Wednesday, February 19, 2014

அங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை

நீரில் இருக்கும் லிங்க சிலைகள்
(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6


நமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.

இன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

நாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும் 
​​
ஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:

இயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்
இக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட்ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.

மகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me
இரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.
மறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.

சியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
Kbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூரம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me
பசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய விரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.

அது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

மகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me

தமிழ் நாளிகை செய்தி. Source: facebook
மகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.

Kbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..

அதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று
இந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள்? நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும் நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.
ஆற்றில் சிலைகள்
'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா?' ச்சேன் வினவினார்.

'நிஜமாவே 1000 தான் இருக்கா? நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.

'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'

'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.

1000 லிங்கங்கள் ஒரு பகுதி
ஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்
கு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.

இங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.
கபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி
மலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.

பயணங்கள் தொடரும்...

5 comments:

ko.punniavan said...

50 கிலோமீட்டருக்கும் தூரத்திலிருந்தும் கூட சிற்பக் கற்கள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். சிவனுக்கு 1000 மனைவிகள் இருந்திருக்கலாம்தான். எல்லாம் கற்பனைக் கதைகள்தானே. ஆனால் பார்வதிக்கும் இன்னொரு உறவு இருந்ததும்,அதன் வழி அவருக்கு ஒரு குழந்தை இருநததும் படித்திருக்கிறேன். சிவனுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை!
நல்ல விறு விறுப்பு விக்கி. நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சியம் ரிப்பின் மிகவும் பிடித்த பகுதி.
இந்த அருவியின் பின் புறம் இருக்கும் குகையில் ஆமர்ந்து செய்த தியானத்தை என்னால் மறக்க முடியாது.

அற்புதம் என்பதை விட வேறு என்ன சொல்லிட முடியும். பல ஆன்மீக உயர்நிலை கொண்டவர்கள் வாழ்ந்த இடம். வரலாறு தொடர்பற்று கிடக்கிறது.

இயற்கையான பாலம் என்று அழைக்கும் இந்த இடத்திற்கு செல்ல வேண்டியாவது பல முறை கம்போடியா செல்லுவேன்..:)

நன்றி ஒரு முறை உங்கள் எழுத்தில் லிங்களை பார்த்ததற்கு

Anonymous said...

A very good review Vicki.I feel like to visit this place.

Viknesvary.

Unknown said...

நானும் 1000 லிங்கங்களை, சமீபத்தில் தரிசனம் செய்து விட்டு வந்தேன். அந்த இடமும், சூழலும் மிக அருமையாக இருந்தது. நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோ.புண்ணியவான்

ஹாஹா... பார்வைதியின் உறவை ஏற்குமா இந்து சமூகம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

@ ஸ்வாமி ஓம்கார்

எனக்கு அங்கு மீண்டும்2 செல்ல வேண்டும் எனும் தூண்டுதல் இருந்துக் கொண்டே உள்ளது. விரைவில் மீண்டும் அங்கு பயணம் செய்வேன். வாங்களேன் சென்று வருவோம்...

@ விக்னேஸ்வரி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நிச்சயம் சென்று காணுங்கள்...

@ ராம்

நிச்சயமாக பலராலும் மறக்க முடியாத பயணமாகவே அது அமையும்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...