Sunday, July 12, 2009

சமயமெனும் சாக்கடை உலகம்

கேமரன் மலையில் இருந்த சமயம் திருவிழா கொண்டாட்டங்களை அதிகமாகவே கண்டிருக்கிறேன். அதிகமான இந்தியர்கள் அப்போது அங்கிருந்தார்கள். திருவிழா ஆரம்பிக்க நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே தோட்டத்தைவிட்டுச் சென்றவர்களும், ஏனையோரின் உறவுகளும் என மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். எக்கச்சக்கனமான பலகாரக் கடைகளும், அலங்காரங்களும் ஒரு புதிய மகிழ்ச்சியை எய்தச் செய்யும். பள்ளிக்கு விடுமுறைவிட்டிருப்பார்கள். சில நல்லாசிரியர்கள் மட்டும் பாடத்தை கொடுத்து 'செய்துட்டு வாங்கடா' என சொல்லி வில்லத்தனமான புன்முறுவலிட்டுச் சென்றுவிடுவார்கள். சில சமயம் அதை செய்து முடித்தும் பல சமயம் அதைச் செய்யாமலும் அடிவாங்கிய கதைகள் தனி.

நண்பர்களிடையே அச்சமயத்தில் எல்லாமே காவடிகள் தாம். காவடி பார்க்க போகிறோம் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பி இருக்கிறோம். பின்னாட்களில் தைப்பூசத்துக்கு எடுப்பது மட்டும் தான் காவடி என புரிந்து கொள்ள முடிந்தது. 'அருள்'!? வந்தவர்களை அருகில் இருந்து பார்க்க நான் துணிந்ததில்லை. இன்று வரை இப்படி அருள் வந்தவர்களை எதிர்பாரா விதமாக அருகில் காணும் போது அடி வயிறு கலங்கிவிடும். அந்த பயம் விலகியதில்லை.

கேமரன் மலையில் மேட்டின் மேல் இருக்கும் பாறையில் அமர்ந்தபடி அருள் வந்த 'ஆசாமிகள்' ச்சே சாரி 'சாமிகள்' பூக்குழி எனப்படும் தீக்குளியில் இறங்கி வருவதை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கிருந்த கோவில்களில் மிக பெரிதாக இருந்தது அம்மன் கோவில். அதனால் தான் என்னவோ வரும் சாமிகளில் பலவும் அம்மனாகவும் (கையில் நெருப்பு மூட்டப்பட்டு புகைந்துக் கொண்டிக்கும் தீச்சட்டியோடு), காளியாகவும் (முதுகு முழுக்க கொக்கி மாட்டி கயிற்றில் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பார்கள்), முனியாண்டி, மதுரைவீரன் எனவும் இருக்கும். இது போக அனுமன், நாகம்மாள்(இரண்டு கைகளை படம் எடுக்கும் பாம்பு போல் தலைக்கு மேல் உயர்த்தி 'புஸ் புஸ்' என்றிருப்பார்கள்) என சில சாமிகளும் வருவதுண்டு.இந்த காளி சாமிகளுக்கு மட்டும் நாக்கு வெளி தள்ளிப் போய் கண்கள் மிரண்டு இருக்கும். 'இதுகளை' ச்சே சாரி 'இவர்களை' பார்த்தவுடன் பக்தியில் கையெடுத்து கும்பிடுகிறார்களோ இல்லையோ பயத்தில் கும்பிடு போட்டு போய்விடுவார்கள் போலும். இந்த 'கேடு கெட்ட ஆசாமிகளுக்கு' ச்சே மீண்டும் சாரி 'முற்றும் உணர்ந்த மேன்மக்களுக்கு' கிஞ்சித்தும் மரியாதை என்பதே இருப்பதில்லை. 'டேய் இங்க வாடா', 'ஏய் இங்க வாடி' என்று தான் அழைத்து தொலையுங்கள். இந்த சாமிகளை வளர்த்தோரை சொல்ல வேண்டும். மரியாதை தெரியாமல் வளர்த்து மக்கள் 'நலனுக்கு' அனுப்பி இருக்கிறார்கள்.

