Tuesday, January 22, 2019

பெண் பிறவி எடுத்த புத்தர்


சீன மொழியை Hanyu என்றும் குறிப்பிடுவார்கள். ஹன் மக்களால் பேசப்படும் மொழி என்பது அதன் பொருள். சீனாவில் சுமார் 53 இன மக்கள் வசிக்கிறார்கள். அதில் 90% அதிகமானோர் ஹன் இன மக்கள். சீன சரித்திரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பெண் ஹன் இனக் குழுவைச் சேர்ந்த Wu Zetian எனும் அரசி.

Wu Zetian தனது 13-வது வயதில் Li Shimin எனும் அரசனின் கடைசி நிலைக் காமக்கிழத்தியாக்கப்பட்டார். அரசருக்கு Wu Zetian மீது ஏகப்பட்ட பிரியம். அரசனின் மகனுக்கும் Wu Zetian-னைப் பிடித்திருந்தது. அரசன் இறந்தப் பின் வருந்ததக்க வாழ்க்கையை Wu Zetian வாழ விரும்பவில்லை. பொதுவாக அரசனின் கல்லறையில் புதைத்துவிடுவார்கள் அல்லது மொட்டையடித்து துறவு வாழ்க்கைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் Wu Zetian தனது மதி திறமையில் அரசனின் மகனுக்கும் கிழத்தியானார்.


Li Shimin இறந்தப் பின் பட்டத்து இளவரசனாக இருந்த Li Zhi அரியனைக்கு வந்தார். கடை நிலைக் காமக்கிழத்தியாக இருந்த Wu Zetian இப்போது அரசனின் இரண்டாம் துணைவி போன்ற நிலைக்கு வந்தார். இருவரும் சந்ததிகளைப் பெருக்கினர். இருந்தும் அவருக்கு போட்டியாக மேலும் இரு பெண்கள் இருந்தார்கள். அவர்களை தீர்த்துக்கட்டினால் அரசி எனும் பதவிக்கு வந்துவிடலாம். அதையும் செய்தார். அரசனின் செல்ல மனைவியாக ராஜியத்தில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார். Li Zhi நோய்வாய்ப்பட்டு இறந்த போது இளவரசனுக்கு இளம் வயது.

கன்பூசியஸ் பெண் நாடாலுவதைத் தடுத்தது. Wu புத்த மதத்தைத் தழுவி தன்னை ’அரனாக்கிக்’ கொண்டார். அவரை புத்தரின் மறு அவதாரமாக பிரகடனபடுத்திக் கொண்டார். சீனாவின் லூஓயாங் (Luoyang) எனும் இடத்தில் அமைந்துள்ளது லூங்மன் கற்குகைகள் (Longmen Grottoes) . சரித்திர புகழ் கொண்ட இந்த இடம் தொடர்பாக வேறொரு கட்டுரையில் காணலாம். இங்கே மலைக் குகைகளை குடைந்து இலட்ச கணக்கான புத்த சிலைகளை வடித்துள்ளார்கள். சீனாவில் புத்தம் பரவிய ஆரம்ப பகுதிகள் ஒன்று இக்கற்குகை. இங்கே தனக்காக மாபெரும் சிலை ஒன்றை வடித்துக் கொண்டார். 

Zhou பேரரசை நிறுவினார். Zhou பேரரசின் மன்னராகத் தன்னை முடிசூட்டிக் கொண்ட போது வூவின் வயது 66, இச்சம்பவம் நடந்த ஆண்டு 690. அரசனில்லாமல் சீன தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்தார். அக்காலகட்டத்தில் பெண் நாடாலுவது சுலபமல்ல. தனக்கென பலமான ஒற்றர் படையை வைத்துக் கொண்டார். தனக்கெதிராக கிஞ்சித்தும் சதி நடக்காமலும், எதிரிகளையும் ஒழித்துக் கட்டினார். விவசாயத்தில் பல மேம்பாடுகள் செய்து மக்களால் போற்றப்பட்டார்.

Wu Zetian செய்த இரு அரசியல் கொலைகள் தன் பிள்ளைகள் தொடர்பானது. அரசனின் இளம் மனைவியாக இருந்த போது பட்டத்து அரசியை ஒழிக்கத் திட்டமிட்ட Wu தனக்குப் பிறந்த பச்சிலம் பெண் குழந்தையை அரசி கொன்றதாகக் குற்றம் சாட்டினார். கொலைக் குற்றத்திற்காக அரசி சிறையில் அடைக்கப்பட்டார். அரசியை சிக்க வைக்கத் தருணம் பார்த்து Wu அக்குழந்தையைக் கொன்றதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

இரண்டாம் கொலை Wu-வின் மகன் தொடர்பானது. முன்னால் அரசிகளின் மகள்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பரிவு மனம் கொண்ட இளவரசர் Wu Zetian-யை அவர்களை விடுவிக்கக் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசி தன் மகன் அரசனாக தகுதியற்றவனெனக் கருதினார். சில காலத்தில் இளவரசர் இறந்துப் போனார். சாப்பாட்டில் விஷம். இரண்டாம் மகனின் ஆட்சி சரி இல்லையென அவரையும் பதவி விலகச் செய்தார். இது போக அரசியல் இலாபத்திற்காக்த் தனது இரு பேரப் பிள்ளைகளையும் கொன்றுள்ளார்.

அதன் பின் Zhou பேரரசைப் பெண் மன்னராக 16 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். Wu Zetian தனது 82வது வயதில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார். இவருக்குப் பிறந்த மூன்று மகன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் சீனப் பேரரசை ஆட்சி செய்துள்ளனர். Wu Zetian கேட்டுக் கொண்ட படி அவர் கணவர் Li Shi-வின் கல்லறையில் புதைத்தார்கள். தன்னை மன்னர் என குறிபிட வேண்டாம் என்றும் மரணப் படுக்கையில் அவர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடுகின்றனர். அது அரசியல் காரணமாகவும் கூட இருக்கலாம். சுவர்கத்தின் பிள்ளைகளான ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் எனும் அசைக்க முடியா நம்பிக்கையை கொண்டிருந்தனர் சீனர்கள்.

No comments: