Wednesday, February 25, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் - எனது பார்வையில்!

”டாக்டர், இஞ்சினியர், லாயர்னு படிச்சவனுங்களே 60000 ரூபா ஜெயிக்க மூக்கால அழுவுறானுங்க. எச்சி கிளாஸ் எடுக்கிற சேரி நாய் உனக்கு எல்லா பதிலும் தெரியுதா? யார் உனக்கு விடை சொல்லி கொடுத்தது சொல்லு?” என பின்னி பெடல் எடுக்கிறார்கள் அவனை.

மொத்த வாழ்க்கையும் ஆரம்பம் முதல் அடிபட்டு வாழ்ந்து வரும் அவனுக்கு போலிஸின் அடியும் உதையும் ஒன்றும் பெரிதில்லை என்பதைப் போல் அசால்டாக அமர்ந்திருக்கிறான். எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் சொல்கிறான். எனக்கு அந்த கேள்விகளுக்கு விடை தெரியும் என்கிறான். அது எப்படி என்பதாக ‘ஃபிளாஷ்பேக்’, இன்றய நிலை என கதை சுழல்கிறது.

படிப்பறிவு இல்லாத நாயகன். ”இந்த 1000ரூபா நோட்டில் இருக்கிறது யாருனு தெரியுமா?” போலிஸ்காரன் கேட்க. காந்தி என அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மில்லியனர் போட்டியில் அமேரிக்க டாலரில் இருப்பது பெஞ்சமின் ஃப்ராங்களின் என்பதை நினைவு கூர்ந்து பதில் சொல்கிறான்.

எல்லாம் அனுபவத்தில் தெரிந்துக் கொண்டது தான். மதி நுட்பம் கொண்ட சிறுவன். எந்த நேரத்தில் போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சிக்கு சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என்பது முதல் பிஞ்சு மரத்தில் அடித்த ஆணியைப் போல சின்ன வயதில் மனதில் பதிந்த காதலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்.

“உனக்கு ஒன்னு தெரியுமா... வாழ்க்கையில வரும் பிரச்சனைக்குக் காரணம் ரெண்டு தான் இருக்கு, ஒன்னு பணம் இன்னொன்னு பொண்ணுங்க” என போலிஸ்காரன் ஞான உபதேசம் செய்கிறான். உண்மையில் அவன் வாழ்க்கையில் இரண்டு தேடல்கள் இருந்தன. ஒன்று பணம் மற்றொன்று தொலைந்து போன காதலி.

தன் காதலி தன்னை பார்க்கக் கூடும் என்பதற்காக மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். ”எல்லோருக்கும் ஏன் இந்த நிகழ்ச்சி பிடிக்கிறது?” என இடையில் சந்திக்கும் தன் காதலியை கேட்கிறான். ”எல்லோரும் எதில் இருந்தோ விடுபட்டு, புதிய ஒன்றை நோக்கி போக பாக்குறாங்க” என்கிறாள் அவள்.

வாழ்க்கை நினைத்தபடி அமைந்துவிடுவதில்லை. சிறு வயதில் ஏற்படும் கலவரத்தில் தாயை பரி கொடுக்கிறான் ஜமால். ஜமால் மற்றும் அவனது அண்ணன் இருவரும் உயிருக்கு தப்பி ஓடுகிறார்கள். அச்சமயம் நாயகியை சந்திக்கிறார்கள்.

சிறுவர்களைக் கடத்திப் பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் வில்லன். ஒரு சிறுவனின் கண்ணை பழுதடையச் செய்வது என காட்சிகள் நெஞ்சை பிழிந்தெடுக்கின்றன. அங்கிருந்து தப்புகிறார்கள் ஜாமாலும் அவன் அண்ணனும். தப்பும் சமயம் நாயகி விடுபட்டு போகிறாள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அண்ணன், தம்பியின் காதலியை பறித்துச் செல்கிறான். மீண்டும் மீண்டும் காதலியை தேடி அழைகிறான்.
எங்கிருந்தாலும் தம் காதலி தம்மைப் பார்க்கக் கூடும் எனும் நம்பிக்கையில் மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். இன்றய நிலையில் இந்தியாவில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு பெண் எப்படி எல்லாம் அடிமையாக்கப்படுகிறாள் எனும் செய்திகளை கன்னத்தில் அறையாதக் குறையாக படம் பிடித்துள்ளார்கள்.

