Monday, September 28, 2009

எனக்கு சில அடிமைகள் வேண்டும் (கடைசி பகுதி)


அவள் என் மீது படுத்திருப்பதாக உணர்ந்தேன்...
எனக்கு சில அடிமைகள் வேண்டும் பகுதி ஒன்று (படிக்க இங்கே சுட்டவும்)
நாள்: வியாழக்கிழமை 12.08.2518
இடம்: விற்பனை அறை
நேரம்: இரவு 8.18
என் தலையில் இருந்த கருவியை கழ‌ட்டி வைத்தபடி அவள் சிரித்தாள்.
அட இது நிஜம் இல்லையா... ச்சே... என் நினைவுகளை படித்திருப்பாளோ... சிறு வெட்கத்தை அவளிடம் காண முடிகிறது.
"உங்களின் நினைவாற்றல் மற்றும் உடல் ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படும்படியாக இயந்திரத்தில் கட்டளை கொடுத்துவிடலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களுக்கு மறு பரிசோதனை செய்து அதற்கேற்ப சரிபடுத்திக் கொள்ளலாம்".
"உன்னைப் போலவே இந்த இயந்திரமும் என்னை வியக்க வைக்கிற‌‌தடி பெண்ணே, இதன் ஆக்கத்தை எத்தனை நாட்களில் நான் உணர முடியும்?"
"சுமார் 20 முதல் 25 நாட்கள் ஆகலாம், அப்படி உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபித்தால் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்கலாம்..."
"நஷ்ட ஈடாக உன்னைத் திருமணம் செய்து வைக்கக் கேட்கலாமா...?"
அவள் முறைத்தாள். மீண்டும் சிரித்தாள். எனக்கு அதன் அர்த்தங்கள் புரியவில்லை. அர்த்தம் புரியாததால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை போலும். பாதகமில்லை, இதோ இயந்திரத்தை வாங்கிவிட்டேன். என்னை திடப்படுத்திக் கொண்டு இவளை சந்திக்க வேண்டும். சம்மதம் தெரிவித்துவிட்டால் அரசிடம் திருமணத்துக்கு விண்ணப்பம் செய்துவிடலாம். அடடா! அவள் பெயரைக் கேட்க மறந்தேன். சரி அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.
அன்று வீடு திரும்பியவுடன் நான் உற்சாகமாக இருந்தேன். ப்ரேண்டோமினோ இயந்திரத்தைப் பொருத்தி வைத்து அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக படித்து அதன் இயக்கங்களைச் சோதித்துக் கொண்டேன்.