காளி சாமிகளின் உடல் முழுக்க குங்குமம் அப்பிக் கிடக்கும். இவற்றுக்காகத் தனியாக பெட்டி பெட்டியாக குங்குமம் வாங்குவார்கள் போல. குங்கும கம்பெனிக்காரர்களுக்கு நல்ல நெத்தியடி வியாபாரம் தான். சில சாமிகள் நாக்கில் கூட குங்குமம் ஒட்டி உமிழ் நீரில் கலந்து ஒழுகிக் கொண்டிருக்கும். பக்கத்தில் இருக்கும் 'பக்தர்களை' அழைத்து கட்டை விரலில் நாக்கில் இருக்கும் குங்குமத்தை தொட்டு நெற்றியில் ஒரு இழுப்பு இழுப்பி விட்டு கொஞ்சம் குங்குமத்தை அவர்கள் கையில் போட்டு அனுப்ப, அந்த பக்த பெருமக்களும் அதை பவ்யமாக வாங்கி கொண்டு வருவார்கள்.

சில 'காஸ்ட்லி' காளி சாமிகள் கயிறு இழுக்கும் ஆள் போக பக்கத்தில் விளக்கு பிடிக்க (தட்டில் சூடம் ஏற்றி இருப்பதைச் சொன்னேன்) ஆள் வைத்திருப்பார்கள். அந்த தட்டில் குங்குமமும், நன்கு பழுத்த எழுமிச்சையும் இருக்கும். சில பெண்டீர்கள் குடும்ப பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து சாமிகளிடம் முறையிட சாமி எழுமிச்சையை வலது கையில் எடுத்து நெற்றி புருவ மத்தியில் வைத்து முனுமுனுத்து குடும்ப பிரச்சனையைத் தீர்த்து வைக்கும். இந்த எழுமிச்சை பிரச்சனைகளில் புட்டுக் கொண்ட குடும்பங்களும் உண்டு.

இதுவும் இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட வன்முறை கலாச்சார சீர்கேடு தான். இந்த அருள் பார்க்கும் கலாச்சாரம் தோட்டப்புரங்களில் இருந்து கொஞ்சம்‍ கொஞ்சமாக நகர்ந்து இப்பொழுது நகர்ப்புரங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. சில பத்திரிக்கைகளில் கூட இதன் விளம்பரத்தைக் காணலாம். சாமி பார்க்க விரும்புபவர்கள் 'அப்பாய்ண்மெண்ட் ஆர்டர்' வாங்கிக் கொண்டு போக வேண்டும். இலங்கை பிரச்சனையைத் தீர்க்க இவர்களிடம் வழி கேட்டிருக்கலாம். என்ன செய்ய அச்சமயம் யாருக்கும் சரியான சமயோசிதம் வருவது இல்லை. இந்த சாமிகளை பார்த்தவுடன் மறந்து தொலைத்துவிடுகிற‌து.

சில மெத்தப் படித்த மக்களும் இவ்விடங்களில் போய் ஆங்கிலத்தில் பேசி ஆசி பெற்று வருவது அதிர்ச்சியான விடயம். மேலும் அருள் பார்க்கும் ஆசாமிகள் பெரும்பாலும் கையில் சுருட்டும், பீர் புட்டியோடும் தான் இருப்பார்கள். அதிகமானோர் இயல்பு நிலையில் படிக்காத ஆட்களாகவும், குடிகாரர்களாகவும் பேர் போனவர்களாக இருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்குத் தான் சாமி வருகிறது. சாமி விருப்பப்பட்டு அருள் இறக்கும் ஆட்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

தெருவுக்கு ஒரு கோவிலைக் கட்டி வைத்துக் கொள்வதும் உடைத்துவிட்டால் குய்யோ முறையோ என கத்துவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. சிறு தெய்வ கோவில்கள் என பரவலாக அறியப்படும் இவை தன் சொந்த நிலங்களில் கட்டிக் கொள்ளப்படுபவை அல்ல. 'கோப் கிடைத்தால் ஆப்படிக்கும்' கதையாக இருக்கும் இடத்தில் சிறு கொட்டகையை போட்டு ஆரம்பிக்க வேண்டியது. பிறகு கிடைக்கும் நிதி வசூலில் கொஞ்சம் மேம்பாடுகள் செய்துக் கொண்டு அதே வாழ்கை என அங்கேயே இருந்துவிட வேண்டியது. பின்னாட்களில் நிலத்தின் சொந்தக்காரன் தமது பயன்பாட்டிற்கு நிலத்தைக் கேட்கும் போது ஆரம்பிக்கும் பிரச்சனை. இத்தனை காலம் இங்கிருந்தோம் எங்களுக்கே இவ்விடம் சொந்தம் என ஆரம்பித்துவிட வேண்டியது. இப்படிச் செய்பவர்கள் சொந்த நிலத்தில் கட்டிக் கொண்டு கூத்தடிக்க வேண்டியது தானே. எதிர்காலத்தில் இப்பிரச்சனைகள் இருக்குமென இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?திட்டு திட்டாக ஆங்காங்கே இருக்கும் இவ்விடங்களில் கொட்டும் நிதிகளை படிப்பு வசதிக்கு சிரமப்படும் மாணவர்களுக்கு பயன்படுத்தினால் கூட போதும். அவற்றை கவனிக்க இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இங்கு வசூலாகும் பணம் என்னானது என கணக்கு காட்டிட அவசியம் இருப்பதில்லை. கிடைக்கும் பணத்தை குடித்து கும்மாள‌ம் போட்டுவிட்டாலும் கேட்க ஆளில்லை. இப்படி இருக்க குண்டர் கும்பலில் கீழ் எவ்வளவு மையங்கள் சாமி பார்க்கிறேன் எனும் கதையாக இப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என அறிவார் இல்லை. நல்லது செய்கிறேன் எனும் மாயையில் மக்களின் மன பிரழ்வுகளுக்குக்கு மட்டுமே இவர்கள் வித்திடுகிறார்கள். இதற்கு காரணம், மக்களை சமயம் எனும் போர்வையில் ஒடுக்கி வைத்திடும் நெடுங்கால திட்டம் என சொல்வதில் என்ன தவறு இருக்கக்கூடும்.

