Tuesday, November 04, 2008

சிங்கையில் சில நிமிடங்கள்!! (1)

சிங்கையில் கால் வைத்த போது சரியாக மாலை மணி 6.30. எனது கைபேசிகள் இரண்டிலும் மின்சக்தி காலியாய் போயிருந்தது. முதல் நாள் வேலை முடிந்து தாமதமாக வந்ததினால் கைபேசிகளை 'சார்ஜ்' செய்யவில்லை என நான் சொன்னால் அது பொய்யென கண்டுபிடிக்க சிலர் உள்ளனர். அதனால் உண்மையும் பேசும் நிர்பந்தத்தில் ஆளாக்கப்படுகிறேன். கைபேசிகள் 'சார்ஜ்' செய்யாப்படாமல் போனதற்கு காரணம் எனது சோம்பேறித்தனம் தான்.

இது போக இணையத்தில் நீண்ட நேரம் இருந்த என்னை "அவனை போய் தூங்கச் சொல் நாளை பேருந்தை விட்டுவிட போகிறான்" என ஜோசப் அண்ணனிடம் தூது அனுப்பிய கோவியார் என் கையடக்கப்பேசியை 'சார்ஜில்' போட சொல்லாததை இவ்வேளையில் கடுமையாக சாடுகிறேன். சரி கதையின் பக்கம் வேறு பாதையில் பயணிக்காமல் இருக்க நாம் ஆரம்ப நிலைக்குச் செல்வோம்.

நல்ல வேளையாக நமது பின்னூட்டப் புயலின் கைபேசி எண்ணை ஒரு சிறு புத்தகத்தில் குறித்து வைத்திருந்தேன். தக்க சமயத்தில் உதவியாய் அது அமைந்தது. பேருந்து ஓட்டுனரிடம் என்னை 'பீச் ரோட்டில்' இறக்கிவிடச் சொன்னேன். அவரும் செய்தார். கைபேசியில் மின்சக்தி இல்லாதது போக அப்படி இருந்திருந்தாலும் வேலை செய்யாமல் தான் போயிருக்கும். காரணம் மலேசிய கைபேசி இணைப்பு அங்கு இல்லாமல் இருந்தது. பொது தொலைபேசியை நாடினேன்.

இளைய தளபதி (பட்டம் கொடுத்தது ஜோசப் பால்ராஜ்) விஜய் ஆனந்திடம் தொலைபேசிவிட்டு காத்திருந்தேன். அவர் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். அவர் வரும் வரையில் அந்த முதிய தம்பதியினரோடு பேசிக் கொண்டிருந்தேன். யார் அந்த முதிய தம்பதிகள் என தெரிந்துக் கொள்ள நான் தொலைபேசியை நாடி சென்ற இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்.

நான் பொது தொலைபேசியின் அருகில் சென்ற போது முதிய தம்பதியர் இருவர் என்னைப் போலவே சிறு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்களது மகன் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் மகனுக்கு அழைத்து கொடுக்குமாரும் கேட்டனர். அதன் பிறகு விஜய் ஆனந்த் வரும் வரையில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் மலேசியர்கள். அவர்களுடைய மகன் மட்டும் சிங்கையில் நிரந்தரமாக குடியிருந்துவிட்டதால் இவர்களும் அடிக்கடி இங்கு வந்து போவதாக சொன்னார்கள்.

வலை வீசி தேடி கொண்டு சற்று நேரத்தில் விஜய் ஆனந்த் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தடைந்தார். வியர்த்து விறுவிறுத்து போய்யிருந்தார் பாவம். நான் அதிக நேரம் காத்திருக்கக் கூடும் என விரைந்து வந்ததாக அறிகிறேன்.
பிறகு சாப்பிட போகலாம் என்றார். ஆனாலும் விதி விளையாடியது. சுற்றிலும் தாய்லாந்து மக்களின் கடைகள். வாடையே சரிவரவில்லை என்றதும் குளிர்பானங்களை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்து பருகிவிட்டு வாடகை காரை பிடித்து ஜோசப் அண்ணன் வீட்டுக்கு விரைந்தோம்.

