயம் இருப்பது அக்கத்தி இல்லை என்பதும் மக்களின் வாதமாக இருக்கிறது. எப்படியாகினும் இந்நம்பிக்கைகள் அவரவர் நம்பிக்கையை பொருத்த விடயங்களாகும்.

போர் சமயங்களில் கூர் வாள்களும், அருவா கத்திகளும் மலாய் மக்களால் அதிகபடியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. கிரிஸ் கத்தி குறுகிய இடைவெளியில் தாக்குதலுக்கு உரிய அயுதமாகும். அளவில் சிறிய கத்தியான கிரிஸ் அரசர்களாலும், பிரபுக்களாலும் மரியாதைக்குறிய ஆயுதமாகவும் ஆண்களின் அலங்கார பொருளாகவுமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மலாய் இதிகாசங்களில் பல இடங்களிலும் கிரிஸ் கத்தியை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதன் அடிப்படையில் தமேங் சாரி எனப்படுவது கிரிஸ் கத்தியின் பெயர் அல்ல என்பதும் அது அக்கத்தியை ஹங் துவா எனும் வீரனிடம் வழங்கியவரின் பெயர் என்றும் குறிப்பிடபடுகிறது. இன்னும் பல பல புனைவுகள் இக்கதியை பற்றி கூறப்படுகிறது.

கலைகள் இரசனைக்குட்பட்டது. ஒரு கலையை உன்னதப்படுத்தும் வகையில் பல பல யுக்திகள் கையாளப்பட்டுள்ளன. கதைகள் இதை அதிகபட்சமாகவே மிகைபடுத்தியும் இருக்கின்றன.

பார்வைக்கு சில சுட்டிகள்:
http://www.arco-iris.com/George/indonesia.htm
http://en.wikipedia.org/wiki/Kris
http://old.blades.free.fr/keris/introduction/origin/history.htm

14 comments:

TBCD said...

விண் மீன் வார வாழ்த்துக்கள்.

ஃஃஃஃ

ஒரு கத்திக்கு பின்னால் இத்தனை விளக்கங்களா.

மசூரியின் வீட்டிற்கு நானும் போய் வந்தேன் :)

தாய்லாந்து மன்னர்களின் அட்டுழியமும் ஒரு காரணம் என்று சொன்னதாக நினைவு.

தங்க முகுந்தன் said...

தமிழ் மணத்தின் நட்சத்திரமாக மிளிர்வதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கே.பாலமுருகன் said...

கிரிஸ் கத்தி குறித்த தங்களின் வரலாற்று பார்வையும் தகவலும் புதுமை விக்கி. அதன் மீதான புனைவுகளை தங்களின் கட்டுரை மொழியில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

subra said...

தெரிந்த விடயமாக இருந்தாலும் ,முழு விவரங்களை திரட்டி கொடுத்தமைக்கு நன்றி ,வாழ்துக்கள் அய்யா. சி.நா.மணியன்.

குமார் said...

வணக்கம் தோழரே!
கட்டுரையைப் படித்தேன்.மிக நன்றாக இருக்கின்றது. ஹங் துவா மற்றும் மசூரியைப் பற்றி சிறு விளக்கம் அளித்துள்ளீர்கள். எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹங் துவா என்பவர் யார் என்பது இன்னமும் கேள்விக் குறிதான்.இவரது பூர்வீகம் குறித்து யாரும் அறிதிருக்கவில்லை. அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். இவர் ஒரு சீனர் என்பது பரவலான கருத்து. அதேபோல் சேரர்கள் கலப்பில் தோன்றிய சேரப் புத்திரர்கள் வம்சத்தில் அந்துவா என்ற அரசன் வாழ்ந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அவர்கள் வழியில் தோன்றியவர் ஹங் துவா என்ற கருத்தும் உள்ளது. எது எப்படி ஆயினும் ஹங் துவா மலாய்காரர் அல்ல என்ற கருத்தை நம் நாட்டு மலாய் மக்கள் ஏற்று கொள்ளவதில்லை. அடுத்தது, மசூரி. மசூரி கதை முழுக்க ஜோடிக்கப்பட்ட ஒரு கதை. நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மசூரி வரலாற்றை எழுதினார். அதை நமது நான்காவது பிரதமர் மகாதீர் ஆதாரித்தார். தாங்கள் கூறியது போல் மசூரி வம்சத்தினர் இந்தோனேசியாவில் வசிக்கவில்லை. மாறாக தாய்லாந்து புக்கெட் நகரில் வசித்து வந்தனர் என 80ஆம் ஆண்டுகளில் மகாதீர் தெரிவித்தார். மேற்கோரிய இரண்டு பிரதமர்களும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநிலத்தை சேர்ந்த ஒரு தீவைப் பிரபலப்படுத்த அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கதாப்பாத்திரம்தான் மசூரி. நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

பழைய பாரம்பரியம் மிக்க கத்தியினைப் பற்றிய அரிய தகவல்கள் - தேடிப் பிடித்து இடுகை இடப்பட்டிருக்கிறது - உழைப்பு பாராட்டத் தக்கது - பயனுள்ள தகவல்கள்

நல்வாழ்த்துகள் விக்கி

மாதேவி said...

"இரும்புக்கலை" வரலாறும், கலைநுட்பத்துடன் கூடிய கத்தியின் படமும் அழகு.

ஆபத்துதராத வரையில் எல்லாம் அழகே.

சந்தனமுல்லை said...

வெகு சுவாரசியம் விக்கி! நல்ல தொகுப்பு - நன்றிகள்!

Tamilvanan said...

ஹங் லெகிர் இன்னுமொரு ந‌ண்ப‌ர்,விட்டு விட்டீர்க‌ளே. Semua sahabat Hang Tuah berani. Mereka itu adalah Hang Jebat, Hang Kesturi, Hang Lekir, dan Hang Lekiu. ந‌ல்ல‌ ப‌திவு.

வால்பையன் said...

மலேசியாவின் வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றி!

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்!

கானா பிரபா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டீபிசிடி

நன்றி... ;-)

@ தங்க முகுந்தன்

நன்றி...

@ கே.பாலமுருகன்

அப்படியா? ;-) நன்றி பாலா.

@ சுப்ரா

நன்றி

@ குமார்

நல்ல விளக்கம். அடிக்கடி வருக.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

நன்றி ஐயா.

@ மாதேவி

நன்றி

@ சந்தனமுல்லை

நன்றி..

@ தமிழ்வாணன்

நன்றி நண்பரே

@ வால்பையன்

நன்றி பாஸ்

@ கானபிரபா

நன்றி

@ தமிழன் - கறுப்பி

நன்றி