Tuesday, July 28, 2009

Political Talk with கலையரசன்

கலையகம் வலைப்பதிவின் ஆசிரியர் கலையரசனுடனான சிறு கலந்துரையாடைலை இங்கு கொடுக்க விரும்புகிறேன். நண்பர் கலையரசனைப் பற்றிய சிறு குறிப்பு:

இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசமாக கருதப்படும் வடபுலத்தை சேர்ந்திருந்த போதிலும், தலைநகர் கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறர். தமிழர் விரோத கலவரங்கள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த போதிலும், பின்னர் பாதுகாப்பற்ற யுத்த சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார். அவ்வாறு ஆரம்பித்த புலம்பெயர் படலம், பல்வேறு நாடுகளுக்கூடாக நாடோடியாக அலைய வைத்தது. எட்டு ஆண்டுகளாக நீடித்த அகதி வாழ்வின் இறுதியில், ஒரு பிரஜைக்கான உரிமைகளை மீளப் பெற்றுக் கொண்டார். அனுபவப் பாடங்களை கற்றுத்தந்த நாடோடி வாழ்க்கை, இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் உத்வேகத்தை கொடுத்ததிருக்கிறது.

சென்ற நாடுகள்: இந்தியா, பல ஐரோப்பிய நாடுகள், எகிப்து, மொரோக்கோ, கியூபா

மொழி பாண்டித்தியம்: தமிழ், சிங்களம், ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பெய்ன், கிரேக்க மொழி பயின்று வருகிறார்.

அவரைப் பற்றி அவர் கூறுவது:

இனவாதப் போரினால் விரட்டப்பட்டு சுவிட்சர்லாந்தில் புகுந்த நேரம், தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிட்டோம். ஐரோப்பிய நாடொன்றில் அகதிகளினதும், வெளிநாட்டவர்களினதும் பிரச்சினைகளை தமிழருக்கு அறியத்தரும் நோக்கில் வெளிவந்த அந்த பத்திரிகை மூலமாக, மேற்கு ஐரோப்பாவின் குடியேற்ற சட்டங்கள், அரசின் வெளிநாட்டவர் குறித்த நிலைப்பாடு குறித்த அறிமுகம் ஏற்பட்டது. தொடக்கத்தில் சில கவிதைகள், கதைகள் என்று கிறுக்கிக் கொண்டிருந்த என்னை, பத்திரிகைத்துறை சமகால அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுத வைத்தது. பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் தொலைத் தொடர்பு சாதனங்களின் சக்தியையும் அறிந்து கொண்டேன்.

சுவிஸ் அரசின் பகிரங்கமான இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று, நெதர்லாந்தில் தஞ்சம் கோரிய காலத்திலும், அகதியாக இருந்த காரணத்தால், அந்நாட்டு சட்டங்களை, வெளிவிவகார அரசியலை கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அகதி முகாம்களில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க அரசியல் அகதிகளில் பரிச்சயம் ஏற்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் மூலம் சர்வதேச பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற முடிந்தது. சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்களின் நட்பு என்பன, மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளுக்காக போராடும் அனுபவத்தை கொடுத்தது. எனது அனுபவங்களினூடாக பெற்றுக்கொண்ட, உலக நாடுகளைப் பற்றிய ஆழமான புரிதல் காரணமாக, ஐரோப்பிய மையவாத கண்ணோட்டத்தை திருப்பிப்போடும் உத்வேகம் ஏற்பட்டது. பன்னாட்டு பிரச்சினைகளுடன் எமக்குள்ள ஒருமைப்பாட்டையும், அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருதல். நான் கண்ட உண்மைகளை பரந்துபட்ட வெகுஜன தளத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாக எனது எழுத்துக்களை கருதுகிறேன்.

1) சமீபத்திய உலக அரசியல் மக்கள் மத்தியில் மிகப் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறுக்க இயலாது. புரிந்தும் புரியாமலும் கூட மக்கள் அதில் உழன்று போய் இருப்பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
எத்தகைய மக்கள் என்பது இங்கே பார்க்கப்பட வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றல்ல. பல வகையினர். அவர்களது அரசியல் சார்புத்தன்மையும் வேறுபடுகின்றது. உலக அரசியலில் சாதகமான பக்கத்திலும்,
பாதகமான பக்கத்தில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். பாதிக்கப்படும் தரப்பை சேர்ந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கை. அதற்கு அவர்களது எதிர்பார்ப்புகள் கைகூடி வராமையும் ஒரு காரணம். குறிப்பாக பனிப்போரின் முடிவில் இருந்து புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. எதிர்க்க ஆளில்லாத ஒரேயொரு வல்லரசாக அமெரிக்கா அறிவிக்கப்பட்ட போது, பலர் அதை தேவதூதனின் நற்செய்தியாக புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய மக்களின் கருத்தியலை தீர்மானிப்பது, அந்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம். அவர்களது வர்க்க அடிப்படையில் இருந்து கணித்து, அமெரிக்கா பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என தீர்மானித்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது சுயநலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றது என காலந்தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். மக்கள் அதில் உழல்வது மக்களின் தவறல்ல. அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆளும் வர்க்கம் சர்வதேச மூலதனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

2) குறிப்பிட்ட மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல், குறிப்பிட்ட இனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் என இவ்விரண்டிற்கும் உள்ள பாகுபாடுகளை பற்றிய உங்கள் பார்வை?