ஜோசப் அண்ணன் இன்முகத்தோடு எங்களிருவரையும் வரவேற்றார். அவர் இல்லத்தில் வசிக்கும் பன்னீர் எனும் நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். பயண விசாரிப்புகள் இணையம் என சற்று நேரம் போன பிறகு சாப்பிட போனோம். அதற்கு முன் நான் காலையில் நேரம் வகுத்துச் சென்ற இரு பதிவுகளும் வராதிருப்பதை அறிந்து பதிவேற்றம் செய்ய எண்ணினேன். எனது மடி கணினியை எடுத்த போது. "என்னப்பா இது 'லாப்டாப்'னு சொல்லி கால்குலேட்டர் வச்சி தட்டிக்கிட்டு இருக்கனு ஜோசப் அண்ணன் மொக்கை போட்டார்.

சற்று நேரத்தில் கோவி அண்ணன் அந்தக் குடியிருப்புக்கு வந்தடைந்தார். வேலை முடிந்து நேராக அங்கு வந்திருப்பதை அறிந்தேன். என்னை அணைத்து இன்முகத்தோடு வரவேற்றார். மிக மகிழ்ந்தேன். இரவு சாப்பாடு முடிந்ததும் அடுத்து வரும் பத்திகளை தடை செய்தபடியால் இங்கு குறிப்பிடமுடியாமல் போகிறது. இரவு ராம் எனும் நண்பர் வந்தார். எல்லோரிடமும் இனிமையாக பேசினார்.

மறு நாள் பதிவர் சந்திப்புக்கு திட்டங்கள் சில முடிவெடுத்த பிறகு தூங்கச் சென்றோம். ராம் மற்றும் விஜய் ஆனந்த் விடை பெற்று அவர்கள் இல்லம் திரும்பினர்.

அதிகாலையில் நல்ல மழை பெய்தது. பொழுது விடிந்தது அறியாமல் நல்ல தூக்கம் போட்டேன். ஜோசப் அண்ணன் எழுப்பிவிட்டு சென்றார். குளித்துவிட்டு கிளம்பிய போது சரியாக மணி மதியம் 1.20 ஆகியிருந்தது. வயிற்றுக்கு ஆகாரம் போட நேராகா தமிழர் உணவகத்தை நாடினோம். அங்கு சென்றடைந்த சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

பதிவர் சந்திப்புக்குச் செல்லும் முன் உணவகத்திலேயே ஒரு மினி சந்திப்பு உருவாகிவிட்டதை அறிந்தேன். இது எனது முதல் பதிவர் சந்திப்பு என்பதால் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் பெறும் மகிழ்சியடைந்தேன். சற்று நேரத்தில் கிரி, ஜோதிபாரதி மற்றும் அகரம் அமுதா போன்ற பதிவர்கள் வந்தடைந்தனர். அளவளாவிக் கொண்டே மதிய உணவும் சிறப்பாக முடிந்தது.

பதிவர்களுக்கு பாதை காட்டுவதிலும் தொலைபேசி அழைப்புகளுக்கும் விஜய் ஆனந்த் சிரத்தைக் கொண்டு பதில் சொல்லி வந்தார். ஜோசப் அண்ணனும் அதில் பங்கு கொண்டார்.

எனது பதிவின் வழி சமீபத்தில் அறிமுகமானவர் தம்பி மீனாட்சி சுந்தரம். நான் சிங்கை வருவதை அறிவித்திருந்தேன். அவரும் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறினார். சிங்கைக்குச் சென்றவுடன் அவருக்கு அறிவித்தேன். மீனாட்சி தம்பி ஏற்கனவே ஜோசப் அண்ணனுக்கும் அறிமுகமாகி இருந்தார்.

பதிவர் சந்திப்புக்கு புது மாப்பிள்ளை போல் சட்டை கசங்காமல் வந்து சேர்ந்தார். அனைவரிடமும் சகஜமாக பழகி நன்மதிப்பைப் பெற்றார். மீனாட்சி தம்பியை பதிவர் சந்திப்பு இடத்தில் தான் சந்தித்தேன். அவரின் அவ்வப்போதைய அழைப்புகளுக்காக இவ்விடத்தில் அறிமுகம் செய்து மீண்டும் மதிய உணவை சாப்பிட்டு முடித்த இடத்தில் இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.