இது தான் இப்படி என்றால் எண் ஜோதிடம், கல் ஜோதிடம், வாஸ்த்து சாத்திரம் என ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் மக்களை சுரண்டி கொண்டிருக்கிறது. இதை பற்றி சொல்வதற்கு ஒரு பெரும்பதிவே எழுதலாம். மொத்தத்தில் பணம் பண்ணுவதற்கு சம்யம், பலருக்கும் பகடைக் காயாக விளங்குகிறது. சதி திட்டவாதிகளுக்கு அதை விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஏற்படும் என நினைப்பது பகல் கனவு தான். சிந்திக்க முற்படாத மக்களை தமக்கு சாதகமாகவும், ஆபத்து நேரங்களில் கருவியாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன் தலையில் மிளகாய் அரைக்கப்படுவது தெரியாமல் முட்டாளாக போய்க் கொண்டிருக்கும் இன்றய தலைமுறை பரிதாபத்துக் குறியது.

இதையெல்லாம் சொல்லும் பட்சத்தில் சில பெரியவர்களுக்கு கோபம் தான் மிஞ்சுகிறது. இப்ப வந்தவன் இவன் என்னத்தைக் கண்டுவிட்டான் என்பதாகவே இவர்களின் குரல் எழுகிறது. இச்செயல்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு தொடரும் என்பது இம்மக்களின் மனமார்ந்த சிறு தெய்வங்களுக்கே வெளிச்சம். சமய போதனை பல கலவைகளுக்கு உள்ளாகி சாக்கடை போதனையாகவே பலரிடமும் சொன்றடைகிறது. அதைப் பற்றி பிடித்த வாழ்க்கையே இன்னமும் நீடிக்கிறது. சில மேன்மக்கள் அரசியலில் குப்பை கொட்டுவதற்குக் கூட இது அவசியமாகிறது.

பேராக் மாநிலத்தில் (மலேசியா), தைபிங் எனும் இடத்தில் பன்றி கோவில் படு துரிதமான வியாபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஒரு சீனருக்கு சொந்தமான நிலத்தில் சீன மூனீர்வர சிலையை வைத்து வழிபடுகிறார்கள். அது ஹிந்து மத முன்னீஸ்வரன் போலும் இருக்கிறது அலங்காரம் செய்யப்பட்டு. காட்டுப்பகுதில் இருக்கும் இவ்விடத்திற்கு தூக்கி போடும் உணவுகளைத் தின்ன காட்டுப் பன்றிகள் வந்து போகவும் நாள்டைவில் அதை மக்களிடம் நன்கு பழக்கிக் கொண்டார்கள். மக்கள் அதை தொடவும் உணவளிக்கவும் இப்போது அவை மனிதர்களிடம் பயப்படுவதில்லை. தற்சமயம் இப்பன்றி கூட்டம் தெய்வ தூதுவனாக மாறிவிட்டிருக்கிறது. அவற்றின் உடம்பில் பண நோட்டுகளைக் கொண்டு தேய்க்கவும் பின் பண நோட்டில் இருக்கும் கடைசி நான்கு எண்களை சூதாட்ட மையங்களில் எடுக்கவும் என செய்தி பரவி மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது. பன்றி உடலில் இருக்கும் சேற்றினை சந்தனம் என சொல்லும் அளவுக்கு பக்தி முற்றிவிட்டது. அதை சேறு எனச் சொன்னால் தெய்வ குற்றமாம். அதன் நாற்றம் எல்லாம் ஒரு பெருட்டற்று போய்விட்டது. நாடெங்கினும் இருந்து பல பேருந்துகள் தினம் இவ்விடம் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.மிருகத்தை துதிக்கும் இச்செயல் ஒரு பக்கம் என்றால். நேர்த்திக்கடன் எனும் பெயரில் மிருக வதைகள் நம்மை பதற வைக்கிறது. ஆட்டின் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தை பச்சையாக அப்படியே உறிஞ்சி குடிக்கிறது சில சாமிகள். மிருக வதை சட்ட போதனைகளை பூசாரிகளுக்கும் அருள் வரும் ஆசாமிகளுக்கும் வகுப்பெடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் போல. கேட்டால் தெய்வ காரிய பலிகள் சொர்கத்தை அடையும் என்பார்கள். இந்த பூசாரிகளை ஏன் சொர்கத்துக்கு அனுப்பக் கூடாது? இல்லை தான் சொர்கத்துக்கு போகிறேன் என அந்த ஆட்டுக்கு தான் தெரியுமா?

