Thursday, May 30, 2013

ஆமை முட்டைகளும் அடையாளமற்ற திருடர்களும்

ஒரு மனிதன் அதிகமாக விரும்பும் ஒன்றே அவனது பலவீனமாக அமையும் எனும் சொல் உண்டு. விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதே.  

இந்த வலைப்பூ எனும் இணைய கிடங்கில் நாள் ஒன்றுக்கு இரு பதிவுகள் என எழுதிய காலத்தை நினைவு கூற முடிகிறது. வலைப்பதிவுகளின் போதை எதையாவது தேடி படித்து எழுதி கொண்டிருக்க வைத்தது. எனது ஆரம்ப கால பதிவுகளின் எண்ணிக்கையில் இதை நீங்கள் காணலாம். இந்த போதையே என்னை அதிகம் வாசிக்க செய்த ஒன்றாகும். விரும்பி செய்த செயல் என்றாலும் அதில் பல பொன்னான நேரத்தை இழந்தேன் பல நல்ல நண்பர்களையும் அறிந்து கொண்டேன்.

கால ஓட்டத்தில் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் வாசிப்பை கைவிடாமல் தொடந்து கொண்டிருந்தேன். இணைய அறிமுக வழியும் சுய தேடல்களிலும் பல நல்ல புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன். புத்தக சேமிப்பு இன்னும் அமலில் உள்ளது. இன்றளவும் மனநிறைவளிக்கும் செயல் என இதை கருதுகிறேன்.
அரசு அதிகாரியாக பணி நியமனம் பெற்ற பின் எனது எழுத்து வேலைகள் படு மோசமாக சரிந்து போனது. அதற்காக பதிவுலகம் கண்ணீர் வடித்ததாக சமீபத்திய சரித்திரத்தில் எழுதாமல் போனது சோக செய்தி.
அரசு பணி நான் விரும்பி ஏற்றது. பயிற்சியில் இருக்கும் போது யாருக்கு எந்த மாநிலத்தில் வேலை அமையும் என்பது கிஞ்சித்தும் தெரியாது. என்னோடு பயிற்சியில் இருந்தவர்கள் மொத்தம் 98 பேர். அதில் 93 பேர் பதவி உயர்வு பெற்று பயிற்சியில் இருப்பவர்கள். பணி அனுபவம் மட்டுமின்றி அவர்களுடனான எனது வயது வரம்பும் அதிகமாகவே இருந்தது. 

பயிற்சி முடிந்து பணி நியமன இடங்களை வாசிக்கும் நாள் வந்தது. எனக்கு இந்த மாநிலத்தை தவிர வேறு எங்கு கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நினைத்தது நடக்கவில்லை. நான் விருப்பம் கொள்ளாத அந்த மாநிலத்திலேயே எனக்கு பணி நியமிக்கப்பட்டது. அரசு சேவகனாக நான் பணி புரிந்த திரெங்கானு (Terengganu) எனும் அந்த வடகிழக்கு மாநிலம் சில காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு விருப்பம் கொண்டு மகிழ்ச்சியோடு பணி புரிந்தேன்.
நான் அங்கு வேலை செய்த காலத்தை இது வரையில் பதிவு செய்தது கிடையாது. சிலபல அறுசுவை அனுபவங்களையும் எனக்கு பயிற்றுவித்த மாநிலம் அது.
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எனக்கு மிக விருப்பமான விசயம் பயணங்கள். திரெங்கானுவில் வேலை செய்த சமயம் அதிகமான பயணங்களை மேற் கொண்டேன். குறிப்பாக ஒருசில உட்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள். இதில் அதிகமானவை வேலை நிமித்த பயணங்களே. பயணங்கள் மிகவும் ருசிகரமானவை. அவற்றின் இன்பம் அளாதியானவை. பயணங்கள் வெற்றியடையவும் வாசிப்பு அவசியமாகிறது. 

எனது பணியும் அதிக பயணங்கள் கொண்ட பணியாகவே அமைந்தது. திரெங்கானு எனும் கிழக்கு கரை மாநிலத்தில் மொத்தம் எட்டு மாவட்டங்கள் உள்ளன. இதில் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லையை கடக்க 5 மணி நேரங்கள் எடுக்கும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குடிநுழைவு குற்றச் செயல்களை கண்டறிந்து சேதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எனது முக்கிய பணிகளுல் ஒன்று. சில சமயங்களில் ஓரிரு நாட்கள் வீடு திரும்பாமலும் இருக்க நேரிட்டதுண்டு. இதன் விரிவான செய்தியை வேறொரு சமயம் சொல்கிறேன்.
திரங்கானு மிக இரம்யமான மாநிலம். தீபகற்ப மலேசியாவின் ’பெட்ரோலியம்’ உற்பத்தி இங்கு முதலிடம் வகிக்கிறது. இதன் பிரதான சாலை தென் சீன கடலை ஒட்டியபடி இருக்கும். பயண நெடுகினும் கடல் காற்றை சுவாசித்து பயணம் செய்வீர்கள். அதிகமான மேம்பாட்டு திட்டங்கள் இல்லாத இடம் என்றாலும் இங்கு விலைவாசி அதிகம். கோலாலம்பூர் (Kuala Lumpur), ஜெகூர் பாரு(Johor Bahru) போன்ற அதிவேக மேம்பாடு அடைந்துவரும் நகரங்களை காட்டினும் இங்கு விலை அதிகமாக இருக்க காரணம் பெட்ரோலியம். பெட்ரோலிய உற்பத்தி பகுதியில் பணி புரிவோரின் வருமானம் கணிசமான தொகையென அறிந்தேன். இதுவே விலை நிர்ணயத்துக்கும் அளவுகோளாகிறது. விலைவாசியின் தாக்கம் டூங்குன், கெமாமான் போன்ற பெட்ரோலிய பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் மிகுந்து காணப்படுகிறது.
திரெங்கானு கடல் ஆமைகளுக்கும் புகழ் பெற்ற இடம். இதில் முக்கியமானது ரந்தாவ் அபாங் (Rantau Abang) எனும் கடலோர பகுதிகள். மே முதல் ஆகஸ்ட்டு மாதங்களில் கடல் ஆமைகள் கரை ஏறி முட்டைகளை இடும்.
 
இவ்வகை கடல் ஆமைகள் மிக பெரிதாக இருக்கும். 2 மீட்டருக்கும் நீளமாக வளரும் இவ்வாமைகள் ஏறக்குறைய 300 கிலோ எடை கொண்டவை. இந்த ஆமைகளிடம் ஒரு அழகு தன்மை காணப்படுகிறது. பெரும்பாலும் அதிகாலை பொழுதுகளில் இவை முட்டையிட கரை ஒதுங்குகின்றன. முட்டையிட்டு மணலால் மூடிவிட்டு அவை கடலுக்குள் மறைந்துவிடுகின்றன. இவற்றை காண பயணிகள் இரவு முதல் காத்திருக்கிறார்கள். 

கடல் அமைப்பும் மணல் தன்மையும் ஆமைகள் இங்கு முட்டையிட காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி முட்டையிட ஒதுங்கும் ஆமைகள் உடலில் ஒரு பட்டையை ஒட்டிவிடுகிறார்கள். அது ஆமை கரையொதுங்கி முட்டையிட்டதற்கான அடையாலம். வெவ்வேறு பட்டைகள் சில ஆமைகளில் இருக்கும். அவை ஆமைகள் வேற்றிடங்களில் அடையாளபடுத்தப்பட்டதன் அர்த்தமாகும்.

ஆமை முட்டைகள் பாதுகாப்புகுறியவை. அவற்றை விற்பனை செய்யவோ, சமைத்து சாப்பிடவோ அனுமதி கிடையாது. இவற்றிக்கான சட்டமும் தண்டனையும் பலமானவை. சட்ட மீறல்கள் இங்கு இயல்பாகவே நடக்கின்றன. பயணிகள் மிகுந்து வரும் சந்தை பகுதியில் ஆமை முட்டைகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபார சந்தையில் இதற்கான தேடல் அதிகம் உள்ளது.

 ஆமை முட்டைகள் ‘கெலெஸ்ட்ரால்’ அதிகம் கொண்டவை. அதன் ஓடு மிக மெல்லியதாக இருக்கும். கோழி முட்டையை போல் உடைக்கும் தன்மை இதற்கு கிடையாது. தவிர ஆமை இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகள் விரைவாக அழிந்து வருகின்றன. இது வேதனையான விசயம். அதன் பாதுகாப்பு இன்னும் பலபடுத்தப்பட வேண்டும்.

திரெங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிக்க முடியாது. அதன் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திற்கு செல்லும் அமைப்பில் இல்லை. சில தப்படிகளில் மிகுந்த ஆழமாக அமைந்த கடல் இந்த கிழக்குகரை மாநிலங்களில் அமைந்துள்ளது. இதன் நெடுகினும் குளிக்க அனுமதி இல்லை என்ற பெயர்பலகைகளை காணலாம். இருந்தும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் குளித்து மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
நினைவுகள் தொடரும்...


15 comments:

RAHAWAJ said...

வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தும் பதிவு பழைய மிடுக்கோடு தான் இருக்கு விக்கி மீண்டும் நிறைய எழுத சாணியடி சித்தர் அருள் புரியட்டும்

RAHAWAJ said...

வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தும் பதிவு பழைய மிடுக்கோடு தான் இருக்கு விக்கி மீண்டும் நிறைய எழுத சாணியடி சித்தர் அருள் புரியட்டும்

VIKNESHWARAN ADAKKALAM said...

Thank you... Ill try my best...

Athisha said...

வா மச்சி வா!

VIKNESHWARAN ADAKKALAM said...

வாந்துட்ட்ட்ட்ட்ட்டேஏஏன்.....

A N A N T H E N said...

திரங்கானு பற்றிய பதிவு சுவாரசியமாக உள்ளது. நான் இத்தன நாளா அங்க கடற்கரையில இங்க போலவே குளிக்கலாம் ன்னு தானே நினைச்சேன்... தெளிவான நிறத்தில் கடல் நீர் இருக்குமாமே.... அதுபோன்ற கடற்கரை போனதுண்டா

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆனந்தன்

திரங்கானுவின் தீபகற்பத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் குளிக்க முடியாது. ஆனால் ரெடாங், ஹெந்தியான் மற்றும் காப்பாஸ் போன்ற இடங்களில் குளிக்கலாம். இவை எல்லாம் எழில் மிகுந்த பகுதிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முட்டைகளை ஈனும்-அல்ல
முட்டைகளை இடும். குட்டி ஈனும் என்பதே பொருத்தம்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ யோகன் பாரிஸ்(Johan-Paris)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிழைதிருத்தம் செய்துவிட்டேன்.

Tamilvanan said...

அப்படியே ஜோகூர் மாநிலத்தை பற்றி ஒரு பதிவும் போடலாம்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

நிச்சயம் எழுதுகிறேன்.

Arinarayanan said...

விக்னேஷ்வரா, ஒற்றுப்பபிழைகளைத் தவிர்த்துவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். நல்ல எழுத்து நடை. தொடரவும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அரிபுத்திரன்

உங்கள் கருத்தினை கவனத்தில் கொள்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

வருண் said...

பின்னூட்டம் போடுறேன்னு என் பதிவில் வந்து ஏதாவது எழவைக் கூட்டுவீங்க. எனக்கு நீங்க செய்ற காமெடியும் புரியாது ஒரு கருமாதியும் புரியாது. ஏதோ எழவைக்கூட்ட வர்ரீங்கனு மட்டும்தான் புரியும். இருந்தாலும் ரொம்ப நாளா எங்கே ஆளைக் காணோம் நம்ம விக்ணேஷைனு யோசிப்பதுண்டு.

நன்னா ஷேமாமத்தான் இருக்கேள்னு சந்தோஷம். :)

****ஆமை முட்டைகள் ‘கெலெஸ்ட்ரால்’ அதிகம் கொண்டவை. அதன் ஓடு மிக மெல்லியதாக இருக்கும். கோழி முட்டையை போல் உடைக்கும் தன்மை இதற்கு கிடையாது. தவிர ஆமை இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகள் விரைவாக அழிந்து வருகின்றன. இது வேதனையான விசயம். அதன் பாதுகாப்பு இன்னும் பலபடுத்தப்பட வேண்டும். ****

ஆமையையும், ஆமை முட்டையையும் ஏன் சாப்பிடுறா? வேற ஏது சாப்பிடக் கெடைக்கலையா? இல்லைனா "ருசி" காரணமா? என்னனு விளங்கிறப்பிலே நீங்க சொல்லியிருந்து எனக்கு விளங்கவில்லை!


***திரெங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிக்க முடியாது. அதன் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திற்கு செல்லும் அமைப்பில் இல்லை. சில தப்படிகளில் மிகுந்த ஆழமாக அமைந்த கடல் இந்த கிழக்குகரை மாநிலங்களில் அமைந்துள்ளது. ***

ஆமையிலிருந்து இப்போ கடற்கரைக்கு தாவிட்டேளா?

என்னவோ போங்க!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வருண்

வாங்க வருண். உங்க பதிவுகளை போல உங்க பின்னூட்டமும் ஒரே எழவாதான் இருக்கு... என்னமோ போங்க... நல்லா இருந்த செரி...