
கடைநிலை மக்களின் வாழ்வில் ஒன்றிய சில கலாச்சாரங்கள் சுவாரசியம் மிகுந்தவை. மன அமைதிக்காகவும் உல்லாசமாக பொழுதைக் கழிக்கவும் ஆரம்பம் முதலே மனிதன் பல வழிகளை கண்டறிந்து வந்திருக்கிறான். காலப்போக்கில் 'ஃப்பியூடலிசம்' எனும் கட்டமைப்பில் பல பிரிவினர்களாக வகுக்கப்பட்டது நாம் சொல்லிக் கொள்ளும் நாகரீக வளர்ச்சியின் காரணம் தான். வலுத்தவன் உயர்ந்தவன் என்றும் வலுவற்றவன் கடைநிலையன் என்றும் கருதப்பட்டனர். உணர்ச்சிகள் ஒன்று தான். எவராக இருந்தாலும் மன மகிழ்ச்சியும் அமைதியும் தேவைப்படுகிறது.
தன் நிலைக்கும் சக்திக்கும் ஏற்ப, தன் பண்பாட்டிண் வழி அறிந்ததை பொழுதைக்கழிக்கவும், சமுதாய கூடலுக்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'எவளுஷன் ஃப்ரேசேஸ்' எனப்படும் இதன் வளர்ச்சி பல நிலைகளில் உண்டானது. அதை விளக்கிப் பேசி மாளாது. கலைகள் உண்டானதின் ஆரம்ப நிலை இது எனக் கொள்ளலாம்.
கலைகள் ஒவ்வொரு சமூகத்திலும் பல நிலைகளில் பல பிரிவுகளாக விரிந்துக் கிடக்கின்றன. ஆசிய கண்டத்தில் அந்நியர் கைகளில் அகப்படாத நாடென தாய்லாந்து பிரசித்துப் பெற்று விளங்குகிறது. இவர்களின் கலைகளில் உலகம் அறிய புகழ் பெற்றவற்றுள் 'தாய் கிக் பாக்சிங்' மற்றும் 'முய் தாய்' என்பதினை குறிப்பிட்டு சொல்லலாம். தாய்லாந்தியர்களின் விட்டுக் கொடுகாத மனப்போக்கு இவற்றின் உலகளாவிய வெற்றிக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
வாரத்தில் சில தினங்கள் கடலோரங்களில் ’தாய் கிக் பாக்சிங்’ நடைபெறும். நன்முறையில் பயிற்சிப் பெற்ற தாய் பாக்சிங் வீரன் சுமார் ஆறடி உயரம் இலகுவாக எகிரிக் குதிக்கவும் தனது குதிக்காலில் குதித்தபடியே சில மணி நேரங்கள் தன் உடல் எடை முழுதினையும் தாங்கி நிற்கவும் வலு பெற்றவனாக இருக்க வேண்டும். இந்த பாக்சிங் பயிற்சியின் ஆரம்ப நிலைகளை நாம் எளிதில் காணலாம். பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி முறையினை காண சாதாரண மக்களுக்கு அனுமதி கிடைப்பது சிரமம்.
ஆறு அல்லது ஏழு வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் உதட்டுக்கு சிவப்புச் சாயமிட்டு, கன்னங்களுக்கு வண்ணம் பூசி, கண்களுக்கு மையிடப்பட்டு திருநங்கையர்களுக்குறிய அடையாளங்களோடு இளம் ’தாய்பாக்சிங்’ வீரனாக விளையாட்டு களத்தில் இறக்கப்படுகிறான். ''நீயும் அந்த மாதிரி புகழ் பெற வேண்டும்" என வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறார்கள். அச்சமயம் அங்கே தோன்றும் அவள், அச்சிறுவனின் மேல் இருக்கும் கோமாளித் தனமான அலங்காரங்களை அகற்றிவிட்டு "நீ நீயாக இருக்க கற்றுக் கொள். நீ உயர்வடைவாய். உனக்கு கடவுளின் ஆசி கிடைக்கட்டும்" எனச் சொல்கிறாள். 'பியூட்டிபுஃல் பாக்சர்' எனும் தாய்லாந்திய திரைப்படத்தின் ’கிளைமக்ஸ்’ காட்சி இது.

