புத்தகம்: அறம்
ஆசிரியர்: ஜெயமோகன்
நயம்: சிறுகதை தொகுப்பு (13 கதைகள்)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம்
சிறந்த நூல்கள் வாசகனுக்கு நல்ல நண்பனாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எங்குச் சென்றாலும் ஓரிரு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொள்வது எனது வழக்கம். நேரம் கிட்டுமாயின் சில பக்கங்களையாகினும் புரட்டி படித்துவிட முடியும். எத்தனை நூல்களை வாசித்தாலும் அதில் சில மட்டுமே வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன.
சமீபத்தில் படித்ததில் மிக கவர்ந்த நூலில் ஒன்று அறம். ஒவ்வொரு கதையும் அற்புதமாய் தொகுக்கப்பட்டுள்ளது. அறம் சிறுகதை தொகுன்பின் அனைத்துக் கதைகளும் ஜெயமோகனின் தளத்தில் இலவசமாக படிக்க முடிகிறது. இருந்தும் இந்நூலை வாங்கிச் சேகரிப்பதில் கொஞ்சமும் நட்டம் இல்லை. இது நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய நூலாகும்.
ஆரம்ப காலத்தில் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கும் போது அவரின் வட்டார வழக்கு அயற்சியை ஏற்படுத்தியதுண்டு. நாள்பட அவரின் எழுத்து நடை பிடிபட்டதும் தடையற்ற வாசிப்புக்கு இலகுவாகவே இருந்தது. முதலில் முழுமையாய் வாசித்தது அவரின் ஊமைச் செந்நாய், ஆயிரம் கால் மண்டபம், இன்னும் சில சிறுகதை தொகுப்புகளாகும்.
ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகிக் இருந்து வெறு ஒரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பை கொண்ட படைப்பு அது. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. ஏழாம் உலகம் நாவலுக்கு தனியொரு புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றே நினைக்கின்றேன்.
அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.
அறம் நூலினை வாசித்து முடித்து ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலும் அவரின் பதில் மடலும் உங்கள் பார்வைக்கு:
அன்பின் ஜெயமோகன்,
உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.
சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.
நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.
தாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.
பூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.
நான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.
உங்கள் படைப்பிற்கு நன்றி.
அன்புடன்,
விக்னேஷ்வரன் அடைக்கலம்.
அன்புக்குரிய விக்னேஷ்வரன்,
தங்கள் கடிதத்துக்கு நன்றி.
உண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாயகர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
ஜெ
கதைகளை இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?page_id=17097
1 comment:
வேலை பளு காரணங்களுக்காக கதை சிறுகதைகளை படிக்க இயலாமல் போனது. உங்கள் விமர்சனம் படிக்க தூண்டுகிறது.விரைவில் படிப்பேன்
Post a Comment