Saturday, November 14, 2009

வான் துளிகள்!!


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

Friday, November 13, 2009

2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்

மாயன்ஸ் நாட்காட்டி 2012 நிறைவற்று போவதின் காரணம் பல கோணங்களிலும் அலசப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அத்தேதியில் உலகம் அழியும் என்பது உண்மையானால் மனித குலத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே 2012 எனும் திரைப்படத்தின் கண்ணோட்டமாக அமைந்துள்ளது.

தென் அமேரிக்காவின் மெக்சிக்கோ பகுதியில் தோன்றி மறைந்ததாக கூறப்படும் மாயா நாகரிகத்தினரின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றென கூறப்படுவது அவர்களின் நாட்காட்டியாகும். கி.முவில் தொடங்கும் இந்நாட்காட்டி முடியும் திகதி 21-12-2012. 2012 உலகின் மறுபிறப்பு தினம் (ரிஜெனரேஷன் பீரியட் என ங்கிலத்தில் சொல்லப்படுகிறது) என்பது உண்மையெனில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ரீஜெனரேஷன் எப்படியெல்லாம் நிகழப் போகிறது?

உலகின் அழிவை நோக்கிய பார்வையில் பல அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவ்வமைப்புகள் மக்களை ஒன்றிணைத்து அவர்களை புனித ஆத்மாவாக்கி புதிய யுகத்திற்கு தயார் செய்யும் ஓர் உண்ணத பனியை மேற்கொள்வதாக காட்டிக் கொள்கின்றன. புதிய யுகம் தோன்றும் போது இவ்வியக்கத்தால் புனிதமாக்கப்பட்டவர்கள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவார்களாம். இது மரண பயத்தைக் காட்டி மனிதனை மிரட்டும் வழி. கடவுள் எனும் பிம்பத்தின் போர்வையில் 'ஏதோ பண்ணும்' யுக்தி.

சரி அப்படி என்றால் கடவுள் என்ன செய்யப் போகிறார். ஒரு நெருப்புப் பிண்டம் சிதறி விழுகையில் பெற்ற தாய் தன் பிள்ளையையும், கணவன் மனைவியையும் விட்டு ஓடலாம். நம்பிக்கைக்குறிய மிக நெருக்கமானவர்களே கைவிடும் சமயத்திலாவது கடவுள் தோன்றுவாரா?

இயற்கையின் சீற்றம் பல வழிகளில் ஏற்படலாம். இன்று வரையிலும் பல முறை உலக மக்கள் உலகின் கடைசி தினம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிரட்டப்பட்டிருக்கிறார்கள். The Millerites இயக்கத்தை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இங்கிலாந்து தேசத்தின் விவசாயி ஒருவர் 23 ஏப்ரல் 1843-ஆம் ஆண்டு உலகம் அழியும் என கணிப்பு கூறினார். இவரின் "இவ்வற்புத' சிந்தனைக்கு தோன்றிய இயங்கமே The Millerites.

புதிய நூற்றாண்டான் 2000த்தாம் ஆண்டின் முதல் நாளின் வரவேற்பு எப்படி இருந்தது. Y2K எனும் அறிவியல் பிரச்சனையில் பீதியாகி பய உணர்வொடு வரவேற்றோம். புதிய ஆண்டின் மலர்ச்சி மந்தமாகி போனது. நிச்சயமாக உலகம் அழியும் என சொல்லிக் கொண்ட அமெரிக்க பாதரியார் ஒருவர் அப்படி நிகழாத்தை கண்ட மறு நிமிடம் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போனார்.

1806-ஆம் வருடம் தனது கோழி முட்டையில் ஏசு கிருஸ்து வருகிறார் எனும் எழுத்துகள் பொறித்ததாகவும் அதுவே உலகம் அழியும் அறிகுறியென புரளிகள் கிளம்பின. இதே போல் 1800 களிலும் 1900களிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உலகம் இன்னமும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

2012 உலகம் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் எனும் ஆராய்ச்சிகள் பல கோடி செலவுகளில் நடத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும், கணிப்புகளும் எத்தனை தூரம் உண்மை என்பதினை அறிந்துக் கொள்ள இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அந்தரத்தில் வீடு ட்டிக் கொண்டால் இயற்கை பேரிடர்களில் இருந்து பல வகையிலும் விடுபட்டுக் கொள்ளலாம் இல்லையா? புவி ஈர்ப்பு சக்தியை நாம் மீற முடியாமல் தான் இருக்கின்றோம்.

2012க்கு பிறகு இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் இதன் வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நடக்கப் போகும்/நடக்காத ஒன்றினை இப்படி ஏற்படும் சாத்தியம் உண்டு எனும் எதிர்ப்பார்ப்புகளை செலுத்தி வணிக ரீதியாக இலாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மிகையில்லை. அதற்கான மெனக் கெடுதல் அமர்ந்த இடத்தில் இருக்கும் நம்மையும் எகிர வைக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் கபாடபுரம், (*பாண்டியர்களின் முன்னால் தலைநகரம். நா.பாவின் நாவல் இப்பெயரில் வெளிவந்துள்ளது) சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பல்லவர்களின் மாமல்லபுரம் போன்றவை குமரிக் கண்டத்தை கடல் கொண்ட சமயம் அமிழ்ந்து போனதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. குமரியின் ஆய்வு விசாலமானது. மேற்கத்தியர்கலால் இப்பகுதி லெமூரியா என குறிப்பிடபடுகிறது. லெமுர் மற்றும் அட்லாண்டீஸ் போன்ற ஆய்வு நூல்களில் தமிழ் தமிழர் சார்ந்த விடயங்கள் இம்மியும் கிடையாது. மனித னத்தின் பரினாம வளர்ச்சி எல்லோருக்கும் ஒன்றுதான் போலும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் கொந்தளிப்பு கதையின் முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளது. உலக அரசுகள் மக்களை எவ்வகையில் பாதுகாக்கப் போகிறது. உடனடி ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா எனும் பார்வையும் இங்கு முன் வைக்கப்படுகிறது.

இன்றய நிலையில் மனிதர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, என இயற்கையின் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இயற்கை மனிதனோடு நட்புறவு கொள்ள மறுத்துவிட்டிருக்கிறது.

தொடக்கத்திற்கு முடிவும் இருக்க வேண்டும் எனும் சித்தாந்த அடிப்படையில் கடைசி நாள் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நாசப்படும் பூமி முற்றிலும் அழியும் என்பது அதற்கான நாள் தூரம் இல்லை என்பதும் பல மதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அறிவியல் முன்னோடிகள் பூமியின் அழிவு பிக் பேங் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழலாம் எனும் கருத்துக் கணிப்பினையும் முன் வைக்கிறார்கள். இந்த பிக் பேங் சித்தாந்தம் 1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபில் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிக் பேங் சித்தாந்தத்தின் படி பார்ப்போமேயானால் இந்த பிரபஞ்சமானது ஒரு மாபெரும் இராட்ச்சச வெடிப்பினால் உருவான பிண்டங்கள். தொடக்கத்தைப் போலவே பூமியின் முடிவும் இருக்கும் என்கிறது இச்சித்தாந்தம். 13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.

புவி வெப்பம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. அதே போல் சூரியனின் கொதிப்பும் பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. இப்வெப்பத்தின் பாதிப்பு துருவங்களின் பனிப்பாறைகளை கரையச் செய்து கடல் மட்டத்தை பெருக்கெடுக்க வைக்கிறது. கடல்மட்டம் உயருவதால் கரைப்பகுதிகள் அமிழ்ந்து போகின்றன.

இதை தவிர்த்து விண் கற்கலின் மோதலாலும், பூமியின் அழிவு ஏற்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாசாவின் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது பூமியை விண்கற்கள் மோத வருகின்றன. அட்மோஸ்பேராவின் பாதுகாப்பால் அவை தகர்க்கப்படுகிறது. கோள்களின் மோதலாலும் பூமி அழிந்து போகக் கூடும் என ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. கோள்களின் சுழற்சி அதிகரிக்குமானால் கோள்களின் மோதல் ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாக அறிவியல் கருத்துகள் கூறப்படுகிறது.

2012 திரைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் பாதுகாப்பு கப்பல்கள். இது நோவாவின் கப்பலின் கதையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கக் கூடும். எவ்வளவு பேரை இக்கப்பலில் காப்பாற்ற முடியும் எனும் பட்சத்தில் முதலாளிதுவமும் ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அங்கே முந்திக் கொள்ள நினைக்கிறது. சுயநலம் பெருக்கெடுக்கிறது. ரஸ்ய நாட்டில் பேழை ஒன்று உள்ளது. இப்பேழையில் 5 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலகம் அழிந்து போகுமாயின் இப்புத்தங்கள் அப்பேழையில் பாதுகாப்பாக இருக்குமாம். அந்த 5 புத்தகத்தில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகங்களை காப்பதை போல மனிதர்களை காக்க முடியுமா?

இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் குடும்பத்தை ஒரு சாமனிய வர்க்கத்தை சேர்ந்த வாகன ஓட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் நாம் எந்த அளவுக்கு கையாளாகதவர்களாகிறோம் என்பதை போட்டில் அடித்து சொல்லப்படுகிறது.

மாயன்ஸ் நாகரீகம் பற்றிய எனது முந்தய படைப்புகள்:

பாகம் 1: மாயாக்கள் இருந்தார்களா?

பாகம் 2: உலகின் இறுதி நாள்

Thursday, November 12, 2009

சொல்லாததும் உண்மை


சரித்திரம் தனக்கு தோதாக சில வேளைகளில் வேடமிட்டுக் கொள்கிறது.

பூர்வ குடி தோழர் சொன்னார்.

கொடும் பாவிகள் சூழலிலிருந்து இருந்து தப்பித்துக் கொள்ளவே எம்மினம் தூர விளகிப் போனது என அவர் கூறினார். முன் நாட்களில் அவர்களுக்கு நடந்தவற்றை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள செய்திகள் சொற்பமாகவே இருக்கிறது. எப்போதோ சொல்லி, எங்கெங்கோ பரவிய விசயங்கள் திட்டுத்திட்டாக நமக்கு கிடைக்க பெறுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பேரரசுகளின் சாம்ராஜிய விஸ்தரிப்பு கடல் கடந்து பல தேசங்களுக்கு நீண்டிருந்தது. கடல் வழி பயணங்கள் அதிகரித்திருந்த அவ்வேளையில் வியாபாரங்களும் அதிகரித்திருந்தது. வியாபாரம் எனும் பெயரில் சுரண்டிய செல்வங்களை வெவ்வேறு தேசங்களுக்கு இட்டுச் செல்லும் போது கடற்கொள்ளையர்களின் தொல்லை வலுத்திருந்தது. திருடனிடம் திருட்டு, திருட்டுக்கு மேல் திருட்டு என கொள்ளையர்களின் அழிச்சாட்டியம் பல்கிப் பெருகிப் போனது.

பாதுகாப்பின் பொருட்டு சாம்ராஜியபதிகள் கடல் காவலை வலுப்படுத்த முற்பட்டார்கள். பல காலமாக கொள்ளையிட்டு வாழ்ந்துவிட்டவர்கள் எங்கு போவார்கள். காவல் நெருக்கடிகளின் பாதிப்பு அதிகரிக்கவும் விட்டதை விட்டபடி அவர்கள் காடுகளுக்குள் புகுந்தார்கள். காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களின் இடங்களை ஆக்ரமிக்க எத்தனித்தார்கள். அவர்களை அழிக்கவும் செய்தார்கள். நாகரீகம் அவ்விடத்தில் இன்னமும் தன் சிறுபிள்ளை பிராயத்தில் தான் இருந்திருக்கிறது.

காட்டில் இருந்த பூர்வ குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? எனும் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு விடப்படுகிறது.

ஓர் இனம் நெடுங்காலமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கான இக்காரணங்களை அறிய மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகிறது. மாயா நாகரிக மக்கள், சிவப்பிந்தியர்கள் என இன்னும் பல இன அழிப்புகள் சரித்திரத்தில் தொன்றியும் மறைந்தும் இருக்கிறது.

**********

"பொதுவாவே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்குமே... யார் உங்களை வந்து பார்ப்பாங்க.... யாருக்கு ஆதரவா இருக்கீங்க..."

"எனக்கு காசு கிடைச்சா போதும். மத்தத பத்தி எனக்கு கவல ல்ல. அரசியல் எல்லாம் சும்மா ஏமாத்துவானுங்க... காசு கொடுத்தா வாங்கிப்பேன்... அது போதும்..."

