Monday, December 09, 2013

அங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்

பொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு

’May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls)


'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா? வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது. 


1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே. 

கம்போடிய நாணயம் - ரியல்
மெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் இருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.

நாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.

டிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி
‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி? நல்லவிதமானதா?’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’. 
விடுதியின் வெளிபுரம்
நாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ்தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்டியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே. 

கம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். 

உங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. 

Curry Walla உணவகம்
Curry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன். 

சியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வாய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை. 

நுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம். 

முதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:

‘the wall of the city are about twenty li (10 kilometers) in circumference. there are five gateways, each of them with two gates, one in front of the other.'

'in the center of the capital is a gold tower, flanked by twenty or so stone towers and hundred or so stone chambers'. A Record of Cambodia The Land and its People - Page 47&48 (the city and its walls)

பயணங்கள் தொடரும்...

11 comments:

Subha said...

Seekirame adutha paguthiyai thodarungal.

ஸ்வாமி ஓம்கார் said...

உங்கள் எழுத்து நடை சுவாரசியம். மீண்டும் செல்வதை போல உணர்வு. அடுத்தடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த வாரத்தில் பதிவிடுகிறேன்.

@ ஸ்வாமி ஓம்கார்

மிக்க நன்றி சுவாமி... குளன் நீர்வீழ்ச்சியில் நீங்கள் தவம் புரிந்ததைக் கண்டேன்.நீங்க அந்த காலத்தில் பொறந்திருக்கனும்... பல சடங்குகளை நடத்தி வைத்திருக்கலாம்... ஹம்ம்ம்ம்ம்.....

ko.punniavan said...

அந்த ஊரைப்பற்றி முன்னமேயே தெரிந்துவிட்டுப் போவது பல சிரமங்களைத் தவிர்க்க உதவும். தொடருங்கள்.

sathiya said...

thanks again for your fast second write up... make me eagerly waiting for next one... i think its totally gonna help me in my april trip... thx viki

துளசி கோபால் said...

அருமை!

RAHAWAJ said...

நல்லாகீதுபா நம்மளும் ஒரு தபா போய்கினு வருனுபா

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோ.புண்னியவான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. உபசாரமான ஊர். தெரிந்து வைத்துச் சென்றால் இனிமையான பயணமாக அமையும்.

@ சத்தியா

தொடர் வாசிப்புக்கு நன்றி. விரைவில் அடுத்த பகுதியை எதிர்பாருங்கள்.

@ துளசி கோபால்

நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும் பல தகவல்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.

@ ஜவஹர்

இன்னாமா ஊரு தெர்மா சார்... டக்கரா கீது...

Tamilvanan said...


'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா? வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம்.//
இதையெல்லாம் காலம் காலமாக அனுமதித்த இந்த மதம் ஒரு எழுத்தாளனை மட்டும் வஞ்சிப்பது ஏன் ?
கண்ணனை காதலித்த கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் இந்த கூட்டம் காளியை காதலித்த எழுத்தாளனை வஞ்சிப்பது ஏன்?

Dr. முனீஸ்வரன் குமார் said...

'Zhentan' எனும் சடங்கு முறையைப் பற்றி முழுமையாகச் சொல்லமுடியுமா? இந்து மதத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நம்பூதிரிகளுக்கும் 'Zhentan' சடங்குக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைப் பற்றிய தனிக் கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். எளிய நடையில் சுவாரசியமான எழுத்து. வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

நீங்கள் எந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிகிறது. நீங்கள் சொல்வது இன்றய இந்து மதத்தை. நான் குறிப்பிடும் காலத்தில் இந்து எனும் தனி மதம் இருந்ததாக தெரியவில்லை. சைவம், வைணவம், புத்தம் என்பதாகவே கூறப்படுகிறது.

மாற்றங்களால் ஆனது காலம். இன்று வஞ்சிக்கும் நாளை கொஞ்சிக்கும். காலத்தின் கொடுமை.

@ முனிஸ்வரன்

புத்தகத்தின் அனைத்துப் பகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுப்பது சட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துமா என ஐயம் ஏற்படுகிறது. இல்லையெனில் பிரச்சனை இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.