Tuesday, November 19, 2013

The Tournament 18+ சில ஆண்களும் ஒரு பெண்ணும்


சமர் எனும் திரைப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி இருந்தது. சுவாரசியமான கதை அமைப்பு இருந்தும், பில்லி சூனியம் வைத்ததை போல் அத்திரைபடம் சிறப்பாக வெற்றி காணவில்லை. திரிஷாவுக்காக திரையரங்கு சென்று பார்த்த படம் அது. ஏனே திரிஷா கொஞ்சம் சுருங்கி போய் இருந்தார். வயதின் மூப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

பணம் கொழுத்தவனின் திமிர்தனத்தை அழகாகவே சொல்லி இருந்தார்கள். மித மிஞ்சிய பணம். புதிது புதிதாக அடுத்தவனை வதைத்து கொண்டாடும் விளையாட்டு என்பதாக அக்கதை அமைந்திருந்தது. சமர் பார்த்த சமயம் The Tournament (2009) எனும் திரைப்படமும் என் மூலைக்கு எட்டிச் சென்றது. The Tournament படத்தின் கதையை கொஞ்சமாக அதில் பிடுங்கி போட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நெஞ்சு குறுகுறுத்து இரத்தத்தை உறைய வைக்கும் விதமாகவே The Tournament அமைந்திருந்தது. ஓட ஓட விரட்டும் படம் அது. மொத்த படமும் நம்மையும் இழுத்து பிடித்து தரிகொட்டு ஓட வைக்கின்றது. பணம் பெருக பெருக புத்தி கோனலாக சிந்தித்து குதுகளிக்குமாம். கோடிட்ட சட்ட திட்டங்களை உடைத்து பார்க்கவும் அதை பணத்தைக் கொண்டு மொத்தமாக மூடி மறைத்துவிடவும் எண்ணித் துடிக்குமாம். புத்தி சரி இல்லாத ஒரு பணக்காரனே ஒரு டஜன் கிரிமினல் சிந்தனையைக் கொண்டிருந்தால், ஊரின் ஒட்டு மொத்த கிரிமினல் பணக்கார கும்பலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? 

ஒரு கோடீஸ்வர கும்பலின் குரூர விளையாட்டை நம் கண் முன் கொண்டு வருகிறது The Tournament. ஊருக்கு ஒதுக்கு புரமாய் புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஒரு மண்டபத்தில் கூடி 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை தொடக்கி வைக்கிறது ஒரு செல்வந்தர் கூட்டம்.

ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கொலை விளையாட்டு விளையாடி பார்க்கப்படும். மொத்தம் முப்பது போட்டியாளர்கள். முப்பது பேரும் உலகின் மிகச் சிறந்த கொலையாளிகள் எனும் அடிப்படையில் விளையாட்டுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரத்தில் இவர்கள் ஒருவரையொருவர் அடித்து வெட்டி குத்தி வெடித்து சுட்டு இன்னும் எப்படி எப்படி எல்லாம் முடியுமோ அப்படி அப்படி எல்லாம் கொலை செய்ய வேண்டும். இறுதியில் ஒருவரே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆக மொத்தம் 29 பேர் இறந்தாக வேண்டும்.

நாமது கற்பனைக்கு அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் காட்சிகளாக இல்லாமல் புது புது திருப்பங்களில் இப்படம் அமைந்துள்ளது. எதிர்பாராத 'டுவிஸ்டுகள்' இப்படத்தின் பலமும் வெற்றியும் கூட. இந்த போட்டியில் வெற்றியடைபவன் 10 மில்லியன் டாலர் பரிசோடு உலகின் மிகச் சிறந்த கொலைகாரன் எனும் நிழலுலக பட்டத்தையும் பெறுவான். அவன் மீண்டும் அடுத்த ஏழு ஆண்டு கழித்து வரும் போட்டியிலும் மங்களம் பாட முடியும். இந்த 30 கொலைகார பாவிகளின் மேல் மேற்குறிபிட்ட நிழலுலக பணக்கார தாதாகள் ‘பெட்’கட்டி இவன் ஜெயிப்பான் அவன் ஜெயிப்பான் என உலக கிண்ண கற்பந்தை இரசிப்பதை போல் பெருந்திரையில் இரசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சுபயோகதினத்தில் இந்த 30 கொலைகாரர்களின் உயிர் ஓட்டமும் தொடங்குகிறது. அவர்களைக் கண்டு கொள்ளும் விதமாக எல்லோர் உடலிலும் அவர்களுக்கேத் தெரியாமல் ஒரு மென் கருவி பொருத்தப்படுகிறது. ஆளுக்கு ஒரு கைத்திரை கருவியும் கொடுக்கப்படுகிறது. ஆட்களின் நகர்வுகளை இரசிகர்கள் பெருந்திரையிலும், போட்டியாளர்கள் கையில் இருக்கும் சிறு திரையிலும் கண்டு கொள்ள முடியும். உடலில் புகுத்தப்பட்ட மென் கருவி ஒரு வெடிகுண்ட்டும் கூட. ஒரு வேளை நீங்கள் போட்டியில் இருந்து தப்பிக்கவோ அல்லது விளகிக் கொள்ள நினைத்தாலும் போட்டியின் இரசிகர்கள் ஒரு பித்தானை அழுத்தி உங்களை சிதறியடித்துவிடுவார்கள். 

சிங்கங்கள் சண்டையிடும் களமென தெரியாமல் கவரி மான் ஒன்று அதில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? சிங்கங்கள் சண்டையில் மும்முறமாக இருக்குமா இல்லை மானை முதலில் காலி செய்யுமா? அந்த 30 பேரில் ஒருவன் 'சிப்ஸ்' பொருத்தப்பட்டிருக்கும் தனது உடலின் பாகத்தை வெட்டி 'சிப்ஸை' வெளியெடுக்கிறான். இது நடப்பது ஒரு காப்பி கடையின் கழிவறையில். வெளியெடுத்த சிப்ஸை போகிற போக்கில் போட்டுவிட அது ஒரு பாதிரியாரின் காப்பி கோப்பைக்குள் விழ, அவரும் அதை குடித்து தொலைக்க அவரின் வாழ்க்கையே பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. கடவுளின் பிள்ளை சாத்தான் குடும்பத்தில் வாக்கப்பட்டதை போல மிக பரிதாப நிலையாய் போய்விடுகிறது.

'சிப்ஸ்' இல்லாத கொலைகாரன் தனது கையடக்க சிறுதிரையில் ஏனைய கொலைகாரர்களின் நகர்வுகளை கண்டு தேடிச் செல்ல 'சிப்பை' விழுங்கிய பாதிரியாரை கொல்லவும் ஒரு பக்கம் ஆட்கள் தேடி கொண்டு வருகிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடியான சண்டை காட்சிகள் அதக்கலம். தற்காப்புக் கலை சண்டைகளும் கூடுதல் சுவாரசியம். அந்த சீனப் பெண் அலட்டல் இல்லாமல் எல்லோரையும் வசீகரிக்கிறார். 

இந்தக் கிறுக்குத் தனமான விளையாட்டுக்காக ஊரின் ஒட்டு மொத்த பாதுகாப்பு அம்சமும் தகர்கப்படுகிறது. கொலைக்கு கேஸ் கிடையாது. பாதுகாப்பு கேமரா, காவல் நிலையத்துக்குவிடுக்கும் தொலைபேசி அழைப்பு என எல்லாமே 'ஹேக்' செய்யப்படுகிறது. நிழலுலக பணக்கார தாதாக்கள் 24 மணி நேரத்துக்கு அந்த ஊரையே தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்கள். 30 பேர் என கணிக்கப்பட்ட விளையாட்டு பாதிரியாரின் காரணமாக 31 பேராக மாறுகிறது. 

போட்டியில் யார் வெற்றி கண்டார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். அதிரடியான அக்‌ஷன் திரைபட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். சில அரை நிர்வான நடனக் காட்சிகளும் இரத்தச் சகதி மிகுந்த சண்டைக் காட்சிகளும் இருப்பதால் இது 18+ முத்திரை போட்டு வைக்கிறேன். படத்தை தேடி பிடித்துப் பார்க்க சணியடி சித்தன் அருள் புரியட்டும்.

Thursday, November 14, 2013

ஜெயமோகனின் அறமும் - அறமற்ற நிலைகளும்


புத்தகம்: அறம்
ஆசிரியர்: ஜெயமோகன்
நயம்: சிறுகதை தொகுப்பு (13 கதைகள்)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம்

சிறந்த நூல்கள் வாசகனுக்கு நல்ல நண்பனாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எங்குச் சென்றாலும் ஓரிரு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொள்வது எனது வழக்கம். நேரம் கிட்டுமாயின் சில பக்கங்களையாகினும் புரட்டி படித்துவிட முடியும். எத்தனை நூல்களை வாசித்தாலும் அதில் சில மட்டுமே வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. 

சமீபத்தில் படித்ததில் மிக கவர்ந்த நூலில் ஒன்று அறம். ஒவ்வொரு கதையும் அற்புதமாய் தொகுக்கப்பட்டுள்ளது. அறம் சிறுகதை தொகுன்பின் அனைத்துக் கதைகளும் ஜெயமோகனின் தளத்தில் இலவசமாக படிக்க முடிகிறது. இருந்தும் இந்நூலை வாங்கிச் சேகரிப்பதில் கொஞ்சமும் நட்டம் இல்லை. இது நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய நூலாகும்.

ஆரம்ப காலத்தில் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கும் போது அவரின் வட்டார வழக்கு அயற்சியை ஏற்படுத்தியதுண்டு. நாள்பட அவரின் எழுத்து நடை பிடிபட்டதும் தடையற்ற வாசிப்புக்கு இலகுவாகவே இருந்தது. முதலில் முழுமையாய் வாசித்தது அவரின் ஊமைச் செந்நாய், ஆயிரம் கால் மண்டபம், இன்னும் சில சிறுகதை தொகுப்புகளாகும். 

ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகிக் இருந்து வெறு ஒரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பை கொண்ட படைப்பு அது. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. ஏழாம் உலகம் நாவலுக்கு தனியொரு புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை. 

அறம் நூலினை வாசித்து முடித்து ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலும் அவரின் பதில் மடலும் உங்கள் பார்வைக்கு:


அன்பின் ஜெயமோகன்,

உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.

சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.

நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.

தாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.

பூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.

நான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.

உங்கள் படைப்பிற்கு நன்றி.


அன்புடன்,
விக்னேஷ்வரன் அடைக்கலம்.



அன்புக்குரிய விக்னேஷ்வரன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

உண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாயகர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

ஜெ


கதைகளை இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?page_id=17097

Monday, November 11, 2013

காமம் செப்பும் சாக்லெட் & Chocolate and Sex Life

சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா? பெயர் தன்மையைப் போல ’சக்’கென மனதில் ஒட்டிக் கொள்கிறது சாக்லெட். ஆண்கள் தன் காதலிக்கோ மனைவிக்கோ சாக்லெட் வாங்கிக் கொடுப்பது இன்றய நாட்களில் இயல்பாகி விட்டது.

சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா? Montezuma மகாராஜா அஸ்டெக் (Aztec) ஆட்சிகால மன்னன் ஆவன். ஒரு நாளைக்கு 50 கோப்பை சாக்லேட் அருந்துவானாம். சக்லெட் அருந்துவதுவதினால் ஒரு புதிய வகை உற்சாகம் பிறக்க்குமாம். அதன் பிறகே தன் இணைகளுடன் கூடுவானாம். சாக்லெட் அருந்துவதை அஸ்டேக் கால உயர்குடி மக்கள் ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்.

சாக்லெட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் எனும் தகவலை முன்பு படித்ததாக நினைவு. காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சாக்லட் காதலின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. காதல், காம உணர்சியை மேலிட செய்வதற்கு மட்டும் இன்று சாக்லட் பயன்பாட்டிற்கு இல்லை. புதிய நட்புபையும் பாசத்தை வெளிப்படுத்தவும் சாக்லெட் கொடுக்கப்படுகிறது.

சாக்லெட் தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் சளைத்ததாக தெரியவில்லை. தெ மெசேஜ் ஆப் லவ் என சாக்லெட்டின் தனித் தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். அது போக சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா) இந்த எண்ணம் தன் உடனே எழுந்தது. நக்கலாக தோன்றினால் மன்னிக்கவும். :)


சாக்லெட்டில் phenylethylamine(PEA) எனும் வேதிப் பொருள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மனிதனின் ஆனந்த உணர்ச்சியை தூண்டுகிறது. அதாவது ஒரு மனிதன் ஆனந்தம் அடையும் போது வெளிப்படும் ஹார்மோன் போலவே இது செயல்படுகிறது. இந்த வேதிப் பொருள் மனிதனின் காம உணர்சியை தூண்ட தக்கது. காதல் வயப்படும் ஒரு மனிதனின் மன நிலையை தர வள்ளது.