படத்தின் மையக் கருத்து தன்னம்பிக்கை. மற்றபடி அதிகமாகக் காண்பிக்கப்படுவன நெகட்டிவ் சமாசரங்கள் தான். நெகட்டிவ் கேரக்டர்கள் அதிகபடியாகவும் இருக்கிறது. நாயகன் சிறுவனாக இருக்கும் சமயம் அவனை சிலர் அடிக்க வருகிறார்கள். அப்போது ஓர் அமேரிக்க தம்பதியினர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். (அவர்கள் நல்லவர்களாம்... என்னா ஒரு வில்லத்தனம்...)

இப்போதெல்லாம் அதிகான தமிழ் படங்களில் பாலிஷ் போட்ட இயற்கைக் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் சென்று படபிடிப்பு நடத்துகிறார்கள். எல்லா வழங்கள் இருந்தும் இன்னமும் மிதிபட்டுக் கிடக்கும் இந்திய நாட்டின் நிலையை தைரியமாக எடுத்துச் சொன்னப் படங்கள் குறைவு தான். அப்படி இருந்தாலும் அவை அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகலாம். இல்லை என்றால் கோர்ட் கேஸ் என நீதிமன்றத்தில் இழுக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படலாம்.

ஏ.ஆர் ரகுமானின் இசையில் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. தமது பணியை செம்மையாகவே செய்திருக்கிறார். இசை மிக சிறப்பாக இருக்கிறது. தமிழில் இதைவிட சிறப்பாகவும் அவர் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை. ஆனால் ஆங்கில திரைப்படம் என்பதால் என்னவோ ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படிருக்கிறதாக கருதுகிறேன். எல்லோரும் வாழ்த்து சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் சொல்லாமல் இருந்தால் என்னாவது. இசைப் புயல் ஏ.ஆர்.குமானுக்கு எனது வாழ்த்துகள்.

ஸ்லாம் டாக் என்றும் பசுமையான காதலாய் மனதில் நிறைகிறது. அதில் ஒரு வசம் வருகிறது. அதை மிகவும் இரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.

“நான் எந்த தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் தண்டனை”, என்கிறான் நாயகன்.
”நீ தப்பு பண்ணலை, ரொம்ப நல்லவனா இருக்கிறே. அது தான் தப்பு” என போலிஸ்காரன் சொல்வான். நிஜம்தானே?

Monday, February 23, 2009

நான் கடவுள் - திரை விமர்சனம்

"அதாண்ணே ஜாலியா பிச்சை எடுத்து சந்தோசமா இருக்கணும்", என்று சொல்கிறான் அந்தப் பிச்சைக்காரச்சிறுவன். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை எடுப்பதில் தான் சந்தோஷம் போல என எளிதில் நினைக்கத் தோன்றும் இதைக் கேட்பவர்களுக்கு. உண்மையில் அவர்கள் தாம் நிகழ்காலத்தில் வாழ்கிறார்களோ என்ற எண்ணம் என்னுள் சில வேளைகளில் எழுந்ததுண்டு. அன்றைய வாழ்க்கைக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நாளைய நிகழ்வுகளுக்காக இன்றைய தினத்தில் வாழ்வதில்லை அவர்கள். முற்போக்கு சிந்தனை இல்லாதவர்கள் என நாம் நினைக்கக் கூடும். ஆனால் செல்வங்கள் நிரந்தரமற்று போகும் நேரத்தில் கவலை கொள்ளாமல் இருப்பது பிச்சைக்காரர்களாகத் தான் இருக்கக் கூடும் என நிச்சயம் சொல்ல முடியும்.

அம்மா தாயே எனும் கவலை தோய்ந்த சோகக்குரல் மட்டும் அவர்கள் வாழ்க்கையாக அமைந்து விடுவதில்லை. கேலியும் கிண்டலும் அவர்கள் உலகிலும் நிறைந்துக் கிடக்கிறது.

"சாமி இருக்காரா..."

"ஏன் எங்களப் பார்த்தா சாமி மாதிரி தெரியலையா?"

"சடை பிடிச்சவனெல்லாம் சாமினு சொல்லிக்கிட்டு திரியுறானுங்க"

"பிச்சக்கார பயலுக்கு பேச்சப்பாரு"

"ஆமாம் இவரு பெரிய அம்பானி"

மேற்காணும் சம்பாஷனைகளில் திறம்படவே நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தகவல்களை நகைச்சுவை வடிவில் சொல்லும் போது சட்டென மனதில் பதிந்துவிடும் என்பார்கள். அப்படித்தான் இருந்தது அந்த பிச்சைக்காரச் சிறுவனின் கதாபாத்திரம்.

