Showing posts with label எனது பார்வையில். Show all posts
Showing posts with label எனது பார்வையில். Show all posts

Thursday, April 16, 2009

என்னைக் குழம்பச் செய்த உயிரோசையின் கட்டுரை!


நாமெழுதும் விடயத்தை நான்கு பேர் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறோம். திறமையைக் காட்டுகிறேன் பேர்வழி என்று எதுவுமே புரியாமல் ஒரு ஜந்துவைப் பிடித்து (கவனிக்க, எழுதி எனக் குறிப்பிடவில்லை) போட்டு வைப்பது படிப்பவர்களைத்தான் மன உளைச்சலுக்குள்ளாக்கிறது.

எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?

சமீபத்தில் இக்கட்டுரையைப் படித்தேன். ஒரு முறை இல்லை. இரண்டு மூன்று என்று
மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒரு சில இடங்களில் நிறுத்தி நிதானித்துதான் வாசித்தேன். எதனால் அந்நிலை? சரி மனிதன் ஏதோ வாசிப்பு சம்பந்தமாக எழுதி இருக்கிறாரே, நல்ல விசயமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கைதானே? ஒவ்வொரு வாசகனுக்கும் இந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும் தானே. ஆனால் அக்கட்டுரையை வரிக்கு வரி மீள் வாசிப்பு செய்தும் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

//எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில்தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது.//

இந்த வாக்கியத்தைப் பாருங்கள். குறைவாக, மெலிதான இவ்விரு சொற்களுக்களையும் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தி இருக்கிறார் எனும் குழப்ப நிலை ஏற்படுகிறது. குறைத்து எழுத வேண்டும் என்கிறாரா? எதைக் குறைத்து எழுத வேண்டும். வாக்கியத்தையா? சொற்களையா? அல்லது இரண்டு கட்டுரைகளைக் குறைத்து ஒரே கட்டுரையாக எழுத வேண்டுமா? சத்தியமாக புரியவில்லை.

இன்னும் பல வாக்கியங்களை இப்படி உதாரணப்படுத்த முடியும். எதனால் இப்படி எழுதுகிறார்கள்? மற்றவர்களுக்கு புரியக் கூடாது என்பதற்காகவா? இல்லை இதுவும் ஒரு வகை பின்னவீனத்துவ எழுத்தா? சில எழுத்தாளர்கள் உனக்குப் பிடிக்காவிட்டால் என்னைப் படிக்காதே என சொல்வது நாம் அறிந்ததே. மேலும் சிலரைக் கண்டிருக்கிறேன். நான் தமிழில் தானே எழுதி இருக்கேன். உனக்கு இது கூடவா புரியவில்லை. நீ தமிழ் துரோகி என்பார்கள்.

வார்த்தைகளை மடக்கிப் போட்டுத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக எழுதுவதில் யாருக்கு என்ன பயன்? எழுதியவர் மனத் திருப்தி அடைந்ததாய் நினைக்கலாம். எதற்காக எழுதினார்? வாசகன் படிக்க வேண்டும் என்பதற்காக தானே? அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி வாசகனுக்கு புரியாமல் போகுமானால் அவர் எழுதிய வார்த்தைகள் விரயமானது தானே? இதில் அவருக்கு என்ன லாபம்.

நீண்ட நெடு வாக்கியங்கள் எழுதுவதால் படிப்பவர்கள் ஆஹா என்னமா எழுதி இருக்கிறான் என மெச்சிவிடப் போவதில்லை”. சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு முழுமையாகப் பிடிபட்டதா என்பது தான் முக்கியம்.

நண்பரே, கொஞ்சம் புரியும்படியாக எளிய நடையில் தான் எழுதுங்களேன். நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன். இந்தப் பதிவை உங்களுக்கும் புரியும் படியாகவே எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். நான் என்ன எழுதுறதுனு எனக்குத் தெரியும், நீ உன் வேலையப் பார்த்துகிட்டு போடா”, என நீங்கள் சொல்வதாக இருந்தாலும் மனவ்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

============================================================
முன்பு செல்வேந்திரன் ஒரு பதிவிட்டிருந்தார். பத்திரிக்கையாளர்களுக்கு ஆதித்தனாரின் குறிப்புகளை பற்றி எழுதி இருந்தார். பாத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல எழுதுவோர் அனைவருக்கும் அது பயனானதாய் அமையும் என்றே கருதுகிறேன்.

1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.

2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.

3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.

4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.

5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.

6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.

7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.

8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.

10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.

நன்றி: செல்வேந்திரன்

மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள் - செல்வேந்திரனின் மற்றுமோர் பதிவு.