(மிருக வதை சமய வழிபாட்டினை திருமதி சுபா அவர்கள் எழுதிய இப்பதிவில் காணலாம். கொடூரமாக இருக்கும் இப்படங்களை இளகிய மனம் கொண்டோர் பார்க்காமல் இருப்பது நலம்.)

அடுத்த படியாக இருப்பது எம்.எல்.எம் சிஸ்டம். நாட்டில் சில பகவான்கள் உதித்திருக்கிறார்கள். இந்த பகவான்களை பார்க்க மட்டும் 500, 750 ரிங்கிட் என குறிப்பிட்ட தொகை வசூழிக்கப்படுகிறது. மற்றபடி தீட்சை வாங்கவும், யோகம், போகம், ரோகம் என சில கற்றல் திறன்களை அறிந்துக் கொள்ளவும் தனி 'ரேட்டில்' பணம் வாங்கப்படுகிறது. பல்புகளையும், கண்ணாடி துண்டுகளையும் கடித்து தின்ன கூட பயிற்சி அழிக்கப்படுகிறதாம். பணம் செலுத்த சிரமம் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் நான்கைந்து புதிய பக்தர்களை பகவானுக்கு தேடி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்கு ஏனையோரை திட்சை வாங்க வாய்ப்பளித்த புண்ணியமும் சேருமாம். மக்கள் நலன் காக்க வந்த பகவான்களுக்கு இவ்வளவு தொகையில் பணம் வசூழிக்க என்ன கேடு வந்தது என கேட்பார் இல்லை. கேட்டால் முறைப்பார் உண்டு.

புதிய புதிய சமய யுக்திகள் பிரமிக்க வைக்கின்றன. இன்னும் எவ்வளவு வளரும். காத்திருப்போம்.

(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்களின் சாபத்தை வாங்கிக் கொண்ட விக்கியை அந்த இலச்சி மல ஆத்தா தான் காப்பாத்தனும்)

32 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

இதி இந்தியாவில் சர்வ சகஜமாக இருக்கும் நிலையில் அங்கும் இதே கதைதானா ?

ம்ம் - என்ன செய்வது - மனித மனங்களீல் பயம் என்று ஒன்று இருக்கும் வரை தெய்வ நம்பிக்கை மறையாது. இதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை அறவே ஒதுக்க வேண்டும். இயலாது - தெய்வ குற்றம் ஆகி விடும்.

மக்கள் அவர்களாகவே திருந்த வேண்டும். இவ்விடுகைகள் திருத்த முடியாது.

காலம் மாறும் - கவலையை விடு

இப்போதைக்கு நீ விலகி நட - அது போதும்

நல்லாருக்கு நல்வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

மனம் அமைதியடையத் தான் கோவில்கள். ஆனால், இது போன்ற செயல்களால் நிச்சயம் மனம் அமைதியடையாது, மாறாக வேட்கைதான் கொள்ளும்.

:((((

ஜெகதீசன் said...

//
(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்களின் சாபத்தை வாங்கிக் கொண்ட விக்கியை அந்த இலச்சி மல ஆத்தா தான் காப்பாத்தனும்)
//
:)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//தெருவுக்கு ஒரு கோவிலைக் கட்டி வைத்துக் கொள்வதும் உடைத்துவிட்டால் குய்யோ முறையோ என கத்துவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது.//

ம்ம்ம்!