பூர்வீக குடி தோழர் சொன்னார்.

பொருளியல் சிந்தனை. மனித நாகரீக வளர்ச்சியின் மேன்மையான சித்தாந்தம். அதில் வலுத்தவன் சமுதாயத்தின் மத்தியில் தன்னை உயர்வாக காட்டிக் கொள்கிறான். பொருளியில் அடிப்படையிலான இச்சிந்தனை எதனால் அந்த தோழரிடம் உறுவானது? எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன? பணம் கிடைத்தால் நான் எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்பதா?

***********

மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சரித்தி புத்தகத்தை நீங்கள் தலை கீழாக கூட புரட்டிப் பார்க்கலாம். பூர்வீகக் குடியினரைப் பற்றிய செய்திகள் எத்தனை இடங்களிடல் உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் புதிதா அச்சிடப்பட்ட ரித்திர புத்தகத்தில் மலேசிய நாட்டின் பெருன்பான்மையினரின் சகோதரர்கள் இவர்கள் என எங்கோ ஒரு மூலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போற்றுதலுக்குறிய விடயம் தான். சரி அதைப் பற்றி நமக்கென்ன.

போர்த்துகீரியர் ஆட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலம், ஜப்பானிய ஆட்சி காலம் என்பன மலாயா சரித்திரத்தில் குறிப்பிட தக்கவை. இக்காலகட்டங்களில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? பூர்விக குடியினரின் சிறப்பு சழுகைகள் அப்போதே வழங்கப்பட்டுவிட்டதா?

மக்களை சக்கையாக பிழிந்தெடுத்த இந்த ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இவர்கள் தப்பி வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அக்காலகட்டத்தில் நடந்தவற்றிற்கான குறிப்புகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை மீட்டெடுப்பது இப்போது சாத்தியம் தானா?

**********

உங்களில் கற்றறிந்து உயர் நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே என்றேன்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொருளியல் தோடல் அதிகரித்த போது மக்கள் வெளி வர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டங்களில் மதம் சார்ந்த அமைப்புகள் சில ஆங்காங்கு பல உதவிகள் செய்து வந்தார்கள். பெயர் மாற்றம், மதம், புதிய நம்பிக்கை என சமூகத்தில் மாற்றங்கள் பரவலாக நடந்து வந்தது. இவர்களின் வழி சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் வாழ்க்கை முறை என புதிய சிந்தனைகள் பரிநாமம் பெற்றது.

இவ்வமைப்புகளைக் கண்டு அச்சம் கொண்டவர்களும் உண்டு. நம்மை மாற்றி ஏதாவது செய்துவிடுவார்களோ என மூத்த குடியினர் பயந்தார்கள். இன்னமும் பலருக்கு பயம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து இலகுவாக உதவி கிடைக்கும்படி இருப்பினும் அவர்களின் மதம் எனும் போர்வையை போர்த்திக் கொள்ளாத வரையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணை கிட்டும் என சொல்லி அமைதிகாத்துவிடுகிறார்கள்.

**************

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுலா துரைக்கு மவுசு கூடிற்று. காலப் போக்கில் பூர்வக் குடி மக்களின் வாழ்வும் கலாச்சார முறைகளும் சுற்றுலா துரைக்கு கொண்டு வரபட்டது.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

இதன் வழி பூர்வக் குடி மக்கள் பொருள் சம்பாதித்துக் கொள்ள வழிவகுத்தது. பிள்ளைக் கறி கேட்ட கதையாக பெண் சதை வியாபாரமும் ஆங்காங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் யாரை குறை சொல்ல முடியும். அடிதட்டு மக்களும் வாழ்ந்தாக வேண்டிய நிலை. வயிற்றைக் கழுவ அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. சரி தவறென்பது அவர்களின் சிந்தனைக்குட்பட்டது. நான் சொல்லி ஏதுமில்லை என்றார்.

************

மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொரும்பான்மையாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றை பெரிதாக கருதுவதில்லை. அவற்றைப் போக்க சில இயற்கை உணவுகள் சாப்பிடப்படுகிறது.

.......

பூர்வீகக் குடியினரில் இயற்கையாக மரணம் ஏய்துபவர்கள் பலரும் மத்திம வயதினரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முகத் தோற்றம் உடல் அமைப்பு போன்றவற்றிற்கு மரபணு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கிறதோ அதே போல இவர்களின் மரணத்திற்கு அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஊது குழாய் வழி வேட்டையாடிய உணவுகளை சாப்பிடும் போது அதன் நச்சுத் தன்மை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் ஊது குழாய் வேட்டை குறைந்திருப்பினும் அதன் பாதிப்பு இருக்கவே செய்கிறது.

*************

டுரியான் மற்றும் மங்குஸ்தின் பழ காலங்களில் வெளி வேலையில் ஈடுபட்டிருப்போரும் அதற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, பழ வியாபார வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். தினமும் கிடைக்கும் கைக்காசு மட்டும் காரணமல்ல. சாதாரண வேலையை விட இதில் ஈட்டும் தொகை அதிகம்.

பழ காலத்தில் பூர்வக் குடி தோழர் அவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அந்தி சாய்ந்த வேலையில் ஓரிரு நண்பர்களோடு கைவிளக்கு எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பகுதிக்கு நடை பயணப்பட்டோம். சுற்றுலா மையமாக்கப்பட்ட அவ்விடம் பயணிகளுக்கு அவ்வேளையில் மூடப்பட்டிருந்தது.

"இது தான் சரியான நேரம், கருக்கிருட்டு நேரத்தில் வரக் கூடாது. 'டத்தோ' இருக்கும்" என்றார்.

அவர்கள் கையில் இருந்த விளக்குகளை நீரோட்ட பகுதியில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் ஒளியிட்டு அடித்தபடி நடந்தார்கள்.

நகைகளை களையாமல் நிர்வீழ்ச்சி பகுதிகளில் குளிப்பவர்களின் ஆபரணங்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்படி பாறைகளின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். இருட்டிய வேளையில் விளக்கொளி படும்போது நகைகள் மினுக்கும். இப்படியும் இவர்களின் பொருளியல் தேடல்கள் அமைகின்றன.

*********

பூர்வக் குடி தோழர் கேட்டார்.

எங்களைப் பற்றி எழுதப் போவதாக சொன்னாயே? புனைவா அல்லது நிஜமா?


******************************************************************


பார்வைக்கு சில சுட்டிகள்:

http://malaysiana.pnm.my/Alat%20Tradisonal/buru_sumpitan.htm

http://en.wikipedia.org/wiki/Orang_Asli

http://www.malaysiasite.nl/orangeng.htm

Tuesday, November 10, 2009

தேடல்-(சிறுகதை)

இன்று தேடி பிடித்துவிட வேண்டும் எனும் உறுதி அவளுள் எத்தனித்தது. எப்படி தேட போகிறாள்? அதற்கான பதில் எப்படியாவது என்பது தான். ஈப்போ பேருந்து நிலையத்தில் ஆரவாரம் குறைந்திருந்தது. மாலை மங்கிக் கொண்டிருந்தது. ஒரு பச்சை பேருந்து முக்கியபடி கருப்புப் புகையை இருமி சென்றது.


பக்கத்தில் சிறு பட்டறை. கருப்பெண்ணையால் முக்கியெடுத்ததைப் போல் இருந்தது. மெக்கானிக் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு கயிற்றைப் பிடித்து இரண்டு இழு இழுத்தான். அது இஞ்ஜினாக இருக்க வேண்டும். உறுமிக் கொண்டு எழுந்தது. பட்ட... பட்ட.. வென சத்தத்துடன் இறைந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாகத்தை முடுக்கினான். அழுத்தம் கொடுக்கவும் உர்ர்ர்... உர்ர்ர்... என ஆத்திரத்தோடு புகையைக் கக்கியது. கடுப்பேறியவனாக ஸ்பானரை தூக்கியெறிந்துவிட்டு எதையோ செய்துக் கொண்டிருந்தான். முதலாளியின் மேல் கோபமாக இருக்கலாம்.

அதிகப்படியான வண்டிகள் இல்லை. அவளுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டது. முகத்தையும் கண்களையும் துடைத்துக் கொண்டாள். அவ்விடம் கதகதத்துக் கொண்டிருந்தது. உடல் கசகசத்தது. அவள் எதையும் பொருட்படுத்துபவளாக தெரியவில்லை. அவள் பொறுமை இழந்திருந்தாள். நினைப்பவை கிடுகிடுவென முடிந்திட வேண்டுமென தன்னை அவரசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

கைக்குட்டையால் முகத்தருகே விசிறிக் கொண்டிருந்தாள்.

வெட வெடவென வளர்ந்த தேகம் கொண்ட ஒருவன். படிய சீவிய தலை. செண்ட் வாசம் தூக்கலாக இருந்தது. அவள் அருகில் வந்தவன் திடீரென கேட்டான்.

"வர்றீயா...'

சட்டென ஆத்திரம் அடைந்தவளாக காரி உமிழ்ந்தாள்.

"செத்து போனாலும் திருந்த மாட்டானுங்க..." என்றவளாக பென்ச் மீது அமர்த்தி வைத்திருந்த தன் பிள்ளையையும் தோள் பையையும் தூக்கிக் கொண்டு தூர போனாள்.

அவன் வேறு பக்கமாக நடந்துக் கொண்டிருந்தான். நெடு நேரமாக இவளைக் கவனித்திருப்பானோ என்னவோ. இருக்கலாம்...

ஓர் ஆண் மீது இவளுக்கு இருக்கும் தேடலைப் போலவே அவனுக்கும் பெண்கள் மீதான தேடல்கள். இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ தேடல்களில் எத்தனையோ பேர்கள். தேடல்களை நோக்கி ஓட்டம் எடுக்கும் வாழ்க்கை இந்த இரு நபர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. மேற் சொன்ன அவன் எனும் கதாபாத்திரத்தை இவ்விடத்தில் நாம் விட்டுவிடலாம் . இக்கதையில் நாம் கவனிப்பது அவளை. அவள் பெயர் மாரி. மாரியம்மாள் எனும் அவளை மாரி என்று தான் அழைப்பார்கள். அவசர உலகிற்காக சுருக்கிக் கொண்ட பெயர்.

விறுவிறுவென பேருந்தில் ஏறிக் கொண்டாள். அவளை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மூளையில் அமர்ந்துக் கொண்டாள். ஆத்திரம் தணிந்திருக்கவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு தன் பிள்ளையைப் பார்த்தாள். அது உறங்கிக் கொண்டிருந்தது.

மாரிக்கு அவள் கணவன் இருக்கும் இடம் சரிவர தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவனை முதன் முதலாக சந்தித்தாள். அவனை பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து போய்விட்டது. அத்தருனங்கள் அவளுக்கு இனிமையாக இருந்தது. அவனை அடிக்கடி சந்திக்க தோன்றியது. பின் காதல் கல்யாணம் எல்லாம் எல்லாக் கதைகளிலும் வருவதைப் போல் அறிந்த செய்திகள் தான்.

அன்று அவன் மீது இருந்தது இனிமையான காதல். இன்றும் அவன் மீது காதல் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கணவன் இல்லாமல் அவளால் வாழ முடியாதா? ஒரே பிள்ளை. சம்பாதிக்கும் திறன் மிக்க பெண், மாரி. அவளால் வாழ்ந்துக் காட்ட முடியும். இருப்பினும் அவனைத் தேடுகிறாள். பல இடங்களில் தேடிவிட்டாள். இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

மாரி அவனை திருமணம் செய்துக் கொள்ள போவதாக சொன்ன போது பலமான எதிர்ப்பு கிளம்பியது.

“அவனை பார்க்க சரியானவனாவே தெரியல... எப்படி டீ உனக்கு மட்டும் தோனுது,” என மாரியின் அம்மா பொறிந்து தள்ளினாள்.

வீட்டில் இப்படி பேசுவது மாரிக்கு பிடிக்கவில்லை. இரகசியமாக அவனை திருமணம் செய்துக் கொண்டு தனியாக வாழ்ந்தாள். நாட்கள் கசங்க வாழ்க்கையும் கசந்தது. அவர்களுக்குள் அடிக்கடி சில பல மன வருத்தங்கள்.

