Friday, September 04, 2009

துறைமுகம் நாவல் - இஸ்லாம் எனும் போர்வையில்


தலைப்பு: துறைமுகம்

நயம்: சமூக நாவல்

ஆசிரியர்: தோப்பில் முகமதுமீரான்

இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் - இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. அப்படி கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதற்கானத் தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்துவிடாது என்பார்கள்.

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும் கொண்ட கடலோர மக்களின் வாழ்வை சித்தரிக்கும் புதினமாய் அமைந்துள்ளது தோப்பில் முகமது மீரான் எழுதிய துறைமுகம் நாவல்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கதைக் களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களின் வாழ்வை நாம் கண் முன் நிறுத்துவதில் ஆசிரியரின் சிரத்தை சிறப்பாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையே. மதத்தை தன் வாழ்வியல் எல்லையாக பயன்படுத்தும் மக்கள். தமது நடவடிக்கைகளை, மதத்தில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவற்ற கோட்பாடுகளோடு இணைத்து தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

பத்திரிக்கை படிக்க கூடாது, ஆண்கள் தலையில் முடி வைத்திருக்கக் கூடாது, ஆங்கிலம் பயிலக் கூடாது. இவற்றைச் செய்துவிட்டால் அது ஹராம் என தீர்மானித்து தம் மதத்தின் மீதான தீவிர பற்றோடு இருக்கிறார்கள். பாமர மக்களிடையே தவறான மத போதனையை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே தவறான போதனைகளை திணிக்கப்படும் சம்பவங்களை மத போதனையாளனின் கதாபாத்திரத்தோடு பேசப்படுகிறது. முகமது அலிகான் என்பவன் ஊருக்கு உயர்ந்தவனாக சித்தரிக்கப்படுகிறான். இவனது பிரள்வான சிந்தனைகளை அடிப்படையாக கொண்டால் இஸ்லாமியர்கள் உலக ஒருமைப்பாட்டை பேச முடியாது. மத வெறி தூண்டுதலின் அடிப்படை கருவியாகவே அவனை காண முடிகிறது.

கடலை நம்பி வாழும் மக்களின் நிலைபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நெருடலாக இருக்கிறது. திடீர் திருப்பங்கள் இல்லாமல் யதார்தமாக கதை நகர்கிறது. பைத்தியகாரன் ஊரில் அறிவாலி முட்டாளான கதையாக, ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை குறுக்கிக் கொண்ட மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக கேள்வியெழுப்புபவர்கள் அவ்வூர் மக்களுக்கு எதிரியாகிறார்கள்.

கதையில் வரும் மீரான் பிள்ளை சிறு வியாபாரி. மீன்களை கொழும்புக்கு அனுப்பி அவற்றில் கிடைக்கும் வரும்படியில் குடும்பத்தை நடத்துகிறார். கடலில் கிடைக்கும் மீன்களும் சரி, மீன்களின் விலை நிர்ணயமும் சரி இரண்டுமே அவருக்கு மரண பயத்தை கொடுக்கின்றன. மீன்கள் கிடைக்கும் காலத்தில் மார்கெட்டில் விலை இல்லை, மார்கெட்டில் மீன் கிராக்கி ஏறும் சமயம் மீன்கள் கிடைப்பதில்லை. இதில் பொய் புரட்டு என கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்கள். ஒரு கடிதம் வந்துவிட்டாலும் அதை படிப்பதற்கு ஆள் தேடும் ஊர் மக்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதலாளி வர்க்கத்தின் பொருளாதார அரசியல். ஒரே சமயம், ஓர் ஊர் மக்கள், கடலை நம்பி வாழ்பவர்களாக இருந்தாலும் முதலாளிமார்களின் திருட்டுத்தனத்தை வெளிப்படையாக நாவலாசிரியர் சொல்கிறார். அதாவது பொருளியல் தேடலில் மதம் எல்லாம் ஒரு சால்ஜாப்பு சமாச்சாரம் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஈனா பீனா கூனா போன்ற முதலாளிகளின் துரோகத்தால் அக்கடற்கரை கிராமத்தின் பல மக்கள் கடன் சிக்கலிலும் வறுமையில் வாடுகிறார்கள்.

ஒருவனின் அறியாமையை இன்னொருவன் பயன்படுத்திக் கொள்வதைப் போன்ற மட்டகரமான செயல் இருக்க முடியாது. ஆண்கள் முடி வைத்திருந்தால் ஹராம் என்பதால் இன்று எந்த தலையை மொட்டை அடிக்கலாம் என சுற்றித் திரிகிறான் ஆனவிளுங்கி எனும் முடி வெட்டுபவன். இவனது கதாபாத்திரம் நகைச்சுவையூடாக சொல்லப்படுகிறது. முடி சரைப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போன்ற பாவனையிலும், தன் சரைக்கும் கத்தியைப் போல் உலகத்தில் கிடையாது எனும் மிதப்பில் இருப்பவன். மதம் தனக்கு சாதகமாக ஒரு விடயத்தைக் கொடுப்பதால் அதை அவன் பவ்யமாக ஏற்றுக் கொள்கிறான்.

அரசியல், நாட்டுப்பற்று என அவர்களின் புரிதலுக்கு சிரமமானவை கூட ஹராம் என அடையாளப்படுத்தப் படுகிறது. இம்மாதிரியான அவல நிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பும், ஓராளவு படித்த இளைஞனானவன் விரோதியாக கருதப்படுகிறான். மீரான் பிள்ளையின் மகனான காசீமின் கதா பாத்திரம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தமது சமூகத்தின் விழிப்புக்காக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்காட்ட முற்படும் இவன் செயல் எப்படி அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடனடி மாற்றங்கள் எடுபடுமா என்பதையும் இங்கு நாம் காண வேண்டியுள்ளது.