விழிம்பு நிலையில் இருக்கும் ஒரு தாய்லாந்து சிறுவன் தன் விருப்பப்படி வாழ நினைக்கிறான். எதிர்மறையான பாலியல் உணர்வுகளை ஆரம்பம் முதல் உணர்கிறான். தன் விருப்பத்துக்கு செயல்பட பல தடைகள். காரணம் சமூகத்தைச் சார்ந்த வாழ்க்கை. கடைநிலையில் வாழும் மனிதன் அடுத்தவருக்காவும் தன்னை வாழ்ந்து கொள்ள முற்படும் நிலை அவனது சமூகத்திலும் இருக்கவே செய்கிறது. கையில் கிடைக்கும் உதட்டுச் சாயத்தை, குளியலறைக்குள் சென்று சில நொடிகள் பூசிப் பார்த்து இரசிக்கிறான். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதே எனும் பயத்தில் அதை விருட்டென அழித்துவிட்டு வருகிறான்.
ஆண்கள் இருக்குமிடத்தில் சட்டையை கழட்டக் கூசுகிறான். பெண்களின் ஆடையை அணிந்து கொள்ள விருப்பம் கொள்கிறான். நினைப்பதை அடைய முடியாத நிலை. அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பணம் இருந்தால் மட்டுமே முடியும். உலகத்தில் பல தேவைகளுக்கு அது தானே பதிலாக இருக்கிறது.
பாக்சிங்கில் ஈடுபட அவனுக்கு ஆர்வமிருக்கிறது. தான் திருநங்கையாக வேண்டும், சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், பெண் ஆடை அணிய வேண்டும் எனும் அலாதியான எண்ணமே அவன் வளர்ச்சிக்கு வித்தாகிறது. ஏளனங்களையும் கேளிப்பேச்சுகளையும் மென்மை குணம் கொண்ட ஒரு வீரனாக மனதில் வலிகளோடு ஏற்றுக் கொள்கிறான். அது அவனது இலட்சியத் தடைகள். கடந்தாக வேண்டிய நிலையெனக் கருதுகிறான்.
படத்தின் காட்சி அமைப்புகள் அருமையாகவே இருக்கிறது. தாய்லாந்தின் கிராம வாழ்க்கை, ஆசிரம வாழ்க்கை, விளையாட்டு நடக்குமிடம், இரவுச் சந்தை என இரசிக்கும் வகையில் உள்ளன. நாயகனுக்கான திருநங்கையரின் குரல் இயல்பாக இருக்கிறது. மென்மையும், அமைதியும் நிறைந்த பேச்சும் காட்சிகளுக்கு ஏற்ற இசை பின்னணியும் படத்தில் ஒன்றித்திருக்க வகை செய்திருக்கிறதென்றால் மிகை இல்லை.
ஜப்பானில் நடைபெறும் பாக்சிங் போட்டியில் வெற்றியடைகிறான். இரவில் அவனை மகிழ்விக்க ஒரு மங்கை அனுப்பப்படுகிறாள். அவள் உடல் காட்டி நிற்க ''நான் இதற்குத் தகுதியற்றவன்" என அவளை கட்டி அழும் காட்சிகள் நம் மனதை உலுக்கச் செய்கிறது. மனிதனின் உணர்ச்சிகள் எவ்வளவு மென்மையானது என்பதை அச்சில நொடிகளில் நாமும் உணர முடிகிறது.
திருநங்கையர்கள் மீது ஒரு பரிதாப நிலை ஏற்பட இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் சமூகத்தில் அவர்களும் ஒரு அங்கத்தினரே. அவர்களுக்கான உரிமையை அவர்கள் எடுத்துக்கொள்ள கூட கூசும்படியான நிலையை சமூகம் உருவாக்கிவிட்டது. பாலியல் மாற்றத்தை தீண்டத்தகாத ஒன்றாகவே நாம் காண்கிறோம்.
பாலியல் உணர்ச்சிகளின் மாற்றத்தை உணர்ந்த ஒருவர் ஒன்று தன் உண்மை அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அல்லது சமூகத்தை ஒதுக்கி ஒடுக்கப்பட்ட தனி உலகில் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இல்லையேல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ தன்னை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அந்நிலையை அடைய அவர்கள் போராட வேண்டியது கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் ஒடுக்கும் பார்வையால் இப்படியாக தனக்குள் இருக்கும் திறமைகளையும், உணர்வுகளையும் வெளிகாட்ட முடியாமல் தனக்குள் தன்னை புதைத்துக் கொண்டு அடுத்தவருக்காக வாழ்ந்துக் கொண்டிருப்பவர் எத்தனையோ.
** இப்பதிவினை 2009-ஆம் ஆண்டில் எழுதினேன். இப்பொழுது மீள் பதிவு செய்யப்படுகிறது.