Sunday, June 22, 2008

செருப்புஉங்களுக்கு ரஞ்சிதாவ தெரியுமா? எனக்குத் தெரியும். என் கூடப் படிச்சவ. இது நடந்தப்ப எனக்கு வயசு 20 இருக்கும். கல்லூரியில படிச்சிக்கிட்டு இருந்தேன். ரஞ்சிதா மாநிறமா இருப்பா. குதிரை வால் மாதிரி அவ கோரை முடிய பின்னால வலித்துக் கொத்தாகக் கட்டி இருப்பா.

அவள் வகுப்புக்கு வரும்போதெல்லாம் சாதாரணமா தான் உடுத்தி இருப்பா. ஆனா லட்சணமா இருப்பா. அதோ அவ வகுப்புக்கு வந்துகிட்டு இருக்கா. வகுப்புல சில பொண்ணுங்க இருக்காளுங்க. அசின் நயன்தாராங்கிற நெனப்போட தான் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க. ரஞ்சிதா வகுப்புள்ள நுழையறா.

அவ வகுப்புல நுழைஞ்ச போது அந்த அசின் நயன்தாரா பொண்ணுங்க அவள ஒரு மாதிரியா பாக்குறாளுங்க. அவுங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிறாளுங்க. ரஞ்சிதா அத கவனிக்காம இல்ல. நம்மளப் பத்திதான் பேசுறாங்கன்னு அவளுக்கே அப்பட்டமா தெரியுது. இன்ன பேசிக்கிறாளுங்கன்னும் யூகிக்க முடியுது. ரஞ்சிதா மனசுக்குள்ள நெனச்சுக்குறா.

“என் செருப்பு, உங்களுக்கு என்னடி வந்துச்சு.”

அந்தப் போலி நடிகைகள் ரஞ்சிதாவப் பாத்துச் சிரிக்கிறாளுங்க. ரஞ்சிதாவுக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எரிச்சிடுற வேகத்துல போலி நடிகைகளப் பாத்து மொறைக்கிறா. அவளுகளும் பதிலுக்கு முறைக்கிறாளுங்க.

உண்மைய சொல்லனும்னா ரஞ்சிதா பயந்தாங்கொள்ளிப் பொண்ணு. அவளோட கோபப் பார்வைய அவளால தக்கவைச்சிக்க முடியல. தலைய கீழ போட்டுக்கிட்டு அவ இடத்தை நோக்கி நடக்குறா.

இப்போ சரித்திரப் பாடம். இந்த லெக்சரரைப் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகனும். இவுங்க எப்போதும் கண்ணுல அடிக்கிற மாதிரி தான் துணி உடுத்துவாங்க. ஆரஞ்சு மஞ்சள்னு. பாக்கவே கண்ணு கூசும். பிறகு என்னத்த படிக்கிறதுன்னு பல நாள் பாடம் ஆரம்பிச்சதுமே தூங்கிப் போயிருக்கேன்.

அன்னிக்கு ரஞ்சிதா போட்டிருந்த செருப்பு ரொம்ப தேஞ்சு போயிருந்துச்சு. அவ வரும் போது ‘சரக்கு பரக்குனு’ கேட்ட சத்தம் தான் நடந்த கலவரத்துக்குக் காரணம்.

“மாணவர்களே, அடுத்த வாரம் நம் வரலாற்றுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் விருந்து உபசரிப்பும் இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 15 புள்ளிகள் வழங்கப்படும். நாகரிகமான உடையுடன் வர வேண்டும். கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய பாடம் முடிந்தது, நீங்கள் கிளம்பலாம்.”

ஷாப்பிங் செண்ட்டர்:

ரஞ்சிதா ஷாப்பிங் செண்டருக்கு வந்திருக்கா. அவள கேவலப் படுத்தும் பழைய செருப்பை போட்டுக்கிட்டு ஆண்டுக் கூட்டத்துக்கு அவ போக விரும்பல. விலை குறைவான தூக்குச் செருப்பு தேடிக்கிட்டு இருக்கா. அதை போட்டுக்கிட்டு எப்படி சாதாரணமா நடக்குறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருக்கா.

தேடி அலைஞ்சி கடைசியா விலை மலிவா கொடுக்கும் கடைக்கு முன் நிக்கிறா.

“இந்தக் கடைதான் நமக்கு சரிப்படும்” என மனசுல நினைச்சுக்கிட்டா.

“வாங்க மிஸ், எந்த மாதிரி செருப்பு வேணும் உங்களுக்கு?” கச்சிதமான சிரிப்போடு கேக்குறா அந்தக் கடைக்காரப் பொண்ணு.