நாவலின் எழுத்து நடை குறிப்பிட்ட மக்களின் மொழி வழக்கோடு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், கொழும்பு, அரபு என கலவைகளை கொண்ட பேச்சு நடை வாசிப்புக்கு சிறு தடை என்றேச் சொல்லலாம். மேற்கோள் வார்த்தைகளை கொடுத்திருப்பினும் சரளமான வாசிப்புக்கு தகுந்த ஒன்றாக அமைத்திருக்கவில்லை. சில விவரிப்புகள் ஜவ்வு போல் இழுப்படுவதும் அயற்சியை கொடுக்கிறது. நாவலின் இயல்பு தன்மைக்கு இவ்வகை எழுத்து நடை அவசியமாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது.

குறிப்பிட்டக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையை பதிவுப்படுத்தியதில் துறைமுக கப்பலின் பயணம் சிறப்பான ஒன்றே.

15 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

அருமையான விமர்சனம் - ஒரு புத்தகத்தை எப்படிப் படித்து விமர்சிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. உண்மையான விமர்சனம்.

நல்வாழ்த்துகள் விக்கி

அகரம் அமுதா said...

மிக அழகான எழுத்து நடை. தங்களின் கட்டுரையைப் படித்தவுடன் மீரானின் துறைமுகத்தைப் படித்த வேண்டும் என்ற அவா பிறக்கிறது. வாழ்த்துக்கள்.

Unknown said...

சில நாட்களாகவே இந்தப் பதிவை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன் விக்கி. நல்ல நடை.

நீங்கள் கேட்ட சுஜாதாவின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தெரிவிக்கிறேன். நன்றி.

வால்பையன் said...

இந்த புத்தகத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் தடை விதித்திருக்குமே!?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி ஐயா.

@ அகரம் அமுதா

நன்றி நண்பரே. நீண்ட நாட்களாக இணையத்தில் உங்களை காண முடியவில்லையே. நிச்சயம் படித்து பார்க்கவும்.

@ கிருஷ்ண பிரபு

நன்றி நண்பரே...

@ வால்பையன்

அப்படி ஏதும் தகவல் இல்லை வால்.

Tamilvanan said...

இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ர ஆவல் எழுகிறது.

Unknown said...

<<<
வால்பையன் said...
இந்த புத்தகத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் தடை விதித்திருக்குமே!?
>>>

ஏன் வாலு இப்படி??? துறைமுகம் நாவல் - விமர்சனம் படியிங்கள். அதாவது,

பத்திரிக்கை படிக்க கூடாது,
ஆண்கள் தலையில்
முடி வைத்திருக்கக் கூடாது,
ஆங்கிலம் பயிலக் கூடாது

இப்படி கூடாது, கூடாது என்பவர்கள் யார்? இது எல்லாம் அந்நாவலில் யாரால் கூறப்படுகிறது, அல்லது பின்பற்ற படுகிறது? மததின் போர்வையில் முடநம்பிக்கையில் இருக்கும் மக்களை பார்த்து. நீங்க்ள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சில முஸ்லீம்கள் பின்பற்றபடும் அனைத்தும் இஸ்லாத்தில் சொன்னது அல்ல, இஸ்லாத்தில் சொல்லப்பட்டதை முஸ்லீம்கள் அனைவரும் பின்பற்றுவதும் அல்ல. குரானில் மற்றும் ஹதீஸில் எங்கும் இப்படி சொல்ல வில்லை. இஸ்லாம் கூறுகிறது கல்வி கற்பது உம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஹம்மது நபிகளே தலையில்
நன்றாக முடி வைத்திருந்தார்களாம்.

நன்றி விக்கி. நல்ல விமர்சனம்.

kumar said...

"இந்த புத்தகத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் தடை விதித்திருக்குமே!?"ஏதோ இதுபோன்ற புத்தகங்கள் வெளிவந்தால் உடனே முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்,
போராட்டம் என்று களத்தில் இறங்குவது போன்ற தொனி தெரிகிறது.சாத்தான் சல்மானும்,தட்டுவாணி தஸ்லீமாவும் விதிவிலக்கு.முஸ்லீம்கள் என்றாலே பிற்போக்கானவர்கள் என்ற வன்மம் தவிர்க்கலாமே வால்பையன்!

சி தயாளன் said...

:-) அருமையாக புத்தக விமர்சனம் செய்துள்ளீர்கள்...விரைவில் உங்கள் புத்தகத்தையும் எதிர்பார்க்கிறேன் :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

கருத்துக்கு நன்றி அன்பரே...

@ மஸ்தான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... நல்ல விளக்கம் :)

@ பச்சீர்

:) என்னாச்சி???

@ டொன்லீ

யோவ்... என் புத்தகமா... இது நெம்ப ஓவரா இருக்கு...

RAGUNATHAN said...

மிக நல்ல விமர்சனம். நாவலை படிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்

Senthil Alagu Perumal said...

தல ரெம்ப சூப்பரா கீதுபா... புக்க படுச்ச மாதிரி ஒரு ஃபீலிங் பா.. புக்கும் நல்லாருக்கும் போல!! ரெம்ப தாய்ங்ஸ்பா!!

A N A N T H E N said...

//பிரள்வான சிந்தனைகளை // என்ன பொருள்?

வியா (Viyaa) said...

உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு தேவதை இருக்கிறது..
விரைவில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ரகுநாதன்

நன்றி...

@ செந்தில் அழகு பெருமாள்

நன்றி

@ அனந்தன்

கோணலான சிந்தனைனு சொல்லலாம்...

@ வியா

தேவதைப் பார்த்தேன்.மிக்க நன்றி...