நல்லா இருக்கு விக்கி!
பொழந்து கட்டுறீங்க!

ஸ்வாமி ஓம்கார் said...

சிறுவயசு.. கண்ட இடங்களுக்கு இரவில் போகாதீங்கனு சொன்னா கேட்கிறீங்களா? இப்ப பாருங்க ஏதோ மோகினியோ சாத்தானோ அடிச்சுருக்கு. பதிவு முழுசும் கடவுள் எதிராவே எழுதி இருக்கீங்க. :)

போய் பன்றி முனீஸ்வரன் பிரசாதம் சாப்பிடுங்க. எல்லாம் சரியாயிடும்.

இல்லைனா என்கிட்ட சொல்லுங்க அதுக்கு ஒரு பரிகாரம் செய்யறேன். ;)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா... நான் திருத்த முற்படவில்லை... என் கோபம் இது... இதை படித்து திருந்துவார் என நினைக்கவில்லை

@ முரு

நிச்சயமாக... அது சமயச் சடங்கு அல்ல... பாவம்...

@ ஜெகதீசன்

ரொம்ப பெரிய கமெண்டா இருக்கு... நான் பிறகு படிச்சிட்டு அடுத்த வருஷம் பதில் சொல்றேன்.

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா...

@ சுவாமி ஓம்கார்

பிரசாதம் வேணாம் சாமி... கொஞ்சமா நெத்தியில விபூதி பூசி வேப்பிலைல நாலு அடி அடிங்க... அந்த பரிகாரத்தையும் சொன்னா உடனே செஞ்சிபோடலாம்.... கடவுளே என்ன காப்பாத்து....

குமரன் மாரிமுத்து said...

நாசமா போச்சி... வேர பொழப்பு நடத்த முடியலன்னு சாமிய வச்சி பொழப்பு நடத்துனா... இந்த பயபுள்ள இப்படி போட்டு ஒடச்சிட்டானே...

இரு.. இரு நான் சாமி வேலுகிட்ட சொல்லரேன். சாமி வேல் எடுத்து உம்ம கண்ண குத்தப் போகுது பாரு...

Dr.Sintok said...

//விளக்கு பிடிக்க (தட்டில் சூடம் ஏற்றி இருப்பதைச் சொன்னேன்)//

Shri Kanchi Kamakoti Peetham மெய்யாளுமே விளக்கு பிடிக்க ஆல் தேடுறாங்க........

//சில மெத்தப் படித்த மக்களும் இவ்விடங்களில் போய் ஆங்கிலத்தில் பேசி ஆசி பெற்று வருவது அதிர்ச்சியான விடயம்//

உலகத்தின் ஒரே கடவுளின் இரசிகர் மன்றத்தின்(ஹர காமா! ஹர காமா!) தல கூட வெள்ள தேள் வெள்ள சாமிதாங்க....


//மிருகத்தை துதிக்கும் இச்செயல் ஒரு பக்கம் என்றால். நேர்த்திக்கடன் எனும் பெயரில் மிருக வதைகள் நம்மை பதற வைக்கிறது.//

மதம் மனிதனை வதைக்களாம் ஆனால் மிருகத்தை வகைக்ககூடது...ஆமாம் சொல்லிட்டேன்


தலைவர்
சாரு இரசிகர் மன்றம்,
மாலேசியா.

Dr.Sintok said...

//(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்களின் சாபத்தை வாங்கிக் கொண்ட விக்கியை அந்த இலச்சி மல ஆத்தா தான் காப்பாத்தனும்)//

பயம் வேண்டாம் எங்கள் பா'ப்'பா உங்களை காப்பார்.தங்களுக்கு பா'ப்'பா வாயில் இருந்து தங்க லிங்கத்தையிம், ஆசனவாயில் இருந்து platinum லிங்கத்தையும் தந்து அருல்வார்.....

Govind said...

aaha..Kumaran Maarimuthu avargale..sariya potteengga....

இரு... நான் சாமி வேலுகிட்ட சொல்லரேன்... சாமி வேலெடுத்து கண்ண குத்தும் பாரு...

athai thavira antha "velu" vera enna seiyya povuthu...

VIKNES saare,
Maru pakkam nam THAMIZ CINEMA pannara koothai pathiyum konjampottu udaingga. Intha MARA MANDAIGALUKKU uraikuthaanu paarpom. :-) :-(

Jackiesekar said...