முதலில் என்ன விதமான பானத்தை முயற்சிக்கலாம்? பல முறை சிந்தித்தேன். பல தேர்வுகள் என் மனக் கண்ணில் ஊஞ்சலாடின.
பௌதிகம் எனும் பொத்தானை அழுத்தினேன். உடல் ஆரோக்கியம் எனும் பிரிவை தேர்வு செய்து சாக்லெட் எனும் பொத்தானை அழுத்தினேன். கட்டுமஸ்தாக கட்டுக்கடங்காத காளை போல் எனச் சொல்வார்களே அது போல் இருந்தால் அவள் என்னை விரும்புவாள் எனும் எண்ணம் தான்.
எனது கோப்பையில் சாக்லெட் பானம் நிர‌ம்பியது.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே என்பது அளவுகோள். நான் இரண்டு மூன்று நாட்களாக அருந்தி வந்தேன். சொல்லிக் கொள்வதை போல் மாற்றங்களை உணராமலிருந்தேன்.
சில தினங்களுக்குப் பின் நிறுவனத்தில் எங்களை ஆய்வியல் தொடர்பான மேல் நிலைப் பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள்.
"இதோ உங்கள் மேசை மீது இருக்கும் அந்த முள் கரண்டியை கவனியுங்கள். பதுவிசாக எடுத்து உண்பதற்கு பயன்படுவதை போலவே நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் உதட்டை பதம் பார்க்கவும் செய்யும். இப்படித் தான் எந்த ஒரு அனுகுமுறைக்கும் பல கோண பார்வைகள் உண்டு..." அவரின் உரை பழைய பஞ்சாங்கமாகவே இருந்தது.
ஓய்வாக இருந்த ஒரு மதிய வேளையில் அந்த வரிகளை ஏனோ நினைவு கூர்ந்துக் கொண்டேன். அந்த யோசனை ப்ரேண்டோமினோ இயந்திரத்தின் மீதும் சென்றது. ஏன் இதன் குறைபாடுகளை நான் கண்டறிய முடியாமல் போகிறது. நிச்சயமாக இதற்கும் குறை இருக்கும் தானே. இருக்கும். சோதித்துவிடலாம்.
உலக வளர்ச்சி ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக அமைந்திருந்த காலக் கட்டம் இருந்தது. அதை தகர்ப்பதற்கான வழிகளை கண்டறிய ஏகப்பட்ட பணம் வாரி இறைக்கப்பட்டது. அவர்கள் நினைக்கும் வகையில் மக்கள் இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை.
வேலையிடம், உண்பது, உறங்குவது மட்டும் ஒருவனுக்கு போதுமானதாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதலே இதற்கு சாத்தியம். அப்படி செய்ததில் ஆட்சியாளர்கள் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார்கள்.
ஆட்சியாளர்களின் உச்சக்கட்ட இலக்கே இந்த ஆரோக்கிய பான இயந்திரம். சில நாட்களில் எனது தனிபட்ட அயராத முயற்சியில் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இதற்காக அரசின் சில தடைகளை மீறியும் நான் செயல்பட வேண்டி இருந்தது. அதில் வெற்றியும் கண்டேன். சில அதிர்ச்சிகளையுடைய வெற்றி. பயமும் பதற்றமும் என்னை பிடுங்கித் தின்றது.
இதை நான் தடுக்க வேண்டும். நான் இங்கே இதை எதிர்த்து போராடினால் நம்புவார்களா? மக்கள் மத்தியில் பீதியை விளைவிக்கும் செயலாக நினைத்து என்னை கைது செய்யலாம். அவர்களின் திட்டத்தை அறிந்தவன் எனும் நோக்கில் எனை இரகசியமாக கொலை செய்துவிடலாம்.
இதை என் முன்னோர்களுக்கு தெரிவித்துவிட்டால் நான் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் இல்லையா. காலத்தை பின்னோக்கி பயணிக்கும் யுக்தியை நான் படித்திருக்கிறேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் தான் விரும்பிய காலத்திற்கு செல்வார்களாமே? அப்படி செய்ய நான் சித்தனாக வேண்டுமா? அதை கற்றுக் கொள்ளும் அளவுக்கு நேரமும் பொறுமையும் எனக்கில்லை.
நான் சிறுவனாக இருந்த சமயம் சரித்திர ஆய்விற்காக காலத்தை பின்னோக்கி பயணிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். சில காரணங்களுக்காக அது தடை செய்யப்பட்டது. அதைக் கண்டு பிடித்தவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் அவர் எனக்கு உதவி செய்வாரா என்பது சந்தேகமாக இருந்தது.
அவ்வியந்திரம் தொடர்பான செய்திகளைத் திரட்டினேன். எனது நண்பன் ரவிவர்மன் செவ்வாய் கிரகவாசியாக வாழ்ந்து வந்தான். அறிவியல் ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவன். அவன் உதவியுடன் அவ்வியந்திரத்தை குறைந்தபட்ச இயக்கங்களுடன் உருவாக்கினேன். அவசர கதியே இதற்கு காரணம்.
காலத்தை பின்னோக்கிப் பயணித்து வந்து இதோ இதை இப்பொழுது உங்களிடம் சொல்லிவிட்டேன். எனது முன்னோர்களாகிய நீங்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். மனித குலத்தை அடிமைபடுத்தும் செயல்திட்டங்கள் எதிர்காலத்தில் நடந்து கொண்டு இருக்கிறன‌. உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு சுதந்திர வாழ்க்கை அமைந்திருக்கிறது. அது நிரந்தரமல்ல. நேற்று துரித உணவகம் ஒன்றில் அமர்ந்து இணையத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் எதிர்கால செய்தியை உங்களிடம் தெரிவிக்கும் நோக்கத்தில் தான். எதிரே ஒரு காதல் ஜோடிகள் பிட்சாவோ பர்க்கரோ ஏதோ ஒரு வஸ்துவைத் தின்று கொண்டிருந்தார்கள். தற்செயலாக சார்ஸ் அவள் உதட்டில் ஒட்டிக் கொள்ள இவன் அதை தொட்டு நக்கிக் கொள்ள என கொஞ்சலும் மிஞ்சலுமாக இருந்தது. இதுதான் அந்த காதல் எனும் எழவோ! ஒரே கிளுகிளுப்பு சமாச்சாரமாக இருக்கிறது.
