Monday, May 18, 2009

ஃபிரியா கிடைத்தால் பினாயில் குடிப்போம்

மிருககாட்சி சாலை, பொருட்காட்சி சாலை, பூங்கா போன்றவை அன்றய தினங்களில் மக்களின் ஓய்வு வேளைகளை நிரப்பிய ஒன்றாக இருந்தது. இன்றய நிலையில் ஓய்வு இவ்விடங்களை நிரப்பிவிட்டது. காரணம் இன்று மக்கள் தேர்வு செய்து கொள்ள நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன.

முக்கியமாக பேரங்காடிகளை இங்கு குறிப்பிட்டு சொல்ல முடியும். பேரங்காடிகள் மக்களின் மனதை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. சிறு பிள்ளைகளும் ‘ஷாப்பிங்’ என்ற வார்த்தையை அர்த சுத்தமாக பிசகின்றி உச்சரிக்கின்றன. ஏன் இந்நிலை? நுகர்வோரின் சிந்தனை அறிந்து செயல்படுதல், சொகுசான சேவைகள், எதிலும் கவரும் நிலை என்பது பலரையும் பாதித்துள்ளதாய் சொல்லலாம்.

இப்படியாக ஒரு அமைதியான சூழலில் பேரங்காடிகளில் புத்தகக் கடைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வயதிற்குட்பட்டவருக்கும் ஏற்ற மாதிரியான புத்தகங்கள் கவரும் விதத்தில் விற்பனைக்கு இருப்பதை கண்டிருப்போம். கண்ணாடி பேழைக்குள் குளிரூட்டி வசதியோடு புத்தகங்கள் கவரும் வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

கழிவு விற்பனை, மலிவு விற்பனை, எழுத்தாளர் பயிற்சி பட்டறை, எழுத்தாளரோடு கலந்துரையாடல் என புத்தக விற்பனையை அதிகரிக்க சில யுக்திகளை புத்தக வியாபாரிகள் கடை பிடிக்கிறார்கள். புத்தகங்களுக்கு உள்ள ஆதரவின் அடிப்படையில் மக்களிடையே இருக்கும் வாசிப்பு பழக்கம் மக்கி போய்விடவில்லை என்பதாக நாம் சொல்ல முடியும். பிறகு எதனால் புத்தக விறபனை அதிகரிக்கவில்லை?


ஓசியில் கிடைத்தால் ஒன்பது நாட்டுக்கு அரசனாகும் வாய்ப்பைக் கேட்பார்களாம் என எங்க ஊர் பாட்டிகள் பேச கேட்டிருக்கிறேன். சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம். முதலில் ஓசியில் புத்தகங்களை படிக்கும் கனவான்களைப் பற்றி சில குறிப்புகள்.

சில புத்தகக் கடைகளில் கண்டிருப்போம். சிலர் ஓரிடத்தை ஆக்ரமித்துக் கொண்டு நெடு நேரமாக அங்கேயே நின்றிருப்பார்கள். புத்தகத்தை வாங்கும் பாவனையில் புரட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக படித்துவிட்டு செல்வார்கள். வியாபாரிகளுக்கு இது வயிற்றெரிச்சலைக் கிளப்பும் ஒன்றென கூற முடியும். வியாபாரம் பாதிக்காமலிருக்கும் பொருட்டு சிலர் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள். இது வியாபாரியை மட்டுமன்று அப்புத்தக எழுத்தாளர்களையும் பாதிக்கச் செய்யும் ஒன்றாகும்.

இன்றய தினத்தில் நாளிகைகளின் விலை சராசரியாக 1 முதல் 1.50 வரை விற்பனையாகிறது. சாதாரன வார மற்றும் மாத இதழ்கள் 2 முதல் 5 ரிங்கிட் வரை விற்பனையாகிறது. இப்படியாக இவற்றை 'ஓசியில்' படித்துவிட்டு 9 ரிங்கிட் டன்ஹில் சிகரட்டுக்கு முகம் சுழிக்காமல் செலவு செய்வது ஒரு கேடுகெட்ட கலாச்சாரமாக மக்களிடையே நிலவி வருகிறது.

இத்தகாத பழக்கம் பெரும்பான்மையாக ஆண்களிடம் மட்டுமே காணப்படும் ஒன்றெனக் கூறுவது மிகையன்று. சில பெரிய அளவிலான புத்தகக் கடைகளில் ஆரம்பத்தில் சொன்னது போல புத்தகம் பார்க்கும் பாவனையில் படிக்கும் சிலர் இருப்பதாக சொன்னேன். வேறு சில இடங்களில் தரையில் அமர்ந்தபடி படிக்கும் ஆட்களையும் நாம் அறிந்திருக்கக் கூடும்.

எதனால் இந்நிலை ஏற்படுகிறது? நாள், வார மற்றும் மாத இதழ்களை தவிர்த்து வெளியீடு காணும் சில புத்தகங்கள் விலையில் சற்றே அதிகமாக இருப்பதாக கருதலாம். அப்படி என்றால் இதழ்களுக்கும் இந்நிலை எதனால் ஏற்பட்டது?

