Showing posts with label najib. Show all posts
Showing posts with label najib. Show all posts

Friday, April 03, 2009

ஆட்டத்தை ஆரம்பிக்கும் அரசியல் மாற்றம்!!

(துன்கு அப்துல் ரகுமான் -ஆட்சி 1957-1970)
மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது. விருப்பம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் மாற்றங்களை மறுக்க முடியாது என்பது தான் உண்மை. இயற்கை வழிப்பாடு இறை நம்பிக்கையெனும் பெயரில் மாற்றம் கண்டது. குமுகாய வாழ்க்கை அரசியலாக மாற்றம் கண்டது. பண்ட மாற்று பண மாற்றமாக அமைந்தது.

1976-ஆம் ஆண்டு மலேசியாவின் இரண்டாம் பிரதமரான துன் அப்துல் ரசாக் இரத்தப் புற்று நோயினால் பாதிப்படைந்து இறந்தார். அக்காலகட்டத்தில் அவரின் மூத்த மகனான ட்த்தோ ஸ்ரீ நஜிப் அவர்களை மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நஜிப் 23.07.1953-ஆம் ஆண்டு பிறந்தவர்.

தந்தையின் மரணத்தின் சமயம் அவருக்கு 23-வயது தான். தந்தையின் இறப்பிற்கு பின் அவரின் தேர்தல் பகுதியான பகாங் மாநிலத்தின் பெக்கானில் நஜிப் போட்டியிட எத்தனித்தார். அதற்கான வாய்ப்பும் இலகுவாக அமைந்தது.

இடைத் தேர்தலில் நஜிப் வெற்றி பெற்றார். அது அனுதாபத்தின் பேரில் கண்ட வெற்றி என்பதாக மக்கள் பேசியதை மறுக்க முடியாமல் தான் இருந்தது. தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு நடை பெற்ற பொது தேர்தலில் பாஸ்(மலேய இஸ்லாமிய கட்சி) கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.

(துன் அப்துல் ரசாக் -ஆட்சி 1970-1976)
குடும்பத்தில் அரசியல் பின்புலம் தென்பட்டாலும் ஆரம்பக் காலத்தில் நஜிப் அரசியலில் அதீத வளர்ச்சியைக் காட்டவில்லை. ஆரம்ப காலம் தொட்டு அம்னோ கட்சியின் பல நிலைகளில் பதவி வகித்திருக்கிறார். இதன் பொருட்டு நஜிப் தனது அரசியல் ஆதிக்கத்தை கட்சியின் அடிமட்ட நிலையில் இருந்து செதுக்கி இருக்கிறார் என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பெக்கான் பகுதியின் அம்னோ இளைஞர் அணி தலைவராக 5 ஆண்டுகளுக்கு 1976-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு பெக்கான் பகுதிக்கு இணை தலைவராகவும் 1982-ஆம் ஆண்டு பெக்கான் பகுதி தலைவராகவும் பகாங் மாநில அம்னோ தொடர்புக் குழு இணை தலைவராகவும் பதவி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து மேலும் சில அரசாங்க பதவிகளை 1982-ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். 1982-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சட்மன்ற உறுபினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(துன் ஹுசேன் ஓன் -ஆட்சி 1976-1981)
அதன் பின் 1986-ஆம் ஆண்டு வரையில் பகாங் மாநில முதல் அமைச்சர் பதவியை நிர்வகித்தார். அதே ஆண்டு மத்திய அரசினால் விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 1998-ஆம் ஆண்டிற்கான கமென்வெல்த் போட்டி நடத்த மலேசியா தேர்வு பெற வாய்ப்புகள் தேடி கொடுத்தார். 1990-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சராக பதவி ஏற்றார் நஜிப்.

1993 மற்றும் 1996 ஆம் ஆண்டு அம்னோ கட்சி தேர்தலில் 1202 வாக்குகள் பெற்று கட்சியின் இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ஆம் ஆண்டும் கட்சியின் பெருவாரியான ஓட்டுகளை பெற்றார். இருப்பினும் 1999-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் நஜீப் ஸ்லிம் மெஜோரிட்டி எனப்படும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் மிக மோசம வாக்குகளை பெற்றது அக்காலகட்டமாக தான் இருக்க முடியும்.

அச்சமயம் துணை பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் வெளியேற்றப்பட்ட காலமாகும். இருப்பினும் அதன் பின் வந்த தேர்தல்களில் நஜிப் தனது நிலையை தற்காத்துக் கொண்டார். ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான நஜிப் அம்னோவில் சிறந்த சேவையாளர் என போற்றப்படுபவர்.


(துன் டாக்டர் மகாதீர் முகமட் - ஆட்சி 1981-2003)
நஜிப் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியினை கோலாலம்பூரின் சொண்ட் ஜான் பள்ளியில் பயின்றார். அதன் பின் இங்கிலாந்தின் மொல்வன் பாய்ஸ் கல்லூரியிலும், நார்டிங்கம் பல்கலைக்கழகத்திலும் பயின்று பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்.

2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஜிப் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கையில் 33 வருடங்களை கடந்தவர் நஜிப். இக்காலகட்டங்கள் நாட்டிற்கு மிகச் சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கான தகுதிகளை அவருக்கு வழங்கி இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். நாட்டின் அரசியலுக்கு பூகம்பமாக அமைந்தது கடந்த பொதுத் தேர்தல். காரணம் மக்களின் நம்பிக்கையின்மை என்று கூட சொல்லலாம். இன்று வரையினும் பல குளறுபடிகள் இருந்தபடியே இருக்கிறது.

இன்றைய நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை திருப்திகரமாக அமைத்துக் கொடுப்பதன் வழியே நாட்டின் சுபிட்சமான ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதனை மறுக்க இயலாது. பொருளாதார நெருக்கடிகள் நாட்டின் முதுகெழும்பை முறுக்கிக் கொண்டிருக்கின்றன. குற்றச் செயல்கள் பெருக்கம் காண்கிறது. வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. இப்பிரச்சனைகளுக்கு சரியான அடித்தளம் அமைந்தாலன்றி அரசியல் பிரச்சனைகள் சுலபத்தில் அமைதி கொள்ளாது.
(துன் அப்துல்லா அஹ்மட் படாவி - ஆட்சி 2004-2009)
ஒவ்வொரு புதிய பிரதமரின் வருகையின் போதும் மக்கள் எதாகினும் புதுமையை எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த ஐந்து பிரதமர்களும் தங்களுக்கென்று தனித்தன்மையை நிலை நாட்டி இருக்கிறார்கள். துன் மகாதீர் தமது ஆட்சியின் சமயம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார். அதன் பேரில் நவீனத்துவத் தந்தை என போற்றப்பட்டார். அதன் பின் டத்தோ படாவியின் ஆட்சியில் மீண்டும் விவசாயத்திற்கு அதிக முக்கியதுவம் செலுத்த வழியுறுத்தப்பட்டது. இந்நிலை மக்களால் முழு மனதாக ஏற்கப்பட்டதா என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

இன்று நாட்டின் 6-வது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் டத்தோ நஜிப் முதல் கட்டமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. இன்றய மலேசிய அரசியல் நிலை பல வகையினும் மேம்பாடடைந்திருக்கிறது.

மக்கள் ஒவ்வொரு அரசியல் நிகழ்வினையும் முன் நிறுத்திச் சிந்திக்கிறார்கள். இதில் இடது சாரி சிந்தனைகள் மறுக்க முடியாத ஒன்றாகும். அவற்றினை நன்முறையில் கையாள்வது மிக அவசியம். மேலாதிக்க கட்டுபாடுகள் அரசுக்கெதிரான சிந்தனையாளர்களை அதிகரிக்கவேச் செய்யும் என்பது கடந்த நாட்களில் நாம் கண்ட உண்மை.
(டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் - 2009 - இனி)
கடந்த பொது தேர்தலின் சமயம் 5 மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கு கை மாறியது. இது மலேசிய சரித்திரத்தில் மிக முக்கியமான மாற்றமாகும். மக்கள் கடந்த கால ஆட்சியில் திருப்தி கொள்ளாததும் அல்லது புதிய ஆட்சி முறையில் விருப்பம் கொள்வதையும் தானே இது குறிக்கிறது. மாநில அளவிலான இம்மாற்றங்கள் மத்திய அரசிலும் மக்களால் விரும்பப்படலாம். அவ்வகையான மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் களைவதற்கும் நஜிப் தனது ஆட்சியில் அரசியல் சீரமைப்புகளை செவ்வனே செய்தாக வேண்டியது இன்றியமையாததாகும்.

பொருளாதாரத் துரையில் பட்டம் பெற்ற முதல் பிரதமராக நஜிப் பதவி ஏற்றிருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளை மட்டுமின்றி தமது கட்சியையும் கவனிப்பு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அம்னோவின் சிறு குளறுபடியும் அக்கட்சியை மட்டுமின்றி தேசிய முன்னணியில் இருக்கும் ஏனைய கூட்டனி கட்சிகளுகளையும் சேர்த்து சிதறடிக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.

பல்லின மக்களுக்கும் சிறப்பான தலைவராக அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களோடு செயல்படுவார் என்று நம்புவோம். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள். அரசர்கழகு செங்கோன் முறைமை.