இரண்டுமே மக்களின் குழுவாத உணர்வுகளை தட்டி எழுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. பாகுபாடுகள் எனப் பார்க்கும் போது, மதம் என்பது உலகளாவிய நிறுவனமயப்பட்ட சித்தாந்தம். இனம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பண்டைய இனக் குழும சமுதாயத்தின் தொடர்ச்சி. இந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கும் அரசியலும் வேறுபடுகின்றது. நவீன உலகில், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி காரணமாக, "மத சர்வதேசியம்", "இன சர்வதேசியம்" என்று பரணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்கள், அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்து, இத்தகைய அரசியல் இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. இன அரசியல் பேசுவோருக்கு தமது இன அடையாளம் முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். அதே போல, மத அரசியலில் மத அடையாளம் அனைத்தையும் மேவிநிற்கிறது. ஏற்கனவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மக்களை நிறுவனமயப்படுத்தி வைத்துள்ளமை, மத அரசியலுக்கு சாதகமானது. இன அரசியல் அதற்கு மாறாக வழமையான அரசியல் செயல்பாடுகள், ஊடகங்கள் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

3) ஜனநாயகத்தைப் போற்றி புகழ்ந்து மார்தட்டிக் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி?

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது மக்கள் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பங்கெடுப்பது. வாக்குப் போடுவது ஏன் என்று தெரியாத வாக்காளர் இருப்பதற்குப் பெயர் ஜனநாயகமல்ல. மன்னர் காலத்தில், மக்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. கடவுளுக்கு கட்டுப்படுவதைப் போல, மக்கள் மன்னனின அதிகாரத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் மன்னனை அகற்றி விட்டு, மக்களின் பெயரால் குடியரசு முறை வந்தது. இருப்பினும் ஜனநாயகம் என்பது தேர்தலில் கட்சிக்கு வாக்குப் போடும் முறை என்பதோடு மட்டுப்படுத்தப்பட்டது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது ஒரு பிரதிநிதி (அல்லது கட்சி) மக்களின் குறையை அதிகார தளத்தில் பேசித் தீர்க்க முனைவார். அது சரி, ஆசிய நாடுகளில் ஏன் ஜனநாயகம் சரியாக செயல்படுவதில்லை? அதற்கு காரணம், ஆசிய நாடுகளின் மக்கள் இன்னமும் சாதி, இன, மத, தனிநபர் வழிபாடு போன்ற குழுவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லை. அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே பார்க்கின்றனர். இதனால் ஆதாயம் பெற்றவர்கள் ஜனநாயகத்தை போற்றிப் புகழத் தானே செய்வார்கள்? இங்கே எந்த அரசியல் அலகு யாருக்கு நன்மை பயக்கின்றது எனப் பார்ப்பது அவசியம். ஈராக்கில் சதாம் காலத்தில் ஆதாயம் பெற்றவர்கள், இப்போதும் சதாமின் சர்வாதிகாரத்தை போற்றுகின்றனர்.
4) பழுதடைந்த ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துரைக்க விரும்புவது?

இதற்குப் பதில் முந்திய கேள்வியிலேயே வந்து விட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவது ஜனநாயகமல்ல. நவீனமயப்பட்ட இனக்குழுவாதம். இந்த நாடுகள் சமுதாய மாற்றத்தின் ஊடாக தாமே ஜனநாயகத்தை கண்டறிந்திருக்க வேண்டும். மாறாக அவசர அவசரமாக காலானியாதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று மேற்கத்திய பாணி நிர்வாகத்தை ஏற்றுமதி செய்வதையே முக்கியமாக கருதினார்கள். அவர்கள் இப்போதும் "ஜனநாயக வளர்ச்சியடையாத " நாடுகள் ஆட்சி நடத்துவது எப்படி என்று இப்போதும் ஆலோசகர்களை அனுப்பி கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாவிட்டால் நாமே அவர்களது பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறோம். இதை நான் பழுதடைந்த ஜனநாயகம் என அழைக்க விரும்பவில்லை. ஜனநாயகம் அதன் ஆரம்பக்கட்டத்தில் சிறுபிள்ளைக் கோளாறுகளுடன் உள்ளது.