பிள்ளை பிறந்து சில மாதங்களுக்கு பின் சந்திரனின் வேலையிடத்தில் பிரச்சனை ஏற்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான். வாழ்க்கையின் வருத்தங்கள் ஆட்டுவித்தது. சில மாதங்களில் தலைநகருக்கு வேலைக்கு போவதாக சொல்லிக் கொண்டு கிளம்பினான். பிறகு அந்தப் பக்கம் தலைக்காட்டுவதை நிறுத்திக் கொண்டான்.

"உன் புருசன் வரதில்லையா?'

"வெளிய வேலை செய்யராரு..." இப்படியாகதான் அந்த சாம்பாசனைகள் ஆரம்பித்தன.

ஒரு முறை அவள் அப்பா வந்திருந்தார். "அழாக் குறையா அப்பவே சொல்லித் தொலைச்சோமே... கேட்டியாடி... கூருகெட்ட கழுதை.... எங்கப் போய் தொலைஞ்சானோ கேடுகெட்டவன்..."

மாரி அமைதியாக தான் இருந்தாள். பேசுவதற்கு அவளுக்கு ஆயிரம் வார்த்தைகள் இருந்தன. அவள் பேச விருப்பம் கொள்ளவில்லை. மோசம் போனேன் என ஒப்பாரியும் வைக்கவில்லை.

ஏன் அவன் வரவில்லை. அவளிடம் ஈர்ப்பு இழந்தவனாகிவிட்டானா? அவனுக்கு மேலும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவன். பிடிவாதம் கோபம் என சில குணங்கள் அவனுக்குள் உயிர்ப்பித்திருந்தன.

மழை சோவென அடித்துப் பெயர்த்துக் கொண்டிருந்தது. தலைநகர் நசநசத்துக் கிடந்தது. மாரிக்கு மழை வெயில் எனும் கணக்கெல்லாம் மறந்து பல காலம் ஆகிவிட்டிருந்தது. பிள்ளையை தூக்கிக் கொண்டு அவன் வேலைப் பார்க்குமிடம் விரைந்தாள். காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஓர் அசுர வேகம் அவளிடம் காண முடிந்தது.

அவனுக்கு இது வேலை நேரம் தானா? ஒரு முறை அவன் மாரியிடம் சொல்லியிருந்தான். அவன் வெலை செய்யுமிடம் அல்லது செய்த இடம் இது தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். வேலை நேரம் எதுவாக இருந்தால் என்ன. காத்திருந்து கவனித்துவிடலாம்.

மாரி நெடுநேரமாக அவ்விடம் காத்திருந்தாள். அங்கும் இங்குமாக அலைந்து தேடினாள். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அவன் முன்பு தங்கியிருந்ததாக சொன்ன இடத்துக்குச் சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தாள். அது இன்னமும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவன் பார்த்திருந்ததை விட பிள்ளை அதிகமாக வளர்ந்துவிட்டது. இந்தப் பிள்ளையை பார்த்ததும் அவன் உணர்ச்சியை காண வேண்டும் என மாரி நினைத்துக் கொண்டாள். இது அவன் பிள்ளை. நிச்சயம் அவனுக்கு பிடிக்கும். மனம் உறுகி வெம்பி கண்ணீர் கசிவதாகவும் அவன் முகத்தை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

அவன் தங்கியதாக சொன்னது ஒரு பிரமச்சாரிகள் தங்கும் விடுதி. முடிந்தவரை தேடினாள். அவ்விடம் சுத்தம் குறைவாக இருந்தது. ஊசிப்போன வாடை. கலைத்துப் போனவளாக விடுதியின் முன் சென்றாள். நடமாடும் ஆடவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள். நேரம் ஆக சினமும் வெறுப்பும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள்.

அவள் இருப்பிடம் திரும்பிய சமயம் நட்ட நடு நிசியாகி இருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்த காட்சி இரம்யமாக இருந்தது. அவற்றை இரசிக்கும் மன நிலையை அவள் தொலைத்திருந்தாள்.

விறுவிருவென நடந்து தன் கல்லறைக்குள் மறைந்துப் போனாள். ஏதோ ஓர் மூளையில் வெட்டியான் புதிய பிணத்திற்கு குழி வெட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

நாளைக்கும் மாரி சந்திரனை தேடி புரப்படுவாள். 'வர்றீயா' எனக் கேட்கும் இளைஞனை சந்திக்க நேரிடலாம்.

இரும்புக் கலை


கதை 1:

மலாக்கா பேரரசின் பொற்காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஹங்
துவா, ஹங் ஜபாட், ஹங் லெக்யூ, ஹங் கஸ்தூரி, எனும் நண்பர்களின் தேச பக்தியால் நாடு சுபிட்ச ஆட்சியில் செழிப்புடன் இருந்தது. ஹங் நண்பர்கள் என இவர்கள் அறியப்பட்டார்கள். எதிர்பாராதவிதமாக ஹங் துவா அரசினால் குற்றம்சாட்டப்படுகிறார். அரசரால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும்பட்சத்தில் அமைச்சர்கள் அவரை காட்டிற்கு இட்டுச் செல்கிறார்கள்.

ஹங் துவாவின் பதவி ஹங் ஜபாட்டிற்கு வழங்கப்படுகிறது. நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் ஜபாட் அரசரை பழி வாங்க முற்படுகிறார். ஆஹா ஹங் துவா இப்படி இல்லையே. நல்ல படை தளபதி ஒருவனை நாம் இழந்தோமே என அரசர் கவலையில் இருக்கிறார்.

சமயோசிதமாக ஹங் துவாவை கொல்லாமல் விட்டுவைத்திருப்பதை அமைச்சர் சொல்கிறார். ஜபாட்டினால் நாட்டில் ஏற்பட்டிருக்கு
ம் குழப்பத்தை சீர்படுத்த ஹங் துவா மீண்டும் அழைத்து வரப்படுகிறார். நிஜத்தில் வந்திருப்பது ஹங் துவா தான் என்பதை ஜபாட்டினால் ஏற்றுக் கொள்ள முடியாதபட்சத்தில் இருவருக்கும் பலமான மோதல் நடக்கிறது. ஜபாட் தாமேங் சாரி எனும் கிரிஸ் கத்தியினால் குத்திக் கொல்லப்படுகிறார். அச்சம்பவத்தின் பின் துவா மாயமாக மறைந்து போய்விடுவது வேறு கதை.

