Tuesday, January 29, 2019

மயக்குறு திணை - சிறுகதை


”இங்க தான் படிச்சிங்களா? சின்ன வயசுல இந்த எஸ்டேட்ல தான் இருந்திங்கனு கேள்விப்பட்டேன். உள்ள வாங்க.” நுழைவாயில் பக்கம் வந்திருந்த தலைமையாசிரியர் அழைத்தார். ஆங்கிலத்தில் தான் உரையாடினார். 

”ஆமாம் சார், 91 பேட்ஜ், அங்க தான் வீடு இருந்தது, இப்போ உடைச்சிட்டாங்க போல, ஆறாவது பரிட்சை முடியறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிவிட்டடேன்” உறுதிபடுத்தும் வகையாக சிரித்துக் கொண்டு அவரின் கரம் குலுக்கினேன். அதற்குள் பச்சை சாயம் பூசிய தேட்டத்துப் பலகை வீடிருந்த திசையைக் காட்டியிருந்தேன். காட்டுச் செடிகளின் புதர் நான் சுட்டிய திசையில் மண்டியிருந்தது.

”இப்போலாம் வெளிநாட்டுக்காரங்க தானே தேட்டத்து வேலை பாக்குறாங்க, குடும்ப அமைப்பிலான வீடுகளுக்குத் தேவை குறைஞ்சிட்டதால அதை எல்லாம் காலி செய்துட்டாங்க. நீங்க ஏன் கிளம்பிட்டிங்க?” அணிவகுப்புத் திடலில் நடந்தபடி பேசினார்.

”ஈப்போவுக்கு படிக்க போய்ட்டேன் சார். இங்க மறுபடி வருவேனு நினைச்சி கூட பார்க்கல”.

”நம்ம மக்கள் அதிகமா டவுன் பக்கம் போயிட்டதால தான் நிறைய பள்ளிக்கூடங்கள மூட வேண்டியதா போச்சு. இந்த ஸ்கூல பாருங்க படிக்கிற பிள்ளைகள பாதி பேர் அஸ்லிகார பிள்ளைகள்.” மொத்தம் 18 பேர் மட்டும் படிப்பதாக கூறினார். இந்தக் காரணத்தினால் தான் நான் பள்ளியைவிட்டுச் சென்றிருக்கக்கூடுமென தலைமையாசிரியருக்கு சுய தீர்மானம் இருந்தது. உண்மையில்லை தான். நான் அவரை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை.

பள்ளி வளாகத்தைக் கண்களால் அளந்தேன். மொத்தப் பள்ளியும் இளைத்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு. வருடத்தில் ஒரு முறை மலைத் தேனீக்கள் கூடுகட்டிச் செல்லும் பெரும் பாறை ஒன்று வளாகத்தில் இருந்தது. பாறை முழுக்க வண்ணம் பூசி மலாய் மொழியில் வாசகம் எழுதி இருந்தார்கள். பாறை சிவப்பும் வெள்ளையுமாக நிறம் மாறி இருந்தது. மலைத் தேனீக்கள் இனி வருவது சந்தேகமே.

பாறைக்கு முன் அணி வகுப்புத் திடல். அதை ஒட்டி பிரிட்டிஸ் காலத்தில் கட்டிய பலகை கட்டிடம். அதைக் கொட்டகை என்றும் கிண்டலடிப்போர் உண்டு. 1947-ல் இருந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ள இடம். மறைப்புப் பலகைகளை வைத்து வகுப்புகளைப் பிரித்து பாடம் நடத்தினார்கள். இப்போதும் அப்படியே போதிக்கப்படுவதை காண முடிந்தது.

கொஞ்சம் புத்தகங்களோடு நூலகம் இருந்த இடம் புதுப்பித்த தலைமையாசிரியர் அறையாக மாறி இருந்தது. 1992-ஆம் ஆண்டு நிதி திரட்டி கட்டிய செங்கள் கட்டடத்தை ஆறாம் வகுப்பிற்கும் நூலகத்திற்கும் என வகுத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பு அப்படியே இருந்தது. நூலகத்தில் தலைமையாசிரியர் குடி பெயர்ந்திருந்தார்.

”கொஞ்சம் இருங்க சார், ஸ்கூல பார்த்துட்டு வந்திடுறேன்.” நான் கொண்டு வந்திருந்த பையை அவர் அறையில் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆறாம் வகுப்பு முன் சென்றேன். தன்னிரக்க உணர்வு என்னைக் கலங்கச் செய்தது. என் மனதிற்குள் வைத்துக் கொண்ட நினைவுகள் முயல் குட்டிகளாக வெளிவர எத்தனித்தன.

