இந்தப் பறவைகள் மட்டும் ஏன் இவ்வளவு பிரபலம்? அதன் அழகிய வண்ணம் மட்டும் காண்போரை கவர்ந்திருக்காது. மனிதனைப் போல் பேசும் தன்மை கொண்டிருப்பதால் அந்த விசித்திர குணமும் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும்.விந்தைகள் நிறைந்தது பெரு(Peru) நாடு. அது என்ன விந்தை என நீங்கள் சிந்திக்கக் கூடும். நாஸ்கா எனப்படும் இராட்சச கோடுகள் இங்குள்ளன. இந்த நாஸ்கா கோடுகள் இன்னமும் தீர்வு காணாத அதிசயங்கள் என்றே கூற வேண்டும். இங்கு கூற விளையும் செய்தி அதுவல்ல. அது கிளிகளைப் பற்றிய செய்தி.
பெரு நாட்டில் இருக்கிறது தம்போபட்டா(Tambopata) நதிக்கரை. சூரியன் உதித்தவுடன் மலை முகட்டுகளில் ஒட்டிய வானவில்லாய் இந்த வண்ண பட்சிகள் குழுமிவிடுகின்றன. அவை கீச்சும் சத்தம் அவ்விடத்தை சந்தைக் கடையாக்கிவிடுகிறது. இந்த Macaw இன கிளிகள் அங்கு வர காரணம் என்னவாக இருக்கும். களிமண் சாப்பிட வருகின்றன என நான் சொன்னால் உங்களுக்கு வியப்பாக தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை.
16 வகையான மக்காவ்(Macaw) இன கிளிகள் மத்திய மெக்சிக்கோ முதல் வட அர்ஜெண்டினா வரையிலுள்ள காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் எட்டு வகையானவை பெரு நாட்டில் உள்ளன.
இந்த மக்காவ்(Macaw) இன கிளிகளின் அழகு மிக வலிமையானவை. தடிமனான ஓடுகளைக் கொண்ட கொட்டைகளையும் விதைகளையும் இலகுவாக உடைத்து உண்ணக் கூடியவை. இவ்வகைக் கிளிகள் மரக் கிளைகளில் தலை கீழாக தொங்கவும் செய்யும். மக்காவ் (Macaw) மற்ற மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தாக்காது. அவைகளுக்கென தனிபட்ட பாதுகாப்பு முறைகளைக் கொண்டுள்ளன. தனக்கு ஆபத்து என அறிந்த கிளி அதி வேகமான சத்தத்தை எழுப்பும். அருகில் இருக்கும் மற்ற கிளிகளும் அவ்வாறே செய்ய தொடங்கும். இச்சத்தம் எதிரியின் செவிகளைப் பலமாக பாதிக்கச் செய்ய கூடியது. அதை தாங்க முடியாத எதிரி சட்டென அவற்றை விட்டு அகலும்.
ஆம், ஏன் கிளிகள் களிமண் தின்கின்றன என்ற விடயத்தைப் பார்ப்போம். உண்மையில் இந்தக் களிமண் தான் இவ்வகைப் பறவைகளை நச்சுத் தன்மையில் இருந்து காக்கிறது.
Macaw கிளிகள் இரப்பர், மா, பருத்தி என 60 வகையான மரங்களின் விதைகளையும் கொட்டைகளையும் தின்கின்றன. இவ்வகை விதைகளினால் அக்கிளிகளின் உடலில் அவசியமற்ற இரசாயனங்கள் தங்கி நச்சுத் தன்மையடைந்துவிடுகிறது. இதனால் கிளிகளின் உடலில் வீக்கம் உண்டாகும்.
அவற்றைத் தடுக்கும் பொருட்டு உப்புத் தன்மை நிறைந்த களிமண் வகையை இக்கிளிகள் தேடி தின்கின்றன. இதுவே Macaw கிளிகளுக்கு உண்டாகும் நோய்க்கு மருந்தாக அமைகிறது.
340 வகை கிளிகள் இருக்கின்றன. அவற்றில் Macaw இனக் கிளிகளை சுலபமாக கண்டறிந்துவிட முடியும். Macaw கிளிகளுக்கு இறகுகள் நீட்டமாகவும், அலகுகள் பெரிதாகவும் இருக்கும். பெட்டைக் கிளிகள் இரு முட்டைகளை ஈன்று அடைக்காக்கும். அச்சமயத்தில் ஆண் கிளிகள் உணவு தேடும் பெறுப்பேற்றுக் கொள்ளும். குஞ்சுகள் பொறித்த பிறகும் ஆண்கிளிகள் தனது உணவு வேட்டையில் தொடர்ந்திருக்கும். இறைப்பையில் அதக்கி வைக்கப்பட்ட தீனிகளை கக்கி குஞ்சுகளுக்கு ஊட்டும்.
Macaw கிளிகளின் கண்களைச் சுற்றி சிறு வலையம் இருக்கும். இவ்வலையத்தின் அடிப்படையில் அக்கிளிகளின் வயது நிர்ணயிக்கப்படுகிறது. இளங்கிளிகளுக்கு இவ்வலையம் கருப்பாக இருக்கும். முதுமை பருவத்தை எட்டும் சமயம் அவ்வலையம் மஞ்சல் கலந்த வெள்ளை நிறந்தில் மாறிவிடும்.
கூடுகட்டும் சமயம் இக்கிளிகள் அதிகமாக இரைச்சல் போட்டுத் திரியும். பெரும்பான்மையான Macaw கிளிகளின் கூடுகள் மரத்தின் மீது 50 மீட்டர் தூரத்தில் இருக்கும். நீலம், மஞ்சல் கலந்த Macaw கிளிகள் ஆற்று ஓரங்களில் காய்ந்து போன பால்மா மரங்களில் கூடுகளைக் கட்டிக் கொள்ளும். சிகப்பு பச்சை நிறத்திலான கிளிகள் காடுகளில் இருக்கும் உயரமான மரங்களிலும், சிகப்பு நிறத்திலானவை இவ்விரு இடங்களையும் தேர்வு செய்து கூடுகளை அமைத்துக் கொள்ளும்.

இவ்வகைக் கிளிகளின் ஆயுட் காலம் 75 எனக் கூறப்படுகிறது. பெருவாரியான கிளிகள் 30 முதல் 45க்குள் இறந்துவிடுகின்றன. கழுகு போன்றவற்றுக்கு இறையாகவும் நோய் வாய்பட்டும் பல இறந்துவிடுகின்றன. குறுகிய எண்ணிக்கையிலான கிளிகள் மட்டுமே 70 வயது வரை உயிர் வாழ்கின்றன.
தற்சமயம் இவ்வகைக் கிளிகள் அழிந்து வரும் நிலையில் இருக்கின்றன. அவற்றுள் 9 வகை கிளிகளின் நிலை பலமாக பதிப்படைந்துவிட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இருக்கும் ஸ்பிக்ஸ் (Spix) வகை கிளிகள் விரைவில் அழிந்துவிடுமென கணிக்கப்படுகிறது.
தங்கச் சுரங்க வேலைகள் மற்றும் மர ஆலை வேலைகள் இவ்வின கிளிகளுக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமைகிறது. எப்போதும் போலவே சில அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்புக்கு பாடுபட்டு வருகிறார்களாம். அவற்றின் வசிப்பிடங்களுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தால் போதும் அவைகளே தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்பதினை மனிதன் உணரப்போவது எப்போது?
(பி.கு: 22.02.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)