நானும் பிட்சாவோ பர்க்க்ரோ சாப்பிட விருப்பம் கொள்கிறேன். இங்கேயே இருந்துவிட நினைக்கின்றேன். காலம் அனுமதிக்காது. கால இயந்திரத்தின் இயக்கம் எனக்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே அனுமதித்திருக்கிறது. நேரம் காலாவதியானதும் நான் தானாகவே எதிர்காலத்துக்குச் சென்றுவிடுவேன்.
**************
நாள்: செவ்வாய்க்கிழமை 27.09.2518
இடம்: தெரியவில்லை
நேரம்: இரவு 11.24
கால இயந்திரம் என்னை மீண்டும் அழைத்து வந்துவிட்டது. நான் இப்பொழுது இருக்கும் இடத்தை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.
விற்பனை அறையில் பார்த்த அந்த இரப்பர் சிரிப்பழகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இவளுக்கு ஏதும் தெரிந்துவிட்டதோ? என் உள்ளுணர்வு உறுத்தியது.
அன்று பார்த்ததை விட இப்பொழுது இன்னும் எழிலாகத் தோன்றினாள். குட்டைக் கை சட்டையும், காற்சட்டையும் அணிந்திருந்தாள். இப்பொழுது தான் குளித்திருப்பாள் போலும். ஏதோ ஒரு வாசனை விசிரியடித்தது. தலைமுடியைக் கோதிவிட்டபடி இருந்தாள். காகம் எச்சம் போனதைப் போல் அதில் சில மயிர்களுக்கு வண்ணம் பூசி இருந்தது தெரிந்தது.
"உங்களின் பேருதவிக்கு நன்றி பாரிதாசன்..." எனக்கு வியப்பாக இருந்தது. எதற்கு இவள் நன்றி சொல்ல வேண்டும்.
"எதற்கு நன்றி சொல்கிறாய் பெண்ணே. இப்பொழுது உனது தனிமை பயத்தை விரட்ட வந்ததற்காகவா?"
"எங்களின் ஆரோக்கிய பான இயந்திரத்தின் விற்பனைக்காக நாங்கள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டோம். இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் ஆதரவில் செய்யப்பட்டது. மக்களிடையே சந்தேகம் வராமலிருக்கவே இப்படி தனியார் நிறுவனத்தின் வழி இயங்கினார்கள். இதன் செயல்பாட்டை பரப்புவதற்கு எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இருந்தும் வெற்றி கண்டோம். இதன் விற்பனை அரசு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருந்தது."
"நீ வந்தவுடன் விற்பனை சிட்டாக சிறகடித்திருக்குமே. உன் கண்களைப் போல்". அவள் பெருமூச்சிட்டாள். நான் அவளை மதிக்கவில்லை என கடுப்பேறுகிறாளோ?
"ஒருவர் இயந்திரத்தில் வெளிப்படும் பானத்தை அருந்திய அடுத்த 20 நாட்களில் அதில் கலக்கப்பட்ட மிக்ரோ சிப்கள் செயல்பட ஆரம்பித்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக மெய்ன் சிஸ்டத்தின் வழி எங்களின் தேவைக்கு ஏற்ப அவர்களை நாங்கள் இயக்க ஆரம்பித்துவிடுவோம்."
"அப்படி என்றால் 24 மணி நேரமும் என் ஞாபகமாகவே என்னை கவனித்து இருக்கிறாய் என சொல்ல வருகிறாய். அப்படித் தானே..?"
"எங்கள் தயாரிப்பின் இரகசியங்களை நீங்கள் கண்டறிந்த மறு நிமிடம் உங்களை அழித்துவிடத் திட்டமிட்டோம். ஆனால் எங்கள் குழுவின் தீர்மானத்தால் உங்களை வைத்து காரியம் சாதித்துக் கொண்டோம்".
"என்ன காரியம்..." என் தொண்டை குழிக்குள் சில கோலிக்குண்டுகள் உருண்டோடின. பயந்திருந்தேன்.
"இறந்த காலத்திற்கு நீங்கள் இச்செய்தியை சொல்ல முயற்சித்திருந்த அதே சமயம் நாங்களும் உங்களின் மூளை செயல்பாடுகளின் மாற்றங்களை செய்தோம். நீங்கள் சொல்லும் செய்தியை கேட்பவர்களும், பார்ப்பவர்களும் படிப்பவர்களும் அதை உள்வாங்கிக் கொள்ளும் சமயம் எழுத்திழும் பேச்சிலும் மில்லி மிக்ரோ சிப்ஸ் படிந்திருக்க உங்களின் மூளையை செயல்படுத்தினோம். அப்படி பார்த்து, படித்து, கேட்வர்களின் மூளைகளிலும் இயந்திர செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துவிடும்".
"அப்படி என்றால்..."
"உங்கள் தட்டச்சு செய்தல், எழுதுதல், பேசுதல், என எல்லா நடவடிக்கைகளிலும் மில்லி மிக்ரோ சிப்ஸ் பரவும் டெக்னாலாஜி சிஸ்டம், கணினியின் வைரஸ் போன்ற யுக்தி".
"அப்படி என்றால் அவர்கள்...."
"அரசு தான் நினைத்த காலக் கெடுவை விட அதி விரைவில் இவ்வுலகை அதன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்துவிடும். உன்னைப் போன்ற மனித ஜென்மங்களால் தொல்லை இல்லை. நம் உலகுக்கு வா...".
"இதை படித்தவர்கள்..."
அவள் என்னை நெருங்கினாள். அவள் விரல்களின் ஸ்பரிசம் என் உடலில் படர்ந்தது. என் உதடுகளில் அவள் உதட்டைப் பதித்தாள். அந்த முத்தச் சத்தம் இனிமையாக இருந்தது. அவள் விரல்களை என் இடுப்பில் பதித்துத் திருகினாள்.
எனது இறுதி செயல்பாடுகள் சேமிக்கப்பட்டது. எனது இயக்கங்கள் குறைந்தது. நான் மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருந்தேன்.
-முற்றும்-