”உன்ன ஆறு ஏ எடுக்க ஒழுங்கா படிடானு சொன்னா... என்ன பண்ணிகிட்டு இருக்க...” சந்திரன் வாத்தியார் என் இடது கையைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் முதுகு, பிட்டம், கால் என பிரம்பால் விலாசி வெளியே விரட்டியது இங்கே தான்.

நடந்தபடியே திடல் பக்கம் வந்திருந்தேன். கொஞ்சம் மழைப் பெய்தாலும் சகதியாகிவிடும் புல் வெளி. சகதியாக இருந்தாலும் விளையாட்டை விடக்கூடாது என்பதில் தின்னம் இருந்தது. அதற்காகவேனும் நெகிழியிலான காலனிகளையே பலரும் பயன்படுத்தினோம். துவைத்து துடைத்தாலே காய்ந்துவிடும். விலையும் மலிவு. துணியிலான காலனிகள் அதிக விலை மட்டுமல்ல, கேமரன் மலைக் குளிரில் சுலபத்தில் காயாது.

திடல் முடியும் இடத்தில் ஒரு மேடு தொடங்கி கொஞ்சம் நில இடவெளியும் பின் வேலியும் இருந்தது. வேலியை ஒட்டிய 'ரெஸ் பேரி' மரம் இன்னமும் அங்கேயே இருந்தது. அதே உயரம். 23 வருடங்களுக்கு முன் பார்த்த அதே செழிப்பு. என் நினைவுகளைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல்.

அதன் பழங்களைச் சியாமளாவிற்காகவே பறித்துச் செல்வேன். ”புளிக்குதுடா இன்னும் பழுக்கல”. கருமை குறைவான ரெஸ் பேரி காயைக் காட்டி அவள் முகத்தைப் புளிப்பது என்னை மகிழ்ச்சிபடுத்தியது. ஆறாம் ஆண்டில் சியாமளா ஒவ்வொரு நாளும் அழகாகி கொண்டிருந்தாள்.

”டேய் மாற, சியாமளா உன் ஆளா டா?” என அருள் நேரடியாக விசாரித்தான். அந்தக் கேள்வி ஒரு உளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. சக மாணவர்களின் கற்பனை இதயக் குறியில் அம்பு விடும் தேவனாக என்னை மாற்றிக் கொண்டிருந்தது. அதை நான் மிகுதியாக விரும்பினேன்.

பரிட்சையில் ஆறு ஏ எடுப்பதாகக் கூறி அப்பாவிடம் முன்கூட்டியே ஒரு பி.எம்.எக்ஸ் சைக்கிளை லஞ்சம் வாங்கி இருந்தேன். தூரமில்லாத வீட்டுக்கு கூட அந்தச் சைக்கிளை ஓட்டிச் செல்வது ஒரு மிதப்பைக் கொடுத்தது. சியாமளா கூட எனது சைக்கிளை மிரள பார்த்திருக்கிறாள். பள்ளி முடிந்து அவளை சைக்கிளின் பின் அமர்த்தி மிதித்துக் கொண்டு ரகு கடையில் டியூப் ஐஸ் வாங்கித் தின்பதும் சில வேளைகளில் நடந்தது.

”வேகமா ஓட்டாத டா, பயமா இருக்கு” என என்னை இருக்கிப் பிடிக்கும் ஸ்பரிசத்தைக் காதல் மனம் கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். என் மீது கொண்ட அதீத ஆசையிலாயே சியாமளா அன்யோன்யமாக பழகுவதாக கருதினேன். அவளின் மனதை புரிந்துக் கொள்வதில் எக்கச்செக்கமான குழப்பங்கள் இருந்தது. காதலை உறுதி படுத்தாத வரையில் அது சிக்கலான விசயம் தானே.

கணேசன் அதற்கு ஒரு தீர்வைத் தந்தான். ”ஒரு லெட்டர்ல நீ எல்லாத்தையும் எழுதி சியாமளா கிட்ட கொடுத்திடு, எழுத்திட்டு லெட்டர்ல பவுடர தூவிவிடு, அப்ப தான் லெட்டர் நல்ல வாசமா இருக்கும்” இடைநிலைப் பள்ளியில் இருக்கும் அவன் அண்ணன் அப்படிச் செய்ததாகக் கூறினான். அதுவே எனக்கும் நல்ல யோசனையாக தோன்றியது.

நல்ல நாள் பார்த்து என் கடைசி காதல் கடித்தத்தை சில பல பிருமாண்டங்களோடு அலங்கரித்து முடித்தேன். இடைவேளை நேரம் சியாமளாவிடம் அதைக் கொடுத்த போது அவள் வேகமாக அழ ஆரம்பித்திருந்தாள். அந்த நாள் என் வாழ்வின் பேரவலம் ஆனது. கதவின் முன் காவலில் இருந்த கணேசன் காணாமல் போயிருந்தான்.