உணவுப் பொருட்களில் இருக்கும் PEA வேதிப் பொருள் நிலைத் தன்மையற்று என்பதால் அதை மனித உணர்வோடு ஒப்பிடுவதை பொரும்பாலும் தவிர்க்க முனைகிறார்கள். இன்றய நிலையில் சாக்லெட்டின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ரொட்டி, கேக், ஐஸ் கிரிம், குளிர் பானம் என பல உணவுப் பொருள்களில் சாக்லெட் கலக்கிறார்கள்.

சாக்லெட்டை பரிசளிப்பது இன்று இயல்பாகிவிட்டது. மனதிற்கினியவர்களுக்கு சாக்லெட்டை பரிசளிப்பது உறவை வளர்க்கும் செயலாகக் கருதப்படுகிறது. பெரு வணிக அங்காடிகளில் சாக்லெட்டிற்காக தனியொரு பகுதியை ஒதுக்கி இருப்பதைக் காணலாம். பொதுவாக குழந்தைகளுக்கு அது தான் விருப்ப இடமாக இருக்கும். சில பொற்றோர்கள் குழந்தைகள் இனிப்பு பண்டங்கள் தின்பதை விரும்ப மாட்டார்கள். திருட்டு ‘தம்’ போல குழந்தைகளுக்கு திருட்டு மிட்டாய் என்ற கதையாகிவிடுகிறது.

அங்காடிகளில் கவரும் ஒரு விடயம் ஹெம்பர் என பொட்டலங்களாக மடிக்கப்படும் விதம். இது 100 முதல் 10000 ரிங்கிட் வரையிலும் ஹெப்பர்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இது சாக்லெட்டிற்கான வரவேற்பையே குறிக்கிறது.

சாக்லெட் ஆரோக்கியமான பண்டம் அல்ல அதனால் உடல் நலம் பாதிப்படையும் என்பதே பொதுவாக மக்களிடையே நிலவும் கருத்தாகும். இதனால் சாக்லெட் சாப்பிடுவோரிடையே தமக்கு நீரிழிவு நோய் ஏற்படுமோ, உடல் எடை கூடுமோ, பல் பழுதடையுமோ என்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.

கொக்கோ பழத்தில் பற்களைப் பாதுக்காக்கும் கிருமி எதிர்ப்பு சத்து நிறம்ப உள்ளன. சாக்லெட்டில் சேர்க்கப்படும் இனிப்பு வகைகள் அவற்றை சேதமுறச் செய்வது மட்டுமின்றி பற்களையும் பாழடையச் செய்கின்றன. இது ஜப்பானிய ஒசாக்கா பல்கலைக்கழத்தின் ஆய்வறிக்கையாகும்.


சக்லெட்டினால் முகப்பரு ஏற்படுவதில்லை. ஆனால் அதிகமான பால் கலந்த சாக்லெட் முகப்பரு ஏற்பட காரமாகிறது. சாக்லெட்டின் வாசனை மன அமைதியை ஏற்படுத்த வல்லவை.


மாயா மற்றும் அஸ்டெக் கால கட்டங்களில் மக்கள் கசப்பு மிகுந்த சாக்லெட்களை உணவாகக் கொண்டிருக்கிறார்கள். 1500 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டினரால் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐரோப்பியர்கள் இனிப்பு வகை சாக்லெட்டை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலும் சாக்லெட் மேல்மட்ட மக்களுக்கு மட்டுமென சட்டங்கள் இருந்திருக்கின்றன.

சாக்லெட் Theobroma என அறிவியல் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. அது இறைவனின் உணவு என பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் சமயம் அமேரிக்க இராணுவத்தினரால் ஜப்பானில் சாக்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. சராசரியாக 1.7கிலோ சாக்லெட் வருடந்தோரும் ஒரு ஜப்பானியரின் உணவாகக் கொள்ளப்படுகிறது.

சாக்லெட் பற்றிய தகவல்கள் எண்ணிலடங்கா. நாளுக்கு நாள் புது தகவல்கள் நிறைந்து காணப்படுகிறது. சாக்லெட் உறுகுவதைப் போல் அதை பரிசாக பெறுவோரின் மனமும் உருகிவிடுகிறது. உலகளாவிய நிலையில் சாக்லெட் காதலோடு தொடர்புடைய பண்டமாகவே மக்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள்: