Wednesday, November 24, 2010

நீங்கள் எந்த பக்கம்?


இடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிகுந்த இடங்களை தேடி அலைந்தான். அன்று முதல் இன்று வரையிலும் துரத்தப்படும் வாழ்க்கையை தான் மனிதன் வாழ்ந்து வருகிறான். இப்படியான துரத்தல்களால் ஏற்படுத்தப்படும் நவீன அடிமைத்தனங்கள் எக்கச் சக்கமாக புதுப் புது யுத்திகளில் வளர்ந்து வருகின்றன.

ஒருவருக்கு தெரிந்து நடப்பதை மட்டும் மனிதக் கடத்தல் எனும் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. இன்றளவிலும் தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பவர்களும் உண்டு. மனிதர்களால் செய்யப்பட்டு வந்த வேலைகள் பலவும் இயந்திரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் சில அத்தியாவசிய அல்லது அடிப்படை வேலைகளுக்கு மனிதனின் பலம் தேவைப்பட்டுள்ளது. மனிதன் ஏனைய பொருட்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தவன். உணர்ச்சிகள் கொண்ட உயிரினம். மனிதர்களை மற்றொரு மனிதன் ஆக்கிரமிப்பு செய்து தனக்காக வேலையில் ஈடுபடுத்தும் பொழுது விருப்பம் இல்லாமல் போகும்பட்சத்தில் பல பிரச்சனைகள் எழுகிறது.

மக்கள் தவிர்க்க நினைப்பது எதுவாக இருக்கக் கூடும். எடுத்த எடுப்பில் நம் நினைவிற்கு வருவது வறுமை, பசி, பட்டினி எனும் வார்த்தைகளாக இருக்கலாம். சுதந்திரம் என்னும் நிலையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. நல்ல வேலை, உடுத்த உடை. உண்ண உணவு எனும் அடிப்படை வசதிகளுக்கே பங்கம் ஏற்படும் போது நிதி தேடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. குப்பை மேடும் பண சுரங்கமாக ஆக்கப்பட்ட காலம் இது. எப்படியாவது எதிலாவது பணம் ஈட்ட வேண்டும் எனும் என்னமே பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

வியாபார சந்தைக்கான தேவைகள், கடன் பிரச்சனைகள், பாலியல் என மனித கடத்தலுக்கான காரணங்கள் நீள்கின்றன. வேலைக்கான வாய்ப்புகள் குறைந்து போகும் போது வறுமை பெருக்கெடுக்கிறது. பணத் தேடலின் முழுமுயற்சியில் தனது உரிமைகள் மறக்கப்படுவதும் மறைக்கப்படுவது இக்குற்றச் செயலுக்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொடுக்கிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தனது நாட்டில் வாழ்வதைக் காட்டினும் பாதுகாப்பு மிகு ஏனைய நாட்டின் கள்ளக் குடியேறிகளின் தடுப்பு முகாம்களில் இருப்பது மேல் என கருதும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கற்பழிப்பு, துன்புறுத்தல், வற்புறுத்தி வேலை வாங்குதல், சிறைப்படுத்துதல் என்பன மனித கடத்தலின் விளைவுகளாக உள்ளன. ஓரிரு மாதங்களுக்கு முன் தலைநகரில் சுமார் 50க்கும் அதிகமான சீன தேச வயோதிகர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காராணத்திற்காக பிடிக்கப்பட்டனர். விசாரணையின் சமயம் அவர்கள் யாவரும் ஒரு ஒரு முதலாளியின் கீழ் பிச்சையெடுக்கும் வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

கிரிமினல் குற்றங்களில் ஆயுத கடத்தல் மற்றும் போதை பொருளுக்கு அடுத்தபடியாக உள்ளது மனித கடத்தல். இதன் இலாபம் ஆண்டுக்கு 44.3 பில்லியனுக்கும் அதிகமென கணக்கிடப்படுகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் தலைநகரில் நடந்த இன்னுமொரு சம்பவம் உள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை முன்னரே விலை பேசி அது ஈன்றதும் விற்பனை செய்துவிடுவார்கள். இதில் சில வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களை தேடி பல ஆயிரக் கணக்கில் விலை பேசி விற்றுவிடுவார்கள். கொண்டுவரப்படும் இந்தோனேசிய பெண்கள் குழந்தை பிறக்கும் வரையினும் அவர்களது கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்கள். மனமுவந்து பணத்திற்காக ஈடுபடும் பெண்களே இதில் அதிகம். காரணம் வருமை.

பாதிக்கப்படுவோரில் பொரும்பாலோனோர் தகவல் தெரிவிப்பதில்லை. இது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான பயத்தினாலும் உண்டாவது. மனித கடத்தலில் அதிகமாக பாதிகப்பட்டிருப்பது அந்நிய நாட்டினர் என்பதால் மொழி பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக அறிமுகம் இல்லாத இடத்திற்கு வேலைக்கு வருபவர்கள் சம்பளம் மறுக்கப்படலாம், குடியுரிமை பத்திரம் முதலாளிகள் வசம் வைத்துக் கொள்ளப்படும், அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படலாம், கூறியதை காட்டினும் குறைவான வருமானம் கொடுக்கப்படலாம். இவையாவும் மனித கடத்தல் சட்டத்தின் கீழ் புகார் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாகவே ஓரிடத்தில் பாதிக்கப்படுவோர் வேறிடங்களுக்கு ஓடிவிடுகிறார்கள். இப்படி ஓடிச் சென்று இன்னும் மோசமாக இடங்களில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு. குடியுரிமை சான்றிதழ்களை தவறவிட்டவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வது என்பது சிரம காரியம் தான். இப்படிபட்டவர்கள் தன்னை அழைத்துவந்த எஜமானர்களின் குற்றத்தை தன் வசம் எற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அதிகபடியான மனித கடத்தல் சம்பவங்கள் என்பதில் ஆண்கள் அதிக நேரம் விரும்பமின்றி உழைக்க நேர்வதையும். குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட செய்வதாகவும் உள்ளது.

மனித கடத்தல்கள் நேர்வதன் காரணம் என்ன? மேற்கூறியதைப் போல் சில ஆய்வு நிறுவனங்களின் கருத்தின் படி இதன் வழி கிடைக்கும் இலாபம் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள். கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இக்குற்றச்செயல்கள் வளர்ந்துவரும் அல்லது ஏழை நாடுகளில் மட்டும் நடப்பவை அல்ல இப்பட்டியலில் நாம் பார்த்து வியக்கும் வளர்ந்த நாடுகளும் உள்ளன.

ANTI-TRAFFICKING IN PERSONS ACT எனும் மனித கடத்தல் தடுப்பு சட்டத்தில் TRAFFICKING எனும் பதத்தை நாம் புரிந்துக் கொள்வது மிக அவசியம். சட்டத்திற்கு புறம்பாக ஆட்களை அழைத்துவருதல், அடைக்கலம் கொடுத்தல், வேற்றிடங்களுக்கு இலபம் பொருட்டு அனுப்பி வைத்தல், சுதந்திரமின்றி காவலில் வைத்திருத்தல், ஏமாற்றி வேலை வாங்குவது அல்லது அழைத்து வந்திருப்பது, என 22 முக்கிய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்தம் 67 சட்ட விதிகள் இதில் அடக்கம்.
மனித கடத்தல் தடுப்பு சட்டத்திற்கு வித்திட்டது அமெரிக்கா. அமெரிக்கா எது செய்தாலும் அதில் சில மந்திர தந்திர வேலைகள் நிச்சயம் உண்டென உலக நாடுகள் பராபட்சமின்றி சாடுவது வழக்கமாகி போன ஒன்று. அதன் அடிப்படையில் இச்சட்டத்தின் அமலாக்கம் என்பது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நவீன முறையில் ஏனைய நாடுகளின் மீது செலுத்துகிறது என்பதாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் எந்த நாடுகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அமெரிக்கா நிர்ணயம் செய்கிறது. இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. சட்ட திட்டங்களை பின்பற்றாத நாடுகளை முன்னிறுத்தி கேள்வி கேட்கவும் செய்கின்றன. இச்செயலினால் ஒரு சில நாடுகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது டாலர் தேசம்.

மனித கடத்தல் தடுப்பு சட்டம் என்பது ஒரு பக்கம் சாய்வு கொண்ட தராசு என்பது ஒரு சில சட்ட நிபுணர்களின் வாதம். இதில் முதலாளிவர்கத்தினருக்கு அதிகபடியான தண்டனைகளும் தொழிலாளிக்களுக்கு அதிகமான பதுகாப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பிடிபடுவோர் அதில் விடுபடும் பொருட்டு இச்சட்டத்தின் துணை கொண்டு தனது குற்றத்தை தன் முதலாளியின் மீது சுமத்தும் வாய்ப்புகள் உள்ளன.

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி - இக்கடத்தல் பல நாடுகளில் நடக்கின்றன - மலேஷியா சிங்கப்பூரில் அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் இருந்து பலர் இம்முறையில் கடத்தப்படுகின்றனர். என்ன செய்வது. காசு தேடி அலையும் மக்கள் இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

மீனாட்சி சுந்தரம் said...

கட்டுரை சிறப்பு..மனித கடத்தல் என்பது விபசாரம் பழமையான தொழில்களுள் ஒன்று

Kalaiyarasan said...

கட்டுரை அருமை. தமிழ் மொழியைக் கையாள்வது முன்னைய பதிவுகளை விட சிறப்பாக வருகின்றது. தங்களின் ஆழமான வாசிப்பு காரணம் என நினைக்கிறேன். பாராட்டுகள். பொது வாழ்வில் உள்ள பலருக்கு தெரியாத, புரிந்து கொள்ள முடியாத பிரச்சினை. அநேகமாக ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தான் பணக்கார நாடுகளுக்கு கடத்தப் படுகின்றனர். ஏழை நாடுகளின் ஏழைகள் மட்டுமே இதனால் பாதிக்கப் படுவதில்லை. ஏழை நாடுகளை சேர்ந்த ஓரளவு வசதியானவர்களும் அதிக பணம் சேர்க்கும் ஆசையினால் பாதிக்கப் படுகின்றனர். அதற்காக தங்களை தாங்களே கடத்தலுக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். மேலை நாடுகளில் மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்டம், சில நேரம் அகதிகளாக வருவோரையும் பாதிக்கின்றது. ஏனெனில் விசா கட்டுப்பாடுகள் முன்னரை விட அதிகம். ஒரு ஏழை நாட்டை சேர்ந்த சாமானியன் எந்தவொரு பணக்கார நாட்டிற்கும் விசா எடுக்க முடியாது. அந்த தருணத்தில் சட்டவிரோத கடத்தல்காரர்களின் உதவியை நாடுவது மட்டுமே அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

இல்லை ஐயா, இந்தியாவிலும் அதிகமான மனித கடத்தல்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக சிறுவர் சிறுமியர்கள் பாலியல் மற்றும் பிச்சையெடுக்க கடத்தி விற்பனை செய்யப்படுகிறார்கள். தற்சமயம் நான்கம் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

@ மீனாட்சி சுந்தரம்

கருத்துக்கு நன்றி தம்பி.

@ கலையரசன்

நீங்கள் கூறுவது உண்மை. சில நாடுகளில் இதனால் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. பணக்கார நாடு ஏழை நாட்டுக்கு செல்வது சுலபம். அங்கு சலுகைகளும் உண்டு ஆனால் ஏழை நாட்டினர் பணக்கார நாட்டிற்கு வரும் சமயம் அவர்கள் நிஜத்தில் பணக்காரர்களாக இருப்பினும் உரிய நன்மதிப்பை பெற முடிவதில்லை.

மு.வேலன் said...

நல்ல பதிவு. மேலும் தெரிந்துக் கொள்ள...
http://www.humantrafficking.org/

குணாளன் said...

super

குணாளன் said...

vanakam

குணாளன் said...

கட்டுரை மிகவும் அருமை.

Unknown said...

யார் எந்த பக்கம் இருந்தா என்ன? அடுத்த பதிவு போடு தல

ம.தி.சுதா said...

மிகவும் ஆழமான விடயப் பகிர்வுங்க
மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்