“எனக்கு தூக்குச் செருப்பு வேணும். 20 வெள்ளிக்கு குறைவா கிடைக்குமா? என்ன கலரா இருந்தாலும் பரவாயில்லை?”

“இல்லைங்க. குறைஞ்ச வெலைன்னு பாத்தீங்கன்னா 39 வெள்ளிக்குதான் இருக்கு.”

“ம்... சரி, சைஸ் 7 கொடுங்க.”

ரஞ்சிதா பட்ஜெட்டுல பெரிய பாறையே விழுந்திடுச்சு.

ரஞ்சிதாவின் வாடகை வீடு:

போன மாசம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தான் இனிமேல் அவளுக்கு மூணு வேளை சாப்பாடும். இங்க படிக்கிற காலத்துல இந்த சாப்பாடு அவளுக்கு ரொம்பவே பழகிப் போச்சு. காலையில் வாங்கி வந்த தூக்குச் செருப்பைப் பாக்குறா. ஏனோ தெரியல அவளுக்குள்ள ஒரு எரிச்சல். வீட்டுக் கதவு ஓரத்துல கெடக்கும் பழைய செருப்பப் பாக்குறா. அவளுக்குள்ள ஒரு பரிதாபம் வருது.

பஸ் ஸ்டாப்பில் சாயங்கால வேளையில்:

ரஞ்சிதா கழக கூட்டத்துக்குப் போக நின்னுகிட்டு இருக்கா. அவளால முடிஞ்ச அளவுக்கு அழகா உடுத்தி இருக்கா. முக்கியமா அந்த தூக்குச் செருப்பு போட்டிருக்கா. ரஞ்சிதாவுக்கு அது அசௌகரியமாத் தான் இருக்கு. அவ கால் கெண்டைய அழுத்தி வலியைக் கொடுக்குது. பஸ் வந்ததும் எல்லோரும் அடிச்சிப் புடிச்சு ஏறுறாங்க. ரஞ்சிதாவும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தியா இருக்கா. அவ கஷ்டப்பட்டு ஏறினாலும் தூக்குச் செருப்பு தடுக்கி விட்டுடுச்சு. கால அழுத்தி வச்சதில அதோட கால் கட்டை ஒடைஞ்சிருச்சு.

சில மணி நேரம் கழித்து:

ரஞ்சிதா இன்னமும் அந்த பஸ் ஸ்டாப்பில் கவலையா உக்காந்திருக்கா. அவ முகத்துல சோகம். நெனப்பெல்லாம் சரித்திரப் பாடத்தின் 15 மார்க்குகளை சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வெறும் காலோட அவ வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டா. இப்படி நடக்க அவளுக்கு ரொம்ப வசதியா இருக்கு.

அவளது கையிலிருந்த பாலிதீன் உறைக்குள் புதுச் செருப்பு கேட்பாரில்லாம கெடந்துச்சு. அதைச் சரி செய்ய அவ கிட்ட பணமும் இல்ல. ரஞ்சிதாவ பழைய செருப்பு கூப்பிடுது. அந்த செருப்பு ரஞ்சிதாவ போலியாக்கல. அவளுக்கு அந்தச் செருப்புதான் எப்போதும் சௌகரியத்தக் கொடுக்குது. ரஞ்சிதா எப்பவும் ரஞ்சிதாதான்.

வீட்டுக்கு வந்து பாத்த போது தேஞ்சு போன பழைய சேருப்பு கதவு ஓரத்திலேயே கெடக்கு. அத யாரும் எடுத்துக்கனும்னு நெனைக்கல. ஏன்னா அந்த செருப்போட அருமை அவுங்களுக்குத் தெரியாது. ரஞ்சிதாவுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மற்றவர்கள்தான்.

இப்போ பழைய செருப்பு இருந்த இடத்துக்கு புதுச் செருப்பு குடிபெயர்ந்திருக்கு.

15 comments:

கோவி.கண்ணன் said...

விக்கி,
இயல்பை தொலைத்து பலர் உணர்ந்து தான் இயல்புக்கு திரும்புவார்கள் என்பதை அழகான புனைவுடன் சொல்லி இருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்

Anonymous said...

எடுத்துக் கொண்ட கரு அருமை. இயல்பாக இருப்பதே அழகு... பயிற்சியே மேம்பாட்டிற்கு உதவும் முக்கியக் காரணி. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்....

Unknown said...

//கோவி.கண்ணன் //

vazhimozhihindraen

Unknown said...

