Tuesday, February 04, 2014

அங்கோர் வாட் - மரக் கோட்டை

Leper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது 

கம்போடியா இரு வேறு சரித்திர பதிவுகளை நமக்கு அளிக்கிறது. அங்கோர் காலத்தின் மாட்சியும் போல் போட் காலத்தின் வீழ்ச்சியும் அழுத்தமான ஆதாரங்களோடு நம் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சீனா, வியட்நாம் மற்றும் பிரஞ்சு சுரண்டல்களை நாம் கடந்துவிடுகிறோம். அதற்கான சரித்திர குறிப்புகள் பல குறைபாடுகள் கொண்டுள்ளன. பிரஞ்சுசுகார்களை பொருத்தவரை கம்போடியாவின் இன்றய துரித நிலைக்கு அவர்களின் காலனிய ஆட்சி உதவியுள்ளது என்பதே.

போல் போட் ஆட்சியில் மக்களை பண்டைய வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார்கள். ஆண்டுக்கு நான்கு அறுவடைகள் செய்ய மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் போல் போட்டின் நான்கு அறுவடைக்கான யோசனையின் காரணம் அங்கோர் வரலாறு தான். அங்கோர் காலத்தில் நான்கு அறுவடை சாத்தியப்பட்டுள்ளது. வற்றாத 'Tonle Sap' அணையும் சியம் ரிப் நதியும் கம்போடிய விவசாத்தை பொன் விளையும் பூமியாக்கி உள்ளது. போல் போட் காலத்தில் அதன் நடைமுறை சாத்தியமற்று போனது கேள்விகுறியான ஒன்றே.

அப்சரஸ் புடைச் சிற்பம்
யசோதரபுரத்திற்கு முன்பிருந்த அங்கோர் நகரம் ஹரிஹரலாயம் என அழைக்கப்பட்டது. ஹரிஹரலாய காலத்து அரசர்களில் ஒருவன் யசோஹவர்மன். யசோஹவர்மன் நோய் வயபட்ட அரசனாக புகழ் பெருகிறான். கிருமி கண்ட குலோத்துங்க சோழனை போல் கெமர் மக்கள்ளின் அங்கோர் வரலாற்றுக்கு யசோஹவர்மன். இதன் தொடர்பான குறிப்பு பின்வருமாறு:-

"சீதோஷன சூழ்நிலைகளால் மக்கள் பெருவியாதிக்கு உட்படுவதாக இந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். வீதிகளில் அதிகமான தொலுநோயாளிகளை காண முடிகிறது. தொலுநோயாளிகள் மக்களோடு ஒன்றியே வாழ்கிறார்கள். தொலுநோயை இவர்கள் பெருவியாதியாக கருதவில்லை. முன்பு ஆட்சி செய்த அரசனுக்கும் இப்படி நேர்ந்ததாக மக்களிடம் பேச்சு உண்டு. எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆற்றங்கரையில் உடலை சுத்தம் செய்து கொள்கிறார்கள். தலையை அடிக்கடி நீரில் கழுவிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை நோய் நிவாரணியாக கருதுகிறார்கள்.

தா ப்ரோம்

தா ப்ரோம்
 உடலுறவு கொண்ட உடன் நீரில் மூழ்கி குளிப்பதாலேயே பலருக்கும் வியாதி காண்கிறது என்பது என் கருத்து. வயிற்றுக் கடுப்பு உண்டாகும் 10 நபர்களில் 8 அல்லது 9 பேர் இறந்து போகிறார்கள். மக்களின் பயனுக்கு அறிவுப்பூர்வமாக சில மருந்து வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. " Zhou Daguan LEPROSY AND OTHER ILLNESSES, Page 65&66 A Record of Cambodia The Land and Its People (1296-1297) எனும் புத்தக குறிப்பின் சாரமே மேலே நான் குறிப்பிட்டுள்ளது.

ச்சாவ் தாகுவான் தனது குறிப்பில் கூறும் அரசன் முதலாம் யசோஹவர்மனாவான். 'Leper King' அல்லது தொலுநோய் ராஜா யார் என்பதில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. The Legend of the Leper King - Facing Cambodian Past எனும் நூல் ஆசிரியர் D.Chandler. இவர் எட்டாம் ஜெயவர்மனை தொலுநோய் ராஜாவாக குறிப்பிடுகிறார். சிலர் அது ஏழாம் ஜெயவர்மன் என்றும் நம்புகிறார்கள். இன்றய நிலையில் முதலாம் யசோஹவர்மன் என்பது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

யசோஹவர்மன் தனது காலத்தில் பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். 100 மடாலயங்களையும் பல கோவில்களும் கட்டிய இந்த அரசன் தொலுநோயில் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். ஆட்சியை மேம்படுத்த யசோதரபுர சிந்தனையை இவர் முன் வைத்துள்ளார். ஹரிஹரலாய நகரில் இருந்து யசோதரபுரம் நகரை அமைக்க வழிவகுத்தவர் யசோஹவர்மன். தனது அரசாட்சியையும் அழியாப் புகழையும் தக்க வைக்க யசோதரபுர சிந்தனை கை கொடுக்கும் என நம்பினார். சரி இந்த ராஜாவின் கதை எதற்கு?
Terrace of the Leper King
Terrace of the Leper King புடைச் சிற்பங்கள்

கடந்த பதிவில் Terrace of Elephant எனும் பகுதியை குறிப்பிட்டிருந்தேன். அதன் அருகே இருக்கும் மற்றுமொரு பகுதி Terrace of the Leper King. அங்கிருந்த சிலை அட்டைகளின் பாதிப்பில் தொலுநோயாளி சிலை போல் காணபட்டது. தொலுநோய் ராஜாவின் பெயராகவே அப்பகுதி அழைக்கப்படுகிறது. அச்சிலை தர்ம ராஜாவின் (எமன்) சிலை. முதலாம் யசோஹவர்மன் தர்ம ராஜாவாகவும் அழைக்கப்படுகிறார். யசோஹவர்மனை போல் இன்னும் சில பெயர் அறியா ராஜாக்களும் தொலுநோயால் இறந்து போயிருக்கவும் சாத்தியம் உள்ளது.

12 சிறு கோபுரங்கள் - Prasat Suor Prat
இவ்விரு பகுதிகளுக்கும் எதிர்புரம் இருப்பது 12 சிறு கோபுரங்கள். அவை ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பவையாகும். புராதன அங்கோர் காலத்தில் 12 மாதங்களை கொண்ட கால அளவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருவன் பிறந்த மாதத்திற்கு ஏற்ப அந்தந்த கோபுரங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்தக் கோபுரங்களில் கொடுக்கப்படும் தண்டனைகள் சொர்கத்தின் தீர்ப்பாக கருதப்படுகிறது.

முதல் நாள் பயணத்தின் பாதியை கடந்திருந்தோம். அங்கோர் பார்க்கில் அமைந்த ஒரு லோக்கல் உணவகத்தில் எங்கள் மதியை உணவை முடித்துக் கொண்டோம். சீன- தாய்- கம்போடிய உணவு வகைகள் கலந்தபடி இருந்தது. மலேசியாவில் சீன உணவுகளையும், ஏதோ ஒரு வகையில் மலேசியர்களின் வாழ்வின் ஒன்றிவிட்ட தாய்லாந்து உணவுகளையும் ருசிந்திருந்தபடியால் புதிய வகை என சொல்ல ஏதும் இல்லை. கெமர் மொழிக்கு அடுத்தபடியாக சீன மொழியே கம்போடியாவின் வியாபார மையங்களில் தென்பட்டது. முக்கியமாக உணவருந்தும் இடங்களில்.

கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டவர்கள்
மாலையில் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குறைந்தது போல் இருக்கக் கண்டதும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிலோ மீட்டர் பயணத்தில் 'Ta Phrom' எனும் கோவிலை அடைந்தோம். இந்தக் கட்டிட பகுதிக்குள் நுழைய சில மீட்டர் நடக்க வேண்டும். நடக்கும் வழியில் சிலர் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனிக்கையில் கண்ணி வெடியில் பாதிக்கபட்டவர்கள் என அறிந்துக் கொள்ள முடிந்தது. கெமர் மக்களின் பாரம்பரிய இசையை வாசிக்கிறார்கள். இசை தட்டுகளை விற்பனை செய்து தமது வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.

நடக்கும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்கள். மழைத் தூரல்களை சிந்திக் கொண்டிருந்தன. இந்த மரங்கள் ஒரு ’ஐகோன்’ என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மரங்களும் இரண்டு அல்லது மூன்று தென்னைகளின் உயரம் உள்ளன. இம்மரங்கள் 500 ஆண்டுகளை கடந்ததாக மதிப்பிடப்படுகிறது.

'தா ப்ரோம்' என்றழைக்கப்படும் இக்கோட்டை/ கோவில் பகுதி ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இயற்கை எழில் கட்டியணைத்த இரம்ய சூழலை இங்கு நாம் இரசிக்க முடிகிறது. ஏதோ ஒரு பிரமிப்பு மனதில் புகுந்து நம்மை வாய் பிளக்கச் செய்கிறது. கட்டிடங்களை இருக்கிப் பிடித்த மரங்கள் அழகை கொடுத்தாலும் ஒருபுரம் சிதிலங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஹாலிவூட் படத்தால் புகழ்பெற்ற பகுதியென வழிகாட்டிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். 'தோம் ரைடர்' எனும் திரைப்படம் இப்பகுதிகளில் தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில் இராஜவிஹாரம் என அழைக்கப்படுகிறது. தவச் சாலைகளும் நூலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் ஜெயவர்மன் தனது தாய்க்கு அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவச் சாலையாக இருந்த ஓரிடம் இருட்டான சூழலில் சுவர் முழுக்க முஷ்டி அளவிளான ஓட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துவாரங்கள் விலை உயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கைகளை இறுக்கி இதயத்தில் தட்ட அறையெங்கும் இதய ஒலி கேட்கிறது.

விதவிதமான அப்சரஸ் புடைச் சிற்பங்களையும் சுவரோவியங்களையும் புகைப்பட கருவிக்குள் அடக்கிக் கொண்டு போகும் போது மரப் பலகைகளான நடைபாதை நம்மை ஒரு பிருமாண்டமான காட்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. இக்கட்டிடங்களை சிதிலமாக்கிக் கொண்டிருக்கும் இந்த இலவம் மரங்கள் தான் இதை தாங்கி பிடித்து பாதுகாக்கிறதா என யோசிக்க வைக்கிறது.

மரங்களின் ஆட்சி
சட்டென நினைவுக்கு வர ச்சேனிடம் கேட்டேன். 'இக்கோவிலில் டைனசோர் வகையை சேர்ந்த மிருக சிற்பம் உண்டு அல்லவா. அது எந்த பகுதி?'. நாங்கள் அவ்விடத்தின் அருகாமையில் இருந்தோம் ச்சேன் அந்த பகுதியை காண்பித்தார். அங்கோர் கால கட்டத்தில் இச்சிற்பத்தை பதிவு செய்திருப்பது ஆச்சரியமே. இதை Stegosaur என குறிப்பிடுவார்கள். The Mysteries of Angkor Wat எனும் புத்தகத்தில் இச்சிற்பம் தொடர்பாக குறிப்புகள் வரும். Richard Sobol எனும் புகைப்பட கலைஞரால் எழுதப்பட்ட புத்தகம். பல அருமையான புகைப்படங்களோடு பயண குறிப்பை எழுதி இருப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற நூல் இது.
Stegosaur/ காட்டு பன்றி/ காண்டா மிருகம்???

புடைச் சிற்பங்கள்

இந்தக் கோவிலின் மறு புணரமைப்புக்கு இந்திய தேசம் நேசக் கரம் நீட்டியுள்ளது. பிளைட் பிடித்து வந்த பாவத்துக்கு கட்டிடத்தை காப்பாற்றும் பேர்வழி என சிமெண்டை கறைத்து கொட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவும் அவ்வேலையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

முதல் நாள் பயணம் இந்த கோவிலோடு முடிந்தது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கலைத்துப் போய் இருந்தோம். விடுதியில் 7 டாலருக்கு மசாஜ் வசதிகள் இருந்தது. மனதிற்கு பயணமும் உடலுக்கு மசாஜும் இதத்தைக் கொடுத்தது. சியம் ரிப் நகர் எங்கும் அதிகமான மசாஜ் மையங்கள் உள்ளன. 5 டாலர் முதல் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் முழுக்க கோவிலை சுற்றியவர்கள் மாலையில் காலை நீட்டி மசாஜ் செய்து இளைப்பாறிக் கொள்கிறார்கள்.

தா ப்ரோம்
கம்போடியாவில் பியர் விலை மிக மலிவாக உள்ளது. மலேசியாவில் விற்பனை செய்யப்படும் அதே பியர் வகைகள் தான். சுவையும் அதே போல் என அறிகிறேன். அங்கோர் பியர், கம்போடியா பியர் என உள்ளூர் வகைகளும் உண்டு. விற்பனைக்கு இருந்ததை கையில் எடுத்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.

பயணங்கள் தொடரும்...

4 comments:

Anonymous said...

WOW! VERY INTERESTING!

கோவி.கண்ணன் said...

தொலுநோய் அல்ல தொழுநோய்

பின்னூட்டம் வெளி இட வேண்டாம்

ko.punniavan said...

பயன்மிக்க தொடர். விட்டு விட்டு எழுதுவதால் முந்தைய பதிவின் தொடர்ச்சியை நினைவில் கொள்ள முடியவில்லை. சீன உணவும் அங்குள்ள உணவும் ஒரே சுவைதான் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். போய்ப்பார்க்கத் தூண்டும் தொடர்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

கருத்துக்கு நன்றி...

@ கோவி கண்ணன்

பின்னூட்ட மட்டறுத்தல் இல்லை. சுட்டியமைக்கு நன்றி...

@ கோ.புண்ணியவான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. விரைவாக எழுத முயற்சிக்கிறேன். ஏனோ பல தடங்கல்...