உணவை முடித்துக் கொண்டு எம்.ஆர்.டி தொடர் வண்டி (உபயம் பாரி.அரசு) நிலையத்தை நோக்கி புரப்பட்டோம். நடை கலைப்பு தெரியாமல் இருக்கும் பொருட்டு போகும் வழியினில் சிலர் புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றிக் கொண்டனர்.

இவ்வேளையில் திரு.ஜோதிபாரதியோடு பேசும் வாய்ப்பு எனக்கு கிடத்தது. சிங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதில் ஆரம்பித்து பதிவுகள், தொழில், வாழ்க்கை என பல விடயங்களை விவாதித்துக் கொண்டு சொன்றோம்.

தொடர் வண்டியில் என்னையும் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரையும் வெண்பா விரும்பி முகவை ராம் மொக்கை போட்டுக் கொண்டிருந்தார். அது என்ன என்பதை நான் கூற முடியாத பட்சத்தில் இதை அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

முகவை ராம் நல்ல நகைச்சுவை உணர்வு நிறைந்த மனிதர். இலக்கிய விடயங்களையும் நகைச்சுவை உணர்வோடு பேசி அதை நினைவில் கொள்ளச் செய்தார். என்ன விடயம் என்பதையும் அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி வேண்டுகிறேன். இருந்தாலும் அந்த கம்பனின் சந்தேகத்துக்குறிய இலக்கிய விடயத்துக்கு அழகான விளக்கத்தை அகரம் அமுதா சொன்னார். இது நடாந்தது பதிவர் சந்திப்பு முடிந்த பிறகு என்பதால் மீண்டும் தொடர் வண்டி ஏறிய இடத்திற்கு வருவோம்.

எம்.ஆர்.டி பயணம் முடிந்து செந்தோசா (பதிவர் சந்திப்பு இடம்) சொல்லும் முன் அங்காடியில் சில குளீர்ர்ர்ர்ர் பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக் கொண்டோம். சொந்தோசா செல்லும் தொடர் வண்டி ஏறும் முன் வலைபதிவர் திரு.ஜோ அவர்களை சந்தித்தோம். அவரும் ஜோதியில் இணைந்தார்.

செந்தோசா செல்லும் தொடர் வண்டியில் ஒரு விசித்திர மனிதனைக் கண்டோம். இறுதிப் பகுதி இன்று மாலைக்குள் பதிவேற்றப்படும்...

9 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)))

Sathis Kumar said...

மலேசிய வலைப்பதிவர்களை பிரதிநிதித்து சிங்கை பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்ட விக்கிக்கு வாழுத்துகள்.. இறுதி பாகத்தை விரைவில் பதிவேற்றவும்..

சி தயாளன் said...

:)

கிரி said...

//செந்தோசா செல்லும் தொடர் வண்டியில் ஒரு விசித்திர மனிதனைக் கண்டோம்//

ஹா ஹா ஹா ஹா

விக்னேஸ்வரன் நல்லா சுவாராசியமா எழுதி இருக்கீங்க :-)

வடுவூர் குமார் said...

சொல்லிவச்ச மாதிரி நான் அங்கிருந்து கிளம்பியதும் வருகிறீர்கள்.:-))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஆயில்யன்

மீ த பர்ஸ்ட்டூ போட்ட ஆயில்யனுக்கு ஜே...

@ சதீசு குமார்

இரண்டு பாகத்தையும் படித்து கருத்து சொன்னதிற்கு நன்றி...

@ டொன் லீ

நானும் :)

@கிரி

நன்றி கிரி சார். இன்னமும் உங்க பக்கம் திறக்க முடியவில்லை :(

@ வடுவூர் குமார்

அடடா மிஸ் பண்ணிட்டேங்க... பதிவர் சந்திப்பில் நீங்களும் ஹாட் டாப்பிக் தான்...

கானா பிரபா said...

சிங்கப்பூர் போயிருக்கேன், செந்தோசா போனதில்லை, சுவாரஸ்யமா இருக்கு இருங்க அடுத்ததையும் படிக்கிறேன்.

விலெகா said...

சிங்கப்பூர் போயிருக்கேன், செந்தோசா போனதில்லை,
நாங்க சிங்கப்பூரே போனதில்லை:---- ))))))))))))

மே. இசக்கிமுத்து said...

கட்டுரை அருமை!