13 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

அருமையான கற்பனை - அறிவியல் சார்ந்த கதை - சுஜாதாவின் சிந்தனை போல் இருக்கிறது - நடை நல்ல நடை - சொல்லாடலும் விவரிப்புகளும் அருமை

திறமை பளிச்சிடுகிறது விக்கி

நல்ல கற்ப்னை - நல்வாழ்த்துகள் விக்கி

Prabhu said...

சமீபத்தில் படித்த சயின்ஸ் ஃபிக்ஷ்ன்களிலே மிகச் சிறந்தது. பிறழாமல் கதையை கொண்டு சென்றுள்ளீர்கள்!

Iyappan Krishnan said...

முதல்பாகம் மிக விறுவிறுப்பாக இருந்தது. இரண்டாவதில் அது மிஸ்ஸிங்க்!

Unknown said...

இதேபோல் எதிர்காலத்தில் யுத்தம்(3 அண்ட் 4த் உலக யுத்தம் பற்றி எழுத இயலுமா

நல்ல கதை. சீக்கிரம் வேறு பதிவில் படிப்பேன் என்று நினைக்கிறேன்

வால்பையன் said...

வித்தியாசமான கற்பனை!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

நன்றி சீனா ஐயா... உங்களின் கருத்து உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

@ பப்பு

மிகையாக கூறியதை போல் இருக்கே :))... வாசிப்புக்கு நன்றி...

@ ஜீவ்ஸ்

அப்படியா.... அடுத்த முறை சரி படுத்திக் கொள்கிறேன்... நன்றி தல...

@ ஜெய்சங்கர்

ஹா ஹா ஹா ஏன் வேறு பதிவில்... அந்த அளவுக்கு நல்லா எழுதலைனு நினைக்கிறேன். இனி காப்பி பேஸ்ட் பண்ண மாட்டார்கள் என நினைக்கிறேன்...

@ வால்பையன்

நன்றி பாஸ்...

Subha said...

ஒரு வித்தியாசமான சிந்தனையில் உதித்த இந்த கதை..உங்கள் திறமையைப் பறைசாற்றுகிறது விக்கி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

கிரி said...

//எனது இறுதி செயல்பாடுகள் சேமிக்கப்பட்டது. எனது இயக்கங்கள் குறைந்தது. நான் மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருந்தேன்.//

சுவாராசியமாக இருந்தது :-)

Tamilvanan said...

ந‌ல்ல‌ க‌ற்ப‌னை வ‌ள‌ம். மேலும் இது போன்ற‌ ப‌திவுக‌ளை எதிர்பார்க்கிறேன்

குசும்பன் said...

முதல் பகுதியை படிக்காமல் படித்தேன், முதல் பகுதியை படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது!

Anonymous said...

WOWWWWWWWWWWWWWW!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபா

நன்றி...

@ கிரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ தமிழ்வாணன்

நன்றி...

@ குசும்பன்

படிக்காமல் படிப்பது எப்படி :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்...

@ தூயா

நன்றி சகோதரி...

M.Rishan Shareef said...

அறிவியல் ரீதியான கதை.
அருமையான சித்தரிப்பு.
கற்பனையைப் புரியும் விதமாக எழுதியிருக்கும் நடை சிறப்பு.
விறுவிறுப்பான கதை நகர்த்தலும் பாராட்டுக்குரியது.

பாராட்டுக்கள் நண்பா !
தொடர்ந்து எழுதுங்கள் !