Showing posts with label substitute food. Show all posts
Showing posts with label substitute food. Show all posts

Wednesday, February 11, 2009

இந்த இறைச்சியையும் சாப்பிடலாமாம்!


இறைச்சி உணவு பிரியர்களுக்கு ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள். அப்படி என்ன கருத்து என்கிறீர்களா? ஒட்டகம் மற்றும் கங்காரு இறைச்சி வகை உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்கச் சொல்லி இருக்கிறார்கள் இவர்கள். காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இத்தகைய கருத்துகளை முன்னிருத்தி இருக்கிறார்கள்.

அளவுக்கதிகமான இனப் பெருக்கம் கொண்ட வளர்ப்பு பிராணிகள் இயற்கைக்குப் பாதுகாப்பு அற்றது என அறிவியளாலர்கள் கூறுகிறார்கள். இவ்விலங்குகளின் கழிவுகளால் வெளியேற்றப்படும் நச்சு வாயு பாதிப்பை உண்டாக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய வரலாறு கூறுவது. ஏறத்தாழ 60ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்காரு அந்நாட்டின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது. அக்காலகட்டத்தின் தட்பவெப்ப நிலை அதற்கு ஏதுவாக அமைந்திருந்ததாக சேதிகள் கூறுகின்றன. இன்னும் சில காலங்களில் கங்காரு மீண்டும் ஆஸ்திரோலிய மக்களின் முக்கிய உணவாக அமையலாம் என கருத்துரைக்கிறார்கள்.

இப்போது செம்மறி ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும் ஆஸ்திரேலிய நாட்டு மக்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு மாற்று உணவாக கங்காருவின் இறைச்சி அமையும் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

இனப் பெருக்கத்தில் அதிகரித்துவரும் ஓட்டகங்களால் இயற்கைக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதனை ஒடுக்கும் பொருட்டு அதனை உணவு பொருளாக உற்பத்தி செய்து வழங்க திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு. கங்காரு மற்றும் ஒட்டக இறைச்சியினை மாற்று உணவாக மாற்றியமைப்பதில் கடந்த மூன்றாண்டு காலமாகத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு.

அங்கு நீண்ட கால திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குள் மாட்டிறைச்சி மற்றும் செம்மரியாட்டு இறைச்சிகளின் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளார்கள். தற்சமயம் 34கோடி கங்காருகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை 240 கோடிகளாக்க முயற்சிகள் நடைபெருகின்றன.

இவற்றில் சில சிக்கல்கள் உண்டென்பதை அவர்கள் அறியாமல் இல்லை. இதனால் கால்நடைகள் பேணல் சிக்கல் உண்டாகும். மக்கள் சுவைத்து பழக்கப்பட்டுவிட்டதை எளிதில் விட்டுவிட மறுக்கக் கூடும்.

காங்காரு இறைச்சி உடல் நலத்திற்கு சிறந்தது எனக் கருதப்படுகிறது. சிலர் கங்காரு இறைச்சியை உண்பதில் ஆர்வம் கொண்டும் இருக்கிறார்கள். கங்காரு இறைச்சி கொழுப்புச் சத்து குறைந்த மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவாகும். அது சுத்தமான இறைச்சி வகையாகவும் கருதப்படுகிறது.

ஒட்டகங்களால் பாலைவனத்தில் வாழும் சில உயிரினங்கள் உட்பட சில அறிய வகை தாவரங்களும் பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது. ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் கட்டுப்படுத்த அவற்றை உண்பதே சிறந்த வழியனெ கண்டறிந்துள்ளார்கள். மாட்டிறைச்சிக்கு மாற்றாக ஒட்டக இறைச்சியை உபயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கங்காரு அஸ்திரேலிய மண்ணில் இயற்கையாக தோன்றிய உயிரனமாக கருதப்படுகிறது. ஆனால் ஒட்டகம் அப்படி இல்லை. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுமை தூக்க ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்பட்டன. புதுவகை சரக்கு ஊர்திகளின் அறிமுகத்திற்கு பின்னால் அவை பேணப்படாமல் விடப்பட்டன.

இன்றய நிலையில் ஏறத்தாழ 50லட்சம் ஒட்டகங்கள் அங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஒன்பது ஆண்டும் அவை 2 மடங்காக பெருகிவருகின்றன.

ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் குறைக்க அவற்றை உணவாக்கும் திட்டம் நிச்சயமாக தாவர மற்றும் மற்ற உயிரினங்களின் பாதிப்பைத் தடுக்குமா என்பது வினாக் குறியான விடயம். அது போக உள்நாட்டு சந்தையை விட வெளிநாட்டு சந்தைகளில் தான் அவற்றுக்கு மவுசு அதிகம். ஏற்றுமதிக்கான செலவீனங்களும் அதிகம் என கருதப்படுகிறது. இம்முயற்சிகளுக்காக மேலும் ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன.

(பி.கு: 01.02.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)