மற்ற அம்சங்களைக் காட்டிலும் என்னை பெரிதும் கவர்ந்தது அச்சிறுவனின் கதாபாத்திரம் என்றே கூறுவேன். நிதர்சனமான நடிப்பு. எதார்த்தமான நகைச்சுவை வசனங்கள்.

இந்த படத்திற்கு பூஜாவும் ஆரியாவும் தான் வேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏதும் இருந்திருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அவ்விடத்தில் அஜித்தை நிறுத்திப் பார்க்க நெருடலாகவே இருக்கிறது.

அரைகுறை ஆடைகளில் கைகளை நீட்டி நீட்டி இரண்டு வசனங்களை பேசிவிட்டு நானும் நடித்தேன் என பெயர் போட்டு கொண்டிருந்த பூஜாவா இது. ஒரு கண‌ம் சிந்திக்க வேண்டி உள்ளது. இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளையாக ஒப்பித்து திரைப்ட விருதுகளுக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறார்.

அகோரிகளுக்குக் கருப்பு நிற ஆடை என்ன யூனிஃபார்மா? படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அதே ஆடையில் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அட உள்ளாடை கூடக் கருப்புதாங்க அவருக்கு. என்ன கொடுமை இது?! சாமியார்கள் பிராண்டட் ஜட்டிகளை உபயோகிப்பதில்லை என்பதை இப்படத்தின் வழிதான் அறிந்து கொண்டேன்.

துறவிகள் என்போர் யார் எனும் கேள்வி இன்னமும் எனக்கு விடை கிடைக்காத புதிராகவே இருக்கிறது. அதைப் பற்றிப் பேசினால் எடக்கு மடக்காக சிக்கல்கள் வந்துவிடுவதால் அந்த ஏரியா பக்கம் தலை வைப்பதில்லை. மனதில் கிடக்கும் கேள்விகளில் இரண்டை இப்பதிவில் தூக்கிக் கடாசுகிறேன். தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

துறவிகள் என சொல்லிக் கொள்வோர் ஏன் சில குறிப்பிட்ட நிறத்திலான ஆடைகளை அணிகிறார்கள்? ஜோசியனின் சொல் கேட்டு மகனை காசியில் விட்டு வரும் தந்தை பல ஆண்டுகளுக்கு பின் அவனை அழைத்து வருகிறார். வீட்டிற்கு வரும் மகன் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் தன் சிற்றப்பாவின் படத்தை பார்க்கிறான்.

அப்போது "டேய், இங்க வாடா" என தந்தையை அழைக்கிறான் மகன். தாயிடமும் மரியாதை செலுத்த தெரியவில்லையாம். அகோரியாகிவிட்டால் இப்படிபட்ட மானங்கெட்ட செயல்கள் தானாக வந்துவிடுமா? இல்லை மரியாதை தெரியாமல் போய்விடுமா?

முன்பு திருவிழாக் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். சரியாக சிறுநீர் கழிக்கத் தெரியாத சின்ன பசங்களுக்கு கூட சாமி வந்துவிடுகிறது. உறுமிமேளச் சத்தத்துக்கு தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு அருகில் இருப்பவரை அழைத்து அருள் வாக்கு சொல்லிக் கொண்டும் விபூதி கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள். அப்போது பெரியவர்கள் எனக் கணக்கில்லாமல் வாடா போடா, வாடி போடி தான் அந்த 'சாமி'களின் வாயில் வரும். மரியாதை தெரியாத சாமி மனிதனுக்கு தேவைதானா? ஏன் என்றால் சில துறவிகளும் இப்படி தான் பெரியோர் சிறியோர் என பாராமல் மரியாதை குறைவாக பேசுகிறார்கள். அவர்களை மட்டும் மரியாதையாக அழைக்க வேண்டுமா என்ன? அவர்களை சுவாமி என்று தான் அவசியம் அழைத்தாக வேண்டுமா? சரி அதை விடுங்கள் பதிவு தடம் புரண்டுவிடும்.

படத்தின் ஆரம்பம் முதலே ஒரு அழுத்தமான சூழலை உலாவ விட்டிருக்கிறார் இயக்குனர். இந்நிலை அவருடைய‌ முதல் படமான சேதுவில் முதற்கொண்டு நாம் காண முடிகிறது. இது மேலும் தொடர்ந்தால் பாலாவா... படம் இப்படி தான் இருக்கும் என இரசிகர்கள் முடிவுகட்டும் ஒரு நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

கட்டில்களுக்கும் முத்தங்களுக்கும் விடுதலை கொடுத்திருக்கும் பாலாவின் முயற்சி பாராட்டத்தக்கது. பிதாமகன் திரைப்பாடல்கள் நெஞ்சில் பதிந்தது போல் இப்படப்பாடல்கள் எடுபடவில்லை. இப்படத்திற்கு பாடல் எழுதிய புண்ணியவான் எனக்கும் சமஸ்கிருதம் தெரியும் என்பதை நன்றாகவே மெய்ப்பித்திருக்கிறார்.

நேற்று ஒரு நண்பரோடு பேசிக் கொடிருக்கையில் சொன்னார். நான் கடவுள் பாடல்கள் அருமையாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் இரண்டு டுபாகூர் ஸ்பீக்கர்களை தூக்கி வீசிவிட்டு ‘ஹோம் தியேட்டர்’ வாங்கிடலாமா என யோசிப்பதாக சொன்னார். அவர் சொன்னவுடன் எனக்குள் தோன்றியது. என்னிடம் இருப்பது இரண்டும் ‘டுபாகூர்’ காதுகளா? ஏன் என்று தெரியவில்லை. பிதாமகன் படத்தில் இளம் காற்று வீசுதே எனும் பாடல் பச்சென்று நெஞ்சில் ஓட்டிக் கொண்ட தாக்கம் கிடைக்கவில்லை. இப்படத்தில் வரும் பாடல் இரமண மகரிஷிக்கு இளயராஜா இயற்றியது எனவும் இத்திரையில் அதை சேர்த்திருப்பதாகவும் கேள்விபட்டேன்.

எலும்போடு ஒட்டிய தோலாக பார்ப்பதற்கே முகம் சுழிக்க வைக்கும் வில்லன். பாலாவின் அறிமுகத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். பிச்சைக்கார பிசினஸ்மேன். பிச்சை எடுக்கறது உனக்கு அவளோ கேவலமா இருக்கா என சங்கிலியால் ஒரு பிச்சைக்கார பெண் ஊழியரை போடு சாத்தும் போது "தொக்" என இருந்தது.

இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இல்லை. எல்லாமே ’ஸ்ட்ரேய்ட் பார்வர்’ தான். போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் சில பிச்சைக்காரர்கள். ஆளுக்கு ஒரு ஒரு பிரபலங்களின் வேடங்களில் இருக்கிறார்கள். பிரபலங்கள் எப்படி கேவலப்பட்டு போகிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.

அச்சமயத்தில் பிரபலங்களை போல் போலிஸ் ஸ்டேசனில் நடித்துக் காட்டுகிறார்கள். அச்சமயம் ஒரு போலிஸ்காரர் சொல்கிறார்.

“போன வாரம் ஒரு படம் பார்த்தேன். என்னய்யா படம் எடுக்கிறானுங்க, மவனே அவன் மட்டும் கையில கிடைச்சான்.....” என செந்தமிழ் வார்த்தைகள் தூள் பறக்கிறது. அதே போல இன்னொரு கட்டத்தில்:

“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்”

“தேவடியா மகன். புளுத்துவான்” என ஒரு வசனம்.

இனி வருங்காலங்களில் தமிழ் படங்களை முன்னுக்கு நகர்திச் செல்கிறேன் எனும் போக்கில் இப்படியாகவே பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

சமுதாயத்தில் மக்கள் விரும்பாத அல்லது இது வரை யாரும் தொட்டிராத விடயத்தை எடுத்து சொல்லி இருக்கிறார் பாலா. இதை அரசு பரிசீலனை செய்து சமுதாய முன்னேற்றத்திற்கு வழி செய்யுமா?

டூயட், கிச்சுகிச்சு காட்சிகள் என எதுவும் இல்லாமல் எதார்த்தமாக நகர்கிறது படம். தமிழ்த் திரையுலக இரசிகர்கள் இப்படிபட்ட படைப்புகளையும் இரசிப்பார்கள், இரசிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாலா. இறுதியில் ஏதோ ஒன்று 'மிஸ்' ஆகிறது. அது என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை. எனது எதிர்பார்ப்புக்கும் இத்திரைப்படத்திற்கும் அத்தகையதான இடைவெளி ஏற்பட்டிருக்குமோ? இம்மாதிரியான எதார்த்த திரைப்படங்களைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் என தெரியவில்லை.

Friday, February 20, 2009

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!


இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

(பி.கு: மாயா நாகரிகம் தொடர்பான தகவல்களை அதிகமாகவே சேகரித்துவிட்டேன். எழுதினால் இன்னும் நீண்டுவிடும். இதை தொடராக்கும் எண்ணம் இல்லை. ஒவ்வொரு கட்டுரையும் சார்ந்திராமல் கொண்டுச் செல்ல முயற்சிக்கிறேன். மாயா நாகரீகம் தொடர்பாகச் சென்ற ஆண்டு நான் எழுதிய கட்டுரையின் சுட்டி: மாயாக்கள் இருந்தார்களா? )

Wednesday, February 11, 2009

இந்த இறைச்சியையும் சாப்பிடலாமாம்!


இறைச்சி உணவு பிரியர்களுக்கு ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள். அப்படி என்ன கருத்து என்கிறீர்களா? ஒட்டகம் மற்றும் கங்காரு இறைச்சி வகை உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்கச் சொல்லி இருக்கிறார்கள் இவர்கள். காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இத்தகைய கருத்துகளை முன்னிருத்தி இருக்கிறார்கள்.

அளவுக்கதிகமான இனப் பெருக்கம் கொண்ட வளர்ப்பு பிராணிகள் இயற்கைக்குப் பாதுகாப்பு அற்றது என அறிவியளாலர்கள் கூறுகிறார்கள். இவ்விலங்குகளின் கழிவுகளால் வெளியேற்றப்படும் நச்சு வாயு பாதிப்பை உண்டாக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய வரலாறு கூறுவது. ஏறத்தாழ 60ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்காரு அந்நாட்டின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது. அக்காலகட்டத்தின் தட்பவெப்ப நிலை அதற்கு ஏதுவாக அமைந்திருந்ததாக சேதிகள் கூறுகின்றன. இன்னும் சில காலங்களில் கங்காரு மீண்டும் ஆஸ்திரோலிய மக்களின் முக்கிய உணவாக அமையலாம் என கருத்துரைக்கிறார்கள்.

இப்போது செம்மறி ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும் ஆஸ்திரேலிய நாட்டு மக்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு மாற்று உணவாக கங்காருவின் இறைச்சி அமையும் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

இனப் பெருக்கத்தில் அதிகரித்துவரும் ஓட்டகங்களால் இயற்கைக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதனை ஒடுக்கும் பொருட்டு அதனை உணவு பொருளாக உற்பத்தி செய்து வழங்க திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு. கங்காரு மற்றும் ஒட்டக இறைச்சியினை மாற்று உணவாக மாற்றியமைப்பதில் கடந்த மூன்றாண்டு காலமாகத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு.

அங்கு நீண்ட கால திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குள் மாட்டிறைச்சி மற்றும் செம்மரியாட்டு இறைச்சிகளின் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளார்கள். தற்சமயம் 34கோடி கங்காருகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை 240 கோடிகளாக்க முயற்சிகள் நடைபெருகின்றன.

இவற்றில் சில சிக்கல்கள் உண்டென்பதை அவர்கள் அறியாமல் இல்லை. இதனால் கால்நடைகள் பேணல் சிக்கல் உண்டாகும். மக்கள் சுவைத்து பழக்கப்பட்டுவிட்டதை எளிதில் விட்டுவிட மறுக்கக் கூடும்.

காங்காரு இறைச்சி உடல் நலத்திற்கு சிறந்தது எனக் கருதப்படுகிறது. சிலர் கங்காரு இறைச்சியை உண்பதில் ஆர்வம் கொண்டும் இருக்கிறார்கள். கங்காரு இறைச்சி கொழுப்புச் சத்து குறைந்த மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவாகும். அது சுத்தமான இறைச்சி வகையாகவும் கருதப்படுகிறது.

ஒட்டகங்களால் பாலைவனத்தில் வாழும் சில உயிரினங்கள் உட்பட சில அறிய வகை தாவரங்களும் பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது. ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் கட்டுப்படுத்த அவற்றை உண்பதே சிறந்த வழியனெ கண்டறிந்துள்ளார்கள். மாட்டிறைச்சிக்கு மாற்றாக ஒட்டக இறைச்சியை உபயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கங்காரு அஸ்திரேலிய மண்ணில் இயற்கையாக தோன்றிய உயிரனமாக கருதப்படுகிறது. ஆனால் ஒட்டகம் அப்படி இல்லை. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுமை தூக்க ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்பட்டன. புதுவகை சரக்கு ஊர்திகளின் அறிமுகத்திற்கு பின்னால் அவை பேணப்படாமல் விடப்பட்டன.

இன்றய நிலையில் ஏறத்தாழ 50லட்சம் ஒட்டகங்கள் அங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஒன்பது ஆண்டும் அவை 2 மடங்காக பெருகிவருகின்றன.

ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் குறைக்க அவற்றை உணவாக்கும் திட்டம் நிச்சயமாக தாவர மற்றும் மற்ற உயிரினங்களின் பாதிப்பைத் தடுக்குமா என்பது வினாக் குறியான விடயம். அது போக உள்நாட்டு சந்தையை விட வெளிநாட்டு சந்தைகளில் தான் அவற்றுக்கு மவுசு அதிகம். ஏற்றுமதிக்கான செலவீனங்களும் அதிகம் என கருதப்படுகிறது. இம்முயற்சிகளுக்காக மேலும் ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன.

(பி.கு: 01.02.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

Friday, February 06, 2009

கொசுறு 06/02/2009

வாசகர்கள் நம் எழுத்தை தேடி வரனும் என நினைப்பது நெகட்டிவ் அப்ரோச், நம் எழுத்து வாசகரை சென்றடைய வேண்டும் என நினைப்பது பாசிட்டிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*****

அண்மையில் சேலத்தில் ஜோதிடர்கள் மாநாடு நடந்ததாம். அதில் சில தீர்மானங்கள். ஜோதிடர்களை தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் வழங்க வேண்டும். பஸ் பாஸ், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கலைமாமணி விருது வழங்க வேண்டும். இவ்வளவையும் கேட்கும் ஜோதிடர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:

ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?
******

எதிர் காலத்தில் டிஜிட்டல் முறைப்படி தானாகவே இயங்கும் வீடுகள், சதுர அடிக்கு... இந்த விலைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும்.

படுத்தவுடன் தூங்க வைக்கும் படுக்கை, மசாஜ் செய்யும் குளியல் அறைகள், ரிமோட் மூலம் வீட்டின் அனைத்து இயக்கங்களையும் கண்ட்ரோல் செய்யும் கருவி என அணைத்தும் ஆட்டோமெட்டிக் அரங்கமாக மாறிவிடும். சுவரில் எங்கு திரும்பினாலும் 'எ 4' சைசில் கம்ப்பியூட்டர்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டிருக்கும்.

இது ஜோசியம் இல்லை. யூகம் தான்.
*****

ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர், 1940-ஆம் ஆண்டு, 12 ஆயிரம் பேரை தனி அறையினுள் அடைத்து வைத்து விஷ வாயு செலுத்தி கொலை செய்தபோது உடன் இருந்த முக்கியக் குற்றவளியான ஜோஹான் என்பவரை கடந்த வருடம் கர்நாடக மாநிலம், பெல்காம் அருகில் காவல் துறை கைது செய்து ஜெர்மனி காவல் துறை வசம் ஒப்படைத்தது. இவர் கடந்த 56 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்.
****

"நம்ம வீட்டு அம்மா காச கொடுத்துட்டு அழுவும், அந்த அம்மா காச வாங்கிகிட்டு அழும்"

இது சினிமா மோகத்தைப் பற்றி புலவர் கீரன் சொன்ன வரிகள். சமீபத்தில் நான் படித்த ஒரு விடயம். ஒரு பெண் தனியாக இருந்தால் போதும் ஆண் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவான் என அவர் சொல்லி இருந்தார். அவரும் பெண் பதிவர் தான். ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்தில் அப்படி குறிப்பிட்டிருந்தார்.

சினிமாவில் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகை நடிகன் செய்வதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள். நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால் அவள் செருப்பால் அடிக்கமாட்டாளா? அப்படி அடிக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் அதில் விருப்பம் என்றே கொள்ள வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் இழிவு படுத்திக் கூறும் செயல் தகாத ஒன்று என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
*****

எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் எனும் கட்டுரைத் தொகுப்பை படித்து வருகிறேன். இணையத்தில் அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவருடைய புத்தக வரிசையில் இது தான் முதல் முறை வாசிக்கிறேன். மிக அருமையாக இருக்கிறது. வாழ்வியல் விடயங்களை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருப்பது படிப்பவருக்கு ஒருவித தாக்கத்தைக் கொடுக்கிறது.
************

அமைச்சர்: மன்னா கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரசை நிர்வாகிக்க நீங்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, உங்கள் மீது மக்களுக்கு மனக் கசப்பு உண்டாகாதா?

புலிகேசி: மங்குனி அமைச்சரே, இப்போது இருக்கும் லகுட பாண்டிகளை இப்படியே விட்டால் நமது கஜானாவில் கரப்பான் பூச்சிகள் காரித் துப்பி வைத்துவிடும். இந்த கேடு கெட்ட முட்டா பய மக்களின் நலன் முக்கியமா இல்லை எனது கஜானா முக்கியமா? எங்கே சொல்?

அமைச்சர்: கஜானா காலியானால் நம் கதி என்ன ஆவது. உங்கள் முடிவு சரிதான் மன்னா. ஆனால் மக்கள் தேர்வு செய்த அதிகாரிகளை நாம் நிராகரித்தோம் என்பதற்காக பிரச்சனைகள் வராதா? அதை அவர்கள் மறப்பதற்கு வசதியாக இரண்டு நாட்கள் விடுமுறை விட்டுவிடலாமா?

புலிகேசி: க.க.க.கௌ.

(புரிந்ததா இல்லையா? புரியாதவர்கள் தனிமடலில் அனுகவும்.)

இதையும் படித்துப் பாருங்கள்.
******

இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் பலருக்கும் பல வித டென்ஷன். இப்போதுதான் சில நிறுவனங்கள் அங்கங்கு காதலர் தின ஃப்ரோமோசன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பெருநாளை உருவாக்கிக் கொண்டு சமூக சீர்கேடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

லங்காவி, கெந்திங் போன்ற சுற்றுலா தளங்களில் காதலர் தினத்தின் போது அதிக அளவில் தங்கும் விடுதிகள் பதிவு செய்யப்படுகிறதாம்.

ரூம் போட்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்களோ?
*****

மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலக மாந்தர்கள் 100 பேர் (ஆங்கில புத்தகம்) என்ற புத்தகத்தில் காந்தியடிகளின் பெயர் இடம் பெறவில்லை. காந்தியடிகள் போன்றோரின் தாக்கங்கள் அவர்கள் இறந்த பிறகு முடக்கம் கண்டுள்ளன என்பது அப்புத்தக ஆசிரியரின் கருத்தாகும்.
*****
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
- கவிஞர் அறிவுமதி.

Tuesday, February 03, 2009

இந்த ஊருக்கு போகலாமா?

நகரம் எனக் கூறப்படும் அப்பகுதியில் வசதிகள் குறைவு. நவ நாகரீக வளர்ச்சியை இன்னும் எட்டிப் பார்க்காத ஊர் என்றே கூற வேண்டும். இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிய ஆர்வம் கொள்கிறார்கள். அந்த இடம் அல்ஜிரியாவில் (Algeria ) இருக்கிறது. அந்நகரத்தின் பெயர் டிமிமோன் (Timimoun).

டிமிமோன் செங்களிமண்ணால் ஆன நகரமாகும். இந்தச் சிவப்பு வண்ண களிமண் நகரம் உலகில் பலரையும் கவர்ந்திருக்கிறது. டிமிமோன், சஹாரா பாலைவனத்தில் ஒரு பகுதியாகும். அல்ஜிரியாவின் தலைநகரம் அல்கிரிஸ் என அறியப்படுகிறது. அல்கிரிஸில் இருந்து 1200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது டிமிமோன்.

டிமிமோனுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒட்டகச் சவாரி பிடித்தமான ஒன்றாகும். ஒட்டகம் வளர்ப்போர் மற்றும் இந்நகரவாசிகளுக்கு அது ஒரு பொருளாதார ஈட்டலும் கூட. டிமிமோனை அடையும் முன் சில மலைப் பகுதிகளிலும் தங்கிச் செல்லும் கட்டாயம் ஏற்படும்.

டிமிமோனுக்கான பயணம் தெடுந்தொலைவு கொண்டது மட்டும் அல்ல கொளுத்தும் வெயிலில் வெந்து போகும் நிலையையும் உண்டு பண்ணும். பயணப் பிரியர்களுக்கு அது ஒரு பொருட்டாகாது என்றே சொல்ல வேண்டும்.

இந்நகரம் சுற்றுப் பயணிகளைக் கவர முக்கியக் காரணம் என்ன? நவ நாகரிக வளர்ச்சியில் இருந்து இது அப்பாற்பட்டு இருப்பதே என்பது பலரது கருத்தாக இருக்கிறது. பொதுவாகவே இங்கு வரும் சுற்றும் பயணிகள் குறைந்த அளவில் இருக்கிறார்கள். ஆதலால் டிமிமோனுக்கான பயணம் அமைதியான சூழலை அளிக்கிறது.

அல்ஜீரியா தீவிரவாதத்தோடு தொடர்பிட்டுப் பேசப்படும் ஆப்பிரிக்க நாடு என்பது பலரும் அறிந்ததே. டிமிமோனுக்கான பயணம் பாதிப்பற்றது என்றும் பயணிகள் பாதுகாப்பு காக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது. தீவிரவாதம் அல்ஜிரியாவில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பது சில சுற்றுப்பயணிகளின் தன்னம்பிக்கையான கருத்தாகும்.

டிமிமோன் நகரம் மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களும் பணிவானவர்களே. சுற்றுப்பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை தயக்கமின்றி செய்து கொடுக்கிறார்கள். பயணத்தின் போது வழிகாட்டிகளாகவும் உதவியாளர்களும் இவர்களே.

உலகின் அழகிய பாலைவனத்தை இங்கு நாம் காண முடியும். இவ்விடத்தை அந்நாட்டு அரசு மேம்படுத்த முயற்சித்து வருகிறது. மேம்பாடுகள் செய்யப்பட்டால் அவ்விடத்திற்கு சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென கருதுகிறார்கள். தங்கும் விடுதி, நாகரீக பட்டணம் என இவ்விடம் மேம்பாடடைந்தால் அது இப்போதய நிலையை பாதிக்கும் என்பது சிலர் கருத்தாகவும் அமைகிறது.

டிமிமோன் பகுதியில் மேம்பாடுகளை நடக்குமாயின் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேர்றத்தை உறுவாக்க முடியும் என்பதால் பரிசீலனைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சுற்றுப்பயணியின் வருகை இங்குள்ள 12 பேருக்கு ஒரு நளைய உணவளிக்க ஒப்பானதாகும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆண்டிற்கு 1.4 கோடி சுற்றுலாப்பயணிகள் டிமிமோனுக்கு வருகை புரிகிறார்கள். அவர்களில் பொரும்பகுதியினர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துனிசியா, மக்ரிபி போன்ற அல்ஜிரியாவின் அண்டை நாடுகாளுக்கு ஆண்டுக்கு 6 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகிறார்கள். அதனோடு ஒப்பிடுகையில் டிமிமோனுக்கு பயணம் மேற்கொள்வோர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளார்கள்.

இந்தச் செங்களிமண் நகரம் உலகத்தாரின் கவனத்தில் இன்னமும் சரியான முறையில் அறியப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.

(பி.கு: களிமண் நகரம் எனும் தலைப்பில் 25.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

Monday, February 02, 2009

இது ஹைக்கூ இல்லை!!

குழந்தை& மனிதன்
காலையில் அழுதது!
மாலையில் அழுதது!
பசிக்கு உணவு!

காலையில் அலைந்தான்
மாலையில் அலைந்தான்
செலவுக்கு பணம்!

கண்கள்
வான்
கருமை தாழாது!
உன்
முகத்தில் விழுந்த
இரு விண்மீன்கள்!

அபசகுனம்!
நெடுக்கே வந்தான்
மனிதன்!
சாலையில்
மடிந்தது பூனை!

முத்தம்
உதடு வேர்க்குமா!
என்ற ஆராய்ச்சியில்
இரு இதழ்களின் முயற்சி!


கற்பு!
மனதில் இருந்தால் போதும்!
தீர்மானிக்கப்பட்டது
இரு மாணவர்களின்
படுக்கையறை பட்டிமன்றத்தில்!

காதல்!
மன்மதனின்
அம்புகளாய்
காதலியின்
நினைவுகளின் கிளர்ச்சி!

பாலியல் தொழில்!
சூரியன்
மறைந்ததும்
பொழுது விடிந்தது
அவளுக்கு!

பொய் சரித்திரம்!

எதிர்கால முட்டாள்களுக்கு
நிகழ்காலத்தில் சாயம்பூசப்படும்
இறந்தகாலம்!

இரவு!
தூக்கம் வரவில்லை
கண் சிமிட்டுகிறாள்
காதலி!

போதை!
வாயின் புதைகுழியில்
ஊற்றுகிறான்
குடும்ப குதூகலத்தை!

இணைய சேட்டை!
விரல்களுக்கு காமம்!
கணினித் திரையில்
நீலப்படம்!