கதை 2:

மலேசியாவின் லங்காவி தீவு மிக பிரசித்திப் பெ
ற்ற சுற்றுலா தளமாகும். இத்தீவிற்கு சென்று வந்தவர்களுக்கு மசூரியின் கதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளை பேறு இல்லாத தம்பதியினருக்கு நெற் கிடங்கில் ஒரு குழந்தை கிடைக்கிறது. அப்பெண் குழந்தைக்கு மசூரி என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

பருவம் எய்திய மசூரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவளது கணவன் வணிகனாக பணி புரிகிறான். இதனால் வெளி இடங்களுக்கு
அதிகமாக செல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையில் கணவன் இல்லா சமயம் மசூதி வேறு ஆடவனோடு இருந்தாள் என குற்றம் சுமத்தப்படுகிறாள். பிரத்தியோகமான கிரிஸ் கத்தியால் அவள் குத்திக் கொள்ளப்படுகிறாள்.

தமது நடத்தையில் தவறில்லை என்பதை நி
ருபிக்கும் பொருட்டு 7 தலைமுறைகள் லங்காவி தீவு செழிப்பிழந்து போகுமென சாபமிட்டு வெள்ளை இரத்தம் சிந்தி இறக்கிறாள். பிற்காலத்து ஆய்வுகளில் மசூரி பரம்பரையில் வந்த வாரிசுகள் இந்தோனேசிய நாட்டினில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டது வேறு கதை.

மலாய் மக்களின் பாதுகாப்பு கலைகளுள் ஒன்று கிரிஸ் கத்தி. ஆரம்பக் காலங்களில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் கிரிஸ் கத்தி நாளடைவில் மலாய் மக்களின் பாரம்பரியங்களுள் ஒன்றென ஆனது.

கிரிஸ் கத்தி இரும்பினால் செய்யப்படுவது. இவற்றை பல பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். சற்றே பாரம் மிகுந்த ஆயுதமான கிரிஸ் கத்தி நெளிவு நெளிவாக முருக்கியபடி அதன் நுனி பாகம் கூர்மை மிகுந்து காணப்படும். கிரிஸ் காத்தியால் செய்யப்படும் தாக்குதல் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. கத்தியின் நெளிவுகள் தாக்கப்பட்ட சதையின் பிளவுகளை பெரிதாக்கிவிடும்.

மேற் சொன்ன கதைகளில் இருப்பதைப் போல் கிரிஸ் கத்தியின் சரித்திர சம்பவங்கள் அதிகபடியாகவே இருக்கின்றன. எத்தனை நெளிவுகள், எவ்வளவு பாரம் எனும் விடய்ங்களைக் காட்டினும் கிரிஸ் கத்தியின் வேலைபாடுகளும் மக்களால் சிலாகித்துப் பேசப்படும் ஒன்றாகும்.
கத்தியின் கலை நுட்பம் அதைச் செய்வோரின் சிந்தனை சார்ந்து அமைகிறது. ஆரம்பக் கால மலாயா நிலப்பகுதி எனப்படுவது தற்போதய தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிபைன்ஸ் நாடுகளோடு அடங்கியதாகும். சிரிவிஜயா, லங்காசுக்கா மற்றும் மாஜாபகிட் பேரரசுகளின் ஹிந்து புத்த ஆட்சியின் போதும் கிரிஸ் கத்திகள் பயன்பாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது. அச்சமயம் இக்கத்தியின் வேலைபாடுகளில் ஹிந்து மத தெய்வங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்களின் அடையாளங்களுக்கு ஏற்பவும் கத்திகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. கிரிஸ் கத்தியை பயன்படுத்துவோர் தமது இடுப்பின் ஓரமாக அதை சொருகி வைத்திருப்பார்கள். அரசரை நேருக்கெதிர் சந்திக்கும் தருணங்களில் கத்தியை பின்புரமாக எடுத்து வைத்துக் கொள்வது மலாய் கலாச்சாரங்களின் ஒன்றென கருதப்படுகிறது. இது அரசருக்கான மரியாதை மட்டுமின்றி பாதுகாப்பு விடயத்திற்காகவும் இருக்கலாம்.
இஸ்லாமிய மத ஏற்பிற்கு பிறகு ஏற்பட்ட மாறுதல்கள் கிரிஸ் கத்தியின் வடிவமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. உறை மற்றும் கத்தியின் கலை வேளைபாடுகள் கலைநயமான செதுக்கல் வேலைபாடுகளோடும், இஸ்லாமிய வாசகங்களின் வடிவமைப்போடும் உருவாக்கப்பட்டன.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட தாமெங் சாரி எனப்படும் கிரிஸ் கத்தி தற்சயம் பேரா மாநில அரசரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இக்கத்தி இருக்குமிடத்தில் வெற்றி குவியும் எனும் நம்பிக்கை மலாய் மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

ஆரம்பக் காலத்தில் சீனர்கள் பேரா மாநிலத்தில் ஈய ஆளைக்கு வேலை செய்ய வந்தார்கள் அச்சமயம் சீனர்களால் அதிக அளவிலான குண்டர் கும்பல்களின் ஆதிக்கம் பேராவில் இருந்தது. அடுத்தபடியாக பங்கோர் ஒப்பந்தத்தின் படி பேரா மாநிலத்தின் நல்லாட்சிக்கு ஒரு பிரிடீஸ் கவர்னர் தேர்வு செய்யப்பட்டார். தாமேங் சாரியால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் போனது கேள்வி குறியான விடயம். தற்சமயம் இருப்பது அக்கத்தி இல்லை என்பதும் மக்களின் வாதமாக இருக்கிறது. எப்படியாகினும் இந்நம்பிக்கைகள் அவரவர் நம்பிக்கையை பொருத்த விடயங்களாகும்.

போர் சமயங்களில் கூர் வாள்களும், அருவா கத்திகளும் மலாய் மக்களால் அதிகபடியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. கிரிஸ் கத்தி குறுகிய இடைவெளியில் தாக்குதலுக்கு உரிய அயுதமாகும். அளவில் சிறிய கத்தியான கிரிஸ் அரசர்களாலும், பிரபுக்களாலும் மரியாதைக்குறிய ஆயுதமாகவும் ஆண்களின் அலங்கார பொருளாகவுமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மலாய் இதிகாசங்களில் பல இடங்களிலும் கிரிஸ் கத்தியை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதன் அடிப்படையில் தமேங் சாரி எனப்படுவது கிரிஸ் கத்தியின் பெயர் அல்ல என்பதும் அது அக்கத்தியை ஹங் துவா எனும் வீரனிடம் வழங்கியவரின் பெயர் என்றும் குறிப்பிடபடுகிறது. இன்னும் பல பல புனைவுகள் இக்கதியை பற்றி கூறப்படுகிறது.

கலைகள் இரசனைக்குட்பட்டது. ஒரு கலையை உன்னதப்படுத்தும் வகையில் பல பல யுக்திகள் கையாளப்பட்டுள்ளன. கதைகள் இதை அதிகபட்சமாகவே மிகைபடுத்தியும் இருக்கின்றன.

பார்வைக்கு சில சுட்டிகள்:
http://www.arco-iris.com/George/indonesia.htm
http://en.wikipedia.org/wiki/Kris
http://old.blades.free.fr/keris/introduction/origin/history.htm

Monday, November 09, 2009

எழுத்தும் வாழ்க்கையும்

எழுதுவது ஒரு வகையான சுகம். எழுத்தின் போதை பலதரபட்டது. ஒவ்வொரு படைப்பிலும் அது வேறுபடுகிறது. மாற்றங்களை கொண்டது வாழ்க்கை. மாற்றங்களை விரும்பாதவன் புதியன முயற்சிக்காதவன் எனும் பொன்மொழி உண்டு. இப்பொன்மொழி எல்லாவகையான செயல்பாடுகளுக்கும் சாத்தியமாகுமா என நான் பல முறை சிந்தித்தது உண்டு. நிச்சயமாக இல்லை. இருப்பினும் மாறுபாடுகளற்ற வாழ்க்கை நமத்துப் போய்விடும் என்பதும் மறுக்க இயலாது. (சரி என்ன தான் சொல்லவரனு கேட்குறிங்களா... ஹி ஹி ஹி... எனக்கும் தெரியலிங்க...)

எழுத்தின் மீதான ஈர்ப்பு கதைகளில் தோன்றிய ஒன்று. இன்னமும் என் நினைவுகளில் வற்றாத கதைகள் உண்டு. சிறு வயதில் படித்த கதைகளை சேமித்து வைக்காமல் போனதன் இழப்புகளை இன்று உணர முடிகிறது. சில பத்திரிக்கை தொடர்களுக்காக பைத்தியமாய் காத்திருந்திருக்கிறேன். அவை இப்பொழுது புத்தகமாய் வந்திருக்குமா என அறியவில்லை.

1996 & 1997களில் வார பத்திரிக்கை ஒன்றில் மலரே குறிஞ்சி மலரே எனும் தொடர்கதை வெளி வந்துக் கொண்டிருந்தது. அச்சமயம் எனக்கு 12 வயது. தோட்டபுரத்தில் வாழும் இளைஞனின் வாழ்க்கையின் சுயசரிதத்தை பிரதிபலிக்கும் கதை. கதை நடக்கும் காலகட்டம் 1960 மற்றும் 1970 இருக்கலாம். இக்கதையின் நாயகி சுவீ லீன் எனும் சீன பெண். இக்கதாபாத்திரமே அக்கதை மீதான அலாதி காதலை ஏற்படுத்தியது என்பேன்.

எனது கதை வாசிப்பின் அதீத ஆவலை தூண்டியது இக்காலகட்டம் தான். அதன் பின் ஏனோ சில காலம் எனது வாசிப்புக்கு பலமான இடவெளி உண்டானது. மீண்டும் நான் தமிழ் வாசிப்பில் ஆழ்ந்தது எனது பல்கலைக்கழக படிப்பின் இறுதி ஆண்டில் தான். இதற்கு முழு முதற் காரணமும் என் நண்பர் முரளி. (கோவியாருக்கு நெருக்கம் ;-) )

அச்சமயம் தேன்கூடு திரட்டியை தினமும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருந்த தொடர் சண்டைகளும் பதிவுலக அரசியலும் அயற்சியை கொடுத்தது. நாளடைவில் ஜோதியில் கலக்கும் கதையாக தமிழ்மண சண்டைகளையும் அமைதியாக இரசித்துக் கொண்டிருந்தேன். (சிற்றிதழ் காலாச்சாரமாம்). இதைத் தான் தீவிர இலக்கியம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

திரட்டிகளில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் சமயம் சில பதிவுகள் 'அட' போட வைத்திருக்கின்றன. முக்கியமாக வகுப்பறை வாத்தியார் ஐயா, சேவியர், மோகந்தாஸ், லக்கிலுக்(இன்றய யுவகிருஷ்ணா) போன்றோரின் எழுத்துகளை நினைவுகூற முடிகிறது. நாமும் முயற்சிப்போம் எனும் எண்ணத்திற்கு இவர்களின் எழுத்துகளும் காரணம் என நிச்சயமாக சொல்லமுடியும்.

முதன் முதலில் எழுதும் போது திக்கித் திணறிய என் தமிழ் எழுத்துகளுக்கு. வாசிப்பின் அவசியம் புரிந்தது. எழுதுவது போதையெனில் வாசிப்பது ஒரு கலை. புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் என்றார் ஓர் அறிஞர். வாசிப்பு திகட்டாத ஒன்று. அதன் லயிப்பில் இருக்கும் சுகம் தவம் போன்றது.

கிருபாணந்த வாரியார் திருசெற்கோவை எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும் ஓர் செய்தி உண்டு. வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்பு அறியாமையை நீக்கும் என்பதே சரி என சொல்லி இருப்பார்.

வாழ்க்கையை வாசித்துக் கொண்டிருக்கும் சக மனிதர்களுள் ஒருவன். நான் ஒவ்வொரு கண மாற்றங்களையும் இரசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் தமிழ்மண வாசகனாக பதிவுகளை தேடி படித்து சிலாகித்துக் கொண்டிருந்தவன், இன்று உங்களோடு ஒருவனாக, நட்சத்திர பதிவனாக எழுத வந்திருக்கிறேன். இந்த மாற்றத்திற்குத் தமிழ்மணமும் காரணம். தமிழ்மண வாசகராகிய நீங்களும் ஒரு காரணம் தான்.