//கோவி.கண்ணன் //

vazhimozhihindraen

VIKNESHWARAN ADAKKALAM said...

//விக்கி,
இயல்பை தொலைத்து பலர் உணர்ந்து தான் இயல்புக்கு திரும்புவார்கள் என்பதை அழகான புனைவுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்//

மிக்க நன்றி கண்ணன். வருகைக்கும் பாராட்டிற்கும். என்னுடைய தவறுகளையும் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். பாராட்டு மட்டும் வேண்டாம். மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

//எடுத்துக் கொண்ட கரு அருமை. இயல்பாக இருப்பதே அழகு... பயிற்சியே மேம்பாட்டிற்கு உதவும் முக்கியக் காரணி. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்....//

வாழ்த்துக்கு நன்றி சித்தப்பு...

VIKNESHWARAN ADAKKALAM said...

//எடுத்துக் கொண்ட கரு அருமை. இயல்பாக இருப்பதே அழகு... பயிற்சியே மேம்பாட்டிற்கு உதவும் முக்கியக் காரணி. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்....//

வாழ்த்துக்கு நன்றி சித்தப்பு...

VIKNESHWARAN ADAKKALAM said...

////கோவி.கண்ணன் //

vazhimozhihindraen//

வாங்க அண்ணாச்சி... காணாமல் போயிட்டிங்கனு நினைச்சேன்...

லதானந்த் said...

விக்னேஷ்!
கதை நன்கு இருந்தது.
சின்ட்ரல்லா கதையின் சாயல் இருக்கு.

கதை தட்டையான நடையில் இருக்கு.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ங்கிற மாதிரி.

இடையிடையே உரையாடல்கள் வருணனைகள் இதெல்லாம் சேர்க்கலாம்.

வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் said...

அருமையான கருத்து... ஆழ்ந்த சிந்தனை... நல்லா இருக்கு... இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால், எல்லாம் சௌக்யமே... கருடன் சொன்னது....

சின்னப் பையன் said...

//உங்களுக்கு ரஞ்சிதாவ தெரியுமா? எனக்குத் தெரியும். என் கூடப் படிச்சவ. இது நடந்தப்ப எனக்கு வயசு 20 இருக்கும். கல்லூரியில படிச்சிக்கிட்டு இருந்தேன்//

இது எதுக்கு? (பின்னோட்டம்)... நேராவே கல்லூரியிலேயே ஆரம்பிச்சிருக்கலாமே... என்ன சொல்றீங்க...

PPattian said...

அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன் புது வீட்டுக்கு. கதை நல்லாயிருக்கு.. நடை வித்தியாசமா இருக்கு. எல்லா காட்சிகளையும் "கமெண்டரி" (Commentary) போல சொல்லும் நடை..

நல்ல கருவும் கூட.. தொடர்ந்து இது மாதிரி முயற்சிங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

//லதானந்த் said...
விக்னேஷ்!
கதை நன்கு இருந்தது.
சின்ட்ரல்லா கதையின் சாயல் இருக்கு.

கதை தட்டையான நடையில் இருக்கு.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ங்கிற மாதிரி.

இடையிடையே உரையாடல்கள் வருணனைகள் இதெல்லாம் சேர்க்கலாம்.

வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி... அடுத்த முறை இன்னும் நல்ல முயற்சி செய்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
அருமையான கருத்து... ஆழ்ந்த சிந்தனை... நல்லா இருக்கு... இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால், எல்லாம் சௌக்யமே... கருடன் சொன்னது....//

திருவிளையாடல் படத்தில் கார்த்திக் அப்பா(பெயர் தெரியவில்லை) சொல்வதை போல் இருக்கு... நன்றி...


//இது எதுக்கு? (பின்னோட்டம்)... நேராவே கல்லூரியிலேயே ஆரம்பிச்சிருக்கலாமே... என்ன சொல்றீங்க...//

சரி அடுத்த முறை மாற்றிக் கொள்கிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

// PPattian : புபட்டியன் said...
அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன் புது வீட்டுக்கு. கதை நல்லாயிருக்கு.. நடை வித்தியாசமா இருக்கு. எல்லா காட்சிகளையும் "கமெண்டரி" (Commentary) போல சொல்லும் நடை..

நல்ல கருவும் கூட.. தொடர்ந்து இது மாதிரி முயற்சிங்க//

வாங்க.. வாங்க... வருகைக்கு நன்றி... உங்களை போன்ற பெரிய மனிதர்களின் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..