Tuesday, April 28, 2009

பொருளாதார மந்தம் - பாதிப்புகள் என்ன?

உலகப் பொருளாதார மந்தத்தின் தாக்கத்தைப் பற்றிய செய்திகளை நாளிகைகளில் தினமும் காண முடிகிறது. நாளொரு செய்தியாக அவல் கிடைத்த வாயை மென்று வருகிறது பத்திரிக்கை உலகம். சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் சொல்லி இருப்பார். பொய்யை எதுக்கு காசு கொடுத்து படிக்கனும் என்று. இன்றய செய்தி நேற்றய செய்தியோடு முரண்படுவதை அவர்கள் உணர்ந்து தான் எழுதுகிறார்களா என தெரியவில்லை.

சரி அந்தக் கூத்து தான் அப்படி என்றால். அதை விட பெருங்கூத்தாக இருக்கிறது இந்தப் பதிவுலக செய்திகள். கழுதைனு ஒரு சி.ஐ.டி சிங்காரம் அவரைப் பார்த்தா சிரிப்பு வரும்னு பதிவுல சொல்லி இருக்காரு. இந்த மாதம் 2-ஆம் தேதி துப்பறியும் சிங்கம் மனித இரத்தம் குடிக்கும் மலேசியாஎனும் தலைப்பில் ஒரு செய்தி எழுதி வைத்திருக்கிறார்.

//மலேசியர்கள் யாரும் 5 மணி நேரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய மாட்டார்கள். மலேசியா கடும் நஷ்டத்தைச் ச‌ந்தித்தது. நிறைய கடைகள் மூடப்பட்டன. பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்தது. பணவீக்கத்தில் நாடு மூழ்கிய போது மீண்டும் அன்னியத்தொழிலாளர்களை நோக்கி அழைப்புவிடுத்தது மலேசியா.//

இவ்வளோ நுணுக்கமாக எப்படி ஆராய்ச்சி செய்தார் என தெரியவில்லை. 5 மணி நேரம் மட்டும் வேலை கொடுக்கும் கம்பெனி எதுன்னு அண்ணன் கொஞ்சம் டிடெய்ல் கொடுத்தா நானும் வேலைக்கு விண்ணப்பம் போட வசதியாக இருக்கும். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேனு சொன்னக் கதையா இல்ல இருக்கு.
====================================

பொருளாதார மந்தத்தினால் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் யாவை?

குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இது தவிர்க்க முடியாத நிலையாகவே இருக்கிறது. வருமானம் இழந்தவன் தனது தன்மானத்தையும் இழந்தவாக மாறிவிடுகிறான். மின்சாரம் மற்றும் டொலிக்கோம் செம்புகள், கல்வாய் மூடிவைத்த இரும்புகள் என உலோக பொருட்களை சீண்டுவதைக் குறைத்துக் கொண்டார்கள். காரணம் உலோக பொருட்களின் விலை படுமோசமாக சரிந்துள்ளது. மாறாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதும், வழிபறியும் ஆங்காங்கு வாடிக்கையாகிவிட்டது.

இரு நாட்களுக்கு முன் எனது உறவினரின் இரும்பு கம்பெனியின் 30 திருடர்கள் நுழைந்துவிட்டார்கள். எல்லோரும் தமிழர்கள் தாம். சனிக்கிழமை என்பதால் கம்பெனியில் எல்லோரும் சீக்கிரம் கிளம்பிவிட்டார்கள். 3 தமிழ் நாட்டு தமிழர்கள் அங்கு தங்கி வேலை செய்கிறார்கள் மற்றும் எனது மாமா இரவில் பாதுகாப்புக்காக அங்கு தங்கி இருப்பார். வந்தவர்கள் நான்கு பேரையும் கட்டி போட்டு அடித்தது மட்டுமில்லை வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்திவிட்டார்கள். லட்ச ரிங்கிட் பெருமானமுள்ள பொருட்கள் மற்றும் இரு லாரிகளையும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதை எல்லாம் எழுதினால் தமிழன் மட்டும் தான் திருடுகிறானா என சில தமிழ் நலம் விரும்பிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் திருடர்கள் நலம் வாழட்டும் என செல்லிக் கொள்கிறேன்.
கடன் வசதிகள் குறைவடையும்

வங்கிகள் கடன் வசதி கொடுப்பதை குறைப்பது மட்டுமில்லாமல் கடன் விண்ணப்பங்களை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேர்வு செய்ய முற்படுவார்கள். இதனால் வீடு மற்றும் கார் வாங்கும் கனவுகளை கொஞ்ச காலம் தள்ளி வைப்பதே சிறந்தது. இருப்பினும் நாங்கள் உங்களுக்கு கடன் கொடுக்கிறோம் எனும் சில சேல்ஸ் கனவான்களின் தொலைபேசி தொல்லை ஓயமாட்டேன் என்கிறது.

வேலையை விட்டு விட பயம்

வேலை வாய்ப்புகள் குறைந்துள்ள காரணத்தால் வேறு வேலைகளுக்கு மாற்றம் செய்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பாதுகாப்பு பெரிதும் பாதிப்படையச் செய்யும் என்பதால் சீட்டில் பசைப் போட்டு அமர்ந்து கொள்ள விருப்பம் காட்டுகிறார்கள்.

முதலீடு செய்வதில் பிரச்சனை

வீடு மற்றும் நில விலை குறைந்துள்ளது. ஆகையால் இவ்வேளையில் முதலீடு செய்வது கொள்ளை லாபத்தை ஈட்டி கொடுக்கும் என்பதாக நாம் கருதக் கூடும். பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் சுலபமாக முதலீடு செய்துவிட்டு காத்திருக்கலாம். சம்பலத்துக்கு வேலை செய்யும் என்னைப் போன்ற பரம ஏழைகளின் நிலை நாளைக்கு வேலை நிறுத்தம் செய்யப்பட்டால் என்னாவது?

செலவு செய்ய பயம்


சொவ்வுலின் சொக்கரில் வரும் கதாநாயகன் கிழிந்து போன காலணியை போட்டுக் கொண்டு திரிவது போல் நானும் கிழிந்து போன என் காலணியை பல காலமாக மாற்றாமல் வைத்திருக்கிறேன். புதிய காலணி வாங்க பணத்தைச் செலவு செய்ய மரண பயமாக இருக்கிறது. ஓவர் டைம், பயண செலவு, சாப்பாட்டு காசு என வெட்டி தீர்த்தது போக மூன்று நாள் நான்கு நாள் வேலை கொடுத்து பேசிக் சம்பளத்திலும் கை வைத்தால் வேலையாட்களின் நிலைபாடுகள் என்ன என்பதை நான் சொல்லி விளக்க வேண்டியதில்லை. இது எல்லா இடங்களிலும் சகஜமாகவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களை இழக்க நேரிடும்

தூரத்தில் இருந்து பட்டணம் வந்து பணி புரியும் நண்பர்கள் சிலர் பணக் கட்டுபடியாகாமல் மீண்டும் அவர்கள் இடத்துக்கு கிளம்பிவிட மூட்டைக் கட்டிவிடுகிறார்கள். வேலை நேரத்தில் மாற்றம். வெளியே போனால் செலவு பயம் எனும் கணக்கில் பலரும் வீட்டில் முடங்கிக் கிடக்க எத்தனிக்கிறார்கள். பழைய புன்னகையும், மன மகிழ்ச்சியும் நோய்பட்டுக் கிடப்பதை உணர முடிகிறது.


மன அழுத்தம் மற்றும் மன நோய் பிரச்சனைகள்


சமீபத்திய செய்தி ஒன்றில் கடன் வாங்கிய சீனக் குடும்பம் ஒன்று மீண்டும் பணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டதை பார்த்தோம். பொருளாதார நெருக்கடியான காலத்தில் சிலர் தவிர்க்க முடியாமல் கடன் வாங்கி வட்டி முதலைகளிடம் இப்படியும் மாட்டிக் கொள்கிறார்கள். கடந்த 97/98-ஆம் ஆண்டைக் காட்டினும் இன்றய நிலையில் தற்கொலைச் செய்திகள் குறைந்தே இருக்கின்றன. தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதில்லை என்பதை உணர்தல் நன்று.

புகைப்பிடிப்பவர்கள் அதிகரிக்கிறார்கள்


பொருளாதார நெருக்கடியில் இலாபம் ஈட்டி கொடுக்கும் தொழிலாக அமைந்திருக்கிறது வெண்சுருட்டு (சிகரட்டுக்கு தமிழ் பெயர், தமிழ் புத்தகத்தில் படித்தது:-) ) தயாரிப்பு தொழில். தோழி ஒருவர் சொன்னார். சிகரட்டு வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறப்பதால் அவர் வேலை செய்யும் கம்பெனியில் ஓவர் டைம் முதல் கொண்டு புதிய இயந்திரங்களும் வாங்கி போட்டு வைத்திருக்கிறார்களாம். மலேசிய வியாபாரத்துக்கு மட்டுமில்லை ஆசியா நாடுகளில் பலவற்றிலும் இருந்தும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளனவாம்.

நிலமை சீரடைய இலச்சி மலை ஆத்தாளை வேண்டிக் கொள்கிறேன். பொருளாதாரம் சீரடையும் பொருட்டு சாணியடி சித்தர் கடும் தவத்தில் இருப்பதால் கொஞ்ச காலத்துக்கு கொசுறு எழுதுவதை தவிர்த்துவிட்டேன். :-)

Friday, April 24, 2009

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!

சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன். சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.

'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.

சொந்த பிரச்சனையாக இருக்கலாம். சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்க கொடுக்க முயற்சிக்கிறேன்.

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.

எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆசியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. எதென்ஸ் மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. டெல்பியில் இருந்த 6000 குடும்பங்களில் 1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள். அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள். உடலை விற்பனை செய்து, கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன தேசம் கம்பூசியஸ் மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள். தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.

ஜேக் தீ ரீப்பர் பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? ஜேக் விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் எட்வட் கெய்ன் என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு தீ சைக்கோ மற்றும் சைலன்ஸ் ஆப் தீ லேம்ப் எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

கேய்ன் இறந்த பெண்களை தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளை கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்ட போது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.


1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு கோசோவோவில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.


பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.

நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோமாக.


தகவல்கள்:
TAMADUN DUNIA 1998 (உலக நாகரீகம்)

SEJARAH ASIA 2001 (ஆசிய சரித்திரம்)

TAMADUN ISLAM 1998 (இஸ்லாமிய நாகரீகம்)

http://en.wikipedia.org/wiki/Jack_the_Ripper

http://crime.about.com/od/murder/p/gein.htm/

Monday, April 20, 2009

ஒரு பயணமும் சில குறிப்புகளும்...

மலேசியாவில் மிகச் சிறிய மாநிலம் பெர்லிஸ் ஆகும். சுமார் 810 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஏனைய மாநிலங்களைக் காட்டினும் வளர்ச்சிகள் சற்றே குறைந்து காணப்படும் மாநிலம் இது.

மலேசியாவின் முதல் நிலை பணக்காரார் திரு.ரோபட் கோக். அவர் ஒரு சீனி வியாபாரி. அவருடைய கரும்புத் தோட்டங்கள் பெர்லிஸ் மாநிலத்தில் நிறைந்து காணப்படும். ரோபட் மலேசியாவில் மட்டுமன்றி தென் கிழக்காசியாவிலேயே முதல் நிலை பணக்கார பட்டியலில் இருக்கிறார்.பெர்லிஸில் முக்கிய பட்டணங்களாக காணப்படுவது சிம்பாங் அம்பாட்(simpang empat), அராவ்(Arau), ஜெஜாவி(Jejawi), சூப்பிங்(Chuping) போன்ற இடங்களாகும். கரும்புத் தோட்டங்கள் நிறைந்துக் காணப்படுவதால் கரும்பு விளைந்து செழிப்பாக இருக்கும் காலங்களில் வனப்பு மிகுந்து காணப்பகும். சிறிய அளவிளான சாலைகளே இங்கு அதிகம். பயணிக்கும் சமயம் சாலையோரத்தில் இருக்கும் கரும்பு விளைச்சல்கள் பசுமையாகவும் கண்களுக்கு இதமாகவும் இருக்கும்.

கெடா மாநிலத்தின் புகிட் காயு ஹிதாம்(Bukit Kayu Hitam) எனும் பகுதியில் இருந்து சுமார் 30 நிமிட பயணத்தில் குவாலா பெர்லிஸ் (Kuala Perlis) எனும் இடத்தை அடைந்து விடலாம். குவாலா பெர்லிஸ் ஒரு துறைமுகம் ஆகும். இங்கிருந்து விசைபடகின் வழி பயணித்தால் 40-45 நிமிடங்களில் லங்காவி தீவை அடைந்துவிடலாம்.லங்காவி ஜாலியாக பொழுதைக் கழிக்கக் கூடிய இடம். பொது விடுமுறை நாட்களில் இங்கு செல்வது சொந்த செலவில் சூன்யம் வைத்தக் கதையாகிவிடக் கூடும். பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே சொல்வார்கள். ஏனைய ஓய்வு நாட்களில் சென்றால் மனம் விரும்பும் அமைதியை பெருவது தின்னம்.

லங்காவி தீவில் சுங்க வரி விலக்கு கிடைக்கும். அதனால் விஸ்கி, பிராண்டி, பியர், சிகரட், சாக்லெட் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். ஒரு பாட்டில் விஸ்கியை நீங்கள் தீவை விட்டு வெளிவரும் போது கொண்டு வர அனுமதிப்பார்கள். அதிகபட்டவைக்கு வரி விதிக்கப்படும். லங்காவி பற்றிய மேலாதிக்க தகவலுக்கு மை பிரண்ட் எழுதிய இப்பதிவை காண்க.
சரி மீண்டும் பெர்லிஸ் மாநிலத்தை பற்றிய பார்வைக்கு வருவோம். பெர்லிஸில் சில உணவு வகைகளும், துணி மற்றும் பொம்மைகளும் மலிவான விலையில் கிடைக்கும். எல்லை மாநிலம் என்பதால் காவல் கெடுபிடிகள் அதிகம். ஆண்கள் மட்டும் பயணித்தார்கள் என்றால் ’சில தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு’ காவலாலிகளிடம் பதில் சொல்லி தான் வர வேண்டி இருக்கும்.

தாய்லாந்து எல்லை பகுதிகளில் பாலியல் தொழில் அதிகம் இருப்பதுவே இதற்கு காரணம். அது போக சில வேளைகளில் போதை மருந்து உட்கொண்டோமா என்பதற்காக சிறுநீர் சோதனைகளையும் மேற்கொள்வார்கள். குடும்ப சகிதம் விசிட் அடித்து செல்வோருக்கு இப்படிபட்ட இக்கட்டான நிலை விதிவிலக்காக அமையும்.

ஆரம்பத்தில் சொன்ன குவாலா பெர்லிஸ்/ விசைபடகு ஏறும் இடத்தில் இடத்தில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் பெர்லிஸ் கைவினை பொருட்கள் மற்றும் கலாச்சார மைய கட்டிடத்தை அடையலாம். கைவினை பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆள் பார்த்து விலை சொல்கிறார்கள் என்பதை உணர முடியும். பேரம் பேசி வாங்க முடிகிறது.அடுத்தபடியாக இருப்பது பாம்பு தோட்டம். கங்கார் எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வடக்கே போனால் இதைக் காண முடியும். பாம்பு, முதலை, உடும்பு, பெரிய பல்லிகள் எனக் காண முடியும்.கோத்தா டாயாங் தொல்பொருட்காட்சி சாலை இங்கிருக்கிறது. 2500 முதல் 2600 ஆண்டுகளுக்கு முந்தய பொருட்கள் இவை என சில தகவல்களை எழுதி வைத்திருப்பார்கள். சோழர்களின் கடார ஆட்சியின் சமயம் பெர்லிஸ் போன்ற பகுதிகள் கடாரம் என்றே அறியப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக்கும் முந்திய இந்திய ஆட்சியில் இருந்த பொருட்கள் என சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விவரித்தால் பெரும்பதிவாகிவிடும்.

மேலும் இருப்பது மெலாவாத்தி நீர் நிலை பகுதி. மிக ரம்யமான இடமாகும். இங்கு படகு சவாரி போக முடியும. நெடு தூர நடை பயணம் செய்யவும் வசதி படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அராவ், கங்கார் போன்ற இடங்களிலும் சற்றே சுற்றிவிட்டு வர முடியும். அராவ் நகரில் அரச மாளிகையும், பிரதான மசூதியும் அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் மன்னர்கள் ’சுல்தான்’ என அறியப்படுகிறார்கள். பெர்லிஸ் மன்னர் ’ராஜா’ என அழைக்கப்படுகிறார்.சின்ன மாநிலம் என்பதால் ஒவ்வொரு இடத்திற்கும் தூரங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் சிறிய அளவிலான சாலை அமைப்புகள் சில இடங்களில் படுத்தி எடுக்கிறது. தலைகவசம் அணியாத கணவான்கள் அங்கிட்டும் இங்கிட்டும் விருட்டென புகுந்துச் செல்கிறார்கள். நிதானித்தே வகனத்தைச் செலுத்த வேண்டும்.

நவ நாகாரிக வளர்ச்சிகள் அதிகம் புகுத்தப்படாததால் பெர்லிஸ் பசுமை பொலிவுடன் இருக்கிறது. சாலையில் அதிகமான வாகனங்கள் இருக்காது. அமைதியான பயணத்தை திருப்தியாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும்.
(பி.கு: நண்பர்களோடு இரு நாள் பயணம் மேற்கொண்டதால் இரவு வேளையில் கோழி வாட்டல் அதாங்க B.B.Q பார்ட்டி எல்லாம் லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடியலுடன் மங்களகரமாக நடந்தேறியது.)

Thursday, April 16, 2009

என்னைக் குழம்பச் செய்த உயிரோசையின் கட்டுரை!


நாமெழுதும் விடயத்தை நான்கு பேர் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறோம். திறமையைக் காட்டுகிறேன் பேர்வழி என்று எதுவுமே புரியாமல் ஒரு ஜந்துவைப் பிடித்து (கவனிக்க, எழுதி எனக் குறிப்பிடவில்லை) போட்டு வைப்பது படிப்பவர்களைத்தான் மன உளைச்சலுக்குள்ளாக்கிறது.

எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?

சமீபத்தில் இக்கட்டுரையைப் படித்தேன். ஒரு முறை இல்லை. இரண்டு மூன்று என்று
மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒரு சில இடங்களில் நிறுத்தி நிதானித்துதான் வாசித்தேன். எதனால் அந்நிலை? சரி மனிதன் ஏதோ வாசிப்பு சம்பந்தமாக எழுதி இருக்கிறாரே, நல்ல விசயமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கைதானே? ஒவ்வொரு வாசகனுக்கும் இந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும் தானே. ஆனால் அக்கட்டுரையை வரிக்கு வரி மீள் வாசிப்பு செய்தும் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

//எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில்தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது.//

இந்த வாக்கியத்தைப் பாருங்கள். குறைவாக, மெலிதான இவ்விரு சொற்களுக்களையும் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தி இருக்கிறார் எனும் குழப்ப நிலை ஏற்படுகிறது. குறைத்து எழுத வேண்டும் என்கிறாரா? எதைக் குறைத்து எழுத வேண்டும். வாக்கியத்தையா? சொற்களையா? அல்லது இரண்டு கட்டுரைகளைக் குறைத்து ஒரே கட்டுரையாக எழுத வேண்டுமா? சத்தியமாக புரியவில்லை.

இன்னும் பல வாக்கியங்களை இப்படி உதாரணப்படுத்த முடியும். எதனால் இப்படி எழுதுகிறார்கள்? மற்றவர்களுக்கு புரியக் கூடாது என்பதற்காகவா? இல்லை இதுவும் ஒரு வகை பின்னவீனத்துவ எழுத்தா? சில எழுத்தாளர்கள் உனக்குப் பிடிக்காவிட்டால் என்னைப் படிக்காதே என சொல்வது நாம் அறிந்ததே. மேலும் சிலரைக் கண்டிருக்கிறேன். நான் தமிழில் தானே எழுதி இருக்கேன். உனக்கு இது கூடவா புரியவில்லை. நீ தமிழ் துரோகி என்பார்கள்.

வார்த்தைகளை மடக்கிப் போட்டுத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக எழுதுவதில் யாருக்கு என்ன பயன்? எழுதியவர் மனத் திருப்தி அடைந்ததாய் நினைக்கலாம். எதற்காக எழுதினார்? வாசகன் படிக்க வேண்டும் என்பதற்காக தானே? அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி வாசகனுக்கு புரியாமல் போகுமானால் அவர் எழுதிய வார்த்தைகள் விரயமானது தானே? இதில் அவருக்கு என்ன லாபம்.

நீண்ட நெடு வாக்கியங்கள் எழுதுவதால் படிப்பவர்கள் ஆஹா என்னமா எழுதி இருக்கிறான் என மெச்சிவிடப் போவதில்லை”. சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு முழுமையாகப் பிடிபட்டதா என்பது தான் முக்கியம்.

நண்பரே, கொஞ்சம் புரியும்படியாக எளிய நடையில் தான் எழுதுங்களேன். நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன். இந்தப் பதிவை உங்களுக்கும் புரியும் படியாகவே எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். நான் என்ன எழுதுறதுனு எனக்குத் தெரியும், நீ உன் வேலையப் பார்த்துகிட்டு போடா”, என நீங்கள் சொல்வதாக இருந்தாலும் மனவ்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

============================================================
முன்பு செல்வேந்திரன் ஒரு பதிவிட்டிருந்தார். பத்திரிக்கையாளர்களுக்கு ஆதித்தனாரின் குறிப்புகளை பற்றி எழுதி இருந்தார். பாத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல எழுதுவோர் அனைவருக்கும் அது பயனானதாய் அமையும் என்றே கருதுகிறேன்.

1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.

2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.

3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.

4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.

5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.

6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.

7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.

8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.

10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.

நன்றி: செல்வேந்திரன்

மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள் - செல்வேந்திரனின் மற்றுமோர் பதிவு.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை


கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை

மலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன.

அந்தவகையில், இதுவரை இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்பில், தற்போது மூன்றாவது நிகழ்ச்சியாக 'தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை' நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் - பெட்டாலிங் செயா கிளை, உத்தமம் மலேசியா நிறுவனம், தமிழா மென்பொருள் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டிலும் நாட்டின் முன்னணி இணையத் தமிழ்ச்செய்தி ஊடகம் 'மலேசியா இன்று' ஆதரவுடனும் இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

நாள்:-18 - 04 - 2009 (சனிக்கிழமை)
நேரம்:-1.30 பிற்பகல் 5.30 மாலை
இடம்:-கணினி அறிவியல் & தகவல் தொழிநுட்ப புலம் மலாயாப் பல்கலைக்கழகம் (Faculty of Computer Science & Information Technology, University Malaya)

கட்டணம்:- RM35.00 மட்டும் (சிற்றுண்டி, கோப்பு, தமிழா மென்பொருள் ஆகியன வழங்கப்படும்)

மேல்விளக்கம் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய அன்பர்கள்:-

குமரன்:- 0133615575, விக்கினேசு:- 0125578257, பவனேசு:- 0149314067

மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் - பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,
ஏற்பாட்டுக் குழுவினர்.

Wednesday, April 15, 2009

அன்பு நளினா!... நான் நலம்?


அன்பு நளினாவுக்கு,

மேற்காணும் அன்பு எனும் சொல்லை எழுதுவதற்குள் கூசி குறுகிப் போனேன். இதில் நலம் விசாரித்தல் தான் ஒரு கேடா. உன் கடிதம் கண்டேன். ‘காதல் போயின் சாதல்’ என்றான் பாரதி. செத்துப் போவது சில நொடி துன்பம். உன் காதலன்றி வாழ்வது ஒவ்வொரு நாளும் துன்பம். உன் மீது கொண்ட பித்தத்துக்கு சாகும் வரை அனுபவிப்பேன். நீ வருந்தாதே! வருத்தங்கள் வறுத்தெடுக்க ஆள் இல்லாமல் பூமியில் என்னை பிறக்கச் செய்தார்கள் போலும். எல்லா நேரமும் கவலைக் கொண்டு உயிர் வாழ பிறந்தவன் நான்.


எந்நாட்டாரும் போற்றும் தென்னாட்டு முருகன் நம் தமிழ்க் கடவுள் என்பாய். நான் எழுதும் கவிதையெல்லாம் அவன் அருளிய தமிழால் என்பாய். எத்தனை முறை மனுதுள் வெகுண்டிருப்பேன். அப்போதெல்லாம் கூட முகம் முழுக்க பல்லைக் காட்டியபடி தான் நிற்பேன். இப்போது நீ போய்விட்டாலும் தமிழோடு ஒட்டி வந்த இன்பம், என்னை இன்னும் உயிரோடுதான் வைத்திருக்கிறது. ஆதலால் சாகாமல் செத்துக் கொண்டு இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.

உன் கடிதம் என்னைப் பார்த்துச் சிரித்தது. உன் செந்தமிழ் நடை என் சிந்தையைத் தொட்டது. எல்லாம் நமது பசுமை மாறாத இளமைக்கால எண்ணங்கள். அந்தக் கடிதத்தை மார்போடு பலமுறை ஒற்றிக் கொண்டேன். அது நீயாகவும், என்னை இருகரத்தால் இறுக அணைத்து நோகாமல் முத்தம் நூறு கொடுப்பது போன்றிருந்தது.

என் நினைவெல்லாம் நீ தான். சுடும் நெருப்பெல்லாம் நான் தான், பனிநீராய்க் குளிர்வேனா! இல்லை, நிச்சயம் குளிரமாட்டேன். குளிர்நிலவும் பிரிந்திருக்கும் காதலர்க்கு கொடுமை செய்யும் கொள்ளியாக சுடுமல்லவா!
இத்தனை வேதனைகளுக்கிடையே வெந்து புழுங்கும் என்னைப் பார்த்து நலமா என்று கேட்கிறாயே! விளையாட்டாக கேட்டு என் வேதனையை இரசிக்க முயற்சிக்கிறாயா? உன் மனமென்ன கல்லா! உணர்ச்சியில்லாப் பெரும்பாறையா?

நெந்துப் போனவன் நலத்தை உன் செவிகளுக்கு நோகாமல் எப்படிச் சொல்வது? கேட்டுவிட்டாய். கேளாதவனாக மனதைஇறுக்கி முடிந்து கொண்டு இருக்க முடியவில்லை. நான் சொல்லியும் கேளாத என் விரல்கள் பேனாவை எடுத்து சொற்களைப் பொறுக்கிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. திருந்தாதவனுக்கு விருந்தாகப் போன நீ, என் வாழ்க்கை நலத்தை தெரிந்துக் கொள்ள எண்ணியதே விந்தைதான். ஒப்புக்கு கூட நலமென்று எப்படி சொல்வது.


என் வீட்டு நன்றியுள்ள நாய் நலம். நாளொரு முட்டையிடும் கோழி நலம். என்னை ஏய்த்து திருடித் தின்னும் எலி நலம். எலி திருடி மிச்சம் விட்டதை சுமந்து செல்லும் எறும்பும் நலம். ஆடையின்றி வாழ்ந்தாலும் ஆடையுள்ள பால்தரும் பசுவும் நலம். பக்கத்து வீட்டுச் சீனன் மிக்க நலம். எதிர்வீட்டு மலாயன் நலமோ நலம். நான் நலமென்று எப்படிச் செல்வது.

என்னைப் பற்றி இனி எண்ணாதே! எழுதாதே! எல்லாம் பொய்யாய் போகட்டும். உன்னுள் கிடக்கும் எண்ணச் சிதறல்களை தோண்டி எடுத்து ஒரு பாழும் கினற்றில் போட்டு மூடிவிடு. நீ யாரோ! நான் யாரோ! என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும். நான் உனக்கு எழுதும் கடைசிக் கடிதம் இது தான். என் வாழ்வை பாலையாக்கிய படிதாண்டா பத்தினியே, இனி மேலாவது என்னை உயிரோடு வாழவிடு.


இப்படிக்கு,

உனக்கு இப்போது எவனோ ஒருவனான நான்.


இந்தக் கடிதத்தை படித்ததும் ஸ்தம்பித்து போனாள் வசந்தா. அவளை அறியாமல் கண்ணீர் அவள் கண்களில் தாரை தாரையாக வழிந்தது. என்ன செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை.திடீரென அவள் கணவன் அங்கே வந்தார்.

“ஏன் அழுகிற?” என்று கேட்டுக் கொண்டே கடிதத்தை வாங்கினார். வசந்தா ஒன்றும் சமாளிக்க முடியாமல் கடிதத்தைக் கொடுத்தாள்.

வசந்தா கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சமயலறை நோக்கி நடந்தாள். அவள கணவன் பாஸ்கர் அக்கடிதத்தை படித்து முடித்ததும் கோபம் மேலிட கத்தினார்.

“ஏய் தேறிக்க.... யாருடி இத எழுதுனது” என்று ஓர் அதட்டு போட்டார்.

“வேற யாரு எல்லாம் உங்க மகன் தான்! நம்ம புள்ளயைய எவளோ ஒருத்தி நல்லா மயக்கி ஏய்ச்சிட்டிருக்கா... அதான் பிள்ளை அவ்வளோ வருத்தமா எழுதி இருக்கான்”. மீண்டும் அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் திரண்டது.

அந்த சமயத்தில் அறையிலிருந்த அக்கடிதத்தைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்த்தான் பாரி. பாஸ்கரனுக்கு கோபம் கனலாய் தெறித்தது. பாரி பம்மி நகர்ந்தான். விடுவாரா அவர்.

“டேய் பாரி, யாருடா எழுதினது இத?” என்று கடிதத்தை தூக்கி முன்னெறிந்தார்.

“நான் தான்ப்பா”.

“ஏன் டா, அந்த பொண்ணு யாருடா? உண்மைய சொல்லு... இல்ல தோலை உறிச்சிடுவேன்”

பாரி பயந்து போனான். “நம்ம பக்கத்து தாமானில் இருக்கும் நந்தினி தாம்ப்பா”.

“ஏன்டா. அந்த பொண்ணுக்கு இன்னும் கல்லாயமே ஆகலை... நீ என்னென்னமோ எழுதி வச்சிருக்கியே. பைத்தியக்காரதனமா இல்ல இருக்கு” என்றார்.

பாரி சிரித்துவிட்டு சொன்னான். “அது உண்மையான காதல் கடிதம் இல்லைப்பா, நான் எழுதின நாடகத்துல வர காதல் கடிதம் அது. நந்தினி அந்த நாடகத்துல நளினான்ற பேருல நடிக்கிறா. அதான் நேத்து எழுதி வைச்சேன். அந்த வசனத்தை இப்படி கொடுங்க”. வாங்கிக் கொண்டு வெளியேறினான் பாரி.

“எனக்கு அப்பவே தெரியும்! என் புள்ள அப்படி எல்லாம் செய்ய மாட்டான்னு” எனக் கூறிக் கொண்டே வெளி வந்தாள் பாரியின் தாய் வசந்தா.

Monday, April 13, 2009

இலங்கையைச் சாம்பலாக்கு

தமிழினம் அழுகிறது அனுமனே
உன்
வால் சுமந்த தீயினாலல்ல
இலங்கையை எரியூட்டாததால்

நிழல் கூட
தலைதெரிக்க ஓடுகிறது
அகதியாக அல்ல
மரணத்தில் விடுதலை தேடி


முக்கால அழுகுரல் இன்னும்
முழுதாய் ஓயவில்லை
சமுத்திர திட்டமாம்
பாலத்தில் பிரச்சனையாம்
சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப
?

எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு


கருத்துப்படம்: நன்றி வினவு.காம்

Friday, April 03, 2009

ஆட்டத்தை ஆரம்பிக்கும் அரசியல் மாற்றம்!!

(துன்கு அப்துல் ரகுமான் -ஆட்சி 1957-1970)
மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது. விருப்பம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் மாற்றங்களை மறுக்க முடியாது என்பது தான் உண்மை. இயற்கை வழிப்பாடு இறை நம்பிக்கையெனும் பெயரில் மாற்றம் கண்டது. குமுகாய வாழ்க்கை அரசியலாக மாற்றம் கண்டது. பண்ட மாற்று பண மாற்றமாக அமைந்தது.

1976-ஆம் ஆண்டு மலேசியாவின் இரண்டாம் பிரதமரான துன் அப்துல் ரசாக் இரத்தப் புற்று நோயினால் பாதிப்படைந்து இறந்தார். அக்காலகட்டத்தில் அவரின் மூத்த மகனான ட்த்தோ ஸ்ரீ நஜிப் அவர்களை மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நஜிப் 23.07.1953-ஆம் ஆண்டு பிறந்தவர்.

தந்தையின் மரணத்தின் சமயம் அவருக்கு 23-வயது தான். தந்தையின் இறப்பிற்கு பின் அவரின் தேர்தல் பகுதியான பகாங் மாநிலத்தின் பெக்கானில் நஜிப் போட்டியிட எத்தனித்தார். அதற்கான வாய்ப்பும் இலகுவாக அமைந்தது.

இடைத் தேர்தலில் நஜிப் வெற்றி பெற்றார். அது அனுதாபத்தின் பேரில் கண்ட வெற்றி என்பதாக மக்கள் பேசியதை மறுக்க முடியாமல் தான் இருந்தது. தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு நடை பெற்ற பொது தேர்தலில் பாஸ்(மலேய இஸ்லாமிய கட்சி) கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.

(துன் அப்துல் ரசாக் -ஆட்சி 1970-1976)
குடும்பத்தில் அரசியல் பின்புலம் தென்பட்டாலும் ஆரம்பக் காலத்தில் நஜிப் அரசியலில் அதீத வளர்ச்சியைக் காட்டவில்லை. ஆரம்ப காலம் தொட்டு அம்னோ கட்சியின் பல நிலைகளில் பதவி வகித்திருக்கிறார். இதன் பொருட்டு நஜிப் தனது அரசியல் ஆதிக்கத்தை கட்சியின் அடிமட்ட நிலையில் இருந்து செதுக்கி இருக்கிறார் என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பெக்கான் பகுதியின் அம்னோ இளைஞர் அணி தலைவராக 5 ஆண்டுகளுக்கு 1976-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு பெக்கான் பகுதிக்கு இணை தலைவராகவும் 1982-ஆம் ஆண்டு பெக்கான் பகுதி தலைவராகவும் பகாங் மாநில அம்னோ தொடர்புக் குழு இணை தலைவராகவும் பதவி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து மேலும் சில அரசாங்க பதவிகளை 1982-ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். 1982-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சட்மன்ற உறுபினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(துன் ஹுசேன் ஓன் -ஆட்சி 1976-1981)
அதன் பின் 1986-ஆம் ஆண்டு வரையில் பகாங் மாநில முதல் அமைச்சர் பதவியை நிர்வகித்தார். அதே ஆண்டு மத்திய அரசினால் விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 1998-ஆம் ஆண்டிற்கான கமென்வெல்த் போட்டி நடத்த மலேசியா தேர்வு பெற வாய்ப்புகள் தேடி கொடுத்தார். 1990-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சராக பதவி ஏற்றார் நஜிப்.

1993 மற்றும் 1996 ஆம் ஆண்டு அம்னோ கட்சி தேர்தலில் 1202 வாக்குகள் பெற்று கட்சியின் இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ஆம் ஆண்டும் கட்சியின் பெருவாரியான ஓட்டுகளை பெற்றார். இருப்பினும் 1999-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் நஜீப் ஸ்லிம் மெஜோரிட்டி எனப்படும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் மிக மோசம வாக்குகளை பெற்றது அக்காலகட்டமாக தான் இருக்க முடியும்.

அச்சமயம் துணை பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் வெளியேற்றப்பட்ட காலமாகும். இருப்பினும் அதன் பின் வந்த தேர்தல்களில் நஜிப் தனது நிலையை தற்காத்துக் கொண்டார். ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான நஜிப் அம்னோவில் சிறந்த சேவையாளர் என போற்றப்படுபவர்.


(துன் டாக்டர் மகாதீர் முகமட் - ஆட்சி 1981-2003)
நஜிப் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியினை கோலாலம்பூரின் சொண்ட் ஜான் பள்ளியில் பயின்றார். அதன் பின் இங்கிலாந்தின் மொல்வன் பாய்ஸ் கல்லூரியிலும், நார்டிங்கம் பல்கலைக்கழகத்திலும் பயின்று பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்.

2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஜிப் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கையில் 33 வருடங்களை கடந்தவர் நஜிப். இக்காலகட்டங்கள் நாட்டிற்கு மிகச் சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கான தகுதிகளை அவருக்கு வழங்கி இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். நாட்டின் அரசியலுக்கு பூகம்பமாக அமைந்தது கடந்த பொதுத் தேர்தல். காரணம் மக்களின் நம்பிக்கையின்மை என்று கூட சொல்லலாம். இன்று வரையினும் பல குளறுபடிகள் இருந்தபடியே இருக்கிறது.

இன்றைய நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை திருப்திகரமாக அமைத்துக் கொடுப்பதன் வழியே நாட்டின் சுபிட்சமான ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதனை மறுக்க இயலாது. பொருளாதார நெருக்கடிகள் நாட்டின் முதுகெழும்பை முறுக்கிக் கொண்டிருக்கின்றன. குற்றச் செயல்கள் பெருக்கம் காண்கிறது. வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. இப்பிரச்சனைகளுக்கு சரியான அடித்தளம் அமைந்தாலன்றி அரசியல் பிரச்சனைகள் சுலபத்தில் அமைதி கொள்ளாது.
(துன் அப்துல்லா அஹ்மட் படாவி - ஆட்சி 2004-2009)
ஒவ்வொரு புதிய பிரதமரின் வருகையின் போதும் மக்கள் எதாகினும் புதுமையை எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த ஐந்து பிரதமர்களும் தங்களுக்கென்று தனித்தன்மையை நிலை நாட்டி இருக்கிறார்கள். துன் மகாதீர் தமது ஆட்சியின் சமயம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார். அதன் பேரில் நவீனத்துவத் தந்தை என போற்றப்பட்டார். அதன் பின் டத்தோ படாவியின் ஆட்சியில் மீண்டும் விவசாயத்திற்கு அதிக முக்கியதுவம் செலுத்த வழியுறுத்தப்பட்டது. இந்நிலை மக்களால் முழு மனதாக ஏற்கப்பட்டதா என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

இன்று நாட்டின் 6-வது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் டத்தோ நஜிப் முதல் கட்டமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. இன்றய மலேசிய அரசியல் நிலை பல வகையினும் மேம்பாடடைந்திருக்கிறது.

மக்கள் ஒவ்வொரு அரசியல் நிகழ்வினையும் முன் நிறுத்திச் சிந்திக்கிறார்கள். இதில் இடது சாரி சிந்தனைகள் மறுக்க முடியாத ஒன்றாகும். அவற்றினை நன்முறையில் கையாள்வது மிக அவசியம். மேலாதிக்க கட்டுபாடுகள் அரசுக்கெதிரான சிந்தனையாளர்களை அதிகரிக்கவேச் செய்யும் என்பது கடந்த நாட்களில் நாம் கண்ட உண்மை.
(டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் - 2009 - இனி)
கடந்த பொது தேர்தலின் சமயம் 5 மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கு கை மாறியது. இது மலேசிய சரித்திரத்தில் மிக முக்கியமான மாற்றமாகும். மக்கள் கடந்த கால ஆட்சியில் திருப்தி கொள்ளாததும் அல்லது புதிய ஆட்சி முறையில் விருப்பம் கொள்வதையும் தானே இது குறிக்கிறது. மாநில அளவிலான இம்மாற்றங்கள் மத்திய அரசிலும் மக்களால் விரும்பப்படலாம். அவ்வகையான மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் களைவதற்கும் நஜிப் தனது ஆட்சியில் அரசியல் சீரமைப்புகளை செவ்வனே செய்தாக வேண்டியது இன்றியமையாததாகும்.

பொருளாதாரத் துரையில் பட்டம் பெற்ற முதல் பிரதமராக நஜிப் பதவி ஏற்றிருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளை மட்டுமின்றி தமது கட்சியையும் கவனிப்பு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அம்னோவின் சிறு குளறுபடியும் அக்கட்சியை மட்டுமின்றி தேசிய முன்னணியில் இருக்கும் ஏனைய கூட்டனி கட்சிகளுகளையும் சேர்த்து சிதறடிக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.

பல்லின மக்களுக்கும் சிறப்பான தலைவராக அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களோடு செயல்படுவார் என்று நம்புவோம். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள். அரசர்கழகு செங்கோன் முறைமை.

Thursday, April 02, 2009

வருச நாட்டு ஜமீன் கதை!!

புத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்: வடவீர பொன்னையா
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை: ரூ50

புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக் கண்டவுடன் எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். உள்ளே மேலும் சில பழமையான படங்களோடும் ஓரமாய் இருக்கும் சிறு குறிப்புகளும் கவரும் வண்ணம் இருந்தன. சரி படித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வடவீர பொன்னையா என்ற எழுத்தாளரின் எழுத்தை முதல் முறை வாசித்தேன்.

இதைக் கதை என்று சொல்வதை விட நீள் சரித்திரக் கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும். சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை எனும் கோடிட்ட வார்த்தைகளை முன்னமே தெரிவித்து விடுகிறார்கள். மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கதையை கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் இட்டுச் சென்றிருப்பது ஆசிரியரின் பலம்.

இக்கதை சம்பந்தப்பட்ட மனிதர்களையும், குடும்ப நண்பர்களையும், வாரிசுகளையும் ஆசிரியர் நேரில் கண்டு சம்பவங்களை உறுதி செய்து சம்பவங்களை லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார். ஜமீன் மிரட்டல், ஏழை மக்கள், பளியர்கள், கவுடள் நம்பிக்கை, சாபம் என கதையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஈர்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜமீன்கள் பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் விலாவாரியா விவரிச்சு எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்காக சில புனைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர் காலத்தில் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தொல் பொருள் செய்திகளும் கதை போக்கில் சொல்லப்படுகிறது. கதையை படித்து முடித்த பிறகும் சில கதாப்பத்திரங்களும், சில இடங்களில் சொல்லப்படும் கருத்தும் இன்னமும் அழியாமலே இருக்கிறது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாக செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான், எனவே மனிதர்கள் மனதில் தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களிலேதான் அமைதியும் உண்டாக வேண்டும் என சில வரிகள் நெஞ்சில் பதிகின்றன.

மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன். இவரின் இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. இக்கதை எழுதும் போது மைனர் பாண்டி திருமணம் செய்து கொண்ட பெண் உயிரோடு இருந்திருக்கிறார். 73 வயது அவருக்கு.

அவருடைய புகைப்படத்தோடும் சில பேட்டிகள் போடப்பட்டிருக்கின்றன.மைனர் பாண்டிக்கு 34 வாயதாக இருந்த போது அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 வயது. மாட்டு வண்டியில் போய் கொண்டிருக்கும் போது பார்த்தவுடன் பிடித்துப் போய் தூக்கிக் கொண்டு சென்று திருமணம் செய்துக் கொள்கிறார். கேட்க கேளியாகவும் கொடுமையாகவும் தான் இருக்கும்.

பாலிய விவாகம் என்பது அக்காலகட்டத்தில் பெரிய விசயமாக இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தே அந்த ஆசாமிகளுக்கு அத்தனை மனைவிகளும் வைப்பாட்டிகளும் என்றால் இன்றய நிலையில் 29 அல்லது 30 வயதில் திருமணம் செய்வார்கள் என்றால் என்னாவது? சற்று சிந்த்திக்க வேண்டிய விசயம் தான். இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)

அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா. இவர் கொண்டமனூர் சாமியப்ப நாயக்கரின் முதல் மனைவி. மைனர் பாண்டியனின் அம்மா. சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று வாழ்கிறார். மைனர் பாண்டியும் பொறுப்பில்லாமல் இருக்கவும், அவரை விட்டும் தனித்து வாழ்கிறார். மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையெப்பம் இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.

சாபத்தோட வீரியத்துக்கு
சாம்ராச்யம் உரமாச்சு..
பூமியில பொதஞ்ச கதை
மறுபடியும் கருவாச்சு..
நல்ல சனங்க போற பாதையில
நல்ல விதை முளைக்கும்..
சரித்திரத்த சொல்லுகிற
சாட்சியாக இருக்கும்..

இப்படியாக சில கிராமிய பழமொழிகளும் மிக இலகுவாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை இன்னும் சிறப்பாக அச்சிட்டிருக்கலாம். ஆனந்த விகடன் சைசில் சிறுவர் புத்தகத்தை போல் இருக்கிறது. கள்ளிக் காட்டு இதிகாசத்தை போன்ற அளவில் அச்சிடப்பட்டிருந்தால் பக்கங்களும் கூடி இருக்கும். கையடக்கமாக படிப்பதற்கும் வசதியாக இருக்கும். எப்படி இருப்பினும், படித்து முடித்ததும், ஏதோ ஒரு தேடலுக்காக மீண்டும் படிக்கச் சொல்கிறது வருச நாட்டு ஜமீன் கதை.