இச்செயல் புதிய திரைப்படத்தை திருட்டு வீ.சி.டியில் பார்ப்பதற்குச் சமமானதாக தான் சொல்ல முடியும். எழுத்தாளர், பதிப்பாளர் விற்பனையாளர் என யாருடைய அனுமதியின்றியும் படிப்பது வருந்ததக்க அவச் செயல்.
சரி இந்நிலை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? நிச்சயமாக சொல்லிவிட முடியாது. இருப்பினும் மேலை நாடுகளில் அசல் பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். கள்ள பொருட்களின் விநியோகம் அங்கு குறைந்துக் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமென நாம் சொல்லலாம். அடிப்படையில் ஒரு நாட்டின் வாழ்வியல் கலாச்சார முறையும் மக்களை நெறிபடுத்த பங்கு வகிக்கிறது.

இந்நிலையைக் கருத்தில் கொள்ளும் சில வியாபாரிகள் பிலாஸ்ட்டிக் பைகளால் புத்தகங்களை மடித்து வைக்க முற்படுகிறார்கள். இதன் விளைவுகள் என்ன? புத்தகம் பழுதுபடாமல் இருக்க வழி செய்கிறது. எதிர்வினையாக வாசகர்கள் முன் மற்றும் பின் பக்க தகவல்களை வைத்துமட்டும் புத்தகத்த தேர்வு செய்ய நேரிடுகிறது. புத்தகத்தை வாங்க முனைவோர் பெரும்பான்மையாக உள்ளடக்கத்தையும் படித்துப் பார்த்தே தேர்வு செய்ய நினைப்பார்கள். இதனால் பயனிட்டாளர்களின் சுதந்திரம் பாதிப்படைகிறது.

புத்தகக் கடைகளை பொது நூலகமாக்குவது எந்நிலையினும் தவிர்க்கபட வேண்டிய ஒன்றாகும். இச்செயல்களை தவிர்க்க தக்க நடவடிக்கைகளை கையாழ்வது சிறந்தது. சிகப்பு விளக்கில் சாலையைக் கடக்காதே எனக் கூறினால் கேட்டுவிடுவதில்லை. 300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது. என்ன செய்ய?

20 comments:

நட்புடன் ஜமால் said...

படிக்க துவங்கியவுடன்


\\இச்செயல் புதிய திரைப்படத்தை திருட்டு வீ.சி.டியில் பார்ப்பதற்குச் சமமானதாக தான் சொல்ல முடியும். \\

இது தான் தோன்றியது ...

நட்புடன் ஜமால் said...

\\300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது. என்ன செய்ய?\\


சரியா சொன்னீங்க ...

RAHAWAJ said...

நல்லா சொன்னீங்க விக்கி

கோவி.கண்ணன் said...

//வார்த்தையை அர்த சுத்தமாக பிசகின்றி உச்சரிக்கின்றன. //

:)

பொருள் மாறமல் தெள்ளத் தெளிவாக சொல்லுகின்றன !

பிசகு - தமிழ் சரிதான்

S.A. நவாஸுதீன் said...

சட்டம் போட்டாத்தான் நமக்கு இப்பெல்லாம் மனிதாபிமானமே வரும் என்ற நிலை. இதை தடுக்க அபராதம் விதிக்க முடியாதென்றாலும் ஒரு அபிப்ராயம் சொல்லனும்னு தோனுது. புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அதன் முன்னுரை, பரிந்துரைத்தவரின் விளக்கவுரை மற்றும் ஆசிரியர் உரையை வாசகர்கள் படிக்கும்படி வைத்தால் போதுமானது. மற்றபடி புத்தகத்தை பிரிக்கமுடியாத வண்ணம் Pack பண்ணி வைப்பது நல்லது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி..

@ ஜவஹர்

எதை நல்லா சொன்னேன்? :)) உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் போல...

@ கோவி.கண்ணன்

அண்ணே கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியல :(

@ நவாஹூதின்

நல்ல ஐடியா, செயல்பாட்டில் சரிவருமா? புத்தகத்தை கையில் தொட்டால் தானே ஒரு சுகம் கிடைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Prabhu said...

இதுக்கு ஒரு படி மேலாக pirated புத்தகங்கள் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

Tamilvanan said...

//பிறகு எதனால் புத்தக விறபனை அதிகரிக்கவில்லை?//
//ஓசியில் கிடைத்தால் ஒன்பது நாட்டுக்கு அரசனாகும் வாய்ப்பைக் கேட்பார்களாம் என எங்க ஊர் பாட்டிகள் பேச கேட்டிருக்கிறேன்.//
//இது வியாபாரியை மட்டுமன்று அப்புத்தக எழுத்தாளர்களையும் பாதிக்கச் செய்யும் ஒன்றாகும்.//
//சற்றே அதிகமாக இருப்பதாக கருதலாம். அப்படி என்றால் இதழ்களுக்கும் இந்நிலை எதனால் ஏற்பட்டது?//

உங்களின் இந்த பதிவு

காலம் தவறிய ஒன்று, நகைப்புகுரியது அல்லது இன்னும் தெளிவாக சொன்னால் " சாத்தான் ஒதிய வேதம்".

இன்றைய நிலையில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதற்காகவே பேரங்காடியில் உள்ள புத்தக கடைக்கு சிலர் செல்கின்றனர். மற்றவர்கள் பொழுதினை கழிக்கவே செல்கின்றனர். ஆக பலர் ஓசியில் புத்தகம் படிக்க அங்கு செல்லவில்லை மாறாக பொழுதினை கழிக்கவே செல்கின்றனர்.

நவீன கணினி யுக காலத்தில் பல கருத்துக்கள் தெளிவுகள் விசயங்கள் சம்பவங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதிக அளவு புத்தகங்கள் வாங்க அவசியமற்று போகின்றது.

ஓசியில் கிடைப்பதை பொதுநலன் அல்லது பிறர் நலன் கருதி வேண்டாம் என்று ஒதுக்கிவிட யாரும் இங்கு புத்தன் இல்லை அல்லது குறைவான புத்தன்களே உள்ளனர்.

ஓசியில் படிப்பது கேடு கெட்ட செயல் என்றால் ஓசியில் கொடுப்பவர்களை என்ன என்று சொல்வது. உதாரணம் உங்களை போன்ற வலைபதிவாளர்கள்,பல கருத்துக்களை தெளிவுகளை விசயங்களை சம்பவங்களை ஓசியில் படிக்க கொடுத்து விட்டு அல்லது பழக்க படுத்திவிட்டு இப்பொழுது தத்துவம் பேசுவதில் என்ன பயன்?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பப்பு

அப்படியா? :(

@ தமிழ்வாணன்

பொது நூலகத்தில் நீங்கள் இரவல் வாங்கி படிப்பதை யாரும் ஏதும் சொல்லப் போவதில்லை. புத்தகக் கடைகளை பொது நூலகமாக்குவது மோசமான செலயலானதே.

அச்சு எழுத்தின் வீச்சுக்கும் வலையுலக எழுத்தின் வீச்சுக்கும் மாறுபாடுகள் உள்ளன. அதைப் பற்றி ஒரு பெரிய பதிவே எழுதிவிட முடியும்.

வியா (Viyaa) said...

அருமையான பதிவு விக்கி

malar said...

// 300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது.//

இருப்பினும் திருந்தாத ஜந்துக்கள் இருக்குங்க...

நன்ன பதிவு_:)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வியா

டெம்ப்லட் பின்னூட்டத்துக்கு நன்றி...

@ மலர்விழி

நீங்களும் டெம்ப்லட் பின்னூட்டம் தானா? அது எப்படி நல்ல பதிவு கெட்ட பதிவுனு தரம் பிரிக்கிறிங்க. :))

ரங்குடு said...

இந்தக் கொடுமையெல்லாம் அமெரிக்காவிலே இல்லை. இங்கே இருக்கற எந்தப் புத்தகக் கடைக்கு வேணும்னா போய் அங்கே போட்டிருக்கிற சோபாவிலே உக்காந்து நாள் முழுக்க படிச்சாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

வாங்குற சம்பளத்திலே, வீகுற விலை வாசியிலே எல்லா புத்தகம், சஞ்சிகைகளையும் வாங்கிப் படிக்குறது சாத்தியமில்லே. அதனாலே நான் எல்லாமெ ப்ரீயாகத்தான் படிக்குறது வழக்கம்.

ஆனா இந்த பலான புத்தகங்கள் மட்டும்தான் பிளாஸ்டிக் கவர் போட்டு படிக்கவுடாம பண்ணிருவாங்க.

தகவல் அறியும் சட்டம் போட்டு அந்த கவரையெல்லாம் எடுக்கச் சொல்லணும்.

முடிஞ்சா லஞ்ச் கூட எடுத்துக் கிட்டு போய்விடுவேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ரங்குடு

அட கொடுமையே... பலான புத்தகம் படிக்க முடியலனு ரொம்ப வருத்தப்படுறாப்புல இருக்கு... அதான் இப்ப தமிழ்ழயே நிறைய இலவசமா வந்திடுச்சே அப்புரம் என்ன... :))

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது

கலையரசன் said...

வாழ்த்துகள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ KRICONS மற்றும் கலையரசன்

உங்கள் தகவலுக்கு நன்றி :)

ஒளியவன் said...

மிகச் சரியான பதிவு.

வால்பையன் said...

பாருங்களேன் படிக்க வைக்க எம்புட்டு கஷ்டப்பட வேண்டியிருக்கு!


சிறுசா பதிவு போடுங்க! இல்லைனா பதிவயே படிக்க மாட்டானுங்க!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஒளியவன்

நன்றி...

@ வால்பையன்

பதிவு ரொம்ப பெருசா இருக்க பாஸ்... ஹி ஹி ஹி... நம்பலயும் நாலு பேரு படிப்பாங்கன்ற நம்பிக்கை தான்...