5) மார்க்ஸிசம் மற்றும் சோஷலிசம் பற்றிய இன்றய மக்களின் புரிதல்கள் பிசகிக் கிடக்கின்றன. போர் புரிவதிலும், எதிர் தீர்மானங்களின் வழியிலும் மட்டுமே தீர்வுக்கு வழி நாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே போற்றிப் புகழப் படுகிறார்கள். இம்மாற்றத்தின் காரணம் எதனால் வந்திருக்கக்கூடும்?

மக்களின் புரிதல்கள் எப்போதும் பிசகித் தான் கிடக்கின்றன. அதற்குக் காரணம் சாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளைக் கொண்டு அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகள், அல்லது ஊடகங்களை கையில் வைத்திருக்கும் முதலாளிகள். மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தங்களது இருப்பிற்கு ஆபத்து என கருதுகிறார்கள். போர் என்பது வன்முறை கொண்டு சாதிக்க நினைக்கும் அரசியல். பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை போராடித் தீர்க்கும் போது புகழப்படுவது இயற்கை. இருப்பினும் யாரின் நலன்களுக்காக யுத்தம் நடத்தப்படுகின்றது? போரினால் நன்மையடைபவர்கள் யார்? போர் நடப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் போற்ற மாட்டார்கள். மறுபக்கம் போரினால் லாபமடைந்தவர்கள் நிறையைப் பேர். பணவருவாயை ஈட்டித் தருவதால் அவர்கள் போரை தொடர்ந்து நடத்த விரும்பலாம்.

6) போர் நிறுத்தம் வேண்டி குளிரூட்டியின் பக்கத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்க செய்கிறார்களே. இது ஒரு தனிமனிதனின் 'ஜனநாயக' வீரியத்தை குறிக்கிறதா?

இல்லை, வாக்காளருக்கு வேறு தெரிவுகள் கிட்டவில்லை என்பதைக் காட்டுகின்றது. காலங்காலமாக பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தில் தனிநபர் வழிபாடு, சாதியம், இனவாதம், மூலதனம் இவற்றின் செல்வாக்கு அதிகம்.

7) அல்கயிதா பற்றிய உங்களின் பார்வை வாசகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அல்கயிதா சம்பந்தமாக எல்லோரும் அறியப்பட்ட எழுதாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தோடு அது முற்றிலும் முரணாக இருந்தது. புத்தகச் சந்தையில் பேசப்பட்ட அந்த புத்தகத்தை பலரும் விரும்பி இருக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு தோதாகவே அரசியல் பார்வையை விரும்புகிறார்கள் என இதை சொல்ல முடியுமா?

ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகிறவர்கள் இருப்பதால் தான் ஆவிகளின் அட்டகாசம் பற்றிய நூல்களும் சந்தையில் விற்பனையாகின்றன. அல்கைதா இல்லை. ஆனால் இருக்கென்று நம்புகிறவர்கள் அதிகம். இதனால் தான் எனது கட்டுரை ஒன்றிற்கு "அல்கைதா என்ற ஆவி" என்று தலைப்பிட்டேன். ஏற்கனவே ஊடகங்கள் செய்தியாக வழங்கிய அல்கைதா பற்றிய கதைகளை தொகுத்து எழுத்தாளர்கள் புத்தகமாக வெளியிடுகின்றனர். மக்களால் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை புத்தகமாக்கி சந்தைக்கு கொண்டுவர நினைக்கும் அளவிற்கு, தகவல்களின் உண்மைத் தன்மை அலசப்படுவதில்லை. அல்லது அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைப் போல தெரிகின்றது.

8) உலக அமைதிக்காக போராடுகிறோம் என சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் இருந்த காலத்தில் சமாதான இயக்கம் தோன்றியது. மதம் போதிக்கும் அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு காட்டும் தத்துவம், உலக அமைதிக்கான அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ளது. போர் வேண்டாம், அனைத்துப் பிரச்சினையையும் அன்பு காட்டுவதன் மூலம் தீர்க்கலாம் என்பது ஒரு உயரிய நோக்கம் தான். ஆயினும் உழைப்புச் சுரண்டலால் உருவாக்கப்பட்ட உலகில் தோன்றும் முரண்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை. மதங்களை, இனங்களை பிரித்து வைப்பதால் ஆதாயமடையும் நபர்கள், எந்தவொரு அமைதி இயக்கத்தையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.
9) வினவு பக்கத்தில் நீங்கள் எழுதுவது குறித்து நீங்கள் இன்ன சாரரை சேர்ந்தவர் என முத்திரையிடப்பட்டு எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்ததா?

சில நேரம் இருக்கலாம். எதிர்வினைகளை எதிர்பார்த்து அல்லது எதிர்பார்க்காமல் கட்டுரை எழுத முடியாது. நான் வினவில் மட்டும் எழுதவில்லை. உயிர்நிழல், உன்னதம் போன்ற சிற்றிதழ்களிலும் எழுதி வருகிறேன். வேறு சில இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் எனது கட்டுரைகளை பிரசுரித்துள்ளன. இவையெல்லாம் அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று முரணானவை. அந்தந்த அரசியல் பின்னணியை கொண்டவர்களுக்கு, அது சம்பந்தமான கட்டுரை பிடிக்கின்றது. அதே நேரம் அவர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது விரும்பமாட்டார்கள். "இன்னொரு அ.மார்க்ஸ் உருவாகிறார்." "தாலிபான் ஆதரவாளர்" என்றெல்லாம் கூட முத்திரை குத்தினார்கள்.

10) எல்லோரையும் எல்லோராலும் திருப்தி அடையச் செய்து விட முடியாது. சில விடயங்களை பேசும் போது நியாயம் அற்ற பெரும்பான்மை கருத்தைக் கொண்டிருப்போர், நியாயம் உள்ள சிறுபான்மையினரை சிறுமைபடுத்தவும், சமுதாய துரோகி எனவும் அடையாளப் படுத்திவிடுகிறார்கள். இது ஊடகங்களின் போக்கினால் எற்பட்ட ஒன்றா?

நான் அப்படி கருதவில்லை. இது மனிதனின் கூடப்பிறந்த குணம். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை நியாயம் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை கொண்டவர்கள் ஒன்று சேரும் போது, எதிர்க்கருத்து கூறுபவர்களை துரோகி என்று ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களது குழுவை மட்டுமே முழு சமுதாயமாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். யாருடைய கை ஓங்குகிறதோ, சமுதாயத்தில் யார் பலமாக இருக்கின்றனரோ, அவர்களின் கருத்து பொதுக் கருத்தாக மாறி விடுகின்றது. ஊடகம் என்பது யாரின் கையில் இருக்கிறதோ அவரின் ஊதுகுழலாக மாறிவிடுவதைப் பார்க்கலாம்.

மேலும் 15 கேள்விகள் அடுத்த பாகத்தில்...

6 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு அறிவுப்பூர்வமான செவ்வி.
இது போன்ற பேட்டிகளில் கேள்விகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை . ஆழமான கேள்விகளை தொடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள். கலையரசன் அவர்களின் பதில்கள் மிகவும் அருமை.இதை படித்த பின்னர் நான் நிறைய படிக்க வேண்டும் என தெரிந்துகொண்டேன்.

தம்பி, உங்க கேள்வி கேட்கும் திறன் மிக அருமையா இருக்கு. அதுனால தொடர்ந்து இது போன்ற இணைய வழி செவ்விகளை தகுதிவாய்ந்த நபர்களிடம் தொடருங்கள்.

Unknown said...

/-- மொழி பாண்டித்தியம்: தமிழ், சிங்களம், ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பெய்ன், கிரேக்க மொழி பயின்று வருகிறார். --/

கலையகம் வியக்க வைக்கிறார்...

அவருடைய பதிவுகளை விருப்பிபடிப்பேன். அதுபோலவே இந்த கேள்வி பதிலையும் படித்தேன். அருமை.

கே.பாலமுருகன் said...

சமக்காலத்திய அரசியல் சூழலுக்கேற்ப கேள்விகளும், சமூகத்தில் மூன்றாம்தர பிரக்ஞையில் இருக்கும் மக்களுக்குச் சிறிதளவேனும் விழிப்புணர்வையும் அறிதலையும் ஏற்படுத்தினால் சிறப்பு.

சமூகத்தில் குழுவாத மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையில் தமது கருத்துகளை ஓங்கி ஒலிக்கும்வகையில் செய்து சிறுபான்மை கருத்துகளை ஒடுக்குவது கருத்து அரசியலின் மிகப் பெரிய பலவீனம்.
இதைச் சமூகமும் கண்கானித்துக் கொண்டேதான் வருகிறது.வாழ்த்துகல் விக்கி. புதிய முயற்சி

Tamilvanan said...

வணக்கம்
சிறப்பான நேர்காணல்
நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோசப் பால்ராஜ்

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி...

@ கிருஷ்ண பிரபு

நன்றி.

@ பாலமுருகன்

நன்றி...

@ தமிழ்வாணன்

நன்றி...

Anonymous said...

Hi anna Im viknesvary here, Nalla arunmaiyana oru karuthukalai veli kondu vanthirukkirirgal. Nandri. Thodaravum unggal elethu payanam!