ஜப்பானிய உணவு வகைகள் நமக்கு மிக வித்தியாசமானவையாக தோன்றும். சரியாகச் சொல்லப் போனால் நா குமட்டச் செய்பவை என சொல்லலாம். ஜப்பானியர்களின் ஆயுற் காலம் மற்ற நாட்டினை காட்டினும் அதிகம் என்கிறது சில தகவல்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் சுறுசுறுப்பும் உணவு முறையுமே ஆகும். உணவு பழக்க வழக்கங்கள் சரியாக இருப்பின் நமது உடலும் சரிவர இயங்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போகும்.ஜப்பானிய உணவு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது சுசி. சுசி சீன தேசத்தின் உணவு முறை எனவும் ஏழாம் நூற்றாண்டில் அது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீன் சதையை உப்பு மற்றும் அரிசியுடன் பதப்படுத்தி வைத்துவிடுவது அக்கால முறை. இதுதான் சுசி உணவு முறை வளர்ச்சியின் ஆரம்ப முறை என சொல்லப்படுகிறது. அரிசியில் செய்யப்படுவதால் என்னவோ இது பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது.
சுசி பல வகைப்பட்டது. அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புகளை பொறுத்து வகை பிரிக்கப்படுகிறது. நோரி எனப்படும் கடல் பாசிவகைகள், இறால் முட்டை போன்றவை சுசிகளில் பிரசித்திப் பெற்றது. அரிதாகக் கிடைக்கக் கூடிய கடல் மீன் முட்டைகளில் செய்யப்படும் சுசி வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிக அளவிலான முட்டைகளும் கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களும் இல்லாதிருக்கும் பொருட்டு சுசி உடல் எடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமையும். பொதுவாகவே சுசியில் கொழுப்புச் சத்தின் அளவு குறைந்தே இருக்கும். முறையான உணவு என ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலேயே இருக்கும்.
7-9 வரையிலான சுசி துண்டுகளில் 300-450 கலோரி இருப்பதாக கூறப்படுகிறது. மீன் சதையில் இருந்து ஃப்ரோடினும் ஒமேகா எனப்படும் அமில வகையும், காய்கறி வகைகளில் வைட்டமீனும், நோரியில் 'ஐயோடினும்', அரிசியில் நார் சத்தும் கிடைக்கிறது.
நோரி பல வகையான செயல்பாட்டுக்கு பிறகு 'மொரு மொரு'வென மெல்லும் வகையிலும், கேசரியை போல் லேசான பசை கொண்ட வகையிலும் செய்யப்படுகிறது.
சுசி வகை உணவை உண்பதற்கு முன் முக்கியமாக இருக்க வேண்டியது சுவைச்சாறும் (கிச்சாப்) 'வசாபியும்' (காரமானச் சாறு). கரிப்பு சுவைக்காக 'கிச்சாப்பை' தெளித்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் கார சாறுடன் (வசாபி) 'கிச்சாப்பை' கலந்துவிடுவார்கள். வசாபியின் காரம் சொல்லில் அடங்கா. காது மடல்களில் எரியூட்டிவிடும் தன்மையை கொண்டது. இது பிடிக்காதவர்கள் சுசி சாப்பிடும் போது அதிக அளவிலான நீரை குடிப்பார்கள்.
இதையடுத்து சுசியோடு சேர்த்துக் கொள்ளப்படுவது 'க்காரி'. 'க்காரி' ஊறுகாயை போல பதப்படுத்தி வைக்கப்பட்ட இஞ்சி. இவ்வகை இஞ்சி சுசி சாப்பிடும் போது ஊறுகாயைப் போல் மென்று கொள்ள பயன்படுத்தப்படும். சுசியின் சுவைத் தன்மை கெடாமல் இருக்க இப்படி செய்வதாக கூறுகிறார்கள்.

பச்சையாக இருக்கும் மீன் வகை 'சஷ்மி' என அழைக்கப்படுகிறது. சல்மோன் மீன் வகைகள் பச்சையாகவே உண்ணப்படுகிறது. லேசான புகைகாட்டப்பட்ட விலாங்கு மீன் வகை 'உனாங்கி' என அழைக்கப்படுகிறது. சுசியில் பயன்படுத்தப்படும் விலாங்கு மீனின் சதை மிக லேசானதாக இருக்கும்.
Calrose வகை அரிசியில் சுசி செய்யப்படும். 'மரின்' அல்லது அரிசியில் செய்யப்படும் 'வைன்' சுசி உணவிற்கு புளிப்புச் சுவையை சேர்க்க உதவும். இது போக 'மயோனிஸ்' போன்ற சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சுசிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய் வகைகள் சாதாரண வெள்ளரியைவிட மாறுபட்டிருக்கும். அதில் ஈரத்தன்மை குறைந்தும் கடிப்பதற்கு 'மொரு மொரு'வெனவும் இருக்கும். சுசியில் நண்டு, இறால், 'ஹாட் டாக்' போன்ற வற்றையும் இணைத்து உண்ணலாம்.
சுசி ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும் நன்கு பதப்படுத்தியும் வேக வைத்தும் உணவுகளை உண்டு பழகியவர்களுக்கு அது பிடிக்காமலே போகும்.
(பி.கு: பல்கலைகழகத்தில் படித்த சமயம் ஜப்பானிய கலாச்சாரப் படைபிற்கு சேர்த்த தகவலில் ஒரு பகுதி)

சில முக்கிய பொக்கிஷங்கள் மனித குலத்தின் பார்வையில் இருந்து மறைத்தே வைக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக இப்படி செய்கிறார்கள் என்றாலும் நாம் அறிய வேண்டிய பல விடயங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது.
பக்தாத்திலும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் பாதுகாப்பு முழுமையடைந்ததை நிச்சயப்படுத்தும் வரை எங்களால் பொருட்காட்சி சாலையை பொது மக்களின் பார்வைக்கு விடமுடியாது என இக்காட்சியகத்தின் தொல் பொருள் பாதுகாப்பு இயக்குனரான அமிரா எய்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நவீன சரித்திரத்தில் மறுக்கப்படாத கண்டிக்கத்தக்க கொடூரச் செயல் இது என எய்டன் மேலும் கூறுகிறார். ஈராக்கின் அமைதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அனுப்பப்பட்ட அமேரிக்க இராணுவத்தினர் அந்நாட்டின் எரிபொருள் விளைச்சலுக்கு கொடுத்த பாதுகாப்பின் சிறு பங்கினையும் மற்றவற்றிற்கு கொடுக்கவில்லை என்பது அவர் கருத்து.
திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அண்டை நாடுகள் உதவி புரிய மனமுவந்து இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.