வகுப்பாசிரியர் சந்திரனுக்குத் தான் முதலில் தெரிந்தது. அதன் பின் ஒரு பள்ளிக்கூடத்துக்கே அது பேசு பொருளாகி போனது. சந்திரன் ஐயா தன் பிரம்பாயுத்தை என் மீது பிரயோகிக்க ஆரம்பித்திருந்தார்.

”இனி நீ ஸ்கூல் பக்கமே வரக் கூடாது” அவர் தூக்கியெரிந்த என் பள்ளிப் பையின் அடிவயிரு கிழிந்து நூல்கள் சிதறின. என் அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்து இடைவார் பூஜை செய்து சில நாட்களில் என்னை ஈப்போவில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்கள். நான் கடைசியாக பார்த்தது சியாமளாவின் அழுத முகம் தான்.

“என்ன மாறன் சார்' இங்கயே நின்னுட்டிங்க?” தலைமையாசிரியர் என் பின்னால் நின்றிருந்தார்.

“பழைய ஞாபகம் வந்திடுச்சு சார்”, துளிர்த்த ஞாபகங்களை மனக் கிணற்றில் மூடி வைத்துப் பேச்சை தொடர்ந்தேன்.

”இங்க இன்னும் பூசை போடுறாங்களா சார்?” திடலின் பக்கவாட்டில் பார்க்க அந்த மாரியம்மன் கோவில் முழுதாகத் தெரிந்தது. அதன் முன்னிருந்த தார் சாலையில் கவ்வாத்து செய்த தேயிலைகளைக் கழிவு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

”மியான்மார்கார பையன் ஒருவன் விளக்கு போடுறதா சொல்றாங்க. வருசம் தவறாம திருவிழாவுக்கு மட்டும் தான் ஜனம் கூடுது”. கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். பல சிறு வழிபாட்டுத் தளங்கள் பராமரிப்பு இன்றி தடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்.

”Step Back in Time புத்தகத்துல இந்த தோட்டத்த உறுவாக்க தாப்பா வழியா கோமரன்மலைக்கு தமிழ் சஞ்சிக் கூலிகள் நடந்தே வந்ததாக குறிப்பிட்டிருக்காங்க. அதை எழுதினது இந்த தோட்ட முதலாளி தான். நாம விட்டுடோம் சார்”.

”பொருளாதார பேரலையில் நம் சமூகத்தின் இடப் பெயர்வும் தவிர்க்க முடியாது தான் மாறன். எதுவும் நம் கையில் இல்லை. சரி மேலிடத்தில் இருந்து நீங்கள் வந்த விசயத்தை சொல்லலையே”. துரித 'மைலோ' பானத்தை கப்பில் கொட்டி சுடுநீர் நிறப்பி என் முன் நகர்தியபடி கேட்டார்.

”உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானே சார். இது இந்தப் பள்ளிக்கான இரண்டாவது கடிதம்.”

”மாணவர்களைப் பக்கத்துப் பள்ளிக்கு அனுப்பிட்டு இதை மூடிடலாம்னு சொல்றாங்களா? நீங்க படிச்ச இடமாச்சே. தீட்டின மரத்திலேயே கூர் பாக்குறிங்களே மாறன்”.

”எனக்கு இங்கு வேலை நியமனம் இல்லாதிருந்தால் இந்த விசயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். நான் வசித்த, படித்த இடம் என்பதாலேயே பார்க்க வந்தேன். நான் அரசு இயந்திரத்தின் தூது புறா மட்டுமே. குறைவான மாணவர்கள். பக்கத்துப் பள்ளியில் சேர்ந்துக் கொண்டால் ஒரே பள்ளிக்கான செலவில் சேரும்.” 

”வேறு ஏதும் செய்ய முடியாதா?” 

”பள்ளியை மூடாதிருக்க காரணங்களைக் குறிப்பிட்டு மறுபரிசீலனைக்கு கோரிக்கை வைக்கலாம், முதல் கடிதத்துக்கு அப்படி தான் செய்திருந்திங்க”.

”இன்னும் ஓரிரு வருஷம் தாக்கு பிடிக்குமா?” அந்தக் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை.

”சரி சார் கிளம்புறேன், நிறைய வேலை இருக்கு”.

வேலிக்கு வெளியே இருந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். இடைவேளை நேரத்தில் பாரதியார் பாடலை இசைக்கவிட்டிருந்தார்கள். ’பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நிந்தன் பச்சை நிறத் தோன்று தையே நந்தலாலா’ என யோசுதாளின் குரல் இனித்துக் கொண்டிருந்தது. என் எதிரே ஓடிவந்த மாணவனின் கையில் சில ரெஸ் பேரிகள் இருந்தன. அவை இன்னும் பழுத்திருக்கவில்லை. 

–முற்றும்- 

ஜனவரி 2018

*நன்றி மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை.

No comments: