Friday, September 26, 2008

பயணிகள் கவனிக்கவும்-பாலகுமாரன்


தலைப்பு: பயணிகள் கவனிக்கவும்

நயம்: சமூக நாவல்

ஆசிரியர்: பாலகுமாரன்

வெளியீடு: விசா பதிப்பகம்

விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவமா? ஒரு இளைஞன் விதவையை காதலிப்பது கேவலமா? திரையுலகிலும் சரி எழுத்துலகிலும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதீ மீறக் கூடாத வாக்காகவே சித்தரிக்கப்படுகிறது. ஒரு சில கதைகள் விதிவிளக்காக இருக்கிறது எனலாம். இது வருந்தத்தக்கது. விதவைகள் ஒரு ஒடுக்கப்பட்ட இனமாக நம் சமூகத்தின் பார்வையில் இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். அவர்களும் மனிதர்கள் தானே? ஏன் அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்?

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.

பயணிகள் கவனிக்கவும் என பாலகுமாரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே. இக்கதையை முடித்த போது ஜார்ஜினா எனும் பாத்திரம் சித்தரிக்கப்பட்ட‌ விதம் எனை மிகவும் பாதித்தது என்றே கூறுவேன். இன்னும் எத்தனை ஜார்ஜினா போன்ற பெண்கள் இந்த உலகில் அவர்களுக்குள் புளுங்கிக் கொண்டிருப்பார்கள். எண்ணங்களை பரிமாற ஒரு மனம் இல்லாமல், அசதிக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோளில்லாமல், உணர்ச்சிகளை பூட்டி வைத்து வாழ வேண்டிய நிர்பந்த வாழ்க்கை தான் விதவைகளின் வாழ்க்கை என தீர்மானங்கள் உண்டா?

இக்கதை பதிபிக்கப்பட்ட போது எனக்கு 4 அல்லது 5 வயதிருக்கலாம். அதை இப்போது படிக்கும் போது ஒரு வித்தியாசமான வாசிப்பைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் காலம் 1980களில் அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரண‌த்திற்குச் சொல்ல போனால் 'சுப்ரமணியபுரம்' படத்தை போன்றதொரு காலத்தில் நகரும் கதை எனலாம்.

இக்கதயின் பயணம் ஒரு எதிர்பாராத திருப்புமுனை. எங்கோ ஆரம்பித்து எப்படியோ சொல்கிறதே எனத் தோன்றியது. ஸ்டீபன் தான் நாயகன் என ஒரு தேர்ந்த வாசகனும் அறிந்துக் கொள்ளும் படியான கதையின் போக்கு. ஆனால் சற்று தூரத்தில் சிறிதே இடம் மாறி வேறு பாதையில் போகும் கதை தளம். இந்தக் கதை அமைப்புதான் இந்நாவலின் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஒரு முசுடு அல்லது சிடுமூஞ்சி அப்படியும் இல்லையென்றால் நாகரீகமாக எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் எனச் சொல்லக் கூடியவன் தான் சத்தியநாராயணன். சக்தி என அழைக்கப்படும் கதையின் நாயகன்.

திருமணமாகி 6 மாதத்தில் கணவனை இழந்துவிடுகிறாள் ஜார்ஜினா. முழுமையாய் அறிந்து பார்த்தால் இந்த புள்ளிதான் கதையின் தொடக்கம். இதனால் வரும் பாதிப்புகளே முழுக் கதையும்.

விதவை திருமணத்தையடுத்து முக்கியமாய் சொல்லப்பட்டிருப்பது மத மாற்றுப் பிரச்சனை. ஜார்ஜினா எனும் கிருஸ்துவ பெண் சக்தி எனும் ஒரு இந்து ஆணுடன் புது வாழ்வை ஆரம்பிக்க சுற்றத்தால் தடை உண்டாகிறது. இதுவே பாலகுமாரன் கதையில் இருவரும் சேர்வார்களா பிறிவார்களா என சொல்லவரும் தளம். சற்று நீளமும் அதிகம். மதத்திற்கு முக்கிய காரணமாய் கூறப்படுவது ஜார்ஜினாவின் ஐந்து வயது மகன். அப்படி அவர்களுக்கு மீண்டும் வாரிசுகள் உண்டானால் அவர்களுக்கு சூட்டப்படும் மதம். இதில் மீண்டும் வருவதிலும், இப்பிரச்சனைகளை சுமூகமாக களைவதிலும் கதை முடிகிறது.

முக்கியமாக இக்கதையில் நான் இரசித்தது. ஜார்ஜினா மற்றும் சக்தியின் காதல் தருணங்கள். சினிமா தனம் இல்லாமல் இருந்தது. அவர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை முறை தூது என இன்னும் பல.

ஜார்கினாவிற்கு எதிர்பதமாக படைக்கப்பட்டிருப்பது சக்தியின் முதல் காதலி ஷோபனா. இவளை ஆரம்பத்தில் இரசிக்கும் படி சித்தரிக்கும் ஆசிரியர் இக்கதையை முடிக்கும் போது அவள் மீது ஒருவித அறுவருப்பை ஏற்படுத்தவேச் செய்கிறார். ஏமாற்றுகாரி என்றோ அல்லது கோழை என்றோ தான் பார்க்க முடிகிறது.

நாவலை முடித்ததும் மறுமுறை படிக்கத் தூண்டிய கதை இது. காரணம் என்னில் அறிய முடியாமலே போனது. ஒருவேளை நான் இக்கதையில் மீண்டும் மீண்டும் தேடிப்பார்க்க நினைத்த மாற்றங்களாக இருக்கக் கூடும். ஆனால் அதன் தீர்மானம் ஒன்றுதான். இக்கதையின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்றே கூறுவேன். முடிவு பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாத நிலை. அதை பாலகுமாரன் இரசிகர்கள் இப்படிதான் விருப்புவார்கள், இப்படிதான் அமைக்க வேண்டும் எனும் பாணியில் கொடுத்திருந்தால் இந்நாவல் எனது விருப்பத்தில் இருந்து அகன்று போயிருந்தாலும் இருக்கலாம்.

மொத்தத்தில் பயணிகள் கவனிக்கவும் ஒரு சுவாரசிய படைப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சின்ன வருத்தத்தோடே காண்கிறேன். பிடித்திருக்கிறது என்றே சொல்வேன் சில கருத்து முரண்பாடுகளோடு.

திரு.மோகந்தாஸ் எழுதிய பிரிதொரு விமர்சனத்திற்கு இங்கேச் சுட்டவும்: பயணிகள் கவனிக்கவும்.

(பி.கு: புத்தகத்தைக் கொண்டு வர மறந்து போனதால் 'ஸ்கேன்' செய்து போட முடியவில்லை. இப்படம் உடுமலை டாட் காமில் எடுக்கப்பட்டது)

10 comments:

Anonymous said...

நான்தான் முதல் பின்னூட்டாம்.. படிச்சிட்டு வந்துடுறேன் !

Anonymous said...

இந்தக் கதையை ஏற்கனவே படித்து விட்டேன்...பல வருடங்களுக்கு முன்பு!

Thamiz Priyan said...

ஒரு நீண்ட நாவலைப் படித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி!

ஜோசப் பால்ராஜ் said...

விமர்சனம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும், குறைகளை குட்டவும், நிறைகளை பாராட்டவும் வேண்டும். அதே போல் புத்தக விமர்சனம் புத்தகத்தை வாசிக்கத் தூண்ட வேண்டும், முடிவை சொல்லாமல் விமர்சனத்தை படிப்பவர்கள் புத்தகத்தை படித்து அந்த முடிவைத் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்.

இந்த எல்லா இலக்கணங்களையும் பூர்த்தி செய்யும் வண்ணம் எழுதப்பட்ட அருமையான விமர்சனம் இது. உன் எழுத்தின் வீச்சு எல்லா திசைகளிலும் அதிகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது தம்பி.

வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்நாவலை நான் 11ம் வகுப்பு படிக்கும்போதே வாசிக்க நேர்ந்தது.
அப்பவே என்னை கவர்ந்த பாத்திரம் ஜார்ஜினா.

உங்கள் விமர்சனம் படித்தவுடன் மீண்டும் படிக்கும் ஆவல் எழுகிறது.
இணையத்தில் கிடைக்குமா:
கிடைத்தால் அதற்கான சுட்டியை கொடுங்கள்.

நன்றி.
அருமையான படைப்புக்கு அழகான விமர்சனம்

ஆதவன் said...

தற்சமயம் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியத்திலிருந்து நல்லதொரு செய்தியை எடுத்து எழுதலாமே!

எதிர்காலத்திற்கு விக்னேஷ் என்னும் ஒரு தேர்ந்த கதையாசிரியர் நிகழ்காலத்தில் உருவாகி வருகிறார்.

அருண்மொழிவர்மன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாலகுமாரனின் கதை. ஸ்டீபனின் சாவுக்கு தான் காரணமென்று சத்தி அடையும் குற்ற உணர்வை நன்றாக காட்டியிருப்பார். அதேபோல அந்த காட்பாதர் கதாபாத்திரம். பெயர் மறந்துவிட்டது. இப்படியெல்லாம் எழுதிய பாலகுமாரனுக்கு இப்போது என்ன நடந்தது.........

VIKNESHWARAN ADAKKALAM said...

@புனிதா

நன்றி... பின்னூட்டத்திற்கு

@ தமிழ் பிரியன்

நன்றி..

@ ஜோசப் பால்ராஜ்

நன்றி அண்ணா...

@ அமிந்தவர்ஷினி அம்மா

பகிர்வுக்கு நன்றி...

@ ஆய்தன்

நன்றி..

@அருண்மொழி

நன்றி நண்பரே...

Jaikanth said...

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

வலைதள முகவரி:
http://www.balakumaaran.blogspot.com/

ஓர்குட் முகவரி:
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=30823748