நெடுந்தூர பயணங்கள் முதல் அடியில் தான் தொடங்குகிறது என ஓர் சீனப் பழமொழி உண்டு. வாழ்க்கையின் பயணங்கள் இரசனை மிகுந்தது. எனது வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் ஒரு வார காலம் கொஞ்சம் நெருக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன். சியர்ஸ்...

Thursday, October 15, 2009

தீபாவளி யாருக்கு?

ஒவ்வொரு முறை தீபாவளி பண்டிகை வரும் போதும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை பல குடும்பங்களில் காண முடிகிறது. காலத்தால் அதில் மாற்றங்கள் பல கண்டு வருவது யாரும் மறுக்க முடியாதது. பால்ய வயதில் கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைக்கிறதா என சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்றே சொல்வேன்.

ஒரு மாதத்திற்கு முன்பே பறக்கவிடும் தீபாவளி அட்டைகள் இப்போது முடங்கி கிடக்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு குறுஞ்செய்திகள் தொலைபேசிகளின் வழி சடுதியில் வேண்டியவரை அடைந்துவிடுகிறது. இது சிக்கன வழி என்றாலும் ஒரு நல்லினக்க தொடர்பு தளர்ந்து போவதை அறிய முடிகிறது. இருப்பினும் அதில் ஆர்வம் துளியும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் வெறுப்புணர்ச்சியா, சோம்பேறித்தனமா இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கும் செயலா என்று தெரியவில்லை.

தீபாவளிக்கு காலையிலேயே எழுந்துவிடுவார்கள். எண்ணெய் குளியல், சாமிக்கு படையல், புது துணி மணி என்பது போக தாய்மார்கள் அடுப்படியில் அளவுக்கு அதிகமாகவே கண்ணைக் கசக்கிக் கொண்டு இருப்பார்கள். இந்த அவசர வேலைகளில் சிலருக்கு சினம் உண்டாவதையும் காண முடியும். ஏன் இப்படி?

நன்னாள் என்றால் மகிழ்சியாக இருப்பது இல்லாமல் எதற்கான நம்மை நாமே வருத்திக் கொள்ள வேண்டும் எனும் கேள்வி எழுகிறது.

வழக்கத்தை விட அளவுக்கு அதிகமான சாப்பாடு. நம் வீட்டில் தான் அப்படி என்றால் போகும் இடங்களிலும் அதே நிலை. உணவை பார்த்ததும் சலிப்பு தட்டும் நிலை. கோழியும் ஆட்டிறைச்சியும் மிதக்கும் குழம்புகள்.

தீபாவளியை குதுகலமாக கொண்டாட நினைக்கும் பலரில் அந்நாளை சட்டை செய்யாமல் இருப்பவரும் இருக்கவே செய்கிறார்கள். காரணம் அறியாமல் சிறு பிராயத்தில் தீபத் திருநாளை எதிர்பார்த்து காத்திருந்து கொண்டாடும் மகிழ்ச்சி பலரது வாழ்வில் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு தான் தீபாவளி என்பது பலரின் கருத்தாக நாம் செவி மடுக்கிறோம்.

தீபாவளியின் இன்பத் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில குடும்பங்களில் தீபாவளி கொண்டாடப்படாமல் இருக்கலாம், வேலை பளு, வயது வரம்பு அல்லது சிலரது சிந்தனையில் தீபாவளி வந்தால் என்ன வராவிட்டால் என்ன போன்ற பல எண்ணங்களின் தாக்கமாகவும் இருக்கலாம்.

முன்பு என் ஆசிரியர் கூறி இருக்கிறார் தீபாவளி தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பெருநாள் என்று. இக்கூற்று வாதிக்கப்பட்டால் அதற்கு முடிவு காண்பதற்குள் பல தீபாவளிகள் கடந்துவிடும். எது எப்படியாகினும் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும் நிகழ்வுகள் வரம்பு மீறாமல் இருந்தால் அதில் தவறில்லை என்றே உணர்கிறேன்.

சிலர் தீபாவளிக்கு எந்த ஏற்பாடுகளும் செய்திருக்கமாட்டார்கள். அந்நாளில் இவர்களின் பொழுது தொலைக்காட்ச்சி பெட்டியை இரசித்தபடியே ஓடிவிடும். சில வீட்டினர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவிடுவார்கள். திட்டமிட்டபடி தீபாவளியை கழிக்க நினைக்கும் இவர்கள் ஒருவிதம்.

தீபாவளி போன்ற பொது விடுமுறை நாட்களில் வேலை செய்வதால் மூன்று மடங்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதால் அந்நாளில் வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் எண்ணமும் பலருக்கு உண்டு என்றே சொல்லலாம்.

சமத்துவம் பேசிக் கொள்ளும் இக்காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி தான் பெருநாட்களை கொண்டாடுகிறார்களா என்றால் அதிலும் சில கருத்து முரண்பாடுகளே நிலவுகிறது. ஆண்கள் பெருநாட்களை கொண்டாடுவதில் அதிக முனைப்பு காட்டுவதில்லை என சொன்னால் மிகை இல்லை. பெண்கள் அதில் அதிக ஆர்வம் கொள்வதில் காரணம் என்னவாக இருக்கும்? நமது குமுகாயத்தில் ஒட்டிக்கிடக்கும் சிந்தனைகளா? இல்லை பெருநாள்களை சிறப்பாக கொண்டாட வேண்டியது நம் கடமை எனும் அவர்களது எண்ணமா?

தீபாவளி என்றதும் இந்த ஊடகங்களின் தொல்லையும் சொல்லியாகதான் வேண்டும் என்று நினைக்கிறேன். விளம்பரம் செய்யும் அவர்களா அளவாக செலவிடுங்கள் என்றும் விளம்பரம் போடுகிறார்கள். கையில் மது கிண்ணத்தை வைத்துக் கொண்டு குடி பழக்கத்தை எதிர்தால் அது சரியாகுமா என்பதை இவர்கள் நினைத்துப் பார்க்காமல் தான் இருக்கிறார்களா என்றே கேட்கத் தொன்றுகிறது.

சூழ்நிலையை அறிந்து மிகை இல்லாமல் கொண்டாடப்பட்டால் அது தவறில்லை. சிந்தித்து செயல்படுவோம். தீபத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.