விவேக் சொல்வது போல் இவர்களை எத்தனை பெரியார் வநததாலும் திருத்த முடியாது என்பதே உண்மை..
நல்ல பதிவு விக்கி..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குமரன்

குமரன் நடத்துங்க நடத்துங்க....

@ டாக்டர் சிந்தோக்

ஆஹா.... ஏன் இந்த கொலை வெறி... சாமி என்னை இந்த ஆளுகிட்ட இருந்து காப்பாத்து...

@ கோவிந்த்

ஓ போடலேமே... காலம் வரட்டும்.... சாமி படங்களில் சாமி செக்‌ஷி டான்ஸ் ஆடுவதை பற்றி சுவாமி ஓம்கார் முன்பு எழுதி இருக்கிறார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜெக்கி சேகர்

மன்னிக்க வேண்டும். விடுபட்டுவிட்டீர்கள்... ஆமாம் திருத்த முடியாது... கடவுளை வெளி தேடும் மனிதர்கள்... உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே...

கிருஷ்ண மூர்த்தி S said...

சீனா சொன்னது:
/ம்ம் - என்ன செய்வது - மனித மனங்களீல் பயம் என்று ஒன்று இருக்கும் வரை தெய்வ நம்பிக்கை மறையாது. இதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை அறவே ஒதுக்க வேண்டும்./

பயத்தின் அடிப்படையில் தெய்வத்தை நம்பியது என்பது ரொம்ப ரொம்பப் பழசு.

குறுக்குவழியில் முன்னேறத் துடிப்பவர்கள், சுய முயற்சி இல்லாதவர்கள், அப்புறம் கோவிலில் பச்சைத் துணி அணிந்து அவங்க சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாங்களா, நான் மஞ்சத் துணி அணிஞ்சு வேற கோவில்ல எதிர் யாகம் நடத்தரதுங்கர மாதிரி, மனித மனத்தின் சுயநலம், வெறுப்பு இவைகளைப் பயன்படுத்தியே இந்த மாதிரி ஆசாமிகள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தெய்வ நம்பிக்கை என்பதற்கும், இந்த மாதிரி வக்கிரங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது!

கோவி.மதிவரன் said...

வணக்கம். தமிழ் நலம் சூழ்க

பயனான கட்டுரையை பதிவிட்டமைக்கு பாராட்டுகள்.

என்ன செய்யது விக்கி ? இந்த கேடு கெட்ட தமிழன் தான் மதம் என்னும் பேயில் மாட்டிக் கொண்டிருக்கின்றானே . சமயம் ஒரு மனிதனை பக்குவப்படுத்த வேண்டுமே தவிர பாவியாக்குதல், காட்டுமிராண்டியாக்குதல் கூடாது. எனவே தான் தந்தை பெரியார் சொன்னார் இவன் காட்டுமிராண்டிக் கூட்டம். உங்களைப் போன்று எனக்கும் இந்த இனத்தை(ஈனத்தை) நினைக்கும் போது உள்ளம் வெம்முகின்றது.

Anonymous said...

உங்கள் படைப்புகள் நன்று ,, "எந்த மதம் தன் மதத்தை நம்ப சொல்கின்றது" ,
மனிதர்கள் உருவாகிய விநோதங்கள்தான் இவை .

BALAJI said...

பதிவின் தலைப்பை மாற்றி எழுதுங்கள்.

மேலும் மக்களின் மூடனம்பிக்கைகள் தற்ப்போது ஹை டெபனிசன் ரேஞ்சுக்கு போய்விட்டது. தமிழ் மதத்தை மட்டும் சாடாமல் இது போல் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களையும் பற்றி எழுத தைரியமிருக்கிறதா???

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கிருஷ்ணமூர்த்தி

சரியான கருத்து. ஆமோதிக்கிறேன். உங்கள் வரவுக்கு நன்றி அன்பரே...

@ கோவி.மதிவாரன்

கோவி.மதிவாரன் நெடுநாட்களாக காணவில்லையே? இதில் நம் முன்னோர்களின் பங்கு அதிகபட்சமான ஒன்று. அவர்களின் வழி தானே இது விரவிக் கிடக்கின்றது. உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே.

@ அனானி

கருத்துக்கு நன்றி. பல கடவுளர்களை படைத்த மனிதன் இனி எத்தனை மதத்தினை வேண்டுமானாலும் படைத்திடுவான்.

@ பாலாஜி

பதிவின் தலைப்பை எப்படி மாற்ற வேண்டும். சில பரிந்துரைகள் செய்தால் கவனத்தில் கொள்வேனன்றோ? சும்மா சகட்டு மேனிக்கு அதைச் செய் இதைச் செய் என ஆர்டர் போட வேண்டாம்.

எது தமிழ் மதம்? அதை சற்று கூறினால் தெரிந்துக் கொள்வேன். எனக்கு தெரிந்ததை தான் நான் எழுத முடியும். எனது தைரியத்தை சோதித்து உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது அதை முதலில் சொல்லவும்.

RAHAWAJ said...

ஓம்கார் அவர்களின் பின்னோட்டத்தை வழிமொழிகிறேன் :)

வால்பையன் said...

//சிறு தெய்வங்களின்//

தெய்வத்துல என்னாய்யா சிறுசு, பெருசு!

சுப.நற்குணன்,மலேசியா. said...

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
(சிவவாக்கியர் பாடல்: 496)

இப்படி எத்தனைச் சித்தர்கள் வந்து சொன்னாலும் நமது மக்களிடம் மண்டிக்கிடக்கும் முடைநாற்றமடிக்கும் மதவியல் மூடநம்பிக்கையும் அடிமடையத்தனமும் ஓயவே ஓயாது என்று தயவு செய்து நம்புங்கள் தோழர்களே!!

உலகத்தில் எந்த இனத்தானுக்கும் இல்லாத மூளைவிலங்கைத் தமிழனும் இந்தியத் துணைகண்டத்தில் பிறந்த மத்தவனும் பூட்டிக்கொண்டிருக்கிறான்.

அந்த விலங்கு உடைவதற்கான நூற்றாண்டு இன்னமும் பிறக்கவில்லை.

நல்ல பதிவிட்டமைக்கு பாராட்டுகள் ஐயா!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

:) நன்றி...

@ வால்பையன்

அப்படினு சொல்லிக்கிறாங்க... சிறிசு பெரிசுனு....

@ சுப.நற்குணன்

நன்றி ஐயா... மீண்டும் வருக...

Unknown said...

அன்புள்ள விக்னேஷ்வரன் அவர்களே ,


உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நர பலிகள் , முகம் சுளிக்க வைக்கும் சடங்குகள் எல்லாமே ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அல்ல .

ஆனால் உங்கள் கருத்துக்கள் ஏன் ஒருதலைப் பட்சமாக இருக்கின்றது என்பதுதான் என் கேள்வி . இந்து மதத்தின் மீது ஏதாவது தனிப் பட்ட வெறுப்பு ....? அல்லது வேற்று மதங்களின் ஈர்ப்பு....?? இப்படி ஏதாவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் இந்தப் பதிவு வீனட்றதே .


எல்லா மதங்களிலும் மூடப் பழக்க வழக்கங்கள் உள்ளது. ஆனால் அதை நீங்கள் சுட்டிக் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் இந்து மதத்தில் உள்ளதை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளீர் . இது எந்த முறையில் ஞாயம் என்று தெரியவில்லை.

இது பதிவில் உள்ளது பொதுப்படையான கருத்து அல்ல. உங்கள் தனிப்பட்ட வெறுப்பே என்றுதான் கூறவேண்டும் .

VIKNESHWARAN ADAKKALAM said...

@ லவ்லி மேடி

வெறுப்பு விருப்பு என்றெல்லாம் ஏதும் இல்லை. மீண்டும் சொல்கிறேன்... எனக்கு தெரிந்ததை தான் நான் எழுத முடியும்.... அப்படி இல்லை என்றால் நான் ஒவ்வொரு மதமாக மாறி கண்டறிந்து எழுத வேண்டும் காத்திருக்கவும்...

Unknown said...

மதிப்பிற்குரிய விக்னேஷ் அவர்களே ,


உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது....!! எந்த ஒரு நபரும் மதங்களில் உள்ள நன்மை தீமைகளை பேசுவதற்கு .... அந்த ... அந்த மதங்களைச் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அல்லது ... அந்த .. அந்த மதங்களில் இருந்தால் மட்டுமே ... அதனின் நன்மை , தீமைகளை அறிய முடியும் என்பது நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன் .

தோழரே நான் உங்களை குறை கூறவில்லை. சற்றே நமக்குள் நடக்கும் நட்பு வாதம் . எந்த ஒரு விஷயத்தையும் பொதுப்படையாக , துணிவுடன் வெளிக்கொணர்வதே அதன் முழுமையாகும். நீங்கள் இந்த விஷயத்தை ஒரு மதத்தை மட்டும் சாராமல் , உலக மூட நம்பிக்கைகள் என்று பொதுப்படையாக அனைத்தையும் பேசியிருந்தால் இது முழுமையடைந்திருக்கும்.
நன்றி ,


இங்ஙனம் ,

லவ்டேல் மேடி......

Tamilvanan said...

மதங்கள் மனிதத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டன? மதங்கள் இன்று வியாபாரிகளின் பிடியில். ஆங்கிலேயர்கள் மதத்தை பரப்பியதும் வியாபார நோக்கதிற்காகவே. இங்கும் எங்கும் மதம் பலரின் சுய லாபத்திற்காக பயன் படும் கருவியாகவே உள்ளது.

Kalaiyarasan said...

வணக்கம் விக்கி, நீண்ட கால இடைவேளையின் பின்பு சந்திக்கிறோம். இப்போதெல்லாம் நேரம் கிடைக்கா விட்டாலும், உங்களது பதிவுகளை பார்க்காமல் விடுவதில்லை. உங்களிடம் நிறைய விஷயம் இருக்கிறது. நல்ல பல கருத்துகளை துணிவாக எழுதுகின்றீர்கள். மலேசியாவில் இந்தியர் சமூகம், மலேய சீன மக்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கி காணப்படுகின்றனர். அப்படியான நிலையில் மூடநம்பிக்கைகள் அவர்களது கஷ்டங்களில் இருந்து விடுதலையாக உள்ளது. உங்களது மதம் குறித்த இந்தப் பதிவை 20 பேருக்கு மெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்களும் தமக்கு தெரிந்த 20 பேருக்கு கட்டாயம் அனுப்ப வேண்டுமெனவும், அப்படி அனுப்பாத பட்சத்தில் அருள்மிகு பண்ணாரி அம்மன் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அடிக்குறிப்பிட்டு தான் அனுப்பினேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ லவ்லி மேடி

உலக அளவிலான மூட நம்பிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை... நான் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் ஆள் என வைத்துக் கொள்ளுங்களேன். உங்கள் எதிர்ப்பார்ப்பளவுக்கு என்னால் எழுத முடியாமல் போனது மிகவும் வேதனையாக இருக்கிறது. அடுத்த திருவிழாவுக்கு நாக்குல அலகு குத்தி தப்புக்கு பரகாரம் செய்துக்கிறேன்.

@ தமிழ்வாணன்

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டேல்... வைடீரியத்துல மாணிக்க கல்லை சேர்த்து கால் பெரு விரலிலும் கை சுண்டு விரலிலும் போடுங்கோ.... இப்படி மதத்துக்கு எதிரா பேச மாட்டேல்... பெரியவாலாம் சாமிக்கு தானே காசு செலவுபண்றேல்னுனா சொல்றா....

@ கலையரசன்

நெடுநாளைக்கு பின் வருகை தந்தமைக்கு நன்றி... அந்த பதிவு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா எனக்கே வந்து பண்ணாரி ஆத்தா என்னை தண்டிச்சுட போறா.... :)) பயமாக இருக்கு...

நலமா? தற்சமயம் எங்கே இருக்கிங்க... சைப்ரஸ் நகரமா? மடலில் அனுகுகிறேன்.. :)

வால்பையன் said...

லவ்டேல் மேடி இவ்வளவு சீரியஸாகவும் ,பொறுப்புடனும் பின்னூட்டம் இடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்!

Unknown said...

அப்படி போடுங்க அறுவால!
அப்படியாவது சிந்திக்கராங்கலான்னு பாப்போம்.

வரவேற்க வேண்டிய கருத்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன்,
ஆதி

aathiey_yoga@yahoo.com

Anonymous said...

நமது சமயத்தில் நடக்கும் உண்மையை பயமின்றி எழுதியதற்கு நன்றி..எவ்வளுவுதான் மேன்மை அடைந்தாலும் நம் மக்கள் இம்முட நம்பிக்கைகளை ஒழிக்காவிட்டால் வாழ்வில் பல பிரச்சனைகளை எதிர் நோக்க நேரிடும்..தங்களது பதிவேடு உண்மை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் பாடமை இருக்கட்டும்...

பாரத் ராஜ் said...

”சமயமெனும் சாக்கடை உலகம்”
தலைப்பு சமயம் முழுவதையும் குறை கூறுவதாக உள்ளது... மூட நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை... உங்களுக்கு உள்ள கோபம் எனக்கும் நமது சமுதாயம் மேல் உண்டு... ஆனாலும், சமயமே சாக்கடை என்று முடிவு கட்டுவதை நான் ஒப்புகொள்வதாக இல்லை...

-பாரத்